2021 தேர்தல் ஒரு முழுமையான அலசல்

-சாவித்திரி கண்ணன்

2021 தேர்தல், இது வரையிலான தேர்தல்களில் இருந்து பல வகைகளில் மாறுபட்டது!

அதிகமான விளம்பரங்கள், நுட்பமான பண விநியோகங்கள், கட்சிகளை இயக்கிய தேர்தல் வியூக நிறுவனங்களின் அதீத தலையீடுகள், ஊடக அறம் உருக்குலைந்த நிகழ்வுகள், மத உணர்வு சார்ந்த பிரச்சாரங்கள், சாதி உணர்வின் பங்களிப்புகள், ஒவ்வொரு கட்சியையும் குறித்த வாக்காளர்களின் மதிப்பீடுகள், தேர்தல் ஆணையத்தின் திணறல்கள்..ஐந்து முனைப் போட்டிகள்…இவை அனைத்தையும் குறித்த பார்வையே இந்தக் கட்டுரை;

திகட்ட வைத்த விளம்பரங்கள்;

விளம்பரங்களுக்கு மிக அதிகமாக அள்ளி இறைக்கப்பட்டது! அரசாங்கப் பணத்தைக் கொண்டு வெற்றி நடை போடும் தமிழகமே என குற்றவுணர்வே இன்றி, அதிமுக அதீத விளம்பரங்கள் செய்தது. அத்துடன் தொலைகாட்சிகளில் மட்டுமின்றி யூடியூப்பிலும் விளம்பரம், இணைய தளங்களில் விளம்பரம்..வீட்டுக்கு வீடு துண்டறிக்கைகள்,ஆங்காங்கே பேனர்கள்..என எல்லா கட்சிகளும் விளம்பரத்தை அள்ளி இறைத்து மக்களை கவர்ந்திழுக்க முயன்றன! இதில் அதிமுக செய்தியைப் போன்றதொரு விளம்பரத்தை அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் தந்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது! சொந்த அனுபவத்தில் ஒவ்வொரு கட்சி பற்றியும் உருவாகியுள்ள மதிப்பீடுகளை விளம்பரங்களால் மாற்ற இயலுமா…?

விலைக்கு கேட்கப்பட்ட ஓட்டுகள்;

அதிமுக, திமுக இரண்டுமே பணத்தை தவிர்க்க முடியாத ஆயுதமாகக் கையாண்டன! பணத்தை அதிகமாக நம்பியதே ஒரு பெருந்தோல்வி தான்! பத்தாண்டு கால ஆட்சி, அரசு நிர்வாகம், அதிகாரம், ஏராளமான இலவசங்கள்…இவ்வளவுக்குப் பிறகும்..மக்களிடம் பணம் தந்து தான் நீங்கள் ஓட்டு வாங்க முடியுமென்றால்…ஊழல் மலிந்த ஆட்சி நிர்வாகத்தின் மீதான மக்களின் மட்டுமீறிய கோபத்தை மடைமாற்றவே நீங்கள் பணம் தர வேண்டியதாயிற்று என்பது தான் உண்மை! எல்லா அடிப்படைத் தேவைகளும் மக்கள் கையூட்டு கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற கசப்பை அரசியல்வாதிகள் தரும் ரூபாய் மாற்றிவிடுமோ…? இதிலும்,முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகமாக பணபலத்தை நம்பினர்.

‘’கொள்ளையடிச்ச்ருக்கான்ல கொடுக்கட்டுமே..! கொடுத்ததாலேயே…ஓட்டுப் போடணும் என்பது இல்லை..’’ என்ற மன நிலையும் பெருவாரியானவர்களுக்கு இருந்தது. பல்லாயிரம் கோடிகளில் முறைகேடான சொத்து சேர்த்தவர்கள் அதிகம் செலவழித்தால் கூட முப்பது, நாற்பது கோடிகளுக்கு மேல் செலவழிக்கவில்லை…என்பதும் தெரிந்தது தான்! அதிகாரத்தில் இருப்பதை பணம் டிஸ்ரிபுயூட் செய்வதகான பலமாக அதிமுக கருதியது. ஆனால், அதிகாரத்தில் இருந்தும் உருப்படியாக நன்மை செய்யவில்லை என்பதே அதிமுகவின் உண்மையான பலவீனம்!

தேர்தல் வியூக நிபுணர்கள்;

இந்த தேர்தல் திமுகவிற்கும்,அதிமுகவிற்கும் இடையிலான போட்டி என்பது மட்டுமல்ல. இரு கட்சிகளுக்கான தேர்தல் வியூக நிபுணர்களுக்கு இடையிலான போட்டி என்பது மறுக்க முடியாத உண்மை! திமுகவை சகல விதத்திலும் பிரசாந்த் கிசோரின் ஐபேக் ஆட்டுவித்தது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான சீட்டுகள், ஸ்டாலின் பிரச்சாரம் எப்படி அமைய வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும்..என சகலத்திலும் ஆதிக்கம் செய்தனர். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அதிமுகவில் சுனில், எழில், மிதுன்,சத்யா போன்ற அரசியல் தேர்தல் வியூக நிபுணர்கள் எடப்பாடியை வழி நடத்தினர்.

பிரதான இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அதிகமான – நடைமுறை சாத்தியப்படாத – இலவசங்கள் அதிகம் இடம் பெற்ற தேர்தலும் இதுவே! இந்த இலவச அறிவிப்பில் அதிமுகவின் அறிவிப்பில் இலவசமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாசிங் மெசின், வீடு, மாதம் 1,500 குடும்ப பெண்களுக்கு என …அதீதமாக இருந்தது.

திமுகவிற்கு சாதகமான அம்சங்கள்;

திமுகவின் சொந்த முயற்சிகள் இன்றியே பல விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்தன! தமிழர்களின் பறிபோகும் வேலை வாய்ப்புகள், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள், வளர்ந்து கொண்டிருக்கும் மதவாத பிரச்சாரங்கள்,சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அரசின் அணுகுமுறைகள், அதிமுகவின் அதீத ஊழல்கள்..எல்லாவற்றுக்கும் மேலாக அதிமுக தலைவர்களின் தன்மானமற்ற அடிமைச் செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதான பெருவாரியான மக்களின் கோபத்திற்கு மாற்றாக திமுக தான் வடிகாலாக பார்க்கப்பட்டது. திமுகவின் பலவீனங்கள்,கடந்த காலத் தவறுகள் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, திமுக கூட்டணியை ஆதரிப்பது ஒன்றே இதற்கு தீர்வுஎன்று மக்கள் ஒருமுகப்பட்டனர். ஸ்டாலினின் கடுமையான உழைப்பு மற்றும் கூட்டணி பலம் ஆகியவை போட்டியில் திமுகவை முன்னிலைப் படுத்தின!

அதிமுகவிற்கு பாதகமான அம்சங்கள்;

அதன் ஒன்றுபடமுடியாத இரட்டைத் தலைமை! முதலில் எடப்பாடி மட்டும் ஒற்றை மனிதனாக கடுமையான சுற்றுப் பயணம் மேற் கொண்டார். பன்னீர் கமுக்கமாக அமைதி காத்தார். அவரவர் ஆட்களுக்கு சீட்டு தருவதில் இருந்த முரண்பாடுகள் வெளிப்பட்டன! பிறகு ஒரு வழியாக சமாதானம் ஆனாலும் ஓபிஎஸ் தனி ரூட் எடுத்து சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசினார். அவசரப்பட்டு தரப்பட்ட வன்னியர் இட ஒதுக்கீடு வன்னியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாமல் போனது! மேலும், பிற சாதியினர் மத்தியில் அதிருப்தியை பெற்றுத் தந்தது. ஆக, இது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட கதையானது! ஒபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன்..உள்ளிட்ட சில அமைச்சர்கள் சொந்த தொகுதிக்குள்ளேயே நுழைய முடியாமல் மக்களால் விரட்டப்பட்டனர். இதனால் பண விநியோகத்தினால் மட்டும் தான் வெற்றியை கொய்ய முடியும் என அதற்கான திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தினர். புதிய தமிழகம், தேமுதிக ஆகிய கூட்டணி கட்சிகளை இழந்ததும் ஒரு பலவீனமானது.

கமலஹாசனின் மக்கள் நீதி மையம்;

அரசியல் பற்றி அதிகம் அறியாத புதிய இளம் வாக்காளர்களை ஈர்த்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கமலஹாசனை பிரமோட் செய்வதற்காக தமிழ் இந்து, ஜூனியர் விகடன் போன்ற பிராமண பத்திரிகைகள் எல்லை மீறி கமல் வெற்றிக்கு சகல விதங்களிலும் பாடுபட்டனர். பாஜகவை ஏற்க முடியாத பிராமணர்களில் கணிசமானவர்கள் கமலஹாசனை ஆதரித்தனர். முதலில் மயிலாப்பூரில் கமலஹாசன் நிற்கவே திட்டமிட்டார். ஆனால், ஏற்கெனவே அங்கே ஆர். நட்ராஜ் அதிமுகவிற்கு சீட்டு வாங்கி இருந்தார். தமிழகத்தில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என பிராமணர்களுக்கென இருக்கும் ஒரே எம்.எல்.ஏ அவர் தான். கமல் மயிலாப்பூரில் நிற்கும் பட்சத்தில் பிராமணர்கள் ஓட்டுகள் அணிபிரியும் என்பதை கமல் கவனத்திற்கு கொண்டு சென்ற பிராமணர்கள் அவரை வேறு தொகுதியில் நிற்கும்படி வேண்டினர். ஆகவே, அவரும் கோவைக்கு தன் ஜாகையை மாற்றிக் கொண்டார்.

கமலஹாசனின் சூட்சுமம்;

கமலஹாசன் அதிமுகவை தாக்காமல் திமுகவை மட்டும் தாக்க வேண்டும் என்ற நிலைபாடு எடுத்தது ஒரு நுட்பமான ராஜதந்திரம். இதனால், திமுகவினர் அவர் மீது தாக்குதல் தொடுத்தனர். இது அதிமுக அபிமானிகள் மத்தியில் கமல் செல்வாக்கு கூட வழிவகுத்தது. இதன் காரணமாக சரியான தலைமை இல்லாத அதிமுகவினர் மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் ஓட்டுகளை வாங்கும் நோக்கத்துடனேயே அதிமுக ஆட்சியை விமர்சிக்காமல் தவிர்த்தார். கோவையில் அராஜக சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் அமைச்சர் வேலுமணி குறித்து கமலஹாசன் வாய் திறக்கவே இல்லை. சினிமா மோகத்திற்கு ஆட்பட்டவர்களான அதிமுகவில் இருக்கும் தனக்கான ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதே அவர் நோக்கம்! அந்த நோக்கத்தின் வாயிலாகத் தான் அவர் எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடினார்! எனவே, கமலஹாசன் தன் பங்கிற்கு அதிமுகவை வலுவிழக்க வைப்பதால் திமுகவிற்கு உதவுகிறார்.அதிமுகவிற்கு மாற்றாக தன்னை தமிழக அரசியலில் நிக்லை நிறுத்துவதே அவர் திட்டமாகும்!

அமமுக – தேமுதிக கூட்டணி;

தினகரனை பொறுத்த வரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிமுகவை வீழ்த்துகிறாரோ..அந்த அளவுக்கு தேர்தலுக்கு பிறகான பேர அரசியலில் அவர் கை ஓங்கும். இதற்கு தோதாக பலி ஆடாக தேமுதிகவும் தன்னை தானாக வலிய வந்து ஒப்புவித்துக் கொண்டது. ஆகவே, அதிமுகவை நன்றாக டார்கெட் செய்தார்! அவராலும் அதிமுக பலவீனப்படுகிறது!

தேமுதிகவை பொறுத்த வரை இந்த தேர்தலில் எதிர்காலத்தை முற்றிலும் இழக்க இருக்கும் கட்சிகளில் அது முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணியில் நின்று இருந்தால் சில எம்.எல்.ஏ க்களையாவது பெற முடியும்.அத்துடன் தாரளமாக பணமும் கிடைத்திருக்கும். அமமுகவுடன் சேர்ந்ததில் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என்பது மட்டுமின்றி தினகரன் பணம் தராமல் கைவிட்டுவிட்டாராம். தான் மட்டுமாவது ஜெயித்தால் தான் கட்சிக்கு  எதிர்காலம் இருக்கு என்பதால் பிரேமலதா தன் தொகுதியில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினார். ஆனால் அவருக்கு வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள்.

சீமானின் நாம் தமிழர் கட்சி

சென்ற தேர்தலைக் காட்டிலும் சற்று அதிகமாக ஓட்டு வாங்கலாம். ஆனால், மிகப் பெருவாரியான இடங்களில் டெபாசிட் பறிபோகும்! திருவெற்றியூரில் கூட அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை! மற்ற எல்லா அரசியல் தலைவர்களை விட விவசாயம், தமிழக சுற்றுச் சூழல்,எளிய மக்களின் பிரச்சினைகள் ஆகியவை பற்றி தெளிவாகவும்,அதிகமாகவும் பேசியவர் சீமான் தான். அவரது பேச்சாற்றல் தான் அவரது ஒரே பலம். ஆனால், அதுவே அவரது பலவீனமுமாகும். அதிமுகவை அவர் விமர்சிகாததும், பாஜகவை சும்மா தொட்டுச் செல்வது போல விமர்சித்து கடப்பதும் அவர் மீது பலமான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத ஒற்றை சர்வாதிகாரியாக இருக்கிறார் என்பது அவரிமிருந்து அடிக்கடி தொண்டர்கள், நிர்வாகிகள் விலகக் காரணமாகிறது! இவரும் அதிமுக ஆதரவு ஓட்டுகளையே பெற முடியும். ஏனெனில், திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் – பாஜகவை வீழ்த்த அது ஒன்றே தீர்வு என்பதில் கமிட்மெண்டாக இருந்ததால்., சிமானால் திமுகவிற்கு பாதிப்பு இல்லை!

கடைசியாக தேர்தல் ஆணையம் அதனால் நடுநிலையாகவும் செயல்பட முடியவில்லை. பண விநியோகத்தையும் தடுக்கவும் முடியவில்லை! சும்மா ஆங்காங்கே பூச்சாண்டி காட்டி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் தான் சிரமம் தந்தனர்! பல இடங்களில் பறக்கும் படையினரை அதிமுக பர்சேஸ் செய்துவிட்டதாக அக் கட்சியின் நிர்வாகிகளே பெருமை பீத்திக் கொண்டனர். பதிவான வாக்குகள் நேர்மையாக பாதுகாக்கப்பட்டு, முறையாக எண்ணப்பட்டால் திமுக வெற்றி பெறும் என்பதே உண்மை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time