கடைகள் அடைப்பு, போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏன்?

-சாவித்திரி கண்ணன்

பொதுவாக தேர்தல் நாளன்று கடைகள் ஒரு சில மணி நேரம் தாமதமாக திறக்கும். அவ்வளவே! ஆனால், வரலாறு காணாத வகையில் இந்த தேர்தலில் தமிழகத்தின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன! கிட்டதட்ட முழு அடைப்போ என்று எண்ணும் அளவுக்கு நிலைமை விபரீதமாக காட்சியளித்தன! இது குறித்து நாம் சில கடைக்காரர்களிடம் பேசிய போது நேற்றே போலீசார் வந்து நாளை கடைகள் எல்லாவற்றையும் மூடிவிடுங்கள்! ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்று கூறிச் சென்றதாகவும், போலீசாரே இப்படிச் சொல்லிய பிறகும் நாம் திறந்து வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று மூடிவிட்டதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் காய்கறிக் கடைகள்,மளிகைக் கடைகள் மெடிக்கல் ஷாப்ஸ் கூட மூடப்பட்டிருந்தன. ஒரே ஒரு மனிதரைக் கொண்டு இயங்கும் பெட்டிக் கடைகள் கூட மூடப்பட்டிந்தன. இந்த எதிர்பாரா நிகழ்வால் பொது மக்கள் காலையில் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

ஹோட்டல்கள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டிந்ததால் தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு காலை டிபனை தருவிப்பதிலும், மதிய உணவைத் தருவிப்பதிலும் பெரும் சிரமத்திற்கு ஆளானதாக நமக்கு பலர் தொலைபேசியில் தெரிவித்தனர். சிறிய உணவுவிடுதிகளைக் கூட கண்டடைய முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும்,தள்ளுவண்டிக் கடைகளிலாவது ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று அலைய வேண்டிய நிலை உருவானதாகத் தெரிவித்தனர். தேர்தல் நாளன்று பூத்தில் முகக் கவசம் கையுறைகள் உள்ளிட்ட சுமார் 14 பொருட்களுக்கு தாரளமாக செலவு செய்யும் தேர்தல் கமிஷன் பணியில் ஈடுப்பட்டிருப்பவர்களுக்கு உணவு மற்றும் கழிப்பிட வசதிகளில் மட்டும் அலட்சியம் காட்டுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே கஷ்டம் தேர்தல் பூத் ஏஜெண்டுகளாக உள்ள கட்சிக்காரகளுக்கும் ஏற்பட்டதாக தெரிவித்தனர். சென்னை புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அலுவலர்களின் நிர்பந்தத்தால் அரை நாட்கள் கடையை அடைத்துவிட்டு, மதியத்திற்கு மேல் வணிகர்கள் கடை திறந்தனர்.

பல இடங்களில் போக்குவரத்தும் மிகக் குறைவாக காணப்பட்டது. ஷேர் ஆட்டோ, சாதாரண ஆட்டோ, அரசு போக்குவரத்து எதுவுமே இல்லாமல் பலர் சிரமத்திற்கு ஆளாயினர். சென்னையிலேயே திருவான்மியூரில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அவர்களின் பழைய வீடு இருக்கும் அம்பத்தூரில் ஓட்டு இருக்கிறது. அவர்கள் பஸ் மற்றும் ஆட்டோ கிடைக்காமல் வெகு நேரம் அவதிக்கு ஆளாயினர். இது போல பலருக்கும் அனுபவம் நிகழ்ந்தது.

விழுப்புரம்,காஞ்சிபுரம் ,மதுரை, திருச்சி, , திண்டிவனம், திண்டுக்கல், தென் சென்னை, வட சென்னை, பாரிமுனை, கோயம்பேடு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டதாக நமக்கு தகவல்கள் கிடைத்தது! திரு நெல்வேலி,பாளையங் கோட்டை பகுதிகளில் 90% கடைகள் பூட்டப்படிருந்ததாகவும், போக்குவரத்து ஏறத்தாழ ஸ்தம்பித்துப் போனதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர்.  நாம் விசாரித்த வகையில் சுமார் 75% இடங்களில் இது போன்ற நிலைமைகள் தான் எனத் தெரிய வருகிறது.

ஆனால், மற்ற சில இடங்களில் வழக்கமான சூழல்கள் நிலவியதாக தெரிவித்தனர். எனினும் பெரும்பாலான இடங்களில் இன்று ஊரடங்கு போன்ற ஒரு நிலைமை உருவாக்கப்பட்டது என்றே நமது வாசகர்கள் தெரிவித்தனர். ஒரு வேளை வாக்கு பதிவு செய்பவர்களின் சதவிகிதத்தை குறைக்கும் முயற்சியாக இவை செய்யப்பட்டிருக்கலாமோ என்றும் சில நண்பர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இவ்வாறு வழக்கத்திற்கு மாறாக ஒரு நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டதின் பின்னணியில் ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா..? எனத் தெரியவில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time