தொடரும் தடுப்பூசி மரணங்கள்! அச்சத்தைப் போக்குவது யார்?

-வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம்

இறந்தவர் பிரபல நடிகர் என்பதை தாண்டி தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்திற்கான தூதுவர் என்பது மிக முக்கியம்.

விவேக்  15.04.2021 அன்று பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும்  அரசு மருத்துவர்களின் முன்னிலையில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் , பொது சுகாதாரத் துறையின் மேன்மை ,கொரோனாவிழிப்புணர்வு  ஆகியவை குறித்துபேச வைக்கப்படுகிறார். ஆனால்,16.04.2021 காலை 11 மணிக்கு மயக்கமான நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். 17.04.2021 அன்று காலை 04.35 மணி அளவில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.

‘’விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் கொரோனா தொற்றினால் இறக்க வில்லை’’ என்று சுகாதாரத் துறை செயலாளர்  அவசரமாக அறிவிக்கிறார். விவேக் மரணத்திற்கான காரணத்தை அறியும் பிரேத பரிசோதனை செய்திருக்க வேண்டும். அந்த பிரேத பரிசோதனை, மருத்துவ அறிவியலுக்கு உதவி இருக்கும். தவறுகளை கண்டறிந்து, தவிர்த்து, முன்னேறுவது தானே அறிவியல் பூர்வமான அணுகுமுறையாக இருக்கும். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது அவரது உடல் மட்டுமா? உண்மையுமா..?

தடுப்பூசி வந்த காலத்தில் இருந்து, இந்தியாவில் கொரோனா மருந்தின் குணப்படுத்தும் தன்மை, பக்க விளைவுகள் குறித்தும், கொரோனா தடுப்பூசிக்குப் பின் மருத்துவ மாபியா இருக்குமா என்றும், தடுப்பூசியே தவறானதோ…என்றெல்லாம் மக்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தன. இது உணர்த்தும் செய்தி ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையின்மையே.

இங்குள்ள அறிவியலாளர்களும் அரசும், தடுப்பூசியின் அவசியம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்கள், இது குறித்து சிறு அச்சங்களை வெளிப்படுத்தினாலே பிற்போக்கு வாதிகள் எனச் சாடுகிறார்கள். இது எதையும் பொருட்படுத்தாமல் கொரோனா  ஆபத்தில் இருந்து மீண்டால் போதும் என்று தடுப்பூசியை  பலர் போட்டு வருகிறார்கள் என்றாலும், பெரும்பாலான மக்கள் மத்தியில் இன்னும் ஒரு அச்சம் இருக்கவே செய்கிறது.

இதற்கிடையில் தான் திரு.ஆசிஃப் ரியாஷ் என்ற தொழில் துறை ஆலோசகர் ஒருவர் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தின் கோவிசீல்ட் மூன்றாம் கட்ட தடுப்பூசியை போட்டதால் தனக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளுக்காக ரூபாய் ஐந்து கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது, வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

சனவரி 19, 2021 வரை அன்று வரை அதாவது நான்காவது நாள் தடுப்பூசி போட்ட நிலையிலேயே இந்தியாவில் 580 பேருக்கு தடுப்பூசி பாதிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. ஆனால்,இப்படி பதிவு செய்ய முன்வராமல் பல நிகழ்வுகள் அதற்குப் பிறகு மறைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது. முதல் ஊசி செழுத்திக் கொண்ட எழுவரில் இரண்டு பேருக்கு கடும் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கியுள்ளது என  கோவாக்சின், கோவிசீல்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒத்துக் கொண்டுள்ளன. அந்த இருவரில் உத்தரபிரதேசம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், இவர் சனவரி 16-ல் தடுப்பூசி போட்டு 17 அன்று இறந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த் 43 வயது ஆண் ஒருவர் சனவரி 16-ல் தடுப்பூசி போட்டு 18 அன்று இறந்துள்ளார்.இரண்டு குடும்பத்தாரும் தடுப்பூசி தான் காரணம் என்கின்றனர். ஆனால் அரசு ”septicemic shock and cardiac” –ஆல்   இறந்ததாக கூறுகிறது. (India Today January 19)

கேரளாவின் கொல்லத்தில் சுஜாதா என்ற 52 வயது செவிலியர் கொரோனா தடுப்பூசி போட்ட மறு நாள் இறந்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த 30 வயது ஜிக்னேஷ் சோலங்கி என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி போட்ட அரை மணி நேரத்தில் மயக்கமடைந்து மறு நாள் மருத்துவமனையில் இறந்துள்ளார். உறவினர்கள் தடுப்பூசியால் தான் இறந்தார் என்று உடலை வாங்க மறுத்தனர். இரண்டு மரணங்களும் நிகழ்ந்த்து “கார்டியாக் அரஸ்ட்” என்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

இவ்வாறு பல நிகழ்வுகள் தமிழ்நாடு உட்பட நாடு முழுதும் நிகழ்ந்து வருகிறது.

இந்த புள்ளி விவரங்கள் பத்திரிக்கைச் செய்தியில் வந்தவை மட்டுமே, பதிவு செய்யப்படாத எத்தனையோ நிகழ்வுகளும் இருக்கலாம்.

அதன் பின்பு யாரெல்லாம் இந்த தடுப்பூசியை  போட்டுக் கொள்ளக் கூடாது என பாரத் பயோடெக் மற்றும் சேரம் இன்ஸ்டிட்யூட் ஒரு தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரத் பயோடெக்கின் கோவாக்சினை போடக்கூடாதவர்கள்:—

#  நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள் அல்லது மருந்துகளால் எதிர்ப்பு சக்தி பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள்.

#  ஒவ்வாமை பின்ணணி உள்ளவர்கள்

#  காய்ச்சல் உள்ளவர்கள்

# ரத்தப் போக்கு கோளாறு உள்ளவர்கள் அல்லது ரத்த மெலிவு தன்மை உள்ளவர்கள் (Blood Thinner)

# கருவுற்றுள்ள மற்றும் தாய் பால் கொடுக்கும் பெண்கள்

# பிற கொரோனா தடுப்பூசி போட்டுள்ளவர்கள்

# தடுப்பூசியை மேற்பார்வையிடும் சுகாதார அலுவலரால் நிர்ணயிக்கப்பட்ட சுகாதார தொடர்பான வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளவர்கள்.

சேரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட் போடக்கூடாதவர்கள்:—

  1. கோவிஷீல்டில் உள்ள எந்தவொரு மூலப்பொருளுக்கும் கடுமையாக ஒவ்வாமை உள்ளவர்கள்.

(தடுப்பூசியில் உள்ள பொருட்கள் – எல்-ஹிஸ்டைடின், எல்-ஹிஸ்டைடின் ஹைட்ரோகுளோரைடு மோனோஹைட்ரேட், டிஸோடியம் எடிடேட் டைஹைட்ரேட் (ஈடிடிஏ), ஊசி போடுவதற்கான நீர்).

  1. கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், இரண்டாவது டோஸ் போடக் கூடாது.

தடுப்பூசி போட வருபவர்களிடம் மருத்துவர்கள் இவற்றை எடுத்துச் சொல்லி அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.ஆனால்,பெரும்பாலான இடங்களில் அவ்வாறு நடப்பதில்லை.

2021 மார்ச், 17 வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு உடல் உபாதைகளால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 163 பேரில் 71 பேர் மரணமடைந்தனர். ஆனால் அவர்கள் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். (India Today March 17) ஆனால் இன்று வரை ஆய்வு முடிவுகள் வெளிவராமல் காலதாமதம் ஆகின்றது. ஆனால், ஊசி செலுத்தலும்,மரணங்களும் தொடர்கின்றன.

இதே நேரம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் கொரோனா தடுப்பூசி போட்ட பலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளது, அமெரிக்க அரசு தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 18 முதல் 48 வயது வரை உள்ள 6 பெண்கள் ரத்த உறைவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று உயிரியல் பரிணாம வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான உணவு மற்றும் மருந்து நிர்வாக மையத்தின் இயக்குனர் டாக்டர் பீட்டர் மார்க்ஸ் (Director of the Food and Drug Administration’s Center for Biologics Evaluation and Research), அவர்களும் C.D.C நிறுவனத்தின் தலைமை துணை இயக்குநர் டாக்டர்.அன்னீ ஜுஜட் அவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுவரை 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தடுப்பூசியை போட்டுள்ளதாக அரசின் புள்ளி விபரம் கூறுகிறது. எனவே பாதிப்பின் விகிதம் குறைவாகவே இருப்பினும் ஐரோப்பாவில் இந்த தடுப்பூசிகளை தாமதப்படுத்தப் போவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மாதங்களில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டவர்கள் கடும் தலைவலி, வயிற்று வலி, கால் வலி அல்லது மூச்சுத் திணறல் உபாதைகள் இருப்பதாக உணர்ந்தால் அவரவர் மருத்துவர்களை உடனடியாக அணுகும்படி 13.04.2021 அன்று அமெரிக்காவின் மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு நிறுவனம் C.D.C. and the F.D.A அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா இத்தொற்றினால் பேரழிவுக்கு ஆட்பட்டுள்ள சூழலிலும் தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவும் இம்மருந்துகளை வாங்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் “AstraZeneca” மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்திலும் இதைப் போன்ற ரத்த உறைவு பிரச்சனை இருப்பதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் முன்பு தடுப்பூசி போட்டால் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்காது என நம்பப் பட்டது. ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் அவர்கள் தடுப்பூசி போட்ட பின்பும் தொற்றுக்கு ஆளானார் அது போல் பல உதாரணங்கள் உண்டு.

நடிகர்கள் அசுத்தோஷ் ரானா, சோனு சூட் போன்றவர்களுக்கும் தடுப்பூசிக்குப் பின்பும் தொற்று பாதித்துள்ளது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாகவும் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

முன்பு இரண்டாவது ஊசி போட 28 நாட்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது, அதன் பின்பு எட்டு வார இடைவெளியில் ஊசி செலுத்துவது தான் சிறந்த முறையில் வேலை செய்கிறது எனக் கூறப்பட்டது.

எட்டு வாரங்களுக்குப் பின்பும் இரண்டாவது ஊசி செலுத்திய பின்பும் பலருக்கும் திரும்பவும் தொற்று பாதித்து வருவதை பார்க்கிறோம்.

லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த (KGMU), 40 மருத்துவர்களுக்கும் பல செவிலியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்பும் தொற்று ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல உதாரணங்களைப் பார்க்கிறோம்.

தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மீண்டும் வருவதற்கான சாத்தியக் கூறு உள்ளது என விவாதம் வருகின்ற நிலையில், தடுப்பூசி போட்ட பின்பு வரும் தொற்றானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் விரைவில் குணமாகி விடலாம் என்றும் புது விளக்கம் கிடைக்கிறது. ஆனால், அதுவும் உண்மையல்ல, என சில மரணங்கள் உணர்த்துகின்றது.

தடுப்பூசிபோட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படக்காரணம் என்ன என்பதைப் பற்றி நார்வே,ஆஸ்திரேலியா, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை ”தி நியூ இங்லாண்ட் ஜேர்னல் ஆஃப் மெடிசின்” வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பூசி போட்ட  பிறகு, தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு  குறிப்பிட்ட ஆன்டிபாடி உருவாகிறது என்றும், அவை பிளேட்லெட்டுகள் அல்லது த்ரோம்போசைட்டுகளுடன் பிணைக்கப்பட்டு, அவை இரத்தக் குழாயை (த்ரோம்போசிஸ்) தடுக்கக்கூடிய கட்டிகளை உருவாக்க செயல்படுத்துகின்றன. அதனால் ஃப்ரீ  பிளேட்லெட்டுகளில் (த்ரோம்போசைட்டோபீனியா) குறைவு காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. (The Hindu 17.4.2021)

இந்த நிலையில் தான் ஆரோக்கியமாக இருந்த நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட மறு நாளில் இறந்துள்ளார். அவர் தினம் தோறும் பல கிலோ மீட்டர் மிதிவண்டி ஓட்டும் பழக்கமும், யோகா பயிற்சியும், உடற் பயிற்சியும் செய்யும் வழக்கம் உள்ளவர் என்ற செய்தி வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் இருதயத்திற்குச் செல்லும் இடது பக்க ரத்த குழாயில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டிருந்தது என்று மருத்துவச் செய்தி வந்துள்ளதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

90%-க்கும் மேல் பாதுகாப்பானது என நம்பப்பட்ட “Pfizer-BioNTech mRNA” போன்ற தடுப்புசிகள் போடப்பட்ட நார்வேயில் முப்பது பேர் இறந்துள்ள செய்தி வந்துள்ளது. கடந்த சில வாரத்தில் மட்டும் நார்வேயில் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒவ்வொரு வாரமும், கிட்டத்தட்ட 400 நபர்கள் இறப்பதாகவும் British Medical Journal (BMJ) தெரிவிக்கிறது. (New York times, April 16,2021). ஆனால் இவை தடுப்பூசியால் இறந்தார்களா என்று தெரியவில்லை.

ஜெர்மனியில் தடுப்பூசி போட்ட உடன் ஏற்பட்ட 10 மரணங்கள் குறித்து விசாரணை செய்து வருவதாக தி பால் எஹ்ர்லிச் நிறுவனம் தெரிவித்துள்ளது. நார்வே போன்ற சுகாதாரத்திற்குப் பெயர் போன ஸ்காண்டினேவியன் நாடுகளும் , வளர்ச்சி அடைந்த உலக நாடுகளும் மருத்துவத்தில் முன்னேறிய நாடுகளும் கூட இந்த தடுப்பூசி மருந்து விவகாரத்தில் try and error எனப்படும் முயற்சி நிலையில் தான் உள்ளது .

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் மரணம், பாதிப்புகள் விகிதாச்சார அடிப்படையில் குறைவானதாக இருந்தாலும் கூட இதனையும் வெல்வதே மருத்துவத்தின் வெற்றி, அதனை நோக்கி உலக நாடுகள் பயனிக்கின்றன. அதற்கான திறந்த மனம் அவர்களுக்கு இருப்பதை போல இந்திய அரசுக்கு உள்ளதா..? என்பதே நம் கேள்வியாகும்.

நபருக்கு நபர் அவர்களின் உடல் நிலையைப் பொருத்து மாறுபட்ட விளைவுகளை உருவாக்குவதாகவே இந்த தடுப்பூசிகள் இருக்கிறது, எனவே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி குறித்த அச்சங்கள் எழுகின்ற போது, எதையும் மறைக்காமல் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமை.

ஒவ்வொருவருக்கும் தம் உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு உள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை  பெருகாததற்கு மக்களிடையே விழிப்புணர்வு இல்லை என எளிதாக புறந்தள்ளி விட முடியாது. தடுப்பூசி மீது உள்ள அச்சத்தை விட ஆளும் அரசுகளின் மீது மக்களுக்கு உள்ள அவ நம்பிக்கையே மிக முக்கிய காரணம். தடுப்பூசி விவகாரத்தில் கார்ப்பரேட், அரசு, மருத்துவ மாபியா ஆகியோரின் மெகா கூட்டணி உள்ளதோ என்ற அச்சம் மக்களிடையே அடி நாதமாக உள்ளது .

தடுப்பூசி குறித்த நியாயமான சந்தேகங்களை எழுப்புவோரை எதிரியாக வரையறுக்காமல் விளக்கம் தர  வேண்டும். தடுப்பூசி மரணத்திற்கு இழப்பீடு என்பதையும் கட்டாயமாக்கினால் மக்கள் ஆறுதல் அடைவார்கள். விவேக் விசயத்தில் தடுப்பூசி போட்டு 24 மணி நேரத்திற்குள் இவர் மயக்க நிலையை அடைந்து எக்மோ சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். எனவே மருத்துவ ரீதியில் இறப்பு குறித்த உரிய ஆய்வை நடத்தியிருந்தால் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும்.

அரசு மரியாதையோடு விவேக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதோடு அரசின் பொறுப்பு நிறைவு பெற்றதாக எண்ணாமல், அவரது மரணம், மற்றும் தடுப்பூசி குறித்தான மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு ஆகும் அரசோடு, அறிவியலாளர்கள், மருத்துவர்கள், தடுப்பூசி ஆதரவாளர்கள் ஆகியோருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது,

கட்டுரையாளர்

-வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம்

[email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time