ஊழல்களில் உச்சம் தொட்ட எடப்பாடி ஆட்சி…!

-ஜீவா கணேஷ்

திட்டங்களை செயல்படுத்தும் போது கொள்ளை அடிப்பார்கள் என்று நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்களை தீட்டியவர் பழனிச்சாமி. எந்த ஒரு திட்டத்திலும் எளிய மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ற ஒரு நன்மையாவது இருக்கும். ஆனால்,அதையும் கூட இல்லாமலாக்கியவர் பழனிச்சாமி! கடந்த நான்காண்டுகள் பழனிச்சாமி அமைச்சரவையின் பகல் கொள்ளைகள் எப்படி நடந்தன என்பதை பார்ப்போம்!

ஐந்து ஆண்டுகள் பொதுப்பணித்துறைக்கும், பத்தாண்டுகள் நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன செய்திருக்கிறார்? இந்தத் துறைகளில் ஒரே ஒரு பெரிய திட்டத்தையாவது தமிழக மக்களுக்காக ஏற்படுத்தி இருக்கிறாரா? முடித்திருக்கக்கூட வேண்டாம்; தொடங்கவாவது செய்திருக்கிறாரா? என்று எண்ணிப்பார்த்தால் ஒன்று கூட இல்லை.பொது நலன் சார்ந்த பார்வை அவருக்கு கடுகளவாவது இருந்தால் தானே நடந்திருக்கும்.

பத்தாண்டுகளில் பொறியியல் துறைகளில் ஏறக்குறைய லட்சம் கோடி பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம்  உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால்  அப்படி உயரவில்லை! ஏனென்றால், பொருளாதாரம் உயருவதற்காகத்   திட்டங்கள் போடப்படவில்லை;    மாறாக, தங்கள்  வளர்ச்சிக்காகத்தான் திட்டங்களைத்  தேடி கண்டுபிடித்து செயல்படுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி வெள்ளப்பெருக்கினால் கடலுக்குச் சென்று வீணாகிற தண்ணீரில் குறைந்தது சில நூறு டி.எம்.சி தண்ணீரையாவது தடுக்க நடவடிக்கை எடுத்தது உண்டா?

கொள்ளை அடிப்பதற்காகவே திட்டங்கள்

உண்மையில், அரசு அதிகாரிகள்-ஊழியர்கள் மத்தியில் பேசிக் கொள்வது என்னவென்றால் இதுவரை இல்லாத வகையில் ஒப்பந்தக்காரர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து கொள்ளையடிப்பதற்கு திட்டங்களைத் தீட்டி, கொள்ளையைப்  பகிர்ந்து கொடுக்கிற ஒரு திட்டத்தை  வடிவமைத்து, செயல்படுத்திய தலைமை நிர்வாகி தான் எடப்பாடி பழனிச்சாமி!

அரசிடம் பணம் இருக்கிறதோ, இல்லையோ பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில்  ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான டெண்டர்கள் அழைக்கப்பட்டன; பணம் கொள்ளையடிக்கப்பட்டது; பங்கு பிரிக்கப்பட்டது. ஏறக்குறைய  நான்காண்டுகளுக்கும் மேலாக ஆண்டுகள்   இது போன்ற ஊழல்கள் தான் தடையின்றி நடந்தன.

5  லட்சம் கோடி  கடன் எப்படி உருவானது?

பழனிச்சாமி தன்னுடைய பேராசைக்காகவும்,  இருக்கிற எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தேவையற்ற திட்டங்களைக்  கொண்டு வந்து 5  லட்சம் கோடியாக தமிழ்நாட்டின் கடனை அதிகரித்துவிட்டார்!.

நடைமுறையில் இருக்கும் திட்டங்களில் சுரண்டுவது போய், சுரண்டுவதற்காகவே திட்டங்களைத்  தீட்டியவர்  பழனிசாமி!. தேவையற்ற இடங்களில் பாலங்கள், தேவையற்ற அகலத்திற்கு சாலைகள். நல்லதோ, கெட்டதோ திட்டங்களின் செலவுகளை அதிகப்படுத்தினால்தான் தன் பங்கு அதிகரிக்கும் என்ற அளவுகோலை மட்டுமே வைத்து, அரசின் கடனை  பல மடங்கு அதிகரித்து, தன்னை நான்காண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் பத்திரமாக வைத்துக்கொண்டார் இந்த எளிய விவசாயி.

விதிகள் எப்படியோ இருக்கட்டும்; ஒரு முதலமைச்சரின் உறவினர், அதுவும் சம்பந்தியான நெருங்கிய உறவினர் ஒப்பந்தப்  பணியை செய்யும்போது மாதச் சம்பளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு பொறியாளர் எந்த வகையில் தரத்தினை அந்தப் பணியில் நிலைநாட்ட முடியும்? இயல்பாக அந்த பெரிய ஆள் வேலையைச் செய்யும்போது இது சரியில்லை, திருப்தியில்லை என்று சொல்லத் தான் முடியுமா? இவையெல்லாம் இந்த எளிய விவசாயிக்குத்  தெரியாதா? தெரியும்: தன்னைக்  கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்கிற ஆணவம்தான்!

தமிழக இளைஞர்களுக்கு இல்லை, வேலை

வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கு எடப்பாடி எந்த முயற்சியும் எடுத்ததில்லை! ‘தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்’ மூலமாக  ஆயிரக்கணக்கான வேலை இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கலாம். அப்படி பயிற்சி பெற்றவர்களை ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கப்படும் பொறியியல் திட்டங்களில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், ஒப்பந்தக்காரர்கள் எல்லாம் அவரது உறவினர்கள்! நியமிக்கப்பட்ட பணியாளர்கள் எல்லாம் வட மாநிலங்களில்  இருந்துதான் வருகிறார்கள். தமிழ்நாட்டில் வேலை தேடி அலைபவர்கள் அலைந்து கொண்டே இருக்க வேண்டியது தான்.

குடிமராமத்தா?  கொள்ளையா?

ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்  தூர் வாரும் பணிக்காக  பொதுப்பணித் துறையில் தொடங்கப்பட்ட  குடிமராமத்து திட்டத்தில் ஊழலும் முறைகேடுகளும்தான் நடைபெறுகின்றன. இத்திட்டத்தில் பணிகளை ஆயக்கட்டுதாரர்கள், அவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கங்கள்தான்  மேற்கொள்ள வேண்டும் என்று அரசு ஆணை இருக்கிறது. ஆனால், உள்ளூர் மக்கள் பங்கேற்பின்றி பல போலி  சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அந்தச்  சங்கங்களுக்கு  குடி மராமத்து  பணிகள் கொடுக்கப்படுகின்றன; இவர்கள் நீர்நிலைகளில்  முறையாக முழுமையாக  தூர் வாருவதில்லை; இதனால் நிலத்தடி நீர் ஆதாரமும்  பெருகவில்லை. பணி நடக்காமலேயே பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும்  கணக்கு எழுதப்படுகிறது; இத்திட்டத்தை முறையாக மேற்கொள்ளாததால் உள்ளூர் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.   அவர்கள் வேலை பெறுவதற்கல்ல திட்டம்! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல நூறு கோடி அரசு பணம் கொள்ளை அடிப்பதற்கு தான் குடி மராமத்து திட்டமே!

மின்மிகை மாநிலம் ஒரு  பொய் பிம்பம்!

ஒரு யூனிட் மின்சாரம் கூட சுயமாக  உற்பத்தி செய்யாமல்,  தனியாரிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். இந்த லட்சணத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருக்கிறது என்கிறார் மின்துறை  அமைச்சர் தங்கமணி! தமிழகத்திற்குத் தேவைப்படும் மின்சாரத்தில் 40% தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது. இது, மின் வாரியம் தயாரிக்கும் மின்சாரத்திற்கு ஆகும் செலவைவிட பல மடங்கு. அதிகமாகும்! இதுவா வளர்ச்சி?

மின்வாரியத்தில்  இரண்டு வகையாக ஊழல் நடைபெறுகிறது. .ஒன்று, மின் வாரியத்தின் பணத்தில் கொள்ளையடிப்பது. அதாவது,   தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் கொள்ளை! 3330 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் 15 ஆண்டுகளுக்கு வாங்கியதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடக்கிறது. இரண்டாவதாக, பொது மக்கள் பணத்தை  அளவிட முடியாத அளவிற்கு அடிக்கும் கொள்ளை! நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்தபோது மின் வாரியத்தின் பொறியாளர்களை இட மாறுதல் செய்வதில் மட்டுமே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தக்  கொள்ளை இப்போதும் தொடருகிறது. இவ்வாறாக மின் வாரியத்தின் பணமும், பொது மக்களின் பணமும் ஆண்டுதோறும்  கோடி கணக்கில் கொள்ளை போகிறது. எடப்பாடி ஆட்சியின் சாதனையால்  மின்வாரியம் 160000 கோடி கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தராத கிராம சாலைகள்!

நெடுஞ்சாலைத்துறையில் கிராம சாலைகள் அபிவிருத்திக்கென்று ஒரு பிரிவு இருக்கிறது; அப்பிரிவில் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள்   இருக்கிறார்கள். இது கிராம மக்களுக்கு வேலை தரும் நோக்கத்தையும் உள்ளடக்கியதாகும்.ஆனால்,அவ்வாறு தராமல், பெரிய காண்டிராக்டர்களை வைத்து,பெரிய எஸ்டிமேட்டை மிகையாக உருவாக்கி, வெளியாட்களை வைத்து வேலையை முடித்துவிடுகிறார்கள்! இது எதற்காக? பெரிய ஒப்பந்தக்காரரிடம் வேலையைக் கொடுத்து வெளியே தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்கிற  திட்டத்திற்காகக்தான்! ஊரகச் சாலைகளுக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி செலவு செய்கிற அமைச்சர் வேலுமணியின் ஊராக வளர்ச்சித் துறையில் இந்தக் கொடுமைகள் அதிகமாகவே நடந்தன!

கிராம சாலைகளுக்கென்று நெடுஞ்சாலைத்துறை ஏறத்தாழ 5000 கோடி ரூபாய் கடந்த  நான்கு  ஆண்டுகளில் செலவு செய்திருக்கும். சாதாரணமாக கிராமங்களுக்கு போடுகிற வகையில் சாலைகளைப்  போட்டிருந்தால், செலவும் அதிகம் பிடித்திருக்காது; ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பும் வந்திருக்கும். கொரானா வந்ததால் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் மக்கள் தவித்தபோது எந்திரங்களை வைத்து இரண்டு மூன்று பேர்களைக்கொண்டு சாலை போட்டு பணத்தை எல்லாம் அந்த பணக்கார ஒப்பந்தக்காரர் எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஏழைகள்,  அந்தக் கிராமவாசிகள் வயிற்றுக்கு ஈரத்துணி போட்டுக் கொண்டதுதான் மிச்சம். எடப்பாடியாலும்,வேலுமணியாலும் இப்படித்தான் சிந்திக்க முடியும்!

அகலப்படுப்படுத்தப்படும் சாலைகள்; அடிக்கப்படும் கொள்ளைகள்!!

நெடுஞ்சாலைத்துறையில் எங்கு பார்த்தாலும் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதைப் பார்க்கலாம்.  இதற்குப் பின்னால் மறைந்திருக்கிற பேராசையை  விளக்கமாக சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும்.

சாலைகள் ஒரு வழி, இரு வழி, நான்கு  வழி என்று போக்குவரத்து அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. சாதாரண கிராமங்களுக்கு குறைவாக போக்குவரத்து இருப்பதால் 3.75 மீட்டர் அகலத்தில் ஒரு வழி சாலை அமைக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகமாக இருந்தால் 7 மீட்டர் அகலத்தில் இரு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. எந்த சாலையாக இருந்தாலும் இருபுறமும் அமைந்துள்ள மண் பாதை சரியாகப் பராமரிக்கப்பட்டால் 10 வாகனம் போகிற இடத்தில் 12 வாகனம் போகலாம். இப்படித்தான் காலம்காலமாக சாலைகள் பராமரிக்கப்பட்டன. லஞ்சப் பணம் வந்து குவியும் என்பதற்காக போக்குவரத்தே அதிகமில்லாத  சாலைகளிலும், சாலையை அகலப்படுத்துகிறோம் என்று  சொல்லி கல்லையும் மண்ணையும் பரப்பி அரசு பணத்தை பல ஆயிரம் கோடி இந்த 10 ஆண்டுகளில் வீணாக்கியிருக்கிறார்கள்.

இதற்காக அவர்கள் போக்குவரத்துக்  கணக்கினை மிக மிக அதிகமாக கூட்டிக் காண்பித்து அரசு பணத்தைப்  பெற்று, பங்கு கொடுத்திருக்கிறார்கள்! இப்பொழுது கூட பல கிராமப்புற சாலைகளை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். தேவைப்படாத இடங்களில் அகலத்தில் சாலை வேண்டுமா? என்று பார்க்கலாம் இப்படி அரசு பணத்தை பொறியாளர்கள் வீணாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் பேராசையே காரணம்.

நல்லாட்சிக்கு எதிரியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி  தொடர்ந்தால் இன்னும் பல கேடுகள் தொடர்வதோடு, தமிழகம் மிகவும்  பின்னடைந்துவிடும்..!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time