திமுக இந்துக்களின் எதிரியா…?

-சாவித்திரி கண்ணன்

திமுக ஒரு இந்துமத விரோத கட்சி!

திமுக இந்துக் கடவுளர்களை கேவலப்படுத்தும் கட்சி!

திமுக ஆட்சிக்கு வந்தால், இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை!

நம் கடவுளர்களை இழிவுபடுத்துபவர்களுக்கா  உங்கள் ஓட்டு…?

இப்படியான குற்றச்சாட்டுகள் மிக வலிமையாக பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன…!

இதை பலர் உண்மை என்று நம்புகின்றனர். அப்படி நம்புபவர்களில் சிலர், பாஜக மற்றும் அதிமுக ஆட்சியின் குறைகள் குறித்து எழுதும் போது ஆக்ரோசமாக என்னிடம், ’’அப்படினா.. நீங்க அந்த இந்து விரோத கட்சியை ஆதரிக்கிறீர்களா..? நீங்க உண்மையான இந்துவாக இருந்தால் திமுகவை எதிர்க்க வேண்டும் ’’ என வாதம் வைக்கின்றனர்.

முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசியலை எழுதி வருகிறேன். அதற்கு முந்தைய அரசியல் வரலாறுகளையும் ஊன்றி உள்வாங்கியுள்ளேன். அந்த காலத்தில் திமுக தன்னை ஒரு தீவிரமான பகுத்தறிவு இயக்கமாக பறைசாற்றிக் கொண்ட போது கூட, திமுக மீது இந்து விரோத கட்சி என்ற குற்றச்சாட்டு இல்லை. அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி வந்த காலகட்டத்தில் தான் அந்த கட்சியே தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கியது! அதாவது, அன்றைக்கு திமுக பேசிவற்றை மக்கள் மூடநம்பிக்கை ஒழிப்பாகவும், பகுத்தறிவு பிரச்சாரமாகவுமே புரிந்து கொண்டார்கள்.

அவ்வளவு தீவிர பகுத்தறிவு பேசிய இயக்கமாக அன்று திமுக இருந்தது. எனினும் அறிஞர் அண்ணா ஒன்றே குலம்,ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாசகத்தையே திமுகவின் கொள்கையாக அறிவித்தார்! ஆனால், இன்று திமுக எந்த மாதிரியான பகுத்தறிவு  பிரச்சாரங்களை செய்வதில்லை. ஏறத்தாழ முற்றிலும் கைவிட்டுவிட்டது என்றே சொல்வேன். ஆயினும், தற்போது அந்த இயக்கத்தின் மீது, ஒரு இந்து விரோத முத்திரை வலுவாக குத்தப்படுகிறதே..ஏன்? எங்கிருந்து இந்த குற்றச்சாட்டு வருகிறது. இந்த கருத்தாக்கத்தின் பின்னுள்ள சக்திகள் யார்? என்ற தேடலில் தான் நாம் தமிழக அரசியல் கள நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும்.

என்னுடைய புரிதல்களின்படி பாஜக எப்போது ஒரளவு மிதவாத இந்துத்துவா சக்திகளான வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி,ஜஸ்வந்த் சிங்  ஆகியவர்களின் அதிகாரத்திலிருந்து மாறி, ஆர்.எஸ்.எஸால் அடையாளப்படுத்தப்பட்ட சுய ஆளுமை திரானியற்ற தீவிர இந்துத்துவ நிலைபாடுள்ள – ஆர்.எஸ்.எஸ் கட்டளைகளை நிறைவேற்றக் கூடிய – நரேந்திர மோடி, அமித்ஷா, யோகி ஆதித்தியநாத் ஆகியோர் தலைமையின் கீழ் வந்ததோ.., அப்போது முதல் அது பல வெறுப்பு மற்றும் வன்மம் கலந்த பிரச்சாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது.

அதில் ஒன்று தான் திமுக இந்து விரோத கட்சி என்ற பிரச்சாரமாகும்! அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி அரசு வேலை வாய்ப்புகளில் உச்சபட்ச பதவிகள் அனைத்தையும் ஆக்கிரமித்து வந்த பார்ப்பனர்களுக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தியதோ.. அன்றிலிருந்து திமுகவை கருவறுக்க காத்திருந்தனர்  சனாதனவாதிகள்! மத்தியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் பாஜக ஆட்சி வந்தது தொடங்கி திமுகவிற்கு எதிரான வன்மபிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில பிற்போக்கு பிராமண அறிவுஜீவிகள் தான் இந்த வன்ம பிரச்சாரத்தின் சூத்திரதாரர்கள்! இவர்கள் அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் இன்று ஆக்கிரமித்து உள்ளனர்.

இந்த பத்திரிகைகளின் கருத்தாக்கமே சோஷியல் மீடியாவிலும் பிரதிபலிக்கின்றது! இந்த கருத்தாக்கம் சோஷியல் மீடியாவில் பல நூறுமடங்காக விஸ்வரூபமெடுத்து பிரதிபலிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே திராவிட துவேஷமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது!

இவர்கள் எல்லோரும் நடைமுறை ரீதியாக ஒரு விஷயத்தை விவாதிக்கவே தயாரில்லாமல், சடாரென்று ஆவேஷமாக, திமுக இந்து விரோத கட்சி என்று வந்து நின்றுவிடுகிறார்கள்! திமுக போன்ற ஒரு அரசியல் இயக்கம் பெருந்திரளான இந்துக்களுக்கு எதிராக எதையும் கற்பனை கூட செய்ய இயலாது. ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களின் நுட்பமான உணர்வுகளே வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கின்றன. அப்படி இருக்கும் போது அதற்கு எதிராக இயங்குவது தற்கொலைக்கு சமானமாகும்! அந்த முட்டாள் தனத்தை திமுக மட்டுமல்ல,எந்த ஒரு அரசியல் கட்சியுமே செய்யாது. இப்படியெல்லாம் திமுகவை முத்திரை குத்தியதின் விளைவாக தற்போது – இது வரை இல்லாத வகையில் – இந்துக்களை சந்தோசப்படுத்தும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு, தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்துக்களுக்கு ஆதரவாக பலவாறாக நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது திமுக!

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றால், தமிழகத்தில் எல்லா அரசு துறைகளிலும் பெரும் மேலாதிக்கத்துடன் இருந்த ஆதிக்க சாதியினர் சமூகநீதி கோட்பாட்டால் அந்த மேலாதிக்கத்தை இழக்க நேர்ந்ததின் விளைவாக திமுக மீது இந்த வன்ம பிரச்சாரத்தை பரப்புகின்றனர். அத்துடன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிட ஆகம பயிற்சி போன்றவற்றை திமுக அரசு ஏற்படுத்தியது மற்றொரு பிரதான காரணம்! இந்த சமூக வளர்ச்சி பரிமாணத்தை முற்போக்கு பிராமணர்கள் எதிர்க்கமாட்டார்கள்!

ஆகவே, இந்த துஷ்ட பிரச்சாரத்தின் காரணமாக தமிழ் சமூகத்தின் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் அதிமுக அரசு செய்துள்ள அனைத்து அநீதிகளையும் அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள்!

# தமிழகத்தின் மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு முற்றிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை.

# தமிழக அரசு வேலை வாய்ப்பிலுமே கூட வடமாநிலத்தவர் ஆக்கிரமிக்கும்படியான சட்டமாற்றம் ஓ.பி.எஸ் மூலமாக ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கொண்டு வந்தது.

# தமிழகத்தை மது போதையில் மிதக்கும் குடிகார நாடாக மாற்றி இருப்பது.

# பொதுப் பணித்துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட அனைத்திலுமே அரசு வேலை வாய்ப்பை முற்றிலும் இல்லாமலாக்கி காண்டிராக்ட் லேபர் முறையை அறிமுகப்படுத்தி, லட்சக்கணக்கான எளிய அடி நிலை தொழிலாளர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தை அரசியல்வாதிகளும், காண்டிராக்டர்களும் பங்கு பிரித்து கொழுப்பது!

# தமிழக மின்சாரத்துறையை முற்றிலும் முடக்கி, கடந்த பத்தாண்டுகளாக தனியார்களிடமிருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரம் பெருவதன் மூலம் கரப்ஷன், கமிஷன் இரண்டாலும் மின்சாரத் துறையை 1,73,000 கோடி நஷ்டத்திற்கு தள்ளி இருப்பது.

# விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திணித்தது!

# சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை மசோதாவை கொண்டு வந்தது!

# கடந்த பத்தாண்டுகளில் எந்த ஒரு நீர் மேலாண்மை திட்டத்தையும் செயல்படுத்தாதது! இதன் மூலம் விவசாயத்தை வீழ்ச்சியடைய வைத்தது! நெல் உற்பத்தியை நிலைகுலைய வைத்து வெளி மாநிலங்களிடம் அரசிக்கு கையேந்துவது!

# குடிமராமத்து என்ற பெயரில் கொள்ளைகளை மட்டுமே அரங்கேற்றியது.

# அடுத்தடுத்து இலவசங்களை அறிவித்து, உழைக்கும் மக்களிடம் உழைப்பில்லாமல் கிடைக்கும் பொருள்களுக்கு ஆசையை தூண்டுவது!

இது போன்ற மக்கள் நலன் சார்ந்த அனைத்து அநீதிகளிலும் இருந்து பாஜகவையும்,அதிமுகவையும் காப்பாற்றும் முயற்சியாகத் தான் திமுகவை இந்து விரோத கட்சி என்ற முத்திரை குத்தி வெறுப்பை விதைப்பதாகும்!

அதிமுக எவ்வளவு ஊழல் செய்தாலும் பாஜக அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஏனென்றால், அவர்கள் ஊழல் செய்தால் தான் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லி, அவர்களை அடிமையாக நடத்த முடியும். டெல்லியை ஆளும் ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜ்ரிவால் மாதிரி நேர்மையான ஆட்சியை தருபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே! அதனால், சட்டம் போட்டு மாநில அதிகாரங்களை எல்லாம் பறிக்கும் பாஜகவுக்கு, ஊழல் அதிமுக ஆட்சி ரொம்ப சவுகரியமாகிவிட்டது. இது மக்கள் விரோத சட்டங்களை, திட்டங்களை திணிப்பதற்கு தோதாதவும் உள்ளதல்லவா?

இந்தக் காரணங்களுக்காகத் தான் இந்து விரோத கட்சி முத்திரை திமுக மீது திருமபத் திரும்ப வலிந்து குத்தப்படுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time