துரைமுருகனும்,டி.ஆர்.பாலுவும் சரியான தேர்வு தானா?

சாவித்திரி கண்ணன்
duraimurugan, tr balu, mk stalin dmk

தமிழகமும்,இந்தியாவும் இதற்கு முன்பில்லாத நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில் திமுக என்ற எதிர்கட்சி ஆக்கபூர்வமாக செயல்பட்டு களம் காண வேண்டும் என்று தமிழக மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆனால்,அந்த கட்சி இதை உணர்ந்ததா என்று தெரியவில்லை! இன்றைக்கு நடக்கும் பொதுக் குழு கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக 82 வயது துரைமுருகனும்,பொருளாராக 80 வயதை தொடவுள்ள டி.ஆர் பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. அந்தக் கட்சி முதியோர்களின் கூடாரமாகவே தொடர வேண்டுமா? என்பது தான் கட்சியில் இருப்பவர்கள் மற்றும் கட்சி அபிமானிகள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது.

ஏற்கனவே தலைவராக உள்ள ஸ்டாலின் தோற்றத்தில் பொலிவாக இருந்தாலும் அவருடைய வயது 67. அவருக்கு பலம் சேர்க்க வேண்டிய பதவியில் உள்ளவர்கள் இவ்வளவு முதியோர்களாக இருந்தால் எப்படி அந்தக் கட்சியை இன்று வேகமாக கொண்டு செலுத்த இயலும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

துரைமுருகன் ஏற்கனவே பல உடல் உபாதைகளால் அல்லல்படுபவர்.அடிக்கடி அப்பல்லோவில் அட்மிட்டாகி சிகிச்சை பெறுபவர்! ஒன்பதாவது முறையாக எம்.எல்.ஏவாக இருப்பவர்.சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர்.அக் கட்சி ஆட்சிக்கு வந்தால் முக்கிய அமைச்சராகவும் வாய்ப்புண்டு! அப்படியிருக்க, இந்த முதிய வயதில் கட்சியில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை அவர் எப்படி சுறுசுறுப்பாக கையாளமுடியும்? எவ்வளவு மாவட்ட ஒன்றிய,வட்டார செயலாளர்களை கையாள வேண்டும்…வழி நடத்த வேண்டும்? சிக்கல்களை தீர்க்க வேண்டும்? நிச்சயமாக இதற்கான ஆற்றலோ, அணுகுமுறையோ அவரிடம் இல்லை. அவரே விலகி நல்ல திராவிட சித்தாந்த பின்புலமுள்ள இளையவருக்கு வழி விட்டிருந்தால் அது கட்சிக்கு பெரிய நன்மையாக இருந்திருக்குமே…!

இன்னொரு வகையில் பார்த்தாலும் இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு அழகும்,அர்த்தமும் சேர்த்த பேரறிஞர்.அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடமிருந்த சித்தாந்த தெளிவையோ, அவற்றை எளிய மனிதனுக்கும் புரியும் வண்ணம் பேசி, திராவிட உணர்ச்சியை தட்டி எழுப்பும் ஆற்றலையோ இவரிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அதை விடுங்கள் இன்றைய மதவாத ஆபத்துள்ள காலகட்டத்தில் பாஜகவிற்கு பதிலடி தரும் வண்ணம் இவர் பேசியது என்ன? இந்த அபாயமான காலகட்டத்திற்கு திமுக போன்ற ஒரு கொள்கை பிடிப்புள்ளவர்கள் நிறைந்துள்ள கட்சிக்கு இவர் பொதுசெயலாளராகும் தகுதி படைத்தவரா? என்பது தான் என் பிரதான கேள்வி!

சட்டமன்றத்தில் கூட இவர் அதிமுகவிற்கு அனுசரணையாகவே பல நேரங்களில் பேசிவருவதையும்,ஆளும்கட்சி உறவில் தன் வியாபார,பொருளாதார நலன்களை உறுதிபடுத்துபவராகவுமே இவர் உள்ளார்!

பாராளுமன்ற தேர்தலில் பணவிநியோகம் செய்து மாட்டிய வகையில் தப்பித்துக் கொள்ள பாஜகவிடமும் அனுசரணையுடன் நடப்பவராகவே உள்ளார். ஆக,இப்படியானவர்கள் திமுகவின் கொள்கை முடிவை எடுக்கும் ஆகப்பெரிய தலைமை பீடத்திற்கு தகுதியா? அல்லது அதன் சரிவுக்கு சகாயமாக இருப்பாரா? என்று பார்க்க வேண்டும்.

கட்சியில் சீனியர் என்பதாலேயே ஒருவருக்கு முக்கிய பதவி தந்தேயாக வேண்டுமா? என்ற கேள்வி டி.ஆர்.பாலு விஷயத்திலும் வருகிறது. ஆறாவது முறையாக எம்.பியாக உள்ளார். இன்றும் திமுக பாராளுமன்ற குழுவின் தலைவர். டெல்லியில் பாஜக அரசுக்கு எதிராக களமாட வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் கட்சியிலும் முக்கிய பதவிக்கு ஆசைப்படுகிறார். டி.ஆர்.பாலு ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். கிங் கெமிக்கல்ஸ்,டிஸ்டிலரிஸ்,ஏற்றுமதி நிறுவனம் உள்ளிட பல தொழில்களை செய்பவர். துரைமுருகனும் கல்லூரி உள்ளிட்ட காசுபுரளும் தொழிலில் இருப்பவர்! இப்படி பணபலம் உள்ளவர்களுக்குத் தான் இன்று பதவிகள் கிடைக்கும் போல!

கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வருபவர்கள் ஆட்சித் துறை சம்பந்தப்பட்ட பொறுப்புகளில் இல்லாத வகையில் கட்சிக்கு முழு நேரமாக தங்களை கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கினால் தான் அந்தக் கட்சி வளரும்.

கொள்கை உறுதிப்பாடு,செயலாற்றல்,சிந்திக்கும் திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து கட்சியின் முக்கிய தலைமை பதவி தரப்படுவதில்லை போலும். முதலில் இது போன்ற கட்சிப் பதவிகள் தரப்படுவதாக இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு பொதுக் குழு உறுப்பினர்களின் ஏகோபித்த

ஆதரவில் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் கனிய வேண்டும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time