அரசாங்கத்தின் எதிரி கொரோனாவா? விவசாயியா…?

- சாவித்திரி கண்ணன்

டெல்லியில் 143 வது நாளாகப் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று மத்திய அரசு பலவித கெடுபிடிகளை செய்கிறது! இது வரை போராட்டத்தில், 375க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ள போதிலும், மனம் தளராமல் தொடர்கின்றனர். கொரோனாவை விட விவசாய சட்டங்கள் ஆபத்தானவை என்பது விவசாயிகளின் நிலைபாடு!  போராடும் விவசாயிகளை கொரானாவை விட ஆபத்தாக பார்க்கிறது பாஜக அரசு! நடக்கப் போவது என்ன..?

விவசாயிகள் போராடி வரும் இடத்திற்கு அருகாமையில் உள்ள மக்களில் சிலரை விவசாயிகளுக்கு எதிராக தூண்டிவிட்டது அரசாங்கம். ஆனால் தங்கள் அன்பால்,அஹிம்சையால் அவற்றை எதிர் கொண்டனர் விவசாயிகள்.

ஏப்ரல் 15ம் தேதியன்று டில்லி விவசாயிகள் போராட்டக் களங்களில் ஒன்றான சிங்கூர் எல்லையில் விவசாயிகளின் கூடாரங்கள் சமூக விரோதிகளால் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. நல்லவேளை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ’’விவசாயிகளின் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத அரசலோ அல்லது பாஜகவாலோ தான் இது நடந்திருக்க வேண்டும்’’ என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘’உழவர்களிடையே அச்சத்தின் சூழலை உருவாக்கும் பொருட்டு, பல வகையான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. உழவர்களின் தர்ணாவை வலுக்கட்டாயமாக மாற்றுவது என்பதும் இதில் அடங்கும். டெல்லியின் எல்லைகளிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் போராடும் விவசாயிகள் முறையான பேச்சுவார்த்தைகளை ஒருபோதும் மறுக்கவில்லை. கொரோனாவைக்கூட பொருட்படுத்தாமல், பாஜக சில தேர்தல் பேரணிகளை நடத்துவது கேலிக்குரியதாக உள்ளது. அதேசமயம் பாஜகவுக்கு எதிராக ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால், அரசாங்கம் அதை மிகவும் கடுமையாகக் கையாள்கிறது. போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் உழவர்களிடையே அச்சத்தின் சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை, உழவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்; அதற்குப் பொருத்தமான பதிலை கொடுப்பார்கள். அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடருமாறு உழவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்ற அதே நேரத்தில், அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் முடிந்தவுடன் மற்ற உழவர்களும் டெல்லி எல்லைகளை அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளது.

இப்படியான நெருக்கடி சூழலிலும்,சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 அன்று தில்லியில்வேளாண் சட்டத்திற்கு எதிராக 40 ஆயிரம் பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவ்வாறாக ஒவ்வொரு நாளையும் உயிர்ப்புடன் போராடி வருகின்றனர்.

மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற எழுச்சிமிக்க சொற்பொழிகள் நிகழ்ந்தன. அதே போல ஹோலிப் பண்டிகையும் போராட்டக்களத்திலேயே கொண்டாடியுள்ளனர் விவசாயிகள். பல்வேறு மாநிலங்களின் கிராமங்களில் இருந்து டில்லி போராட்டக்களத்திற்கு கலயங்களில் மண் எடுத்துச் செல்லும் மண் சத்தியாக்கிரகத்தை நடத்தினர். இதில் AIKSCC தலைவர்கள் மேதா பட்கர், DR.சுனிலம், திகாயித் உட்பட விவசாயிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் அறுவடை காலத்தை கருதி சில விவசாயிகள் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சென்றுள்ளனர். ஆயினும் போராட்டக்களங்களில் எப்போதும் கணிசமானவர்கள் இருப்பது போன்ற நிலைமைகளையும் உறுதிபடுத்தியே வருகின்றனர்.

அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் கிடைக்க வேண்டும் என்பதும், அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்பதும் உழவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களால், MSP, உணவு பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும். அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், இந்தச் சட்டங்கள் எவ்வாறு சுரண்டல் மற்றும் பாரபட்சமானவை என்று தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளது என சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று, சிங்கூர் எல்லையைச் சுற்றியுள்ள உள்ளூர் மக்களைச் சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் பிரதான மேடையில் கௌரவித்தது. கடந்த சுமார் 5 மாதங்களாக, உள்ளூர் மக்கள் உழவர்களின் போராட்டத்தைத் தன்னலமற்ற முறையில் ஆதரித்து வருகின்றனர். சிங்கூர் எல்லையைச் சுற்றியுள்ள இந்த கிராமங்கள், தொழிற்சாலைகள், காலனிகள் மற்றும் சந்தைகளின் மக்களை சம்யுக்தா கிசான் மோர்ச்சா இன்று வரவேற்று கௌரவித்தது. உள்ளூர் மக்களும் எதிர்காலத்தில் உழவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

கொரானா ஊரடங்கு, காலகட்டத்தில் அனைத்து தொழில்களும், உற்பத்திதுறையும் சரிவை சந்தித்த போதிலும் விவசாயம் மட்டும் தொய்வின்றி தொடரும்படி விவசாயிகள் பார்த்துக் கொண்டனர். உணவு, உழவர்கள் மற்றும் வேளாண்மை ஆகிய மூன்றும் அனைவரின் இன்றியமையாத தேவைகளாகும். இன்றும் நம்நாட்டில் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வேளாண்மையைச் சார்ந்துள்ளர். அப்படிப்பட்ட  சூழலில், இந்த நாட்டில்  உழவர்களையும், வேளாண்மையையும் சுரண்டும் கொள்கைகள் பலவந்தமாக திணிக்கப்படுகின்றன.

மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார மசோதா 2020 ஆகியவை ஏழை, எளிய மக்களுக்கு எதிரான மக்கள் விரோத சட்டங்கள் ஆகும். இன்று இந்தச் சட்டங்கள் நில உரிமையாளர்களுக்கும், நிலமற்ற விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகிவிட்டன. இந்தப் புதிய வடிவிலான வேளாண்மை, அதில் ஈடுபட்டுள்ள மக்களுக்குப் பெரிய ஆபத்தாகிறது. ஏனெனில் பெரிய பெரிய நிறுவனங்கள் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றுவதற்குப் பெரிய அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்தும் என்பதால், அது விவசாய மக்களின் வேலைகளை பெருமளவு பறித்துவிடும். விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் எளிய சமூகத்திலிருந்து வருபவர்கள். நிலமற்ற விவசாயிகளும் அவர்களது அமைப்புகளும் இந்த சட்டங்களை ரத்து செய்ய போராடுகின்றன.

தில்லியில் நடக்கும்  விவசாயிகள் போராட்டத்தால் நடந்த நன்மை என்னவென்றால், தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன என்பது தான்! குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தில்லி நோக்கி வரும் சாலைகள் அனைத்திலும் சுங்க சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்யமுடியாமல் பின்வாங்கிவிட்டனர். இதனால் பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என நிதின் கட்கரி புலம்பியுள்ளார்.ஆனால், மக்கள் அந்த சுரண்டல்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதே உண்மை!

சம்யுக்தா கிசான் மோச்சா (எஸ்.கே.எம்) அமைப்பின் சார்பில் ஏப்ரல், மே மாதங்களில் பல கட்ட போராட்டங்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழக விவசாயிகளும் கொரானா காலத்திலும் கணிசமாக பங்கேற்பார்கள் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழ் நாடு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொரானா கெடுபிடிகளைக் காட்டி விவசாயிகளை வீட்டுக்கு அனுப்ப முடியாது. போராட்டக் களத்தில் உயிர் துறக்கவும் தயாரான உறுதியான மன நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்ற சூழலில் அரசாங்கம் விவசாயிகளை கெடு நோக்கத்துடன் அணுகாமல், நாட்டின் நலன் கருதி, விவசாயிகளை பாதிக்கிற – கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான – சட்டங்களை முற்றிலும் விலக்கிக் கொண்டு பழைய இயல்பு நிலைக்கு நாடும், வேளாண் சமூகமும் வர உதவ வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time