நுழையாதே என்பதற்கே நுழைவு தேர்வுகள்!

-சாவித்திரி கண்ணன்

நுழைவு தேர்வுகள் என்பதே ஒரு நுட்பமான தாக்குதல் தான்!

அனைத்து கல்வி நிறுவனங்களையும் புறக்கணிக்கும் மனநிலைக்கு பெருந்திரள் இளந்தலைமுறையை நிர்பந்திக்கிறதோ…மத்திய அரசு!

கற்றுக் கொடுக்கப்படுவதே ஒரு மனப்பாடக் கல்வி முறை தான்! நடைமுறை வாழ்க்கையை ஆழமாக புரிந்து கொள்ள உதவும் கல்வி முறைகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வே அரசுக்கு கிடையாது. இந்த நெருக்கடியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தற்போதுள்ள இயல்பான கல்விச் சூழலை கடும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறார்கள்!

2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கையிலேயே பொது நுழைவு தேர்வு குறித்து உள்ளது. அதில், பனிரெண்டாம் ‌வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த மேற்படிப்பை தொடர வேண்டுமானாலும் ஒரு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில் எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை  இடம்பெற்றுள்ளதானது உயர் கல்வியில் சேர விரும்பும் முதல் தலைமுறையினருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தடையாகும்.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனமான என்.டி.ஏ அமைப்பின் மூலமே இந்தத் தேர்வையும் நடத்த உள்ளனர்!

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 41 மத்தியபல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு  (சியூசிஇடி) வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு மட்டுமே நடப்பு ஆண்டில் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது உயர் தொழில்நுட்ப திறனறித் தேர்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையில் திணறடிக்கும் தேர்வேயாகும்!

இளநிலை நுழைவுத் தேர்விற்கான இரண்டு மணிநேரத் தேர்வில், 150 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆங்கிலம், தற்கால நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு லீகல் ரீஸனிங் (Legal Reasoning), லாஜிக்கல் ரீஸனிங் (Logical Reasoning), குவான்டிடேட்டிவ் டெக்னிக் (Quantitative Technique) என்ற பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

முதுநிலைப் படிப்பிற்கான இரண்டு மணி நேர தேர்வில் 120 சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தவறான விடைக்கு 0.25மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்த கேள்விகள் அனைத்துமே மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்க்கப்படும்.ஆகவே அந்தந்த மா நில அரசுகளும் இனி தங்கள் மண் சார்ந்த கல்வியை தூக்கி எறிந்துவிட்டு மத்திய அரசின் கல்விமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இளம் தலைமுறை எதை படிக்க வேண்டும்,அவர்களிடம் எதை திணிக்க வேண்டும் என்று இந்த சனாதனிகள் விரும்புகிறார்களோ.., அதுவே நாடு முழுமைக்குமான கல்வியாகிவிடும்.

அத்துடன் ஒவ்வொரு முறையும் நுழைவு தேர்வு எழுத தனியாக கோச்சிங் சென்டரில் பணம் கட்டி படிக்க முடியாத ஏழை,எளியவர்கள் இனி சாதாரண கலை கல்லூரி படிப்பைக் கூட படிக்க முடியாத நிலை தோன்றிவிட்டது.

இப்படி தேர்வுக்கு மேல் தேர்வு வைத்து, அதிகமான வகையில் புதிய இளம் தலைமுறையினர் உயர் கல்வி பெறுவதை தடுக்க பாஜக அரசு முடிவெடுத்துவிட்டது. இந்த நுழைவு தேர்வுகள் தனியார் கல்வி வியாபாரத்திற்கு நல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. தகுதியற்ற செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் குறுக்கு வழியில் முன்னேற வழி சமைக்கிறது. ஆக, தகுதியான ஏழை,எளியவர்களை தடுத்து தகுதியற்றவர்களை நுழைப்பதற்காக கொண்டு வரப்பட்டதே நுழைவு தேர்வுகள்!

நம்மை அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கூட இங்குள்ள ஏழை,எளிய மக்கள் மேலேழுந்து வர ஆகச் சிறந்த கல்வி வாய்ப்பை தந்தது. அவனிடம் இருந்த மனித நேயமும், பொதுச் சிந்தனையும் கூட நம்மவர்களிடம் இல்லையே. வெள்ளைகாரன் வருகை பல வழிகளில் இங்கு தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்பிற்கு பெரும் திறவு கோலானாது. அந்த வகையில் இன்று பெருந்திரளானவர்கள் உயர்கல்வி கற்க வருவதை பொறுக்காமல் அதற்கு பல வகைகளிலும் தடை ஏற்படுத்தவே எடுத்ததற்கெல்லாம் நுழைவுத் தேர்வு என்று சட்டம் போடுகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அடி நிலையில் உள்ளவர்களை தூக்கி விடுவதற்கானவர்கள் அதிகாரத்தில் இல்லை. அழுத்தி வைக்க துடிப்பவர்களே ஆட்சிக்கு வந்துள்ளனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time