மன்சூர் அலிகான் விளக்கம் கேட்டால், விலங்கு பூட்ட வருவதா?

நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்யப் போவதாக அச்சுறுத்துவதின் வாயிலாக என்ன சொல்ல வருகிறீர்கள்!

சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்காது! விலங்கு தான் பூட்டுவோம் என்கிறீர்களா…?

அவர் பேசியது விவேக் சாவிற்கு முன்பு! கோடானு கோடி மக்கள் மனதில் இருந்த ஒரு சிறிய சந்தேகப் பொறியைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமெங்கும் இதை நீங்கள் காணலாம்! தேனீர் கடை தொடங்கி தெருவீதி சந்திப்புகள் வரை மக்கள் இந்த சந்தேகத்தை தான் விவாதித்து தீர்க்கிறார்கள்!

நடிகர் விவேக்கை பொறுத்த வரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தவே ஊசி போட்டுக் கொண்டார். ஆனால், அதன் பிற்கான உடனடி மரணமோ அந்த தடுப்பூசியின் ஆபத்தை உணர்த்துவதாக எதிர்வினையாற்றிவிட்டது!

நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்…? அவர் மரணம் தொடர்பாக ஒரு மருத்துவ ஆய்வை செய்திருக்க வேண்டும். அந்த உடற் கூராய்வை திறந்த மனதுடன் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். அதை மக்களிடம் வெளிப்படுத்தி இருந்தால் அனைவருக்கும் தெளிவு கிடைக்கும்.

நடக்கக் கூடாத மரணம் நடந்துவிட்டது- ஒரு விபத்தைப் போல! அதை மூடி மறைப்பதைவிட அதிலிருந்து படிப்பினை பெறுவது தான் நாட்டிற்கும், மக்களுக்கும் பலனளிக்கும்.

அடிப்படையான சந்தேகங்களைக் கூட விளக்க முன்வராமல், அவசரமாக விளக்கம் தந்து அதை கேள்வியில்லாமல் ஏற்க வேண்டும் என்றால், நமது ஜனநாயகம் நமக்கு தந்துள்ள பேச்சு, எழுத்து சுதந்திரத்தை பறிப்பதாகவே பொருள்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை கண்காணிக்கும் கமிட்டியான AEFI எனப்படும் Adverse Events Following Immunization சொல்வது என்ன?

தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நாட்களுக்குள் எந்த ஒரு மனிதருக்கும் ஏற்படும் உடல் உபாதைகள், உடலில் தோன்றும் மாற்றங்கள் அல்லது மரணங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிறது.

இந்தியாவில் அந்த 30 நாள் என்ற கால அளவை உங்கள் செளகரியத்திற்கு 14 நாட்கள் என குறைத்துள்ளீர்கள். ஆனால், அந்த 14 நாட்களில் ஏற்படும் விளைவுகளையாவது பதிவு செய்ய முன்வருவது தானே அறிவியல்பூர்வமான மற்றும் அறம் சார்ந்த செயலாக இருக்க முடியும்.

அரசாங்கமும், அறிவியலாளர்களும் சரியாக விளக்கம் தர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு! ஆனால், அரசியல் கட்சியான பாஜகவினர் தேவையில்லாமல் எடுத்ததற்கெல்லாம் களம் கண்டால் என்ன அர்த்தம்…? அரசாங்க அதிகாரத்தை அப்பாவி மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ய தூண்டிவிடுவது முறையல்ல!

நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்திய வகையிலும், கொரோனா தொடர்பாக நடத்தப்பட்டு வரும் அதிகார அத்துமீறல்களின் மீதான வலியை வெளிப்படுத்தியதிலும் கோடிக்கணக்கான மக்கள் மன்சூர் அலிகான் பேச்சை தங்கள் குரலாகவே உணர்ந்தனர். அவர் வெளிப்படுத்திய விதம் கரடுமுரடாக இருக்கலாம். அதில் வெளிப்பட்ட பொய் கலப்பற்ற உணர்வுகள் மதிக்கதக்கவை!

ஆகவே, அவருக்கு சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களான ஆர்.ராதா கிருஷ்ணன், பா.புகழேந்தி, தீரன் திருமுருகன், எழிலரசு, நதியா உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் தலையிட்டு பிணை பெற்றது கவனத்திற்குரியதாகும். மருத்துவர்கள் பிரேமாகோபாலன், மதிவாணன் உள்ளிட்ட பலரும் கொரோனாவை அதிகார வர்க்கம் கையாளும் விதம் குறித்து எழுதி வருகின்றனர். இன்று நான் மன்சூர் அலிகான் தொடர்பாக நிறைய சமூக ஆர்வலர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும், பொது நலன் சார்ந்த இயக்கங்களோடும் தொடர்பு எடுத்து பேசினேன். இயல்பான பேச்சு சுதந்திரம் கூட அடக்கப்படுமானால், அது வீரியமிக்க மக்கள் கோபமாக வெளிப்படதா…?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

# standwithamansooralikhan

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time