தாதாசாகேப் பால்கே விருது என்பது கலையுலகில் மிகப் பெரிய முன்னோடி சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதாகும்! இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் தன்நிகரில்லா பங்களிப்பு தந்ததாக கருதப்படுவோருக்கு தரப்படுவதாகும்!
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்பட்டு வரும் தாதா சாகேப் பால்கே, இந்தியா மண்ணில் சினிமா என்ற கலையை ஜெர்மன் சென்று கற்று வந்து தானே சுயமாக முயன்று அறிமுகப்படுத்தியவர்! அவரது முதல் படம் ராஜா ஹரிச்சந்திரா தான் இந்திய சினிமாவின் முதல்படமாகும்.ஒலியும் இல்லாத ஊமைப்படம் தொடங்கி பேசும் படம் காலகட்டம் வரை அதாவது 1910 தொடங்கி 1940 வரை திரைத்துறையில் இயங்கிய மாபெரும் முன்னோடியாவார்!
இந்த விருது நடிகர்களை விடவும் படைப்பாளிகளூக்கே அதிக முக்கியத்தும் தரும் விருதாகும். சத்தியஜித் ரே, அடூர் கோபால கிருஷ்ணன், ஷ்யாம்பெனகல், மிருணால் சென், பாலச்சந்தர், பி.விஸ்வநாத்..ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
அதே போல தயாரிப்பாளர்களில் அசாதரண சாதனையாளர்களாக, பி.ஆர்.சோப்ரா, நாகிரெட்டி, டி.ராமா நாயுடு, எல்.வி.பிரசாத் ஆகியோர் பெற்றுள்ளனர்.
நடிகர்களில் சிவாஜி கணேசன், ராஜ்கபூர், நாகேஷ்வர ராவ், ராஜ்குமார்..அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்! இறந்த சாதனையாளர்களுக்கு கூட இது அறிவிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான இயக்குனர் மகேந்திரன், ஆரூர்தாஸ்..உள்ளிட்ட பலர் கடைசி வரை கண்டு கொள்ளப்படவில்லை.
இந்த விருதுக்கு ரஜினிகாந்த் தகுதியானவர் தான், என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், அறிவிக்கப்பட்ட நேரம், அறிவித்தவர்களின் உள் நோக்கம் அதுவும் தேர்தலுக்கு ஆறு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வருவது ஆகியவை தான் சந்தேகத்தை கிளப்புகிறது! எப்படியாவது ரஜினிகாந்த் ஆதரவாளர்கள் ஓட்டுப் போடமாட்டார்களா..? என்ற நப்பாசை கூட பாஜக அரசின் இந்த நேர, அவசர அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம்!
ஆனால், ரஜினி நீண்ட நெடுங்காலமாக அரசியல் பேசி, அரசியலுக்கு வரப் போவதாக நம்ப வைத்து ஏமாற்றிய நிலையில் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் பலர் வெற்றி வாய்ப்புள்ள கட்சியான திமுகவில் அதிகமாக சேர்ந்துள்ள செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி வெளியாயின. மற்றவர்கள் ரஜினி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். ரஜினி தற்போது அரசியல் ரீதியாக எதுவும் பேசக் கூட முடியாதவராக வெகு தூரம் விலகி சென்றுவிட்டார்.இந்த நிலையில் ரஜினி ரசிகர்களை குறிவைத்து வெளியாகியுள்ள இந்த அறிவிப்பால் எந்த ஒரு பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. பாஜக தன்னை பயன்படுத்திக் கொள்ள அவர் இடமளிக்கிறாரோ…, என்ற சந்தேகம் அவர் மீது ரசிகர்களுக்கு உருவானால், அது எதிர்மறை விளைவுகளைக் கூட ஏற்படுத்தக் கூடும்.
2018ல் இது அமிதாபச்சனுக்கு அறிவிக்கப்பட்டது செப்டம்பர் மாதம் தான்! ஆனால், இந்த அறிவிப்பு சற்று முன் கூட்டியே தற்போது அறிவிக்கப்பட்டதில் உள் நோக்கம் இல்லை என்று சொல்ல முடியாது! ரஜினிக்கு ஏற்கனவே பத்ம பூசன், பத்ம விபூஷன் ஆகியவை தரப்ப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஈராண்டுகளுக்கு முன் சமீபத்தில் தான் மத்திய அரசால் தரப்பட்டது! இந்த விருதுக்கு கமலஹாசனும் கூட முற்றிலும் தகுதியானவர் தான்! இன்னும் சொல்வதென்றால், இது கமலஹாசனுக்கு வழங்கப்பட்ட பிறகு ரஜினிக்கு தந்திருக்க வேண்டியது என்றும் சொல்வேன். ஏனெனில், நடிப்பிலும், புதிய முயற்சிகளிலும் சிவாஜிக்கு அடுத்த சாதனையாளராக கமலஹாசனைத் தான் சொல்ல முடியும்!
விருதுகள் என்பவற்றை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கி அங்கீகரிப்பது ஒரு அரசின் கடமை! அதில் உள் நோக்கத்தை கலந்து, ஆதாய அரசியலுக்கு வீசி எறியும் ரொட்டித் துண்டாக பாஜக அரசு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதைப் போன்ற அறியாமை வேறில்லை! இதே போலத் தான் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு அந்த விருதே கேலிக்குரியதாக பார்க்கப்பட்டது.
இந்த விருதின் பின்னுள்ள அப்பட்டமான அரசியல் நோக்கமும், அது அறிவிக்கப்பட்ட காலச் சூழலின் யார்த்தமும் ரஜினிகாந்திற்கும் தெரிந்திருக்கும்! ஏற்கெனவே, அவர் பாஜக வீசிய சூதுவலையில் இருந்து தன்னைத் தானே நாசுக்காக விடுவித்துக் கொண்டார். அதே போல தற்போது அவர் இந்த விருதை இந்த ஆண்டு வேண்டாம் எனக் கூறி, மறுத்திருப்பார் எனில், அவர் மக்கள் மனதில் ஒரு மிகப் பெரிய மரியாதையை பெற்று இருப்பார்! இதை நிராகரிக்கும் அறம் சார்ந்த மனோ பலம் என்பது தான் ஆகப் பெரிய விருதாகும்!
Also read
தமிழக அரசியல்வாதிகளும் சளைத்தவர்கள் அல்ல. உடனே ரஜினிக்கு வாழ்த்து சொல்லி தங்களுக்கும் ரஜினிக்குமுள்ள நெருக்கத்தை வெளிப்படுத்திவிட்டனர்! ஆகவே, இந்த அறிவிப்பானது இந்த நேரத்திற்கு வெளியானதும், அதைத் தொடர்ந்து அனைத்து அரசியல் தலைவர்களும் விழுந்தடித்து ரஜினியை பாராட்டுவதிலும்..எல்லாவற்றிலுமே அரசியல் இருக்கிறது. இவையாவும் மக்களுக்கு புரியாமலில்லை! வாழ்க ஜனநாயகம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply