எல்லா துறைகளிலும் ஜனநாயக காற்று வீசுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த கதவுகளை யெல்லாம் அடைத்து வருகிறது பாஜக அரசு! சமகால சமூக அரசியல் பிரச்சினைகளை சினிமாக்கள் பேச ஆரம்பித்திருப்பது பாஜக அரசை பதை,பதைக்க வைத்துள்ளது. எனவே, சென்சார் போர்டுகளில் எல்லாம் கட்சி ஆட்களைப் போட்டு கடும் நிர்பந்தம் தந்து வருகிறது. அதை எதிர்த்து டிரிபூனல் போய் போராடி மீட்டு வரும் வாய்ப்பை தற்போது காலியாக்கிவிட்டது.
திரைப்படச் சான்றிதழ் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (Film Certification Appellate Tribunal) மத்திய அரசு கலைத்து விட்டது. தணிக்கை வாரியம் திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்து விட்டால், இனி அதனை எதிர்த்து முறையீடு செய்யமுடியாது. உயர்நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடுக்க முடியும். இது திரைப்படத்துறையை பாதிக்கும். அரசுக்கு எதிர் கருத்துள்ள படங்கள்; சுற்றுச்சூழல், சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு போன்ற முற்போக்கான திரைப்படங்கள் வருவதை தடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின், தகவல், ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும், தணிக்கை வாரியம் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறது. படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டால், இதனை எதிர்த்து திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம். இப்படி முறையீடு செய்த பிறகுதான், அனுராக் கஷ்யாப் தயாரித்த ‘உட்தா பஞ்சாப்’ (Udta Punjab) என்ற பஞ்சாபிய மொழி படம், பெண்ணியவாதியான அலான்கிரிதா இயக்கிய ‘லிப்ஸ்டிக் அண்டர் த புர்கா (Lipstick under the Burga) ,ரங்கீலா ராஜா (rangeela raja)போன்ற படங்கள் திரைக்கு வந்தன.
‘லிப்ஸ்டிக் அண்டர் த புர்கா’ பெண்ணுரிமையை பேசும் படம். அது பிற்போக்குவாதிகள் நிறைந்துள்ள சென்சாரால் தடுக்கப்பட்டது. அது டிரிபூனல் போனதால் தப்பி பிழைத்தது. பெரும் வரவேற்பு பெற்றது.
ரங்கீலா ராஜா போலி சாமியார்களை படம் பிடித்தது. சபலம் உள்ளவனெல்லாம் சாமியார் வேஷம் போட்டு சல்லாபம் அனுபவிக்கும் சமூக யதார்த்தத்தை சித்தரித்தது.பொறுக்குமா பாஜக அரசு! சென்சார் போர்டு அந்த படத்திற்கு அனுமதி மறுத்தது. டிரிபூனல் அதை விடுவித்தது. இது போல ஐந்தாறு படங்களை சொல்லலாம்! டிரிபூனல் இருப்பதால் தானே சினிமாகாரர்களுக்கு துணிச்சல் வருகிறது. இனி அது கிடையாது. சென்சார் சொன்னால் சொன்னது தான், நீ வேண்டுமானால் ஹைகோர்ட், சுப்ரீம் கோர்டுன்னு போய் முட்டிமோதிக்கோ..என்று கலைத்துறையினரை கதற வைத்துவிட்டது காவி அரசு!
‘டாலர் சிட்டி’ ‘என் சாதி’ போன்ற இருபதிற்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கிய ஆர்.பி.அமுதனிடம் இது குறித்து கேட்டபோது,
“திரைப்படங்களுக்கு தணிக்கை என்பதே தேவையில்லை என்பது எனது கருத்து. வன்முறை, ஆபாசம் போன்றவைகளை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் படங்களை யாரும் எடுக்கக்கூட்டாது என்பதற்காகத்தான் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைத்துள்ளது. தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் மக்களுக்கு, தாங்கள் எப்படிப்பட்ட படங்களை பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளமுடியாதா என்ன ? தணிக்கைக் குழுவின் உறுப்பினர்களாக அரசு தனக்கு வேண்டியவர்களைத்தானே நியமிக்கிறது. இப்போதுள்ள தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதில் மாநில அரசிற்கு பங்கு இல்லையே ! திரைப்பட உருவாக்கத்தில் அரசு தலையிடுவது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானச் செயலாகவே இருக்கும் ” என்றார்.
திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Film Certification Appellate Tribunal) 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் அலுவலகம் மும்பையில் உள்ளது. அவசரச் சட்டத்தின் மூலம் வருமான வரி, விமான நிலையம் உள்ளிட்ட நான்கு தீர்ப்பாயங்களை கலைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
வட இந்திய சினிமாவில் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. பிரபல இயக்குனர்கள் ஹன்ஸ்சால் மேத்தா, விஷால் பரத்வாஜ், நடிகை ஷர்மிளா தாகூர்..உள்ளிட்ட பலர் இந்த டிரிபியூன் கலைக்கப்பட்ட நாள் சினிமாவிற்கு ஒரு கறுப்பு தினம்! கருத்து சுதந்திரத்தை கருவறுக்கும் முயற்சி, கலைத்துறையின் சுதந்திரமான படைபாற்றலுக்கு தடை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்று துணிச்சலாகப் பேசி வருகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவில் பிரபல படைபாளிகளோ,கலைஞர்களோ..இதற்கு இன்று வரை எதிர்வினையாற்றவில்லை!
திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் “பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் கொள்கைகளை ஆதரித்து நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வட இந்தியாவில் வந்துள்ளன. அவர்களுக்கு இந்த முடிவினால் எந்த பாதிப்பும் இருக்காது. தணிக்கை வாரியத்தால் சான்றிதழ் மறுக்கப்பட்ட பின்பு, தீர்ப்பாயத்திடம் திரைப்படம் எடுப்பவர்கள், குறிப்பிட்ட காட்சி எப்படி திரைப்படத்திற்கு அவசியம் என்பதை விளக்க முடியும்; அது எப்படி மற்ற காட்சியோடு தொடர்புடையது என்று சொல்ல முடியும். தீர்ப்பாயத்தை கலைத்துவிட்டால் உயர்நீதிமன்றத்தில்தான் முறையிட நேரிடும். இதனால் காலதாமதம், பொருட் செலவு ஏற்படும். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இத்துறையில் சாதி எதிர்ப்பு, இன விடுதலை, ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர மாட்டார்கள்.
ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் திரைப்படங்கள் உருவாகின்றன. நீதிமன்றங்கள், மத்திய புலனாய்வுத்துறை, ஊடகங்கள், அமலாக்கப்பிரிவு என அனைத்தையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. சுதந்திரமாக கருத்துச் சொல்பவர்களை, மாதக்கணக்கில் சிறையில் அடைத்து விட்டது. கௌரி லங்கேஷ், கல்புர்கி போன்ற சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போது கலைஞர்களை கட்டுப்படுத்துவதற்காக திரைப்பட தீர்ப்பாயத்தை அரசு கலைத்துள்ளது.
அரசு என்பதை ஒடுக்குமுறை கருவியாக பார்க்கும் ரஷ்யா போன்ற நாடுகளில் கடுமையான தணிக்கைமுறை அமலில் உள்ளது. ஈரான் போன்ற மத அடிப்படைவாதம் பேசும் நாடுகளிலும் தணிக்கை முறை கடுமையாக உள்ளது. இந்தியாவிலும் மத அடிப்படைவாதத்தை கடைபிடிக்கும், அறிவியல் பார்வையை மதிக்காத, அரசை ஒரு ஒடுக்குமுறை அமைப்பாக பார்க்கிற வலதுசாரி அரசாங்கம் உள்ளது. எனவே இதனை திட்டமிட்டுதான் நிறைவேற்றியுள்ளனர். டிரம்ப் போன்ற பிற்போக்குவாதிகள் கடைபிடிக்கும், கொள்கையைத்தான் மோடியும் அமலாக்கி வருகிறார். உலகுதழுவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் இதையும் நான் பார்க்கிறேன்.
ஸ்வீடன் போன்ற மேற்குலக நாடுகளில் தணிக்கை முறை இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ரேட்டிங் (Rating) முறைதான் உள்ளது.13 வயதினருக்கு மேல், 16 வயதினருக்கு மேல், வயது வந்தவர்களுக்கு என ரேட்டிங் போட்டுவிடுவார்கள்.
சோஷலிச நாடான கியூபாவில் சுயேச்சையான திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. கியூபா பல திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, தெற்குப் பகுதிகளில் மோடி அரசுக்கு எதிரான திரைப்படங்கள் வரத் தொடங்கியுள்ளன ” என்றார் யமுனா ராஜேந்திரன்.
Also read
மத்திய அரசு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை கலைக்க அவசரச் சட்டம் போட்ட அதே நாளில், இத்தாலி அரசு திரைப்படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
யூ டிப் சேனல் மூலம் திரைப்படங்களை விமர்சித்து வரும் நீலச்சட்டை மாறன் என்று அழைக்கப்படும் இளமாறன், ‘ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அதற்கு சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் சான்றிதழ் தரவில்லை. மறுமுறை விண்ணப்பித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவை, மும்பை திரைப்பட ஆளுமைகள் எதிர்த்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எடுத்த திரைப்படங்களுக்கு தணிக்கை துறை சான்றிதழ் தரவில்லையென்றால், உயர்நீதிமன்றங்களுக்கு செல்ல நேரிடும். இதனால் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை நேரிடும். தமிழ்த் திரையுலகம் என்ன செய்யப்போகிறது ?
�
பீட்டர் துரைராஜ் அவர்களின் ‘கலைத்துறை மீது காவி அரசுக்கு என்ன கோபம்.. .’ என்ற கட்டுரையின் மீது எழுந்த கருத்துக்கள்:
ஜனநாயகம் என்பது ஒரு பரமபத விளையாட்டு போல. அங்கு பாம்புகள், ஏணிப்படிகள் ஆங்காங்கே இருக்கும்.
ஜனநாயக நாட்டில் சில சமயம் பாம்புகளின் வாயில் நுழைந்து பின்னடைவு சந்தர்ப்பங்கள் ஏற்படத்தான் செய்யும்.
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும்’
மக்கள் நல அரசு இயங்கும் பொழுது முன்னேறும் மக்கள் விரோத அரசு பின்னடைவை ஏற்படுத்தும்.
இது அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கும்.
ஒன்று அடுத்த தேர்தலில் விமோச்சனம் கிடைக்கும் அல்லது மக்கள் புரட்சி வெடித்து கிளம்பும் சரி செய்யும். தேர்தலில் சில மக்களின் தேர்வுகளால் பல மக்கள் கஷ்டப்பட வேண்டிய சூழல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
சாண் ஏறினால் முழம் சறுக்கும் அது ஒரு சாபக்கேடு.
பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேலாகவோ முற்போக்கு நடவடிக்கைகள் எடுக்க கூடிய காலமும் கணியம். அதுவரை பொறுத்திருப்போம்.
‘ என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்’ .
எம் சி எஸ் இராஜாராமன்
94425 82105