‘புனைபாவை’ பேசும் போர்களும்,சாதிகளும்!

- பீட்டர் துரைராஜ்

இரா.முருகவேள் எழுதியுள்ள வரலாற்று நாவல் ‘புனைபாவை’. கொங்கு மண்டலத்தின் 13 ம் நூற்றாண்டு காலக்  கதையை; கடைசி தமிழ் மன்னன், தமிழ்நாட்டை ஆண்ட போது வாழ்ந்த  மக்களின் வாழ்வியலை ரத்தமும்,சதையுமாக உயிர்ப்போடு பேசுகிறது.

புத்தகக் கண்காட்சியில் கவனம் பெற்ற நாவல் இது.

விடுதலைக்குப் பிறகான,  கொங்கு மண்டலத்தின் அறுபது ஆண்டு கால வாழ்வியலை  ‘முகிலினி’ நாவலில் வெற்றிகரமாக கொண்டுவந்தவர் இரா.முருகவேள். அவர் அதே கொங்கு மண்டலத்தின் மூலம்,  தமிழக வரலாற்றை புனைவதில் வியப்பில்லை. இதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும், கொங்கு மண்டலத்தில் இருந்த சிற்றரசனுக்கும் நடந்த போரில்  கதை தொடங்குகிறது. சமாதான உடன்படிக்கை ஏற்படுகிறது. இதிலுள்ள அரசியல் இந்தக் காலத்திற்கும் பொருந்தும். ‘வலிமையற்ற, நிலையற்ற சிற்றரசுகள் ஒரு போதும் வணிகர்களின் சரக்குகளுக்கும், வணிகத் தளங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது’ என்பதை உணர்ந்த வணிகர் குழுக்கள் குலோத்துங்க சோழனுக்கு போரில் ஆதரவு அளிக்கின்றன. போரில் ஊரை கொள்ளை அடிக்கும் படைகள், அதை அனுமதிக்கும் அரசன் என்பதெல்லாம் எப்போதும் நடப்பதுதான்.

இரா.முருகவேள் நாவலை வித்தியாசமான கோணத்தில் எடுத்துச் செல்கிறார்.விடங்கச் செட்டி ஒரு வாணிகன். சிறுவயது முதலே துறைமுகங்களை வேடிக்கை பார்ப்பது, சோனகன் என்று அழைக்கப்படும் அரபியர்களோடு உரையாடுவது,  ஏற்றுமதி செய்வது, குதிரைகளை இறக்குமதி செய்வது  என்பதை அருகில் இருந்து பார்த்தவன். இவன் ஒரு அதிகார சக்தியாக வருகிறான். உருக்கினால் செய்த கத்திகள் இலேசானவை, உடையாதவை, துருப்பிடிக்காதவை என்பதை ஒரு தெரிந்து கொண்ட வாணிகன் கம்மாளர்களை வைத்து  உற்பத்தி செய்து,  வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறான். செல்வந்தனாகிறான். ( அதே கத்திகளை மாலிக் காபூரின் படைகள் பயன்படுத்தி மதுரையை அடிமைப்படுத்தும் என்பதை உணராமலே). இதனால் கம்மாளர்களுக்கு தங்கள் வீடுகளுக்கு சுண்ணாம்பு பூச; செருப்பு போட்டுக் கொள்ள; நல்லது, கெட்டதற்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ள அனுமதி கிடைக்கிறது.

இருளர் இன மக்களை வசப்படுத்தி, அடிமைப்படுத்தி, இரும்புத் தாதுக்களை தமது கொல்லுலைகளுக்கு எடுத்துச் செல்கிறான். இருளர் இன மக்களுக்கு பொறாமை என்றால் என்ன என்ற ‘நாகரிகம்’ தெரிய வருகிறது. கல்வீடு கட்டுகிறார்கள். ‘வன்புணர்தல்’ என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு அதை அறிமுகப்படுத்துகிறான். காடுகளை அழித்து விவசாயம் செய்யும் அவர்கள் புதிய சாதி ஆகிறார்கள். மல்லியை இழுத்து வந்து தனது கடைசி மனைவியாக வைத்துக் கொள்கிறான்; அதனால் நடக்கப்போவது என்னவென்று தெரியாமலே.

ஆயுதங்களைச் செய்யும் செட்டியை எதிர்த்து வேளாளர்கள் திரளுகிறார்கள். அவர்களுக்கு குளத்தை ஆழப்படுத்த, உழுகருவிகள் செய்ய கம்மாளர்கள் தேவை. ஊர்ச் சபை கூடுகிறது. விவாதிக்கிறது. தற்காலிக சமரசம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் வேளாளர்கள் செட்டிப் படையை எதிர்க்கிறார்கள். கம்மாளர்கள் ஊரை விட்டு வெளியே போகக் கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு வருகிறது. இவையெல்லாம் சுவாரசியமாக முதல் பகுதியில் வருகிறது.

இதனைப் படிக்கையில் வாசகர்களாகிய நமக்கு அக்கால சாதி அமைப்பு, ஊர்ச்சபை, புதிய சாதிகள் உருவாதல், வணிகர்களுக்கும், வேளாளர்களுக்கும் ஏற்படும் முரண் , சாதிகளின் நெகிழ்வுத் தன்மை போன்றவை தெரிகிறது. பல்வேறு நூல்களை இதற்கு ஆதாரமாக கொண்டுள்ளார்.
இருளர் குல மல்லியை சாதி மாற்றம் செய்து திருமணம் செய்து கொண்ட விடங்கச் செட்டி மூலம் நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது.

இரண்டாம் பாதியில் மாலிக் காபூர் வடக்கில் இருந்து,  மதுரையை கொள்ளை அடிக்க  தென்னாடு வருகிறான். அவனை பாண்டிய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

இரா.முருகவேள் குடிமக்களைச் சார்ந்த அரசியல் பேசுபவர். அதனால்தானோ என்னவோ இந்த நாவலில் குடி போதையில்,  மன்னனை கேலி செய்யும், எல்லைக் காவல் தலைவன்  நாணா நம்பியை படைத்துள்ளார். செட்டிப் படையில் இருந்த அவனுக்கு காரியம் முக்கியம். மறவர்களைப் போல  வெற்றி அல்லது வீர மரணம் என்ற முழக்கத்தில்  அவனுக்கு நம்பிக்கை இல்லை.(வெற்றி அடையவில்லை என்றால் எதிரிப் படையால் தன் குடும்பத்தாரோடு, சொத்துகளோடு அழிந்து போக வேண்டியதுதான். இதில் விருப்பம் (choice) ஏதுமில்லை). அவன் நமது கருவிகளின் பலவீனம் குறித்து, குதிரைச்  சேணத்தின் போதாமை குறித்து, குதிரைகளில் நின்று கொண்டு போரிட முடியாத நிலை குறித்து பாண்டிய தளபதியிடம் விவாதிக்கிறான்.

சமண மதத்திற்கும், சைவ மதத்திற்கும் ஏற்படும் முரண்/சமரசம் கதையில் வருகிறது. ஊர்க்கட்டுப்பாட்டை மீறி மருத்துவம் பார்க்கும் ( அறுவை சிகிச்சை செய்யும் பாத்திரம்) கதையில் வருகிறது. வறுமைக்காக கோவிலில் தன் குழந்தைகளை அடிமையாக விற்கும் சம்பவங்கள் வருகின்றன. திருவம்பலம் பிரியாதாள் என்ற  அன்புமிக்க தேவரடியார் வருகிறார்;  கோவில் சொத்துகளை ருசிப்பவர்கள் வருகிறார்கள். குதிரைச்  சேணம் செய்யும் பறையர்கள் வருகிறார்கள்.

ஏறக்குறைய இதே காலக்கட்டத்தை , வட தமிழகத்தை மையமாக வைத்து  ‘படைவீடு’ நாவலை தமிழ்மகன் படைத்துள்ளார். அதில் சாதி எப்படி தொழில் சார்ந்து இருந்தது என்பதை சித்தரித்திருப்பார்.

புனைபாவை என்றால் உருவாக்கப்பட்ட ஒரு பொம்மை என்று பொருள். தமிழகம் உலோகவியலில் சிறந்து இருந்தாலும், அதன் பெருமையை நாம் உணரவில்லை; அறுவை சிகிச்சை முறை தெரிந்தாலும்  நாம் ஆவணப்படுத்தவில்லை; இப்படி பல பெருமிதங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும் பலனின்றி போனது என்பதை இரா.முருகவேள் சித்தரிக்கிறார். புனைவு எது, உண்மை எது என பிரித்துணர முடியாத வண்ணம்  ஆசிரியர் நாவலை நுட்பமாக படைத்துள்ளார்.

ஐம்பொழில் பதிப்பகம்/362 பக்கம்/ரூ.250/பேச: 94430 14445.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time