ஆன்மீக குருவின் அதிரடி அரசியல் நகர்வுகள்..!

-சாவித்திரி கண்ணன்

ஆன்மீகம், யோக மார்க்கம் எனப் பேசி தன்னை முற்றும் துறந்த துறவியாக ஞான மார்க்கத்திற்கானவராக அடையாளப்படுத்தி வந்த ஜக்கி வாசுதேவும், ஈஷா யோகா அமைப்பினரும், இது வரை எந்த தேர்தல்களிலும் இல்லாத வகையில் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்!

தன்னுடைய ஓட்டு இந்த முறை யாருக்கானது என ஒரு பக்தரின் கேள்விக்கு விடை சொல்வது போல ஜக்கி, அவரது அரசியல் ஆதரவு பாஜக கூட்டணிக்கானது என்பதை தெளிவுபடுத்தி விட்டார்!

தன்னுடைய ஐந்து அம்ச கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே, தனது வாக்கு எனக் கூறி, தன்னுடைய பக்தர்களுக்கும் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என சூசகமாக உணத்தியுள்ளார்!

# தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் உயிர் நாடியாக இருப்பது நம் காவேரி நதி. காவேரி நதியை புத்துயிரூட்டுவதற்கு யார் உறுதி எடுக்கிறார்களோ அவர்களுக்கே எனது ஓட்டு.

( இதற்கு கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட – கர்நாடக அரசியல்வாதிகளிடம் செல்வாக்கு பெற்ற ஜக்கி வாசுதேவ்! அவர்களை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி தண்ணீர் திறந்துவிடுங்கள் என செயல்பட வைப்பது தான் சரியானது .ஏனெனில், காவிரி அவர்களிடம் மாட்டிக் கொண்டு தானே சின்னாபின்னப்படுகிறது)

# இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல யார் உறுதி அளிக்கிறார்களோ, அவர்களுக்கு எனது ஓட்டு. ( அதாவது ஈஷாவின் பசுமைக் கரங்கள் புராஜக்டிற்கான பல ஆயிரம் கோடிகளை தரும் அரசுக்கே அவரது ஓட்டு)

# ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்காக உருவான கல்வி முறையால் நம் நாட்டு இளைஞர்கள் திறனற்று போய்விட்டனர். தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி தரம் மிகவும் மோசமாக உள்ளது. நிறைய பள்ளிகள் மாட்டு தொழுவங்கள் போன்று உள்ளது .அரசாங்கம் பள்ளியை நடத்துவதற்கு பதில், பள்ளிகளை நடத்தும் ஆர்வம் இருப்பவர்களிடம் பள்ளிகளை ஓப்படைக்க வேண்டும், அப்படி, பள்ளியை நடத்துபவர்களிடம் வசதி இல்லாத மாணவர்களுக்கான பணத்தை அரசாங்கம் கட்ட வேண்டும்.

( ஆக, இந்துத்துவா கல்விமுறையும், தனியார் பள்ளிகளுமே தீர்வு)

# கோயில்களை அரசாங்கமே அதை நிர்வகிப்பது அவமானமாக உள்ளது. அனைத்து கோயில்களையும் பக்தர்களிடம் படிப்படியாக  ஒப்படைக்க. அதற்காக அரசு ரீதியான கொள்கையை உருவாக்கி செயல்படுத்த உறுதி அளிப்பவர்களுக்கே எனது ஓட்டு.

( அதாவது இந்து அறநிலையத் துறையிடம் உள்ள ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களையும், பல ஆயிரம் கட்டிடங்களையும் தனியார்களிடம் தர வேண்டும்)

ஆரம்ப காலங்களில் அரசிய்ல் குறித்து எதுவுமே பேசாமல் அரசிலை முற்றிலும் தவிர்த்து வந்த ஜக்கி வாசுதேவ் தற்போது பாஜக அரசின் ஒவ்வொரு அசைவையும் ஆதரித்து பேசுகிறார். அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலை அவசியமானது என்றார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரித்த ஜக்கி, ‘’உணவு பொருட்களை எங்கே வேண்டுமானாலும் விற்க விவசாயிக்கு உரிமை வழங்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் உதவியோடு விவசாயத்தை வளர்க்க வேண்டும்’’ எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

காவிரியை மீட்க வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். எனவேதான் காவிரி வடிநிலத்தில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இயக்கத்தை ஈஷா தொடங்கியுள்ளது. இதற்கு கர்நாடக, தமிழக அரசுகளும், மத்திய அரசும் ஆதரவு அளித்துள்ளது என்ற ஜக்கி, தமிழக அரசிடம் எதிர்பார்த்த ஓத்துழைப்பு கிடைக்கவில்லை என ரங்கராஜ் பாண்டேவிடம் ஒரு பேட்டியில் குறைபட்டுக் கொண்டார்.

இது குறித்து நாம் தமிழக அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, காவிரியை மீட்க வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என பிரம்மாண்ட பிரச்சாரம் செய்து பல கோடிகள் நிதியை மக்களிடமும், கார்ப்பரேட்டுகளிடமும் பெற்றார் ஜக்கிவாசுதேவ்! ஆனால், அப்படி விவசாயிகள் தங்கள் நிலத்தில் வைத்த மரங்களை வளர்க்க அரசு ஆண்டு தோறும் நிதி தர வேண்டும் என்கிறார். இதன்படி மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு தலா ரூ 125 என்ற வகையில், நடப்படும் 242 கோடி மரங்களுக்கும் தர வேண்டும் என்றால் தமிழக அரசின் ஒட்டுமொத்த கஜானாவும் காலியாகிவிடும். ஆகவே, தமிழக அரசு ஈஷா திட்டத்திற்கு நிதி தர முன்வரவில்லை.என்றனர்.

ஆனால், கர்நாடகா பாஜக அரசு இந்த திட்டத்திற்கு நிதி தந்தது! ஆனால், அதில் கூட ஏதோ ஒரு பிரச்சினை வெடித்துள்ளதாகவும், கொடுக்கப்பட்ட பணத்திற்கான ரிசல்ட் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது!

இவையெல்லாம் நிதி சம்பந்தப்பட்டவை! ஆனால், ஜக்கியின் அரசியல் நடவடிக்கைகள் தாம் இதைவிட பல மடங்கு தீமை நிறைந்ததாகும்!

ஜக்கியின் சீடர்கள் என்று சொல்லப்படுகிற ஆசிரமவாசிகளின் ஒரு ஐ.டி.விங் திமுக மற்றும் காங்கிரசுக்கு எதிரான பல்வேறு மீம்ஸ்களையும், வீடியோக்களையும், கட்டுரைகளையும் சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். இந்த ஈஷா யோகாவில் இது வரை சுமார் 75 லட்சம் பேர் யோகா கற்றுள்ளனர். அவர்கள் போன் நம்பர்கள் எல்லாவற்றுக்கும் இவை தினசரி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன! முன்பெல்லாம் இந்த போன் நம்பர்களுக்கு ஈஷா யோகாவின் நிகழச்சி நிரல்கள், ஜக்கியின் அருளுரைகள் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன.ஆனால், தற்போதோ ஏதோ பாஜகவின் ஆன்மீக விங் போல தீயாக கொடுஞ் சொற்களுடன் அரசியல் பேசுகின்றன ஈஷா மையத்தினர் அனுப்பும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள்! ஒரு ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு ஏன் இப்படி தேவையில்லாமல் திராவிட இயக்கத்தின் மீது இவ்வளவு குரோதமும்,பகை உணர்ச்சியும் இருக்க வேண்டும் என்ற ஆச்சரியத்தையும் அவை ஏற்படுத்துகின்றன.

முன்னதாக, இந்த யோகா மையத்தில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் ஆகியவற்றில் இருந்து வந்து  நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள் நான்காயிரம் பேருக்கு ஓட்டு போடுவதற்கான வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக – தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் வருவதால் அமைச்சர் வேலுமணி நேரடியாக களத்தில் இறங்கி புது வாக்காளர் அட்டைகளுக்கு சில காரியங்களை செய்துள்ளார். அதற்கு உள்ளூர் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாய், தகப்பன், உற்றார், உறவினர், சொத்து, சுகம் எதுவும் வேண்டாம் என்று துறவியாக வந்தவர்கள் ஓட்டு அரசியல் களத்தில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன..? என்ற கேள்வி பலமாக எழுப்பட்டுள்ளது!

ஆன்மீகம் என்பது உலகின் சகல பந்த பாசங்களிலும் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அடங்கி ஒடுங்குவது! ஆனால், ஜக்கியின் புதுவிதமான ஆன்மீகமோ..அதிரடி அரசியல் பேசுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time