நீதிபதிகளாலும்,சபாநாயகர்களாலும் நிராகரிக்கப்படும் நியாயங்கள்!

-வழக்கறிஞர்,ப.பாலதண்டாயுதம்

இறுதி வரை தீர்ப்பு தராமல் இழுத்தடிக்கப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விசாரணை! சார்புநிலை எடுக்கும் சபாநாயகர்களின் மாண்பற்ற செயல்களால் அரசியலமைப்புக்கும், மக்களாட்சிக்கும் நிகழ்ந்துள்ள ஆபத்து! தேர்தல் வெற்றி சர்ச்சை குறித்த வழக்குகளில் காலம் கடந்து கிடைக்கும் நீதிமன்ற தீர்ப்புகள் – ஓரு பார்வை:-

 சட்டமன்றத்திற்கான தேர்தலே முடிந்து விட்டது. துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் உள்ளிட்ட 11 அதிமுக உறுப்பினர்களின் மீதான தகுதி நீக்க வழக்கை 4 வருடங்களாக முடிவெடுக்காமலே காலங்கடத்தி, அவர்களை முழு ஐந்தாண்டுகளும் தொடர அனுமதித்து விட்டார் சபாநாயகர் தனபாலன்.

இது, அப்பட்டமான கடமை மீறல், சபாநாயகர் பதவியின் மாண்புக்கு மிகப் பெரும் இழுக்கு!  பாராளுமன்ற சனநாயகத்தின் ஆகப்பெரும் பெரும் தோல்வி, தமிழ்நாடு வாக்காளர்களின் முகத்தில் காரி உமிழ்ந்ததற்கு ஒப்பானதாகும்.

11 சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கினை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்;

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி  அதிமுக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடை பெற்றது. அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக கொறடா உத்தரவு பிறப்பித்த உத்தரவை மீறி அரசினை எதிர்த்து பன்னீர் செல்வம் தலைமையில் உள்ளிட்ட 11 அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த 11 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் முதலில் சபாநாயகரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் குறித்து கட்சித் தாவல் தடைச் சட்டம்-1985 (Anti defection Law-1985) கூறுவது என்ன?

1985- க்கு முன்பு கட்சி மாறுவது சட்டப்படி நடவடிக்கைகுட்பட்டதல்ல, அதனால் பதவி பறி போவதில்லை. கட்சித் தாவல் தடைச் சட்டம்-1985 நடைமுறைக்கு வந்த பின்பே சட்டமன்ற நாடாளுமன்ற பதவி பறிப்புக்கு ஆளாகிறது.

இச்சட்டப்படி சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி அவர்களின் கீழ் கண்ட செயல்களால் பதவி பறிப்புக்குள்ளாகிறது.

# கட்சியின் உத்தரவுக்கோ,

#  கொறடாவின் உத்தரவுக்கோ கீழ்படியா விட்டால்

கொறாடா உத்தரவை மீறியவர்கள் மீது கட்சியின் கொறடா நடவடிக்கை எடுக்கா விட்டாலும், வேறு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூட, நடவடிக்கை எடுக்கலாம் ( 11 MLA வழக்கில் DMK செய்தது போல்).

ஆனால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்குத் தான் உண்டு நீதி மன்றத்துக்கு அல்ல.

11 பேர் விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காததால் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல், ரங்கசாமி உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஷ் அமர்வு 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

அப்பொழுது நீதிமன்றம் இவ்வாறு கூறியது; சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கல் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடவோ, தகுதி நீக்கம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தவோ முடியாது.

ஆனாலும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு, உயர்நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சட்ட சரத்து 226 & 32-ன் படி குறிப்பிட்ட விசயத்தில் சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவானது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது என்று ஒரு வழக்கில் கூறியுள்ளது.

மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் பத்தி 6 –ல் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது அவரது அதிகார வரம்பைப் பொறுத்து (On the ground of Jurisdiction) நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டை பிப்ரவரி 2020-ல் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதியரசர்கள் பி.ஆர். கவை மற்றும் சூர்யகாந்த் விசாரிக்கும் போது, இந்த வழக்கில் முடிவெடுக்க மூன்று ஆண்டுகள் தாமதம் தேவையற்றது; தமிழ் நாடு சபாநாயகர் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்திருக்கிறார், பேரவைத் தலைவர் எப்போது நடவடிக்கை எடுக்க போகிறார் என்று கேள்வி எழுப்பினர். 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பியுள்ளார் என்று சபாநாயகர் சார்பில் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சபாநாயகரை உடனே முடிவெடுங்கள் என உத்தரவிடும் அதிகாரம் இல்லாததல், சபாநயகர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்று கூறி வழக்கை கடந்த பிப்ரவர் 2020-ல் முடித்து வைத்தது.

சபாநாயகருக்கு குறிப்பிட காலத்தில் இந்த விவகாரத்தில் முடிவெடுங்கள் என்று காலக்கெடு நிர்ணயிக்கும்  அதிகாரமும் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. நீதிமன்றம் இதற்கு மேல் தலையிடவும் முடியாது. ஆனால் நான்கு ஆண்டு காலம் நடவடிக்கை எடுக்காமலே அவர்களின் பதவிக் காலமும் முடிந்து விட்டது. பேரவைத் தலைவர் என்ற அரசியலமைப்பின் நிறுவனத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வானளாவிய அதிகாரங்களை, தனபாலன்கள் போன்ற தனி நபர்கள் அதிகார ஒட்டுண்ணித் தனத்திற்காகவும், அதிகாரத்தில் உள்ளவர்களின் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. 11 பேர் விடயத்தில் உடனடியாக சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்த அரசு முடிவுக்கு வந்திருக்கும்! தனபாலனின் அனுசரனையால் சட்டப்படி பெரும்பான்மையில்லாத ஒரு அரசு தமிழ் நாட்டு மக்களின் வாழ்வைப் பாதிக்கும் எண்ணற்ற கொள்கை முடிவுகளை எடுக்க உதவியுள்ளது. இதில் மத்திய பாஜக அரசு தான் மிகவும் பலனடைந்தது.

இந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள்  அரசுக்கு எதிராக வாக்களித்ததற்கு 7 மாதங்களுக்குப் பின்,  தினகரனுக்கு ஆதரவாக கடிதம் அளித்த காரணத்தைக் காட்டி 2017 செப்டம்பர் 18 அன்று, 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் அவசரமாக தகுதி நீக்கம் செய்தார் என்பது கவனத்துக்குரியது.

முதல்வரின் போக்கில் உடன்பாடில்லை என கடிதம் அளித்த 21 உறுப்பினர்களில் வேண்டப்பட்ட மூன்று உறுப்பினர்களை மட்டும் பாரபட்சத்துடன் தவிர்த்து விட்டு, இதர 18 உறுப்பினர்களை ஒரு வாரத்தில் தகுதி நீக்கம் செய்தவர் சபாநாயகர்! ஆனால், அரசை எதிர்த்து வாக்களித்த 11 உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பின்பும், அலட்சியமாக நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார். இது, அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம், இது வெளிப்படையான கடமை மீறல் மட்டுமல்ல. இப்பதவியின் மாண்புக்கு தகுதியற்ற செயல் ஆகும்.

சமீப காலமாக நாடு முழுதும் தேர்தலுக்குப் பின் கட்சி மாறுவது அதிகரித்துள்ளது!, அதுவும் கூட்டாக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி ஆளும் கட்சியில் சேருவது எனும் புது வழக்கத்தைக் கண்டடைந்துள்ளார்கள். பாசக-வின் வளர்ச்சிக்குப் பின் இவ்வழக்கங்கள் நாடு முழுதும் வழமையாக்கப் பட்டுள்ளது. இதற்கு பேரவைத் தலைவர் துணை செய்கிறார்கள்! இது, அரசியலமைப்பு நிறுவனத்திற்கே இழுக்காகும்..

அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கர்நாடகம், மணிப்பூர், கோவா, தமிழ்நாடு, பாண்டிசேரி மாநில சட்டமன்றங்களில் நடந்த நிகழ்வுகளும் பேரவைத் தலைவர்கள்  நடந்து கொண்ட விதமும், அவர்களை உச்ச நீதிமன்றம் கண்டித்த நிகழ்வுகளுமாகும்!

வரும் ஏப்ரல் 25-ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதியரசர் என்.வி.ரமணா அவர்கள் 2019 நவம்பரில் பாசக-வுக்கு தாவிய கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் காலம் தாழ்த்திய சபாநாயகரின் நடவடிக்கையைப் பற்றி இவ்வாறு கூறினார்.

‘’தங்களது கட்சியின் அழுத்தம் மற்றும் நலனுக்காக இவ்வாறு முடிவெடுக்காமல் இருப்பதென்பது தாங்கள் வகிக்கும் சபாநாயகர் பதவிக்கு உகந்ததல்ல! பேரவைத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவனை வழங்கியுள்ள சில அதிகாரங்களை மறு பரிசீலனை செய்யும் போது தான் இது போன்ற சனநாயக விரோத செயல்களை தடுக்க முடியும்” என பாராளுமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த Keisham Megachandra Singh vs the Honourable Speaker, Manipur (2020), என்ற மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதி மன்றம், கீழ்கண்டவாறு கூறியுள்ளது.

‘’சபாநாயகர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் மக்களவை / சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கும் செய்யும் பொறுப்பை / அதிகாரத்தை சபாநாயகர்களுக்கு வழங்கக் கூடாது. அதற்கு ஏன் சட்டம் இயற்றக் கூடாது” என்றும் கூறியுள்ளது.

மேலும் மக்களவை மற்றும் சட்டமன்ற சபாநாயகர்கள், சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களை குறிப்பாக கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்களை “நியாயமான காலத்திற்குள்” அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதியரசர் ஆர் எஃப் நரிமன் கூறினார்.

பாசக-வுக்குத் தாவிய 12 கோவா சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கல் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பாப்டே அவர்கள் வரும் ஏப்ரல் 24 அன்று பணி நிறைவை அடைகிறார். அது தெரிந்தும் கோவா சபாநாயகருக்காக வாதிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் திரு.மேத்தா  வரும் ஏப்ரல் 29 அன்று தகுதி நீக்கல் மனுவில் சபாநாயகர் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.

வழக்கை தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வரும் கோவா சபாநாயகரை நீதிபதி  பாப்டே  இவ்வாறு இடித்துரைத்தார்.

”இவ்வாறு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவது ஏற்புடையதல்ல, ஏப்ரல் 24-க்குப் பின் இந்த நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க முடியாது. மேற்கொண்டும் காலம் கடத்தாமல் சபாநாயகரை விரைந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்”

அதன் பின்பு ஏப்ரல் 22 அன்று எடுப்பதாகக் கூறினார் சொலிசிட்டர் ஜெனரல் திரு.மேத்தா, அதன் பின்பும் நீதிமன்றம் வலியுறுத்தவே இறுதியாக ஏப்ரல் 20 அன்று தகுதி நீக்கல் வழக்கில் முடிவெடுப்பதாக உறுதி எடுத்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் பொருட்டு தனது கடமை தவறும் பேரவைத் தலைவரை அவரது கடமையைச் செய்ய வலியுறுத்தவே உச்ச நீதிமன்றமும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் போராட வேண்டியிருக்கிறது.

உண்மையில் பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச அதிகாரம் என்பது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவைக்கு கொடுக்கப்படும் அரசியலமைப்பு உரிமையாகும்.

ஆனால் சட்டத்தில் இத்தனை நாட்களுக்குள் தகுதி நீக்கம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறவில்லை. இதை சாதகமாக்கிக் கொண்டு தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ அல்லது, அதிகாரத்தில் இருப்போருக்கு அனுகூலம் செய்யும் பொருட்டோ, சபாநாயகர் தனது சட்டப்படியான கடமையிலிருந்து நழுவுகிறார்!.

நீதிமன்றங்களும் சட்டக் கமிசன்களும், இந்த அதிகாரத்தை பேரவை தலைவரின் ஆளுகையிலிருந்து பறித்து, தேர்தல் கமிசன் என்னும் எக்ஸிக்யூட்டிவ்-களிடம் கையளிக்கும் ஆபத்தும் இருக்கிறது! அதனை நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. தனபாலன்கள் போன்ற தனி நபர்களின் செயல்பாடுகளால் அரசியலமைப்பு நிறுவனங்கள் பாதிப்பதோடு, மக்களாட்சித் தத்துவம் குன்றும் ஆபத்தும் இருக்கிறது.

170-வது சட்ட கமிசனும், அரசியலமைப்பு செயல்பாட்டு மறுஆய்வு கமிட்டியும்  பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் பொறுப்பு  பேரவை தலைவர் அல்லது சேர்மனிடம் இல்லாமல் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவருக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரத்தை எக்ஸிகியூட்டிவ் எனப்படும் அரசு அதிகாரிகளுக்கு வழங்க பரிந்துரைத்துள்ளது. பொறுப்பற்ற சபாநாயகர்களின் சுய நலச் செயல்பாட்டால் இருக்கும் உரிமை பறி போகும் நிலை ஏற்படவுள்ளது.

அதற்கு மாறாக சபாநாயகருக்கு இவ்விசயத்தில் குறிப்பிட்ட காலக் கெடு நிர்ணயிக்க அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் செய்வது உடனடித் தேவையாகிறது! இதன் மூலம் சனநாயகத்தை பாதுகாக்க முடியும்.

காலதாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது. சட்ட மன்ற மக்களவை உறுப்பினர் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யும் வழக்குகளில் பல நேரங்களில் பதவிக் காலம் முடிந்த பின்பே தேர்வு செல்லாது என தீர்ப்பு வருகிறது.

 

2006-ம்ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,p.வேல்துரை, அதிமுக-வின். P.H.மனோஜ் பாண்டியனை விட 5,637 வாக்குகள் அதிகம் பெற்று வென்றதாக அறிவிக்கபட்டார். இதை எதிர்த்த வழக்கில், 2011-ம் ஆண்டு தான் P.வேல்துரையின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்தது. ஆனால், சம்பந்தப்பட்டவரோ ஐந்தாண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டார்.

அதேபோல 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேரன்மாதேவி தொகுதியில் அதிமுக-வைச் சேர்ந்த.R.புது நைனார் ஆதித்தன் P.H.பாண்டியனை விட அதிக வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை செல்லாது என ரத்து செய்யக் கோரி P.H. பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். ஆனால்,அதற்கான தீர்ப்பு புது நைனார் ஆதித்தன்  ஐந்தாண்டுகள் பதவியை நிறைவு செய்த பிறகே வந்தது.

கடந்த 2016 தேர்தலில் கூட ராதாபுரம் சட்ட மன்ற திமுக வேட்பாளர் அப்பாவுவை விட அதிமுக-வின் இன்பதுரை 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகளையும், 34 வாக்கு இயந்திரங்களையும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் தேர்வு செல்லாது அறிவிக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில் மறு வாக்கு எண்ணிக்கையும் நடந்தது. ஆனால்,ஏனோ, உச்ச நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடத்  தடை விதித்தது. தற்போது 203 தபால் வாக்குகளில் அப்பாவு 153 வாக்கும், இன்பதுரை 1 வாக்கும், 44 வாக்குகள் செல்லாதவை எனவும் உறுதியாகியிருக்கிறது. இந்தப்படி பார்த்தால் அப்பாவு தான் வெற்றி பெற்றுள்ளார்.

ஆயினும், தபால் வாக்குகளுக்கு சான்றளித்துள்ள நடுநிலைப்பள்ளி தலலைமை ஆசிரியர் கெஜட்டேட் அதிகாரியா இல்லையா என்பதை இறுதி செய்த பின்பு தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்பதுரை ஐந்தாண்டுகள் பதவியை அனுபவித்து விட்டார். அடுத்த தேர்தலும் முடிந்து விட்டது. இவ்வாறு நாடு முழுதும் எத்தனையோ வழக்குகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

நீதிமன்றத்திற்கு பணிச்சுமைகள் இருக்கலாம்.ஆனால், காலம் கடந்த பின்பு வரும் தீர்ப்பு மக்களிடையே நகைப்புக்குரியதாகவும், நீதிமன்றங்கள் குறித்த அவநம்பிக்கைகளையுமே ஏற்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலாவது இது போன்ற வழக்குகளில் உரிய காலத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும்.

 கட்டுரையாளர்;

ப.பாலதண்டாயுதம்

வழக்கறிஞர்

உயர்நீதிமன்றம், சென்னை

9444340724

[email protected]

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time