ரொம்ப பேரு இப்படித் தான் நினைக்கிறாங்க..! அதாவது 30 முதல் 40% பேர். இது ஜெயிக்கிற கட்சி வாங்குகிற ஓட்டுகளை விட அதிகமாக இருக்குது. ஒரே மாதியாக பலரும் நினைக்கும் போது எப்படியான விபரீதம் நடக்கும் என்பதற்கு ஒரு சுவாரசியமான தெனாலி ராமன் கதை இருக்குது!
இது ஒரு தெனாலிராமன் குட்டிக் கதை.
கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் மழை மும்மாரிப் பொழிந்தது. பூமி விளைந்தது. செல்வம் கொழித்தது. அனைவரும் நிறைவான, மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மன்னரும் நம்பினார்!
அரசன் மகிழ்வோடு இருந்த போது கூடிய அரசவையில் எல்லோரும் பெருமிதத்தோடு இருந்தனர். நாட்டில் எந்த பிரிச்சினையும் இல்லை. எல்லோரும் சுபிட்சமாகவும் குறை இல்லாமலும் வாழ்வதாகவும் மக்களின் தேவை அனைத்தும் பூர்த்தி செய்து விட்டதாகவும் கூறிக் கொண்டிருந்தார்.
அந்த வேலையில் தெனாலி ராமன் வந்து மக்களின் தேவையை அவ்வளவு சுலபமாக யாரும் தீர்த்து விட முடியாது. யாருடைய தேவையும் நிறைவடையவில்லை என்று கலகத்தை ஆரம்பித்து வைத்தான்.
அதை மறுத்த அரசனோ தெனாலி ராமனைக் கடிந்து கொண்டார். மேலும் தெனாலி ராமன் அவரின் கூற்றை நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.
நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று கூறிய தெனாலிராமன் சவாலை ஏற்றுக் கொண்டு தன் கூற்றினை நிரூபிக்க சில ஏற்பாடுகளை செய்யச் சொன்னான்.
தெனாலிராமன் கேட்டுக் கொண்டது அரசனின் இஷ்ட தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தான். இதற்கும் சவாலுக்கு என்ன சம்பந்தம் என்று குழம்பிய அரசன், சரி என்று ஒத்துக் கொண்டார். ஆனால் தெனாலிராமன் மேலும் ஒரு நிபந்தனை விதித்தார். அதுதான் இஷ்ட தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் பால் அரண்மனையில் இருந்து வழங்கக் கூடாது. மாறாக ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்றும், அப்படி மக்களிடமிருந்து பெறப்பட்ட பாலை வைத்து தான் அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கூறினான்.
மேலும் குழம்பிய அரசன் அதற்கும் ஒத்துக் கொண்டார்.
மறுநாள் இஷ்ட தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப் பட்டது. அரண்மனை வாசலில் மிகப் பெரிய அண்டா வைக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு சொம்பு பால் கொண்டு வந்து அண்டாவில் ஊற்றிவிட்டுப் போகுமாறு தண்டோரா போடப்பட்டது. அனைவரும் சோம்பு சொம்பாகக் கொண்டுவந்து ஊற்றினார்கள். நாள் முழுவதும் சேகரிக்கப் பட்ட பால் அன்று மாலை அபிஷேகத்திற்கு எடுக்கப்பட்டது.
ஆச்சர்யம் என்னவெனில், பால் நீர்த்த சுண்ணாம்புத் தாண்ணீர் போல் காட்சியளித்தது. இதைக் கண்ட அரசருக்கு வியப்பும் கோபமும் வந்தது.
என்ன இப்படி நடந்து விட்டது? இதற்கு காரணம் என்ன? உடனே விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதில், எதோ சூது நடந்திருப்பதாக எண்ணிய அரசர் உடனே தெனாலி ராமனை அழைத்து விசாரணை நடத்தினார்.
புன்முறுவலோடு வந்த தெனாலிராமனோ விபரத்தை எடுத்துக் கூறினார்.
நடந்தது இதுதான் என்று கூறினார்.
எல்லோரும் பால் ஊற்றும் பெரிய அண்டாவில் நாம் ஒருவர் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என்று நினைத்து ஒரு சிலர் பாலுக்குப் பதில் தண்ணீர் ஊற்றி விட்டார்கள். அதுதான் காரணம் என்றார். அப்படி என்றால் பால் ஏன் இந்த அளவு தண்ணீர் உள்ளது என்று கேட்டார்கள். நாம் ஒருவர் மட்டும் தான் தண்ணீர் ஊற்றுகிறோம் என நினைத்து ஏராளமானோர் தண்ணீரை ஊற்றி விட்டனர் மன்னா. சில நபர்கள் மட்டும் பால் ஊற்றி உள்ளனர் என்று கூறினார். அனைவரும் பால் ஊற்றும் அளவுக்கு வளமாக இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.ஆகவே, தெனாலி ராமன் கூறியது உண்மை தான் என உணர்ந்தார். இந்த நிதர்சன நிலையைக் கண்ட அரசரோ மிகவும் மன வேதனை கொண்டார்.
இந்த நிலை தான் இப்போதைய நமது ஜனநாயகத்தில் நடக்கிறது. நாம் ஒருவர் ஒட்டு போட்டா நிலைமை மாறி விடப் போகிறது என்று நினைத்து கிட்டத்தட்ட 35 முதல் 40 % வரை பலரும் ஒட்டுப் போடுவது இல்லை. ஆனால், எளிய அடி நிலை மக்கள் பெரும்பாலும் ஓட்டு போட்டுவிடுகின்றனர். வசதியான மற்றும் படித்த நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களே ஓட்டு போடாமல் அலட்சியம் செய்கின்றனர்.
Also read
ஒரு ஓட்டால் ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியே மாறிவிடும் சில தேர்தல் முடிவுகளைக் கண்டுள்ளோம். எனவே, எனது ஒரு ஓட்டால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்று நினைக்காமல் எல்லோரும் சென்று 100% வாக்களிக்க வேண்டுகிறேன்.
ஓட்டே போடாமல், பரப்புரை எதுவும் செய்யாமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? ஆம். ஒட்டுப் போடுவதை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன..? என்ற கோணத்தில் எடுக்கப் பட்ட இளைஞர்களால் எடுக்கப்பட்ட திரைப்படம்.
இணைய தலைமுறை.
தேர்தல் சமயத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இப்போது YouTube சானலில்.
பார்த்து விட்டு தங்களின் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
கட்டுரையாளர்; இளமாறன்
மென் பொருள் பொறியாளர்.
அமெரிக்காவில் பார்த்த வேலையை உதறிவிட்டு, பொது சேவை நோக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் மக்கள் பாதை ஆகியவற்றில் தீவிரமாக பணியாற்றியவர். மக்கள் ஓட்டுப் போடாமல் தவிர்ப்பது குறித்து நிறைய ஆய்வுகள் செய்துள்ளார்.
Hello my loved one! I want to say that this post is awesome, great written and
include approximately all significant infos. I would like to look extra posts like this .