ரவுடியிச நாயகன் ராஜேந்திர பாலாஜி வெற்றி பெறுவாரா..?

-சாவித்திரி கண்ணன்

தமிழக அரசியலில் இவருக்கு நிகராக வன்முறை வார்த்தைகளை பிரயோகித்த இன்னொருவரை சொல்ல முடியாது! வாயைத் திறந்தால் வந்து விழுவது ஆஸிடோ..என அஞ்சத்தக்க பேச்சுக்கள்! இந்துத்துவ இயக்கங்களின் செல்லப்பிள்ளை!  பால் வளத்துறையில் பகல் கொள்ளை நடத்தியவர்! கொலை வழக்கு,சொத்துக் குவிப்பு வழக்கு, வன்முறை தூண்டிய வழக்குகள் என அடுக்கடுக்காய் இருந்தாலும், ”மோடி என் டாடி’’ என்ற ஒற்றை வார்த்தையால், பாதுகாப்பாக வலம் வருபவர். இவரது விசித்திர அரசியல் வில்லங்கங்கள் வெகு சுவாரசியமானது…! வன்மத்தை விதக்கும் ராஜேந்திர பாலாஜி வெல்வாரா..?

அனல் கக்கும் பேச்சுக்கள், ஆங்கார முகபாவம், அதே சமயம் ஆன்மீக ஈடுபாடு(?) கை நிறைய கலர்கலராக வேண்டுதல் கயிறுகள், பொழுதுவிடிந்தால் கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிடுவதோடு பூஜை, பரிகார பூஜை..என ஏகப்பட்ட செலவுகள் செய்பவர்! இவரது ஒவ்வொரு வன்முறை பேச்சையும் ஆயிரமாயிரம் இந்துத்துவ அமைப்பினர் பாராட்டி உச்சி மோர்ந்து, தங்கள் முக நூலில் பகிர்வதால் இன்னும் வேகமாக தாக்குதல்கள் தொடுக்கிறார்!

‘’திமுகவினரை வீடு புகுந்து அடிங்க’’

‘’கமலஹாசன் நாக்கை அறுக்க வேண்டும்.’’

‘’வீரமணியை அடித்து விரட்டுங்கள்’’

‘’மாணிக்கம் தாகூர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வரவில்லை. அவர் வந்தால் மக்களே சுட்டுக் கொன்று விடுவார்கள்’’

‘’திமுக ஒரு தேச விரோதக் கட்சி. தடை செய்யப்பட வேண்டிய கட்சி. இந்துக்கள் மனதை புண்படுத்தும் கட்சி”

‘’ராகுல் காந்தி ஒரு இந்தியரல்ல, அவரை ஒரு போதும் இந்தியராக ஏற்க முடியாது’’

”மோடி தான் இந்தியாவின் விந்து, விதை’’

‘’ ஆட்ட நாயகன் அமித்ஷா நீடுழி வாழ்க..’’

இவர் விளம்பர விரும்பியா?

விஷமத்தனமானவரா?

அதிகப் பிரசங்கியா?

அடிவருடித் திலகமா?

அல்லது எல்லாமும் ஆனவரா?

இவர் பேசும் பேச்சுகள் கலவரத்தை துண்டக் கூடிய வகையிலும்,கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் இருக்கின்றன என்றாலும், அவரது ஒவ்வொரு பேச்சும் சங்க பரிவாரங்களால் ஆர்ப்பாடமாக வரவேற்கப்படுவதை அவர்களது பதிவுகள் மூலமாகத் தெரிய வருகிறது.

‘’இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால், இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று வலிந்து பேசுகிறார்.

‘’இந்துக்களைக் கொல்ல தீவிரவாதிகளுக்கு தி.மு.க துணைபோனால், இந்துத் தீவிரவாதம் உண்டாவதைத் தடுக்க முடியாது” என்கிறார்.

அப்படி அரசியல் செய்பவர்களை பிடித்து ஆதாரபூர்வமாக நிருபித்து, சட்டப்படி தண்டிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை செய்யாமல், இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பேசுவதானது, இந்து பயங்கரவாதம் உருவாவதில் ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கும் விருப்பத்தை தான் காட்டுகிறது!

திருச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்டார்.அவர் கொலைக்கு எந்த அரசியல் நோக்கத்தையும் யாருமே சொல்லவில்லை ,பாஜக உட்பட! ஆனால், ராஜேந்திரபாலாஜியோ தானாகவே முன்வந்து, ”அவர் கொலைக்கு காரணம், இஸ்லாமிய தீவிரவாதம்’’ எனப் பேசினார்.

இன்னும் இப்படி தீவிர இந்துத்துவவாதிகளும், அமைப்புகளூமே கூட பேசத் தயங்கும் பொய்கள் மற்றும் மதவாத வன்முறைப் பேச்சுகளை கடந்த நான்காண்டுகளாக ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசி வருகிறார்.

கொரானாவின் போது அவர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்து, அவர் எந்த அளவுக்கு இந்துத்துவ மாயையில் சிக்குண்டு இருக்கிறார் என்பதற்கு உதாரணமாகும்!

இந்துக்களின் மத வழிபாட்டு தன்மைகளையும், நம்பிக்கைகளையும், இயற்கையான வழிபாடுகளையும் கிண்டல் செய்த போலி போராளிகளுக்கு இன்று நாட்டில் நடக்க கூடிய சம்பவம் ஒரு பாடம்.. ஒரு படிப்பினை..! இறைவா, கிருஷ்ணபரமாத்வே இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் கொரோனோவிடமிருந்து காப்பாற்று!

அதாவது, கொரோனா பரவலுக்கும் அவர் மதவாத வன்மம் கலந்த உள் நோக்கத்தை வெளிப்படுத்தினார்!

இப்படி ஒரு தீவிர மதவாத வன்முறையாளர் திராவிடம் பெயரைத் தாங்கி நிற்கும் ஒரு இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடிகிறது .அவரை கட்சித் தலைமையாலும் தடுக்க முடியவில்லை என்பதானது, அந்த அளவுக்கு பாஜகவின் அழுத்தம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது.

இவர் திமுகவை விமர்சிக்கும் போதும், காங்கிரசை விமர்சிக்கும் போதும் வழக்கமான அதிமுக காரராக இல்லாமல் பாஜகவின் குரலாக வெளிப்படுகிறார். அதிலும் குறிப்பாக ஆர்,எஸ்.எஸ்., இந்து முன்னணி  போன்றவற்றின் குரலாக வெளிப்படுவதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த அளவுக்கு அதிமுகவில் இருந்து கொண்டு பட்டவர்த்தனமாக மதவாத வன்முறை அரசியலை கையில் எடுத்து பேசுவதால் தான் தற்போது இந்துத்துவ அமைப்புகள் மொத்தமாக டேரா போட்டு ராஜேந்திர பாலாஜிக்கு ராஜபாளையத்தில் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோட்டீஸ்கள், வீடுவீடாக ஒட்டும் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றில் திமுகவிற்கு எதிரான வன்ம பிரச்சாரம் மிகத் தூக்கலாக உள்ளது! இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் ஏன் அலட்சியம் செய்கிறது எனத் தெரியவில்லை.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஒரு சமயம் முஸ்லீம்கள் தங்கள் பகுதியில் ஒரு ரேஷன் கடை வேண்டும் என்ற கோரிக்கையோடு அணுகினார்கள்! அதற்கு அமைச்சர், எடுத்த எடுப்பிலேயே, ”முஸ்லிம்க தான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே… அப்புறம் ஏன் இதையெல்லாம் கேட்கிறீங்க..! போங்க,போங்க’’ என விரட்டி அடித்துள்ளார். இது பத்திரிகை செய்தியாகவே வந்தது!

தற்போது தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ”இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப் போடாம புறக்கணிச்சீங்கன்னா, ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கி வச்ச மாதிரி, இங்கயும் புறக்கணிச்சு முடக்கிடுவோம்’’ என்று பேசியுள்ளார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மோடியையும், அமித்ஷாவையும் புகழ்ந்து பேசி வந்தவர் ராஜேந்திர பாலாஜி !

தற்போது மஞ்சள் உடையோடு தேர்தல் பிரச்சாரம் செய்யும் -பகிரங்க இந்துத்துவாதியான ராஜேந்திர பாலாஜி – தன் பிரச்சார வாகனத்தில் மோடி படத்தை போடாமல் கவனமாக பிரச்சாரம் செய்கிறார். ஆக,மக்கள் விரும்பவில்லை என்ற போதிலும் தன்னுடைய அதிகார அரசியலுக்காவே மோடியையும்,பாஜகவையும் புகழ்ந்துள்ளார். ஆக, ஓட்டு வாங்க அதிமுக பேனர் மட்டுமே போதுமானது. வெற்றி பெற்றால் பாஜகவின் பரம விசுவாசியாக அதிரடி அரசியல் செய்வது என்பதே இவரது பாலிசியாக உள்ளது!

சிவகாசி தொகுதியில் இரு முறை வெற்றி பெற்றுள்ள ராஜேந்திர பாலாஜியால் இந்த முறை அங்கு நிற்க முடியவில்லை! அந்த அளவுக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார். உள்ளாட்சி தேர்தல்களிலும் சரி, நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, அதிமுக சிவசாசியில் கடுமையான பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. அதற்கு காரணம் தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திர பாலாஜி தான்! நியாயமாகப் பார்த்தால் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக தலைமை சீட்டே வழங்கி இருக்கக் கூடாது ஆனால், இந்துத்துவ அபிமானிகளின் ஏகோபித்த கதாநாயகனான ராஜேந்திர பாலாஜியை தவிர்க்கும் துணிச்சல் தற்போதைய அதிமுக தலைமைக்கு இல்லை!

ராஜபாளையம் தொகுதி பாஜாகவின் நடிகை கெளதமிக்கு தரப்படும் என்பதாக அவருக்கு தந்த உத்திரவாதத்தினால் தான் அவரும் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு தங்கி களப்பணி ஆற்றி வந்தார். ஆனால், பாஜகவின் டெல்லித் தலைமையை லாபி செய்து ராஜேந்திர பாலாஜியின் தீவிர இந்துத்துவ அபிமானிகள் அவருக்கு வாங்கித் தந்துவிட்டனர்!

பால் வளத்துறை என்பது தமிழ் நாட்டில் உள்ள சுமார் 20 லட்சம் எளிய பால் விவசாயிகள் சம்பந்தப்பட்டது! அவர்கள் யாருமே சந்தோஷமாக இல்லை. பால் கொள்முதலில் செய்யும் நூதன மோசடிகள், அவ்வப்போது பால் கொள்முதல் செய்ய முடியாது என்று நிர்தாட்சண்யமாக விவசாயிகளை திருப்பி அனுப்புவது, பாலுக்கான குறைந்தபட்ச பணத்தை தருவதில் செய்யும் இழுத்தடிப்புகள்… என பால் விவசாயிகள் சொல்லொணா துன்பத்தில் உள்ளனர்! பல நேரங்களில் இதனால், பாலை கீழே கொட்டும் போராட்டங்களைக் கூட அவர்கள் செய்துள்ளனர்.

மற்றொரு புறம் நிர்வாக ரீதியாக பெரும் முறைகேடுகள், ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என மோசமாக சீரழிந்துள்ளது பால்வளத்துறை. அமைச்சரின் ஆட்கள் 19 ஒன்றியங்களுக்குள்ளும் நுழைந்து அதை சுரண்டி கொழுத்து வருகின்றனர். அவர்களுக்கு தேவை இல்லாத போஸ்டுகள் உருவாக்கப்பட்டு, அதீத சம்பளம் வேறு வெட்டியாக வழங்கப்படுகிறது. ஆனால், அதே நிறுவனத்தில் பல்லாண்டுகளாக பணியாற்றும் ஒரு கடை நிலைத் தொழிலாளி தன்னை நிரந்தரப்படுத்த வேண்டினால், அமைச்சரின் ஆட்கள் பல லட்சம் லஞ்சம் கேட்கின்றனர். இப்படியாக எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து சேர்த்துள்ளார் ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜியின் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற போதிலும் பண பலத்தாலும்,அதிகார துஷ் பிரயோகங்களை செய்தும் வெற்றி பெற முடியுமென ராஜேந்திர பாலாஜி நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றியானால், அது ஜனநாயக மாண்புகளுக்கு ஏற்பட்ட மாபெரும் தோல்வியாகும். வன்ம அரசியலுக்கு தமிழகத்தில் விழுந்த விதையாகும்! ராஜபாளையம் மக்கள் அந்த தவறை ஒரு போதும் செய்யமாட்டார்கள் என்பது தான் கள நிலவரம் உணர்த்தும் செய்தியாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time