எதற்கு ஒரு மாத இடைவெளி..தேர்தல் தீர்ப்பைச் சொல்ல?
ஒன்றிரண்டு நாளில் எண்ணிச் சொல்ல வேண்டிய தீர்ப்புகளை ஒரு மாதம் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை என்னென்பது?
தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லோர் மனமும் பதைபதைப்போடு தான் உள்ளது.
எந்த நேரம் என்ன நடக்குமோ..?
தீர்ப்புகள் திருத்தப்படுமா…?
வாக்குமெஷின்களில் கோல்மால் செய்துவிடுவார்களோ..?
”சார் வெளியில் இருந்து கொண்டு ரீமோட் மூலம் கூட தேர்தல் தீர்ப்பை மாற்றலாம் தெரியுமா?’’ என்று குண்டை தூக்கிப் போட்டார் ஒரு பத்திரிகையாளர்.
சுப்பிரமணிய சுவாமியே சொன்னார். ஓட்டுமெஷினில் எவ்வளவு கோல்மால் செய்யமுடியும் என்று! இதுவே வாக்கு சீட்டுகளாக இருந்தால் கூட கொஞ்சம் தைரியமாக இருக்கலாம்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைக்குள் யாருக்கும் தெரியாமல் யாராவது செல்ல வாய்ப்புள்ளதா..?
ஸ்டாலின் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் விப்புடன் இருந்து கண் காணியுங்கள் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமியும் அதையே சொல்கிறார்.
யாரைத் தான் நம்புவதோ தெரியல..தூத்துகுடியில் திருட்டுத்தனமாக ஐந்து லாரிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திசைமாறிப் பயணித்துள்ளன. அதை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்தி கேட்ட போது காவல்துறையும்,கலெக்டரும் சமாளித்துள்ளனர். நெடுநேர போராட்டத்திற்கு பிறகு ஐந்து லாரிகளையும் திறந்தே ஆக வேண்டும் என்று பொதுமக்கள் பிடிவாதத்தின் முன்பு தோற்றுப் போய் திறந்து பார்த்ததில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள் இருந்துள்ளன. அது புதுக் கோட்டை செல்ல வேண்டிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் என சொல்லி ஆட்சியர் சமாளித்தாராம். அப்படியானால் தூத்துகுடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடிக்கு இடமாற்றம் ஆனது ஏன் என்பதற்கு விடை கிடைக்கவில்லை – இந்த செய்தி நக்கீரனில் வெளியாகி உள்ளது.
மற்றொரு தகவல் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகளே பணபட்டுவாடாவிற்கு ஒத்துழைப்பு தந்தார்கள் என தெரிய வருகிறது. ஆக, விலை போகிறவர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் போது அதற்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே நம் கேள்வி.
தற்போது வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எல்லாம் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவு எண்ணிக்கையிலானவர்களின் உழைப்பு இப்படி நாள் கணக்கில் விரயமாக்கப்படுவது நியாயமாகுமா..? இந்த பாதுகாப்பிற்கான செலவுகள் கொஞ்சமா… நஞ்சமா…?
இந்த கஷ்டங்களையெல்லாம், இழப்புகளை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும் என்றால், தமிழக தேர்தல் முடிவுகள் மேற்குவங்க தேர்ததலையும், அஸ்ஸாம் தேர்தல் முடிவுகளையும் பாதித்துவிடுமாம்.
பக்கத்தில் உள்ள கேரளாவில் கம்யூனிஸ்டுகளும்,காங்கிரசும் மாறி,மாறி வெற்றி பெற்று வருகின்றனர். அதனால் தமிழகத்தில் ஏதேனும் பாதிப்பு நிகழ்ந்து காங்கிரசும்,கம்யூனிஸ்டு கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதா..?
தமிழகத்துடன் ஓட்டியுள்ள கர்நாடகாவில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனால் தமிழ் நாட்டில் பாஜக செல்வாக்கு பெற்றுவிட்டதா..?
அவ்வளவு ஏன் தமிழ் நாட்டிற்குள் ஒரு அங்கமாகத் தான் பாண்டிச்சேரி உள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு செலுத்த முடிந்த திராவிடக் கட்சிகளால் அங்கு செல்வாக்கு செலுத்த முடியவில்லையே ஏன்? அங்கு காங்கிரஸ் மீண்டும்,மீண்டும் ஆட்சிக்கு வர முடிகிறது. ஆனால் தமிழகத்தில் 54 வருடங்களாகியும் இழந்த ஆட்சியை காங்கிரஸ் திரும்ப பெற முடியவில்லை.
இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், அந்தந்த மண்ணுக்கு, மக்களுக்கு என்று ஒரு அரசியல் உள்ளது! அதை வெளி சக்திகளால் மாற்ற முடியாது. தங்கள் எல்லைக்கு வெளியில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளே இருக்கும் மக்களை பாதிப்பதில்லை. அதுவும் இந்தியாவின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் மாநில தேர்தல் முடிவுகள் எப்படி மற்றொரு மாநிலத்தை பாதிக்க முடியும்?
ஆகவே, தேவை இல்லாமல் தமிழக மக்களை சிரமத்திற்கு ஆளாக்குகிறார்கள். ஒரு மாதம் என்பது நீண்ட காத்திருப்பாகும். அதற்குள் மக்கள் எண்ணற்ற பிரச்சினைகளை எதிர் கொள்ள நேரிடும்.
இதோ பாருங்கள் இது தான் சாக்கு என்று கவர்னர் தன் திருவிளையாடல்களை நடத்துகிறார். கால் நடைத்துறைக்கான துணைவேந்தரை அவசர, அவசரமாக நியமிக்கிறார். அண்ணா பல்கலை கழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவை தன்னிச்சையாக நியமிக்கிறார். ஏழரை கோடி மக்கள் ஓட்டுப் போட்டுவிட்டு முதலமைச்சர் இல்லாமல் காத்திருக்க வேண்டும் என்று சொல்ல முடிந்தவர்களுக்கு, ஒரு பல்கலைக் கழகம் ஒரு மாதத்திற்கு துணைவேந்தருக்காக காத்திருக்கட்டும் என்று கவர்னரிடம் சொல்ல முடியவில்லையே!
கவர்னருக்கு ஒரு நீதி! ஓட்டு மொத்த தமிழக மக்களுக்கு ஒரு நீதியா?
Also read
ஆட்சி சுகம் கண்டவர்கள் இந்த ஒரு மாத காலத்தில் அதிகாரம் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்களா? அல்லது ஆடும் வரை ஆட்டம் என கமுக்கமாக காய் நகர்த்தி சாதிப்பார்களா…?
எத்தனை கேள்விகள்..? யார் விடை தருவது..?
தேர்தல் ஆணையர்கள் எல்லாம் தேவலோகத்தில் இருந்து இறங்கியவர்களா..? அவர்களின் செவியில் ஏழரை கோடி மக்களின் ஏக்க பெருமூச்சுகள் உரசாதா…?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அஸ்ஸாம் தேர்தலைப் பாதிக்கும் என்றால் தேர்தலை ஏப்ரல் மாத கடைசியில் வைத்திருக்கலாமே ! தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் ஏன் ஒரு மாதம் இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி விளையாடுகிறார்கள். இதற்கு பதில் இனித் தேர்தலே கிடையாது என்று அறிவித்து விடலாம். நாங்கள் தான் சர்வாதிகாரி என்று டிக்ளேர் செய்யலாம்.