ஹரித்துவார் கும்பமேளாவும், அடங்காத அதிகார வர்க்கமும்!

-சாவித்திரி கண்ணன்

எத்தனையோ முக்கிய பணிகள் காவலர்களுக்கு இருக்கிறது. ஆனால்,தற்போது அவர்களின் ஒரே பணி யார் முகக் கவசம் அணியவில்லை, யார் எச்சில் துப்புகிறார்கள்,..பிடி, விடாதே., போடு அபராதம், எடு பணத்தை என்பதாகிவிட்டது. திருட்டு,கொள்ளை,மோசடி எந்த புகாரும் முக்கியமில்லாமல் போய்விட்டது! மறு பக்கம் வட இந்தியாவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் கும்பமேளா நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் தில்லியில் 140 நாட்களைக் கடந்து தொடர்கிறது…! இது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது!

ஓராண்டு கால கொரானா அனுபவத்தில் நாம் என்ன படிப்பினை பெற்றுள்ளோம்..?தெளிவு பெற்றோம்.தைரியம் பெற்றோம். அதை நடைமுறைபடுத வேண்டாமா…?

கொரானா வந்ததது தொடங்கி, அது இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு நீங்கள் பரிசோதனைகளை குறைத்தீர்கள், கொரானா குறைந்தது என்று சொன்னீர்கள். பிறகு எல்லோரும் சகஜமாக இயங்கினோம். கொரானா வந்தவர்கள் எல்லாம் அமைதியாக டிரீட்மெண்ட் எடுத்து அதிலிருந்து மீண்டனர். வீட்டிலேயே இருந்து சுய மருத்துவத்தில் மீண்டவர்களும் அனேகம் பேர் உண்டு!

தேர்தல் பிரச்சாரம் நடக்கும் போதே கொரானா அதிகரிக்கும் தகவல்கள் வந்தன. ஆன போதும் அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். ஆனால் தேர்தல் முடிந்த ஓரிரு நாளில் பல கெடுபிகளை காட்டுகிறீர்கள். எடுத்ததெற்கெல்லாம் அபராதம்.

இவ்வளவு டார்கெட்! அதுக்கு ஏற்றார் போல காவலர்களை களம் இறக்குவது என முடிவு செய்கிறீர்கள். இது சட்டத்தின் பெயரால், நோய் என்ற அச்சத்தின் பெயரால் அதிகாரபூர்வமாக பணம் பறிக்கும் முயற்சி அன்றி வேறல்ல. சாதாரண காய்கறிக்கடைகள் மளிகை கடைகள் முன் நிற்கும் மக்களை ’’முகக் கவசம் போட்டாயா…?’’ என்று கேட்டு மக்களுக்கும், கடைக்காரருக்கும் அபராதம் போடுகிறீர்கள். ஆனால், டாஸ்மாக் முன் முட்டி,மோதி சரக்கு வாங்குபவர்களை கண்டும் காணாமல் போகிறீர்கள். அப்படியானால், இன்று ஆட்சி பீடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் இல்லையென்பதால் அதிகார வர்க்கம் போடும் ஆட்டம் என்பதாக இதைப் புரிந்து கொள்வதா…? தமிழகம் முழுவதும் முகக் கவசம் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ.5.07 கோடி அபராதம் ஒரு சில நாட்களில் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு அரச பயங்கரவாதமாகவே பார்க்கிறேன்.

கொரானா என்பது தொற்றும் வியாதி தான். அதை முகக் கவசம் போட்டு தடுத்துவிட முடியாது. முகக் கவசம் போட்டாலும் வரும்! உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதிபடுத்துவதன் மூலமே அதை தடுக்க முடியும்.

இந்தியாவில் கொரானாவைக் காட்டிலும் அதிகம் பரவும் நோய் காச நோய்! ஒவ்வொரு நாளும் பல லட்சம் இந்தியர்களை அது தாக்குகிறது. மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களுக்கு காச நோய் உடலில் அறிகுறிகளே தெரியாமல் மறைந்து உள்ளது. அவர்கள் பலவீனப்படும் போது அது தாக்குகிறது. காச நோயால் தினசரி இந்தியாவில் சுமார் 1,200 இறக்கிறார்கள். இந்த அளவுக்கு கொரானாவில் கிடையாது.

எந்த ஒரு நோயோ கிருமியோ சமூகத்தில் நன்கு பரவித்தான் அடங்கும். அப்படி பரவும் போது அதை எதிர்ப்பதற்கான ஆற்றலை மனித உடலுக்கு இயற்கையே ஏற்படுத்தி தருகிறது. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூத சக்திகளின் துணையோடு தான் எந்த ஒரு நோயையும் நாம் எதிர் கொண்டு வெல்ல முடியும். இந்த பிரபஞ்சமெனும் இயற்கையில் இருந்து தான் நாம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற முடியும்!

ஆனால், அரசாங்க அதிகார வர்க்கம் மிக முட்டாள்த்தனமாகவும்,மூர்க்கத்தமாகவும் அதைத் தான் தடுக்கிறார்கள்! மாஸ்க் போடுவதன் மூலம் ஒருவரின் ஆழ்ந்த சுவாசத்தை தடுக்கிறீர்கள்! ஆழ்ந்த சுவாசம் உள்ளவன் தான் கொரானா போன்ற நுரையீரல் தொற்று நோயை வெல்ல முடியும். கொரானா கிருமியானது மாஸ்க்கில் உள்ள காற்றுபுகக் கூடிய நுண்ணிய துவாரங்கள் வழியே எளிதாக உள்ளே செல்ல முடியும்.ஆனால் ஆழ்ந்த சுவாசம் உள்ள ஒருவர் அதை எளிதில் இயல்பாக வெளித் தள்ளி ஆரோக்கியாமாக இயங்க முடியும். ஆனால் முகக் கவசம் போடுவதால் உள்ளே நுழைந்த கொரானாவை நீங்கள் வெளியேறவிடாமல் பத்திரமாக பாதுகாக்கும் வேலையைத் தான் செய்ய முடியும்! வெளியே வந்து உடலில் வெயில்பட நடமாடினால் தான் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகும்.

வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.

இத் திருவிழாவில் புனித நீராட, மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள் கும்பமேளா கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கூறினார். ஆனால் அரசால் தடுக்க முடியவில்லை. தடுக்க முடியாது என்பதே நிதர்சனம். ஆகவே, அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்படிக்கப்படும் என கூறி கும்பமேளா கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்தது. ஆனால், மிக பிரம்மாண்ட கூட்டத்தின் முன் எதுவும் செல்லுபடியாகவில்லை. மிகப் பெரும் மக்கள் தொகையின் இறை நம்பிக்கை என்ற உணர்ச்சியின் முன்பு ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் அங்கு மட்டும் அடங்கி போய்விட்டன.

உத்தரகாண்ட் அரசின் கணக்கின்படி கடந்த மூன்று  நாட்களில் மட்டும்  புனித நீராடலில் சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து பங்கேற்றுள்ளனர்.. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை அச்சுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து எந்தவிதமான கவலையும் இல்லாமல், தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல், முகக்கவசம், சமூக விலகலைப் பின்பற்றாமல் மக்கள் அச்சமின்றி ஆனந்தமாக நெருக்கியடித்து நீராடினார்கள்.

கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கும்பமேளாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2,171 பேருக்கு முதல் கட்டமாக கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மிகக் குறைவானவர்களுக்கே அது பரவுகிறது என்பது உறுதியாகிறது. அப்படி பரவிய போதிலும் யாரும் பாதிப்பு அடையவில்லை. இறக்கவும் இல்லை. பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் இன்னும் பலருக்கும் இருக்கலாம். இதன் மூலம் தேவையற்ற பீதியைத் தான் ஏற்படுத்த முடியும்.

அதே போல டெல்லியில் நடுவீதிகளில் 140 நாட்களைக் கடந்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் இயற்கையின் புதல்வர்கள். ஆகவே, மிக இயல்பாக அவர்கள் கொரானாவை கடந்து பயணிக்கிறார்கள்.ஆகவே இவற்றின் மூலம் கொரானாவிற்கு அஞ்சி வீட்டில் முடங்க தேவையில்லை என்ற பாடத்தை நாம் பெற வேண்டும். படித்த அதிமேதாவிகள் தான் தாங்களும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துகிறார்கள். பயம் தான் இருப்பதிலேயே பெரிய நோய். அதைத் தான் தற்போது அரசும், அதிகாரிகளும், காவலர்களும் செய்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கொரானா தடுப்பு ஊசி என்ற ஒன்றை முழுமையான பரிசோதனை முயற்சிகளை முடிக்கும் முன்பே கொண்டு வந்து பாடாய்படுத்துகின்றனர். ஒரு கிருமி சமூகத்தில் சகல தளத்திலும் பரவித் தான் அடங்கும். அதற்கு முன்பாக அதை எதிர்த்து தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அது அந்த தடுப்பை தகர்க்க தன்னை உருமாற்றிக் கொண்டு உக்கிரமாக முன்னேறும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான நேச்சுரோபதி மருத்துவர்கள் செய்யும் எச்சரிக்கைகளை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. இப்போது உருமாறிய கொரானா வைரஸுக்கு புதிய தடுப்பு மருந்து தான் கண்டுபிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 200 பேர் இறந்துள்ளார்களாம். பல்லாயிரக்கணக்கானோர் ரத்த உறைதல் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளதையும் அரசாங்கம் கருத்தில் கொண்டு தடுப்பூசி மருந்தை நிர்பந்திப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஆட்சியாளர்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஆங்காங்கே ஆட்சியர்கள் இஷ்டத்திற்கு ஆணை பிறப்பித்து மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்குவதாக பரவலாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இது மிகவும் தவறாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time