அழிவுப் பாதையில் மேற்கு வங்க அரசியல்!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரமான மேற்கு வங்கம் தற்போது இந்தியாவின் கலவர பூமியாக உருமாறியுள்ளது. நாளொரு துப்பாக்கி சூடு, பொழுதொரு கலவரம் என்று அல்லோகலப்படுகிறது. தேவையற்ற வகையில் எட்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது, மோடியும், அமித்ஷாவும் அடிக்கடி விசிட் செய்து அதகளப்படுத்துவது, மம்தாவின் உக்கிரமான எதிர்வினைகள்..என்பதான வங்கத்தில் யாருக்கு வாய்ப்பிருக்கிறது…? கம்யூனிஸ்டுகள் ஏன் காணாமல் போயினர்…?

வங்கத்தை எப்படியாவது வசப்படுத்திவிட வேண்டும் என்று ஒட்டு மொத்த மத்திய அரசின் பலத்தை பிரயோகித்து, மம்தாவின் மாநில ஆட்சியை நிலைகுலைய செய்தது பாஜக! 20 க்கும் மேற்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை மம்தாவிடமிருந்து தூக்கியது பாஜக! அத்துடன் நிறைய கட்சி நிர்வாகிகளையும் திரிணமுள்ளில் இருந்து திருடியது. இதையெல்லாம், வருமான வரித்துறை, சி.பி.ஐ ரெய்டு ஆகிய அச்சுறுத்தல்களால் தான் சாதித்தது!

அரச பலத்துடன் இப்படி சில அக்கிரமங்கள் செய்வது போதாது என்று தொழில் முறை ரவுடிகளை எல்லாம் கட்சியில் இணைத்து, ஆங்காங்கே பல வன்முறை சம்பவங்களை நிகழ்த்துகிறது பாஜக. இதையெல்லாம்விட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஜாதிவாரியாக அணி திரட்டி அவர்களுக்கு கட்சியில் உயர்ந்த பொறுப்புகளையும், அதிகாரங்களையும் கொடுத்து ஒரு நுட்பமான சாதி அரசியலை வெற்றிகரமாக செய்து வருகிறது.

இதே பாணி அரசியலை தானும் கையில் எடுத்து மம்தாவும் அரசியல் செய்கிறார். அத்துடன் வங்க மண்ணுக்கு எதிரான அந்நிய சக்திகள் என்று பாஜகவை அம்பலப்படுத்துகிறார். எனினும், பாஜகவின் விஸ்வரூபத்தை அங்கு தடுக்க முடியவில்லை. இது குறித்து அறம் இதழில் திவாலாகும் திரிணமுள் தீயாய் வளரும் பாஜக என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.

பாஜகவின் இந்துத்துவ அரசியல் வங்க மண்ணுக்கு ஆபத்தானது என்று அங்குள்ள இடதுசாரி இயக்கங்களும், ஜனநாயக சக்திகளும் உணர்ந்தாலும் கூட, அந்த உணர்வையும், அதை எதிர்க்கும் ஆற்றலையும் பெருந்திரளான வங்க மக்களுக்கு அவர்களால் கொண்டு செலுத்த முடியவில்லை என்பது மறுக்க முடியாத யதார்த்தமாக உள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இது நாள் வரை இடதுசாரி இயக்கங்களாலும், காங்கிரஸ், திரிணமுள் போன்ற ஜனநாயக அமைப்புகளாலும் அரவணைக்கப்படாத அநாதைகளாக இருந்தனர் என்பதோடு, இந்த இயக்கங்களால் பல கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளனர். இந்த சூழலைத் தான் ஆர்.எஸ்.எஸ் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக அவர்களிடையே ஆழமாக வேலை செய்து அவர்களை வென்றெடுத்துள்ளது! (இது குறித்து அறம் இதழில் மேட்டுக்குடி மனோபாவமே மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை வீழ்த்தியது என்ற கட்டுரையில் விளக்கியுள்ளேன்).

இது எப்படி நடந்தது என்பதை புரிந்து கொள்ள நாம் வங்கத்தின் மறைக்கப்பட்ட அரசியல் வரலாறை உள்வாங்கினால் தான் உணர முடியும். தமிழகம், கேரளத்தைப் போலவே வங்க மண்ணும் உயர்சாதியினரின் ஆளுமைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த மாநிலம் தான்! ஆனால், அந்த ஆதிக்கத்தில் இருந்து தமிழ் நாடு முற்றிலும் விடுபட்டது. கேரளா பெருமளவு விடுபட்டது. வங்கத்தில் சீர்திருத்தம், புரட்சி போன்ற அம்சங்கள் கூட உயர் சாதியினரின் ஏகபோக உரிமையானது தான் மிகப் பெரிய துர்அதிர்ஷ்டமாகும்!  இதனால், உயர்சாதி ஆதிக்கத்திற்கு மாற்றாக மத்துவா மகாசங்கம்(1860), பான்கியா ஜனசங்கம்(1922), பெங்கால் அழுத்தப்பட்டோர் அசோசியேசன்(1926), பெங்கால் தாழ்த்தப்பட்டோர் அசோசியேசன்(1943) ஆகிய பல்வேறு இயக்கங்கள் தோன்றின. இந்த நிலையில், கம்யூனிஸ்டு இயக்கமும் காலூன்றியது. ஆனால், அந்த கம்யூனிஸ்டு இயக்கத்திலும் உயர்சாதியினரே முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள், வர்க்கம் ஒழிந்தால் சாதி தானே ஒழியும் என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இயக்கங்களின் முக்கியத்துவத்தை இல்லாமலாக்கினர்.

1950 மற்றும் 60 களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் அமைச்சரவையில் உயர்சாதியினரின் பிரதிநிதித்துவம் 78 சதவிகிதமாக இருந்தது. 1970 களில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்டுகளின் அமைச்சரவையிலோ அது 90 சதவிகிதமாக உயர்ந்தது. ஜோதிபாசுவின் அமைச்சரவையில் ஒரு தாழ்த்தப்படவருக்கு கூட பிரதி நிதித்துவம் தரப்படவில்லை. அது தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையில் பிற்பாடு காந்தி பிஸ்வாஸ் என்ற தாழ்த்தப்பட்டவர் அமைச்சராக்கப்பட்டார்.

மேற்குவங்க அரசியலின் ஒரு பிரத்தியேக அம்சம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக குடியேறிய மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள். இதில் நாமசூத்திரா எனப்படும் அடி நிலை தலித் மக்கள் பெருந்தொகையினராக இருந்தனர். கடும் உழைப்பாளிகள். இவர்கள் பிளாட்பாரங்கள், ரயில்வே டிராக்கின் பாதைகளில் எல்லாம் இருப்பார்கள். இவர்களை ஆடுமாடுகளைப் போல விரட்டிப் பிடித்து அந்தோமான், தண்டகரண்யா தீவுகளிலும் பக்கத்து மாநிலங்களிலும் விட்டது கம்யூனிச அரசு! மற்றவர்களை வேட்டையாடியது. அவர்கள் எல்லாம் மாரிச்ஜ்ஹாபி (marichjhapi) என்ற இடத்தில் அடைக்கலமாயினர். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியின் சூற்றுச்சுழல் அவர்களால் பாதிப்படைகிறது என குற்றம் சாட்டியது இடதுசாரி அரசு! அந்த இடத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை அவர்களுக்கு கிடைக்காமல் பொருளாதாரத் தடை ஏற்படுத்தப்பட்டு அவர்கள் சிறைவைக்கப்பட்டனர். அதில் பசி,பட்டினியால் ஆயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். அங்கிருந்து தப்ப முயன்ற நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அங்கு கொன்று முடிக்கப்பட்ட பிறகு,மே-1979ல் ஜோதிபாசு அரசு மாரிச்ஜ்ஹாபி இறுதியாக அனைத்து அகதிகளிடமிருந்தும் விடுதலை பெற்றது என அறிவித்தார். இந்த மனித அழித்தொழிப்பு அன்று மீடியாக்களில் இருந்த உயர்சாதி அறிவு ஜீவிகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆயினும், சிலரது முயற்சியால் அம்பலப்பட்டு, விமர்சிக்கப்பட்ட போது, புதிய கம்யூனிச அரசை கவிழ்ப்பதற்காக அமெரிக்க சி.ஐ.ஏ இப்படிப்பட்ட புரளிகளை கிளப்பிவிடுகிறது எனச் சொன்னார் ஜோதிபாசு. அதன் பிறகு இந்த நிகழ்வை குறித்த ஆய்வுகள் பலதரப்பிலும் வெளியாகிவிட்டது. இது குறித்து விரிவாக அறிய…

  1. Mallick, Ross, ‘Refugee Resettlement in Forest Reserves: West Bengal Policy Reversal and the Marichjhapi Massacre‘, The Journal of Asian Studies, Vol. 58, No. 1. (Feb., 1999), pp. 104-125.
  2. Jalais, Annu, ‘Dwelling on Morichjhanpi: When Tigers Became ‘Citizens’, Refugees ‘Tiger-Food’, Economic and Political Weekly, April 23, 2005
  3. Shaktipada Rajguru’s novel Dandak Theke Marichjhapi (1980-81) is the only full-length novel in Bengali that talks of Marichjhapi with candour

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைக்கு அந்த நாமசூத்திரா எனப்படும் மிகப் பெரிய தலித் மக்கள் தொகையினரை பாஜக தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. பாவம் அவர்கள் தாங்கள் பாஜகவின் பலிகடா ஆடுகளாக்கப்படுவோம் எனத் தெரியாமல் தீவிரமாக களமாடுகிறார்கள். அவர்களைப் போன்றவர்களை விழிப்புணர்வு கொள்ள வைக்கும் வீரியமிக்க இயக்கம் – இங்கு பெரியாரின் திராவிடர் இயக்கம் போல – அங்கு இல்லை! கேரளாவில் ஒரு நாராயண குருவைப் போல அங்கு இல்லை.

கம்யூனிஸ்டு கட்சியில் அன்று ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த உயர்சாதி இந்துக்கள் எல்லாம் இன்று பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்குப் பிறகு அங்கு ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி இடதுசாரி இயக்கத்தினரை காவல்துறை பலத்துடன் வேட்டையாடினர்.பல பொய் வழக்குகளை புனைந்து துன்புறுத்தினார். ஆகவே, தங்களை பாதுகாக்க அவர்கள் பாஜகவிடம் தஞ்சமடைந்துவிட்டனர். இப்படியாக உள்ளூர் கட்சிகளிடம் இருந்த பகை உணர்வை பயன்படுத்தி பாஜக தன்னை பலப்படுத்திக் கொண்டது.

வங்க மண்ணுக்கு வன்முறை ஒன்றும் புதிதல்ல! ஆனால், வங்க மண்ணுக்கு முற்றிலும் அந்நியமான வட இந்திய இறக்குமதி கட்சியான பாஜக அங்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளான கம்யூனிஸ்டு, காங்கிரஸ், திரிணமுள் காங்கிரஸ் ஆகியவை ஒன்றுபட முடியாத சூழலை பயன்படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அதுவும் திட்டமிட்ட வன்முறைகள், தொழில் ரீதியான ரவுடி கும்பல், மணல் கொள்ளை, நிலக்கரி சுரங்க கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோத சக்திகள், மத்திய அரசின் ராணுவம் ஆகியவற்றின் மூலம் – வங்க மண்ணை முன்பின் கண்டறியாத – வன்முறை பூமியாக்கிவிட்டது. 34 வருடம் ஆட்சி அதிகாரத்தில் எதிரும், புதிருமாக இருந்த காங்கிரஸ்களும், கம்யூனிஸ்டுகளும் கைகோர்த்துவிட்டனர். ஆனால், மம்தாவால் அவர்களுடன் இணைய முடியவில்லை.

காங்கிரஸாரும்,கம்யூனிஸ்டுகளும் பாஜகவை எதிர்ப்பது மட்டுமின்றி, மம்தாவின் ஊழலை,சர்வாதிகார போக்கை கடுமையாக விமர்சித்து போராடும் சூழலில் உள்ளனர். இந்தச் சூழல் பாஜகவிற்கு பலம் சேர்க்கிறது. காங்கிரசும்,கம்யூனிஸ்டுகளும் சுமார் முப்பது தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடியும். ஆனால், அவர்கள் வாங்கும் வாக்குகளால் சுமார் 100 தொகுதிகளில் திரிணமுள் பலவீனமடையும். இங்கே பாஜக காலூன்றும். மம்தா சென்ற தேர்தலில் 294 இடங்களில் 211 இடங்களை கைப்பற்ற முடியாது! ஆனால், தற்போது

அதிகபட்சம் 150 இடங்கள் பெறலாம். அப்படி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் குறைந்த மெஜாரிட்டி உள்ள திரிணமுள்ளிடமிருந்து எம்.எல்.ஏக்களை பாஜக தூக்கிவிடும்! ஆகவே, வங்கத்தில் வென்றாலும், வெல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் பாஜக ஆட்சி அமைவதை தவிர்க்க முடியாது.

அதன் பிறகான நிலைமைகளே மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வழிவகுக்கலாம் என்று தோன்றுகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time