அடங்கா சிந்தனையாளர், அளப்பரிய சாதனையாளர் ஆனைமுத்து!

-சாவித்திரி கண்ணன்

கடந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ச் சமூகத்திற்கு தன் சிந்தனையாளும்,சீரிய எழுத்துக்களாலும், தீவிர செயல்பாட்டுகளாலும் ஆனைமுத்து அய்யா அளவுக்கு பங்களித்த இன்னொருவரைச் சொல்ல முடியாது! இது உண்மை,வெறும் புகழ்ச்சியல்ல! எந்த ஒரு பொருளாதாரப் பின்புலமும் இன்றி அவர் சாத்தித்தவை பிரமிக்கதக்கவையாகும்…!

பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் சிறப்பாகத் தொகுத்து,முதன்முதலில்  பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் என முப்பெரும் தொகுதிகளாக்கி 1970 களில் இவர் கொண்டு வந்த தொகுப்பு நூல் தான் தமிழ் நாட்டில் பல இளம் சிந்தனையாளர்களுக்கும்,ஆய்வாளர்களுக்கும் பெரியாரை சரியாக அறிமுகப்படுத்தியது. இத்துடன் நிற்காது 2010 இல் விடுபட்ட பெரியாரின் பிற படைப்புகளையும் சேர்த்து  பல தொகுதிகளாக அவர் வெளியிட்டார்.

90 அகவையைத் தொட்ட நிலையிலும் அவர் தொய்வில்லாமல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவண்ணம் இருந்தார்! 1940 களிலேயே பெரியாரின் அணுக்கத் தொண்டர் ஆன போதிலும், 1963 முதல் பெரியாருடன் அன்றாடம் கலந்து பேசி அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றது அரியதோர் வாய்ப்பாகும்!. இப்படியாக ஒரு கால் நூற்றாண்டுகாலம் பெரியாருடன் பயணித்த காலகட்டம்,அடுத்த அரை நூற்றாண்டுக்கு அவர் விட்டுச் சென்ற பணிகளை அசுரத்தனமாக செய்யும் ஆற்றலை அவருக்கு தந்தது!

2005 ஆம் ஆண்டு சங்கராச்சாரியார் கைது குறித்து நான் இரு சிறிய நூல்களைக் கொண்டு வந்தேன். சங்கராச்சாரியார் கைது குழப்பங்களும்,விளக்கங்களும் மற்றும் சங்கராச்சாரியாரும் இந்து மதமும் சிதைக்கப்பட்ட உண்மைகள்! அந்த நாட்களில் இவை பெரும் பரபரப்புடன் விற்பனையானது. இந்த நூல் குறித்து அவர் நடத்திய சிந்தனையாளனில் சிறப்பான விமர்சனம் வெளியானது. அதைத் தொடர்ந்து நண்பர் புகழேந்தி என்னை ஒரு நாள் ஆனைமுத்து உங்களை சந்திக்க விரும்புகிறார் எனக் கூறி அழைத்துச் சென்றார். அந்த சந்திப்பில் நீங்கள் சிந்தனையாளன் இதழக்கு அவ்வப்போது கட்டுரைகள் எழுதி தர வேண்டும் என்றார். நானும் அவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப சில கட்டுரைகள் எழுதித் தந்தேன்.

அந்த காலகட்டங்களில் தான் அவரை ஒரளவு நன்றாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் பிற்படுத்தப்பட்ட சமூதாயம் எழுச்சி பெற இந்தியா தழுவிய அளவில் இடையறாது இயங்கினார். பெரியார் சிந்தனைகளை வட இந்தியாவிலும் பரப்பினார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய அவர் தொடர்ந்து அரசியல் லாபி செய்தார். இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங், சஞ்சீவரெட்டி, வி.பி.சிங், கன்சிராம் ஆகியோரோடு தொடர்ந்து கடித போக்குவரத்துகள், நேரடி சந்திப்புகள் என இயங்கினார். மண்டல் அறிக்கை வெளியாக பி.பி.மண்டலுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் அளித்த அளப்பறிய தகவல்கள்தான் மண்டல் அறிக்கை வெளிவர முக்கிய காரணமாக அமைந்தன!

இவை மட்டுமின்றி சமூகம், சட்டம், அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கட்டுரைகள் எழுதி வந்தார். அவரது கடும் உழைப்பில் வெளியான எழுத்துகள் 16 நூல்களாக  தற்போது தமிழ்ச் சமூகத்தின் தனிப் பெரும் சொத்தாக உள்ளன! இத்துடன் இன்னும் ஐந்து நூல்களையும் சேர்த்து இவர் பதிப்பித்துள்ளார். ஆக மொத்தம் 21 தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

அறிவுநெறி அடிக்கற்கள்,தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி‘சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து’, ‘தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’ ஆகியவை தனி கவனம் பெற்றவையாகும்!

அவரது 16 தொகுப்புகளில் உள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவகாரம் தொடர்பாக ஆழமாக பேசுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி, விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு, நாத்திகர் போர்வாள், மார்க்சியப் பெரியாரியம், இயக்கம், அரசியல்-தமிழ்நாடு, அரசியல், தேசிய இன விடுலை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, தமிழீழ விடுதலை,  காலப்பதிவுகள் பெரியார் ஈ.வெ.ரா. பயணக் காலக் கண்ணாடி ஆகியவை தமிழ் சமூகத்திற்கு அவர் தந்து சென்றுள்ள பொக்கிஷங்களாகும்.

முதலில் பெரியார் சமஉரிமைக் கழகம் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து,பிறகு மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமக் கட்சி என பெயர் மாற்றம் செய்தார். இவர் திராவிட இயக்க சிந்தனைக்கு மட்டுமல்ல, தமிழ் தேசிய சிந்தனைக்கும் உரமாகத் திகழ்ந்தார்.

அந்த வகையில் திராவிட இயக்கங்களும்,தமிழ் தேசிய இயக்கங்களும் இவரை கொண்டாடி இருக்க வேண்டும்! இவருக்கு பெரும்,மரியாதைகளும்,சிறப்புகளும் சேர்த்திருக்க வேண்டும். இவர் பெயரை தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சேர்ப்பித்திருக்க வேண்டும். இவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளுக்கான உரிய அங்கீகாரத்தை தமிழ்ச் சமூகம் இவருக்கு தரவில்லையே..என நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தனக்கென்று தனி ஒளிவட்டம் உருவாக்கிக் கொண்டு தனிப் பெரும் அளுமையாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விருப்பமின்றி, எளிமையாக வாழ்ந்தார். அவரை நன்கு உணர்ந்த சில தனி நபர்கள், அரசு ஊழியர் அமைப்புகளே அவருக்கு சிற்சில உதவிகளைச் செய்து அவரது பதிப்பு பணிக்கு கைகொடுத்தனர். பிறப்பென்ற இயற்கையின் அடிப்படையில் சாதியால் இவர் வன்னியர் என்றாலும், சாதி அடையாளம் தவிர்த்து, இந்தியா முழுமையிலும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும். ஒடுக்கப்பட்டோருக்குமாக இயங்கிய ஒப்பற்ற சிந்தனையாளராகத் திகழ்ந்தார் என்பதே அவரது பெருமையாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time