எக்குத் தப்பு எடப்பாடி எப்படி சம்பாதித்தார்…?

-ஜீவா கணேஷ்

இந்த தேர்தலில் வரலாறு காணாத விதத்தில் கரன்சியை தன்னுடைய தொகுதிலும், தமிழகம் முழுமையிலும் அள்ளிவிட்டார் எடப்பாடி? இப்படி பணத்தை அள்ளி இறைப்பதற்கு எப்படியான ஊழல்களை அவர் செய்திருப்பார் என்பதற்கு இவை இரண்டும் சின்ன சாம்பிள் அவ்வளவே!

தமிழக நெடுஞ்சாலைத்துறையில்  ஆன்லைன் மூலமாகத்தான் டெண்டர் பெறப்படுகிறது,  டெண்டர்  திறக்கப்படும்  வரை யார் டெண்டர் போட்டிருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது’’  என்று  எடப்பாடியார் உரைவீச்சு! ஆனால் உண்மை நிலவரம் வேறு. வேலைக்கான தொகையை மட்டுமே ஆன்லைனில்  குறிப்பிடுவார்கள். அத்துடன் வைப்புத்தொகை, கருவிகள் தளவாடங்கள் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ் போன்ற 10க்கும் மேற்பட்ட  ஆவணங்களின் ஒரிஜினல்களை  நேரில் கொடுக்க வேண்டும் என்பதே நிஜம்!

ஆனால், ஏற்கெனவே முடிவு செய்து வைத்துள்ள ஒப்பந்தக்காரர், சப்போர்ட்டிங் டெண்டர் போட வேண்டிய ஒப்பந்தக்காரர் ஆகியவர்கள் தவிர மற்ற யாரிடமும் எதையும் வாங்க மறுத்து விடுவார்கள். தந்தாலும் நிராகரித்து விடுவார்கள். கருவிகள் தளவாடங்கள் சான்றிதழை  தாங்கள் முடிவு செய்துள்ள ஒப்பந்தக்காரரைத் தவிர வேறு யாருக்கும் கோட்டப் பொறியாளர் தரமாட்டார். நெடுஞ்சாலைத்துறையில் ஆன்லைன் டெண்டர்  நடைமுறையில் இருக்கிறது என்று சொல்வது டுபாக்கூர் பேச்சாகும்!

டெண்டர் நோட்டீசே போடாமல் ஒப்பந்தம்!

நெடுஞ்சாலைத்துறையில்  டெண்டர் நோட்டீசே வெளியிடாமல்     இரண்டு வேலைக்களுக்கான  ஒப்பந்தங்களை கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் இருப்பதிலேயே பெரிய மோசடியாகும்! அவற்றை தற்போது பார்ப்போம்.

கோவையில் மேம்பாலம் விரிவாக்க ஊழல்;

கோவை  ஆத்துபாலத்திலிருந்து  உக்கடம் வழியாக  ஒப்பணக்கார தெரு வரை மேம்பாலம் கட்டும் வேலை ஜூன் 2018 முதல்  நடந்து கொண்டிருக்கிறது. இந்த மேம்பாலத்தை விரிவாக்கம் செய்வதற்காக 29.05.2020 அன்று ஒரு டெண்டர் அழைப்பு விடப்பட்டது.. இந்த வேலையின் மதிப்பு 179 கோடி ரூபாய். ஆனால்,இந்த டெண்டர்  ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 03.08.2020 அன்று இந்த வேலைக்கு மதிப்பு  164.00 கோடி ரூபாய் என 15 கோடி ரூபாய் குறைத்து மறு டெண்டர் அழைப்பு தரப்படுகிறது.  ஆனால்  இந்த டெண்டரையும்  09.09.2020 அன்று கண்காணிப்புப்  பொறியாளர்  ரத்து செய்துவிட்டார்.

ஆனால், ரத்து செய்யப்பட்ட   மேம்பால விரிவாக்கம்  வேலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 04.02.2021 அன்று அடிக்கல் நாட்டினார் என்றால்,என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்?  ரத்து செய்யப்பட்ட  வேலைக்கு எப்படி எடப்பாடி பழனிசாமி  அடிக்கல் நாட்ட முடியும்? விடுவார்களா  கோவை சமூக ஆர்வலர்கள்…?  இந்த டெண்டர் சம்பந்தமாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவி மூலம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் பறந்தன.

என்னமோ நடக்குது; மர்மமாய் இருக்குது!

வழக்கறிஞர் எம்.எல்.ரவியிடம் நாம் பேசியபோது, “ஏற்கெனவே கட்டிக்கொண்டிருக்கும் பாலத்தை விரிவாக்கம் செய்ய டெண்டர் அழைக்கப்பட்டிருக்கிறது என்றும்,  விரிவாக்கம் செய்ய வேண்டிய பால  வேலையில் ஒரு பகுதியை ஏற்கெனவே கட்டிக்கொண்டிருக்கும் பாலத்தின் ஒப்பந்தக்காரர் முடித்து விட்டார் என்றும், எனவே அந்த ஒப்பந்தக்காரருக்கே  விரிவாக்கம் செய்யவிருக்கிற ஒப்பந்தத்தையும் தரவிருக்கிறார்கள் என்றும்  எனக்கு தகவல் கிடைத்தது.

எனவே, இது தொடர்பான புகாரை டெண்டர் போடுவதற்கு இறுதி நாளுக்கு இரண்டு நாள் முன்னதாக, அதாவது  13.07.2020 அன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கும் இமெயில் மூலம் அனுப்பினேன். அதனால் வேறு வழியின்றி டெண்டரை  கண்காணிப்புப்  பொறியாளர் சுரேஷ் ரத்து செய்துவிட்டார்.

மீண்டும்  03.08.2020 அன்று இந்த வேலைக்கு மறு டெண்டர்  அழைத்துள்ளார். ஆனால் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் என்று கூறி  இந்த டெண்டரையும்  09.09.2020 அன்று கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் ரத்து செய்துவிட்டார்.  இப்படியாக கோல்மால் செய்யப்பட்ட டெண்டர் வேலைக்கு தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அடிக்கல் நாட்டினார்.

இதைப் பற்றி கோவை நெடுஞ்சாலைத் துறை  அதிகாரிகளிடம் பேசியபோது அதிர்ச்சி தகவலைச் சொன்னார்கள்.

09.09.2020 அன்று ரத்து செய்த டெண்டருக்கு போலி I/D உருவாக்கி  தங்களுக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டும் தெரிவித்து 14.09.2020 அன்று  இரவு விலைப்புள்ளியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அனுமதித்துள்ளார்களாம்!

27.01.2021 அன்று ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளார்கள். இந்த வேலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 04.02.2021 அன்று அடிக்கல் நாட்டியுள்ளார். ரத்து செய்த டெண்டருக்கு மறுபடியும் டெண்டர் நோட்டீஸ் வெளியிடாமல்  போலி டெண்டர் I/D உருவாக்கி டெண்டர் பெற்றது தொடர்பாக மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கும்  புகார் அனுப்பியுள்ளேன். டெண்டர் முதல் அழைப்பு,  இரண்டாவது அழைப்பு இரண்டிலும்  திட்டத்தின் தொழில்நுட்ப விவரங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் வேலையின் மதிப்பு  15 கோடி ரூபாய்  குறைத்ததன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.’’ என்று கூறினார்.

இந்த டெண்டரில் உள்ள மேம்பாலம் விரிவாக்கம் வேலையில் ஒரு பகுதியை   ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலையின் ஒப்பந்தக்காரர் செய்து முடித்ததை மறைப்பதற்காக,  இரண்டு முறை டெண்டர் ரத்து செய்து, ரத்து செய்யப்பட்ட இரண்டாவது டெண்டருக்கு புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிடாமல் போலி I/Dஐ உருவாக்கி, பழைய ஒப்பந்தக்காரரை டெண்டர் பதிவேற்றம்  செய்ய வைத்தது போன்றவை சினிமாவில் வரும் திகில் காட்சிகளைப் போல் உள்ளது.

முதல்வருக்கு தெரியாமல் இப்படி ஒரு முறைகேட்டைச் செய்ய முடியுமா?

முறைகேடாகப்  பெற்ற டெண்டருக்கு  தலைமைச் செயலகத்தின் நிதித்துறை  எப்படி ஒப்புதல் வழங்கியது?

வழக்கறிஞர் எம்.எல்.ரவி அனுப்பிய புகார்கள் மீது  லஞ்ச ஒழிப்புத்துறையும், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக் IASம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

எடப்பாடி பழனிச்சாமி  ஆட்சியில் ஊழல்  எவ்வளவு ஆழமாகப்  புரையோடியிருக்கிறது என்பதற்கு கோவை  மேம்பாலமே  சாட்சி!

தஞ்சையே தள்ளாடும் ஊழல்!

தஞ்சாவூரில் 662 கோடி ரூபாய் மதிப்பில் 371.447 கி.மீ நீளமுள்ள சாலைகளை  பராமரிக்க  17.03.2020 அன்று டெண்டர் வெளியிடப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த டெண்டரின் முடிவு தேதி பலமுறை மாற்றப்பட்டு இறுதியாக 08.06.2020 என்று நிர்ணயித்துள்ளார் கண்காணிப்புப் பொறியாளர்.

அந்தப் பகுதியில் பணி புரியும் சில ஒப்பந்தக்காரர்கள், இந்த ஒப்பந்தத்தை ஒரே ஒரு பெரிய ஒப்பந்தக்காரருக்கு மட்டுமே கொடுத்தால் சிறிய ஒப்பந்தக்காரர்களான தாங்கள் வேலை இல்லாமல்  பாதிக்கப்படுவோம் என்று வழக்கு தொடுத்தார்கள். இந்த நிலையில் வேலையை மறு டெண்டர் விடுவதாக 02.06.2020 அன்று கண்காணிப்புப் பொறியாளர் பழனி டெண்டருக்கு திருத்தம் வெளியிட்டுள்ளார். இது ரத்து செய்யப்பட்டு 17.03.2020 தேதி  ‘மறு டெண்டர் விடப்படுகிறது என்றும் ‘பழைய டெண்டருக்கு முடிவு தேதி  10.06.2020’ என்றும் முன்னுக்குப் பின் முரணாக கூறப்பட்டது.

புதியதாக டெண்டர் அறிவிப்பு வெளியிடாமல்  புதிய  டெண்டரை உருவாக்கி அதில் விலைப் புள்ளிகளைப்  பதிவேற்றம் செய்ய எப்படி அனுமதித்தனர்?  ஒரு சில  ஒப்பந்தக்காரர்களுக்கு உதவவும் மற்றவர்களை ஏமாற்றவும்  ஒரு போலி டெண்டர் I/Dஐ உருவாக்கியுள்ளார்கள் என்பதே நிஜம்!

முதல் I/D இல் டெண்டரை ரத்து செய்த பின்னர், கண்காணிப்புப்  பொறியாளர் புதிய I/D  உடன் புதிய டெண்டர்  அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பழைய தேதியிட்ட டெண்டர் அறிவிப்பு எண்தான்  புதிய டெண்டர்  I/Dல் பதிவேற்றப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இந்த முறைகேடுகளைப் பற்றிய புகார்களை அரசுக்கு அனுப்பியுள்ளார்.  இந்த 2000 கோடி ரூபாய் மதிப்பிலான வேலைகள்தான்  3 டெண்டர்களாகப் பிரிக்கப்பட்டு அழைப்பு வெளியிடப்பட்டது. அதில் ஒன்றான 680 கோடிக்கான டெண்டரில்தான் டெண்டர் அறிவிப்பை வெளியிடாமல் புதிய  I/Dஐ  உருவாக்கியிருக்கிறார்கள்.

இது பற்றி ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது “புதிதாக டெண்டர் நோட்டீஸ் போடாமல், ஒரு மாத கால அவகாசம் கொடுக்காமல் இப்படி மறைத்து போடப்பட்ட டெண்டர் ஒருவருக்கு ஃபிக்சிங் செய்வதற்காகச்  செய்துள்ளார்கள் என்பதைக்  காட்டுகிறது. முதல்வர் சொல்வது போல் இது இ-டெண்டர் இல்லை. இது  F-டெண்டர் அதாவது பிக்சிங் டெண்டர் என்று கூறினார்.

கண்காணிப்புப் பொறியாளர் பழனி இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளார்.

எல்லா டெண்டரும் ஆன்லைன் டெண்டர்தான்  எனக் கூறும்  பழனிசாமிக்கே  டெண்டர்களில் என்ன நடக்கிறது என்பது  வெளிச்சம்! மே முதல் வாரத்தில் புதிய அரசு அமைந்தவுடன், டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களை முதலில்  விசாரணை  வளையத்திற்குள் கொண்டுவந்து உரிய தண்டனை  தர வேண்டும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time