மீண்டும் வேண்டாம் – கொரானா பூச்சாண்டிகள்…!

-சாவித்திரி கண்ணன்

வேலை, தொழில், வியாபாரம், வாழ்வாதாரம், ஓராண்டு கால கல்வி என அனைத்தும் பறிபோனது… சென்ற ஆண்டு நீடிக்கப்பட்ட நீண்ட ஊரடங்கால்! அந்த இழப்புகளில் விழுந்த பலர் இன்னும் எழுமுடியவில்லை. மற்றும் சிலர் தற்பொழுது தான் புது வாழ்வை துவக்கி உள்ளனர்.

தற்பொழுது மீண்டும் ஊரடங்கு வரலாமாம்! மீண்டும் கட்டுபாடுகளாம். மீறியவர்களுக்கு அபராதம், தண்டனைகளாம்…! கொரானாவைக் காட்டிலும் கொடுமையான இந்த அராஜகங்களை மீண்டும் கொண்டு வருவீர்களா..? மீண்டும் ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்கள் வட இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமையும் வீறுகொண்டு எழுந்துள்ளது…!

16.3.2021 முதல் இது வரை, விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாம்! ஆக ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. கொரானா கால கெடுபிடிகளையும், வசூல் வேட்டைகளையும், அடி,உதைகளையும்  மீண்டும் நிகழ்த்த துடிக்கிறார்கள் போலும்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை பல்லாயிரக்கணக்கானவர்கள், லட்சக்கணக்கனவர்கள் என்பதாக பெரும் மக்கள் திரள் கூடி தேர்தல் திருவிழா நடந்தது! முதலமைச்சர், அமைச்சர்கள் தொடங்கி அனைத்து அரசியல் தலைவர்களும் மக்கள் கடலில் மிதந்தபடி தான் பிரச்சாரம் செய்தனர். இந்த காலகட்டத்திலும் கொரானா கேஸ்கள் அதிகரித்தபடி தான் இருந்தன. இப்போது மட்டும் என்ன கொரானாவைக் காட்டி மிரட்டுகிறீர்கள்!

ஒன்றா, இரண்டா எத்தனை கெடுபிடிகள் காட்டுகிறார்கள்…!

தியேட்டர்களில் ஹோட்டல்களில் இனி 50% இருக்கைகள் தான் நிரப்ப வேண்டுமாம்! பள்ளி, கல்லூரிகளைப் பற்றி யோசிக்கவே முடியாதாம்…! கடைகளில்,ஷாப்பிங் மஹால்களில் கூட்டம் கூட அனுமதிக்க மாட்டார்களாம். பூங்காக்கள், கடற்கரைகளுக்கு அனுமதி மறுக்கப்படுமாம்! சாலைகளில் ஐந்தாறு பேர் சேர்ந்து நிற்கவோ, பேசவோ கூடாதாம்..! கல்யாணங்களுக்கு 100 பேரை மட்டும் தான் அனுமதிக்க வேண்டுமாம்!

ஒரு தெருவில் 3 வீடுகளில் கொரோனா பாதிப்பு இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுமாம். அங்கே தரகரத் தடுப்பு அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவரோடு தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நிர்பந்திப்பார்களாம். கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இனி ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்படுவார்களாம்!

”முகக் கவசம் போடலையா எடு பணத்தை!”

”சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லையா? மூடு கடையை! போடு அபராதத்தை!”

”ஊரடங்கின் போது வெளியே வந்தாயா..? நல்லது, எவ்வளவு பணம் இருக்கு கொடுத்துவிட்டுப் போ…”

என எடுத்ததற்கெல்லாம் பணம் பறிக்க தோதானது கொரானா! கொள்ளையர்கள் காட்டில் மழை தான்!

இப்படிப்பட்ட அரசாங்கமும், அதிகாரிகளும் இருக்கும் வரை கொரானா ஒழியாது. அதுவே ஒழிய விரும்பினாலும் இவர்கள் விடமாட்டார்கள்!

மீண்டும், மீண்டும் நிருபிக்கப்பட்ட உண்மை ஒன்றை சொல்கிறேன். அவரவர்களும் தங்கள் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே கொரானாவை தவிர்க்க முடியும்! ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்த கொரானா அனைவருக்கும் வரவில்லை என்பதற்கு ஆயிரம் அனுபவ உதாரணங்கள் உள்ளன! ஆக,அவரவரது இம்மியூனிட்டி பவரை பொறுத்து தான் கொரானா தொற்றுவதும், தொற்றாமல் இருப்பதுவும்! பயம் தான் கொரானா வைரஸைக் காட்டிலும் ஆபத்தானது.

ஆக, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அதற்கான இயற்கையான பாரம்பரியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பயிற்சி, பிரணாயாமம்,யோகாசனங்கள் செய்ய வேண்டும். கொரானா இருந்து கொண்டே தான் இருக்கும், விட்டமின் டி (vitaminD) உள்ளவர்களை கொரானா தொற்றாது என்கிறார்கள், மருத்துவர்கள்! அதற்கு ஒருவரின் உடலில் நன்கு சூரியக் கதிர்கள் விழ வேண்டும். அதாவது அவர் வெயிலை பொருட்படுத்தாமல் வெளியே திரிபவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் கொரானாவை எதிர்க்கும் ஆற்றலை இயற்கை அவருக்கு தரும். அரசாங்கம் வீட்டுக்குள் முடங்கு என்றால் இயற்கையின் நோய் எதிர்ப்பு கொடையை தடுக்கும் செயலாகும். ஒரு கிருமி என்று இருந்தால் அதற்கு எதிரான ஆற்றலை இயற்கை மனித குலத்திற்கு ஏற்படுத்தாமல் இருக்காது. அது பரவப் பரவத் தான் அதற்கான எதிர்ப்பும் மனித குலத்திற்கு வலுப்படும்.

கல்யாணங்களில் 100 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என்பது மற்றவர்களின் உரிமையில் தலையிடும் செயலாகும். இது பல சிக்கல்களை குடும்பங்களில் உருவாக்கும்.ஒரு சிலரை அழைத்துவிட்டு மற்ற சிலரை அழைக்காவிட்டால் அது மனஸ்தாபங்களுக்கு வித்திடும். கல்யாணம் என்பது பலருக்கு வேலை வாய்ப்பு தரும் விஷயமாகும்! கல்யாண மண்டபங்களை மக்கள் தவிர்க்க தொடங்கினால் அவர்கள் எப்படி சமாளிக்க முடியும்.வேலையாட்களுக்கு எப்படி சம்பளம் தருவார்கள். ஐநூறு. ஆயிரம் பேருக்கு சமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அது பல சமையல் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்! சப்ளையர்களுக்கு வாய்ப்பளிக்கும். காய்கறிக்கடைகார்கள், மளிகைகாரர்கள் பிழைப்பு நடக்கும். மேடை அலங்காரம் செய்பவர்கள், இசை கச்சேரி நடத்துபவர்கள் எல்லாம் வாழ்வார்கள். பூ வியாபாரம் கலை கட்டும்!

கார்,வேன், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள்,அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் எல்லோரையும் வறுமையில் முடக்காதீர்கள். வட இந்தியாவில் இப்படி மீண்டும் ஊரடங்கை கொண்டு வந்த இடங்களில் எல்லாம் வியாபாரிகளும்,மாணவர்களும், மக்களும் ஊரடங்கை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகின்றனர்! தமிழ் நாட்டிலும் அந்த நிலைமைகளை ஏற்படுத்தாதீர்கள்…! அதிரடியாக ஊரடங்கை அமல்படுத்தி..லட்சக்கணகான தொழிலாளர்களை கொதிக்கும் வெயிலில் குழந்தை,குட்டி, துணிமணி மூடைகளோடு அலையவிட்டீர்களே..! அவர்களில் சிலர் வழியிலே இறந்தார்களே..மறக்கமுடியுமா..? வேண்டாம், அந்த அராஜகங்கள்..!

கொரானா வந்தால் அதை எதிர்கொள்வது எப்படி என்பது மக்களுக்கு நன்கு புரிபட்டுவிட்டது. கொரோனா வந்தவர்களில் ஒன்றரை சதவிகிதமானவர்களே இறக்கிறார்கள். ஆகவே, இது நிச்சயமாக பயப்பட வேண்டிய நோயல்ல. அரசாங்கம் செய்ய வேண்டியதெல்லாம் நோய் தொற்று வந்தவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தான்! கெடுபிடிகள் அல்ல!

அதே போல எந்தப் பயனுமில்லாத கொரானா தடுப்பூசிகளை திணிக்காதீர்கள்! ஏனெனில், கொரானா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரானா வருகிறது என்பது நடிகைகள் நக்மா, ராதிகா, துரைமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் விஷயங்களில் தெரிந்துவிட்டது. அதைவிட மொத்த டாக்டர்களில் 75 சதவிகித டாக்டர்களே கொரானா தடுப்பூசியை போடாமல் தவிர்த்து வருகின்றனர். அடிநிலை துப்புரவு தொழிலாளர்கள், முன்களப் பணியாளர்களை மட்டும் நிர்பந்தித்து ஊசி செலுத்திவிட்டனர். ஊசி போட்ட பலருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நடிகர் பார்த்தீபனுக்கு கண், காது, முகம் சிவந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்!

அரசாங்கம் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்கமாட்டோம் எனவும், எந்த இழப்பீடுகளும் தரமுடியாது என்றும் திட்டவட்டமாக கொரானா தடுப்பூசி விவகாரத்தில் தெரிவித்துவிட்டது. ஆகவே, கொரானா தடுப்பூசியை கட்டாயமாக்கும் தார்மீக உரிமையும் அரசுக்கு இல்லை. சட்டப்படியாகவும் அவ்வாறு சொல்லமுடியாது. எனவே, இத்தனை கேஸிக்கு இவ்வளவு பணம் என்று டார்கெட் நிர்ணயித்து, பணம் பார்ப்பதற்காக யாராவது தடுப்பூசி போட்டாக வேண்டும் என்று நிர்பந்தித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்பதை எடுத்துச் சொல்லுங்கள்!

தடுப்பூசியை விரும்பி போடுபவர்கள் போட்டுக் கொள்ளட்டும். நமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், இப்போது என்ன நடக்கிறது. முதல் கட்ட தடுப்பூசி போட்ட பெரும்பானையினர் இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஒழுங்காக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். சமீபத்திய தகவல்கள் படி 31,26,036 பேர் முதல்கட்ட ஊசி போட்டுள்ளனர். ஆனால், இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் வெறும் 3,61,000 பேர் தான்! அதாவது பத்தில் ஒரு பங்கினரே இரண்டாவது கட்ட ஊசியை போட முன்வருகின்றனர். இந்த நிலைமைக்கான காரணங்கள் தெரியவில்லை.

சரி,கொரானா வந்தால் அதை ஒன்றுபட்டு எதிர்ப்போம். ஒன்றுபடவே முடியாமல் கதவுகளை அடைக்காதீர்கள். கடற்கரை,பூங்காக்களை பூட்டாதீர்கள். முடங்கிப் போவது தான் மிகப் பெரிய பலவீனமாகும். அவரவர்களையும் சுய எச்சரிக்கை உணர்வுடன் நடமாடவும்,செயல்படவும் அனுமதியுங்கள்! நடைபிணமாய் வாழ்வதைவிட கொரானாவை எதிர்கொள்ளத் தயார் என்பதே உயிர்ப்புள்ள மனிதர்கள் அனைவரும் விரும்புவதாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time