‘பாம்பே பேகம்ஸ்’ பேசப்படாத பெண் உளவியலை பேசுகிறது!

- பீட்டர் துரைராஜ்

மும்பையில் வாழும் ஐந்து பெண்களின் கதையைப் பேசும் தொடர் Bombay Begums ! இது, நெட்பிளிக்சில்  ஓடிக் கொண்டிருக்கிறது.  வளரிளம்  பெண்ணிலிருந்து, இறுதி மாதவிலக்கை எதிர் நோக்கும் நிலைவரை உள்ள (menopause) பல்வேறு பெண்களின் வாழ்க்கையை இது பேசுகிறது. பாலியல் ஆசை, அதிகாரத்தேடல், சுயகெளரவம், குழந்தை வளர்ப்பு, பாலியல் சீண்டலா என்பதை உணர்ந்து கொள்ளக்கூட முடியாதத் தன்மை .. என பல சம்பவங்கள் இந்தத் தொடரின் ஊடாக வருகிறது.

அலான்கிரிதா ஸ்ரீ வத்சவா என்ற (Alankritha Shrivatsava) என்ற பெண் இயக்குநர் இதற்கு வசனம் எழுதி, இயக்கியுள்ளார். அதனால்தானோ என்னவோ பல நுட்பமான காட்சிகளை, யாரும் பேசாதவைகளை காட்சிப் படுத்தியுள்ளார். பாலியல் சீண்டலை எதிர்த்து, நடைபெற்றுக் கொண்டிருக்கும் #எனக்கும்தான் ( #metoo) இயக்கத்திற்கு வலிமை சேர்க்கக்  கூடிய இந்தத் தொடராகும்!

ராணி (பூஜா பட்), மும்பை ராயல் வங்கியின் தலைமை நிர்வாகியாக (CEO) நியமனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. அவள்,   வேறொருவரை மீறித்தான் இப்பதவிக்கு வருகிறாள். எனவே இவளுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. வேறொரு நிறுவனத்தின் நிர்வாகியாகவும்,  இராயல் வங்கியின் இயக்குநராகவும் இருப்பவரோடு  வைத்திருக்கும் உறவு பொதுவெளிக்கு வந்து விடுகிறது. ஊடகத்தில் பேசு பொருளாகிறது. இதனால் இவர் பதவி ஆட்டம் காண்கிறது. இதை எப்படி அவள் எதிர் கொள்கிறாள் ?  இதில் பேசப்படும் வங்கி நடவடிக்கைகள் (கடன் தள்ளுபடி, இணைப்பு, நலிந்தோருக்கு கடன், குழு கூட்டம் ( Board Meeting)  போன்றவை) நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரபல நடிகையான பூஜா பட் நன்கு நடித்துள்ளார். தன் பதவிக்கேற்ற உடல்மொழியோடு வலம் வருகிறாள்.இவளுடைய இறுதி மாதவிடாய் தரும் சிரமங்கள் பேசப்படுகின்றன.அதிகாரப் போட்டியில் துவண்டு போனாலும், எதிர்கொள்கிறாள். பிரச்சனையை கையாள்கிறாள்.

இதே இராயல் வங்கியில் இவளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பாத்திமாவிற்கு  குழந்தை இல்லை. கருவுறும் நேரத்தில் தலைமைப் பொறுப்பு வருகிறது. என்ன செய்வது ? குழந்தையா,  பதவியா என்பதை பெண் எதிர்கொள்ளும் சங்கடம் பேசப்படுகிறது (நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? ) சகானா கோஸ்வாமி பாத்திமாவாக நடித்துள்ளார். அவளுக்கு  தன் கணவனைவிட (விவேக் கோம்பர்)  வாழ்க்கையைப் பற்றிய புரிதலும், தாம்பத்தியம் குறித்த தெளிவும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதில் மனத்திட்பமும்  உள்ளது. வெறுமனே கணவனோடு சேர்ந்து இருப்பதுதான் வாழ்க்கையா ? காதல் திருமணமாக இருந்தாலும்,  மனைவியின் பதவியுயர்வில் அவள் கணவன் பொறாமை கொள்கிறான்.( அவனும் அந்த வங்கியில்தான் பணிபுரிகிறான்). சேர்ந்து வாழ்தலில் தென்படும் வெற்றிடங்களை இவர்களது வாழ்க்கை பேசுகிறது.

இந்தூரில் இருந்து வந்து , அதே வங்கியின் இடைநிலை அலுவராக சேரும் ஆயிஷாவிற்கு, வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியும் மேலேற வேண்டும். இந்தப் போராட்டத்தில் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலைக்கூட உடனடியாக அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது வங்கியில் விசாரிக்கப் படுகிறது. உயர்மட்ட அலுவலரை விசாரிக்கும் போது எழும் சிக்கல்களை மிக அழகாக சித்தரித்துள்ளார் படத்தின் இயக்குநரான அலான்கிரிதா. ஆயிஷாவால் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியுமா ? ஊருக்குச் சென்றால் அம்மா சொல்லும் மணமகனை மணந்து கொள்ள வேண்டியதுதான். மும்பையில் இருப்பது போன்ற ( தன்பாலின உறவு, புகை, மது ) வசதிகள் கிடைக்காது. பிளாபிதா போர்தாகுர்  (Plabitha Borthakur) அந்த வயதுக்கு உரிய இளமையோடு, குழப்பதோடு நடித்துள்ளார். பாலியல் சீண்டல் வழக்கை எதிர்கொள்கிறார். இவளது வழக்கின்  முடிவு  என்னவாகும் ? இதனை விசாரிக்கும் பாத்திமா என்ன தீர்ப்பு சொல்லுவாள் !

பாலியல் தொழிலாளியாக இருக்கும் லில்லிக்கு  (Amrutha Subhash) தன் மகனை, மற்ற மாணவர்களைப் போல படிக்க வைக்க வேண்டும். தன் மகனுக்கு விபத்து ஏற்படுத்தியதால் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி,  ராணி மூலம் முன்னேற நினைக்கிறாள். ஆலை அமைப்பதற்கு இடைஞ்சல் தரும் கவுன்சிலரை எதிர்க்கிறாள்.  ஆயிஷாவைப் போல அவள் வங்கியில் பணிபுரியவில்லை என்றாலும், ஆயிஷாவிற்கு ஏற்படும் அநீதியை அவளால் சகித்துக் கொள்ள முடியாது. அவளுக்கு கண்ணியமான வாழ்க்கை அவசியம். இரண்டாவது மனைவியாக, அவளால் தெரிந்தும், தெரியாமலும் வாழ முடியாது.

ஐந்தாவது இதில் வருபவள், பள்ளியில் படிக்கும்  ஷாய். தன்னுடைய மார்பகம் பெரிதாக வேண்டும். விரைவில் முதல் மாதவிடாய் வர வேண்டும். எந்த அளவு மார்கச்சை அணிய வேண்டும்; அது எப்போது பெரிதாகும் என்பது அவளது கவலை. தாயை இழந்த அவருக்கு ராணிதான் மாற்றாந்தாய். அவளை ராணி நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவளால் இறந்து போன சொந்தத்  தாயை மறக்க முடியாது.

இந்த ஐந்து பெண்மணிகளும் ஒருவரோடு ஒருவர் பேசுகிறார்கள். உரையாடுகிறார்கள். புகைப் பிடிக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து கதை இறுதிவரை (ஆறு பாகம்- கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம்)  அலுங்காமல், விறுவிறுப்பாகச்  செல்கிறது.

இந்தத் தொடரில் வரும் சில காட்சிகள் குறித்து,  தேசிய குழந்தைகள் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த்த் தொடரை பார்க்கலாம். Lipstick under my Burkha என்ற படத்தை இயக்கியுள்ள அலான்கிரிதா இதனையும் இயக்கியுள்ளார். படத்தில் உடலுறவுக் காட்சிகள், புகை, மது என வந்தாலும் இதனைப் பார்க்கலாம். பெண்நிலைவாதி என்று தன்னை அலான்கிரிதா சொல்லிக் கொள்கிறார். அதனால்தானா என்னவோ, சில காட்சிகள் ரசிகர்களை யோசிக்க வைக்கின்றன. யாரும் பேசாத பொருளைப் பேசுகிறார். பார்க்க வேண்டிய தொடர்தான்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time