கேரள அரசியலில் அதிகரித்து வரும் இந்துத்துவத்தின் தாக்கம்…!

-சாவித்திரி கண்ணன்

கேரள அரசியலில் முன் எப்போதுமில்லாத மாற்றங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. இந்த தேர்தலில் கடவுள், சாதி, மத ரீதியிலான வாக்குகளை குறிவைத்தே எல்லா கட்சிகளின் பிரச்சாரங்களும் அமைந்தன…!இது வரை காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் என்ற இருதுருவ அரசியலில் உழன்ற கேரளா.., தற்போது மூன்று துருவ முக்கோண அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது…!

மேற்குவங்கத்தில் எப்படி ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகளும்,காங்கிரசாரும் கிட்டதட்ட சம பலத்தில் இருந்தனரோ…, அதே போலத் தான் கேரளாவிலும் இதுவரையிலும் இருந்தனர். ஆனால், கேரளாவில் இந்த தேர்தல் முடிவுகள் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை உணர்த்தக் கூடும்!

கேரளா என்பது பழமை, புதுமை, புரட்சி, பிற்போக்கு, வன்முறை…என எல்லாவற்றுக்கும் சாட்சியமாகத் திகழும் பூமி.

சாதி ஆதிக்கத்தின் கோர முகத்தை பார்த்த தேசம்! ஆதி சங்கரர் தொடங்கி நாராயண குரு வரை அதன் அடையாளக் குறியீடுகளாகும். இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு அரசாங்கம் உருவான தேசம். இந்தியாவில் எங்கெல்லாம் கம்யூனிஸ்டுகள் காத்திரமாக இருந்தார்களோ.., அங்கெல்லாம் காணாமலாகி வரும் ஒரு சூழலில் இன்று வரை கம்யூனிஸ்டுகள் ஒரு அசைக்க முடியாத சக்தியாக நிலைபெற்று இருப்பது கேரளாவில் மட்டும் தான்!

அதற்கு முக்கியமான காரணம், மற்ற இடங்களில் எல்லாம் ஏழை,பணக்காரன் என்ற இரு வர்க்கத்திற்கு இடையிலான போராட்டம் தான் அரசியல் என பேசிய கம்யூனிஸ்டுகள் கேரளாவில் சமூக நீதியை காக்க களமாடியது தான்! கம்யூனிஸ்டு கட்சியிலேயே கூட முன்பெல்லாம் நம்பூதிரிகளும், நாயர்களும், மேனன்களும் தான் உயர்ந்த பதவிகளில் இருந்தனர். அந்த நிலை தற்போது மாறிவிட்டது! கள் இறக்கி வாழும் கடை நிலை சமூகமாக கருத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் பினராய் விஜயன் ஆட்சித் தலைமைக்கு அங்கு வர முடிந்தது என்றால், அந்த அரியதொரு மாற்றத்தை சாத்தியப்படுத்தியது தான் கம்யூனிஸ்டுகள் அங்கு நிலைபெற்ற சாதனையாகும்!

பினராய்விஜயன் அடிப்படையில் ஒரு களப் போராளி. கடும் உழைப்பாளி! மக்களுக்கான போராட்டங்களில் அடி,உதை, கொடும் தாக்குதல்கள்…என அனைத்தையும் எதிர் கொண்டு உரம்மிக்க தலைவராக உருவானவர் என்பதே அவரது பலம். ஆகவே, கம்யூனிஸ்டு கட்சியை அவர் கட்டுகோப்புடன் கொண்டு செலுத்துகிறார். இரண்டு முறைக்கு மேல் யாராயிருந்தாலும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பில்லை என்று உறுதியான நிலைபாடு எடுத்து, புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியில் புது ரத்தம் பாய்ச்சுகிறார். அதே சமயம் அவர் மீது வன்முறை ஆதரவாளர், ஊழலுக்கு துணை போகிறவர் என்ற குற்றசாட்டுகளும் எதிர்கட்சிகளால் வைக்கப்படுகின்றன!

கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு என்று மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது! காந்தியத்தின் வேர்கள் ஆழமாக ஊடுருவிய மண்! சாதிக் கொடுமைகளும், மதச் சண்டைகளும் மண்டிக் கிடந்த கேரளத்தில் அனைவருக்கும் பொதுவான கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்பட்டது. இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது. ஆனால், அதில் நிலவும் கட்டுப்படுத்த முடியாத கோஷ்டி பூசல்கள் தான் அது கரைந்து வருவதற்கான முக்கிய காரணமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் முக்கிய ஆளுமைகள் வெளியேறி, புதிதாக ஒரு காங்கிரஸ் கட்சி உருவாக்கிக் கொண்டு காங்கிரஸுடனே கூட்டணியும் கண்டு வருவது வாடிக்கையானதே! அப்படி பிரிந்த ஒரு காங்கிரஸ் சென்ற தேர்தலில் பாஜக அணியுடன் கூட்டணி கண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அணியிலிருந்து விலகி, கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி காண்கிறது கேரள காங்கிரஸ்(எம்).

கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் ஆதரவாளர்களில் கணிசமானோர் பாஜகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர் என்பதை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. ரமேஷ்சென்னிதாலா, உம்மண் சாண்டி என காங்கிரஸ் இரு பெரும் கோஷ்டியாகத் தான் இயங்கிவருகிறது. பி.சி.தாமஸ் என்ற தலைவர் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். ரோசாகுட்டி, லத்திகா சுபாஷ் போன்ற ஆற்றல்மிக்க பெண் தலைவர்கள் வெளியேறியுள்ளனர். கிறிஸ்துவர்களிடம் காங்கிரஸுக்கு முன்பிருந்த செல்வாக்கு தற்போது ஏனோ குறைந்து வருகிறது. கட்சியில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம், பெண்கள் பிரதிநிதித்துவம் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்ற பலமான குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் மீது வைக்கப்படுகின்றன.

இதனால், கேரளாவில் ஒரு போதும் தலையெடுக்க முடியாது என்று கருதப்பட்ட இந்துத்துவ சக்திகள் படிப்படியாக பலம் பெற்று வருகின்றனர். பத்தாண்டுகள் முன்பு அவர்களின் வாக்குவங்கி ஐந்து சதவிகிதம் தான்! ஆனால், 2016 ல் அவர்களின் வாக்கு வங்கி 15%க்கு நெருக்கமாக வளர்ந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இது இன்னும் சற்றே உயர்ந்தது. கும்மணம் ராஜசேகரன் மெல்ல,மெல்ல செல்வாக்கு பெற்று வருகிறார்.

கேரளாவில் இந்துக்கள் 55% தான்! அந்த வகையில் பார்த்தால் மொத்த இந்துக்களில் 30%மானவர்களை பாஜக வென்றெடுத்துள்ளது என தெரிகிறது. இந்த வளர்ச்சி மற்ற கட்சிகளின் அணுகுமுறைகளிலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது.

இந்துக்கள் தங்களிடமிருந்து விலகக் கூடாது என்று சபரிமலை விவகாரத்தில் எல்லா வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பளித்ததை பாஜகவிற்கு இணையாக காங்கிரஸும் எதிர்த்தது. இதனால், முதலில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று சொன்ன கம்யூனிஸ்டுகளும் பின்வாங்கியதோடு அவசரப்பட்டு அமல்படுத்திவிட்டதற்காக வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு சென்றனர். இந்த பின்வாங்கல் கட்சிக்குள்ளும்,வெளியிலும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

இது மட்டுமா? இதோ சமீபத்தில் பினராய்விஜயன் பேசியதை பாருங்கள்;

”சபரிமலை சுவாமி ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் அருள் எனக்கு இருப்பதால் வெற்றி நிச்சயம்!  மேலும் எனது அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கிறபடியால், நல்லவர்களுக்கு இறைவன் ஆதரவு அளிப்பார்.’’ எனப் பேசியுள்ளார். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் இப்படி ஒரு கம்யூனிஸ்டு தலைவர் பேசுவதை கற்பனை கூட செய்யமுடியாது. அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருந்தால் அனைத்து மக்களும் மனம் உவந்து உங்களுக்கு ஓட்டளித்துவிட்டு போகப் போகிறார்கள்! எதற்கு ஐயப்பனை இழுக்க வேண்டும்?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க் கட்சித் ரமேஷ் செனித்தலா கூறியுள்ளதைப் பார்த்தால் பாஜகவின் தாக்கம் காங்கிரஸுக்குள் எந்த அளவுக்கு எதிரொளிக்கிறது என புரிந்து கொள்ளலாம்! ”ஐயப்பன் மற்றும் அவரது பக்தர்களின் கோபத்தை நிச்சயம் இடதுசாரி அரசு எதிர்கொள்ளும்’’

”ஐயப்பன் மற்றும் அவரது பக்தர்களின் கோபத்திலிருந்து  நிச்சயம் இடதுசாரி அரசு தப்பமுடியாது!  மூன்று ஆண்டுகளுக்கு முன் பினராய்விஜயன் சபரிமலையில் செய்தவை ‘சாத்தானின் காரியங்கள்’ என பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் பேசியதிலிருந்து பெரிதாக காங்கிரஸ் வேறுபடவில்லை. இன்றைக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஐயப்பன் வேண்டியவராகிவிட்டார்!

பாஜக யாத்திரை அரசியல் செய்தால், அதையே காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் செய்கின்றனர்! ஆக, பாஜகவிற்கு போட்டியாக அவர்களின் அரசியல் பாணியை கையில் எடுத்து வருகின்றனர்..!

காங்கிரஸ் கூட்டணி 2019 தேர்தலில் வியக்கதக்க வகையில் 47.48 சதவீத ஓட்டுக்களை பெற்றது, இடதுசாரி கூட்டணி 36.29 சதவீத ஓட்டுகளை தான் பெற்றது. அதே சமயம் பாஜக கூட்டணி 15.6% வாக்குகளை பெற்றது! இது ராகுலின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி!

ஆனால் 2020 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில். இடதுசாரிக் கூட்டணி பெரும்பாலான கிராம, தொகுதி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து களையும் நகராட்சிகளையும் கைப்பற்றியது. இது ஒரு வகையில் ஆளும் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தால் தான் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும் என்ற நினைப்பாக கூட இருக்கலாம். அல்லது உள்ளூர் கம்யூனிஸ்டு தலைவர்களின் ஆளுமைகள் காரணமாயிருக்கலாம்! பொதுவாக இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் இடதுசாரி கூட்டணிக்கு தான் மீண்டும் வாய்ப்பாகும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் சொல்கின்றன! அதற்கு பினராய்விஜயன் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றியதாக பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

ஆனால், தங்க கடத்தல் விவகாரத்தில் அவர் பெயர் கணிசமாக டேமேஜ் ஆகிவிட்டது! பல விவகாரங்களில் கம்யூனிஸ்டுகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசாங்க நிர்வாகத்தில் உள்ளூர் கம்யூனிஸ்டுகளின் தலையீடு அதிகமாக உள்ளதால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறது காங்கிரஸ்!

கேரளத்தில் முஸ்லீம்கள் 26.6% உள்ளனர். கிறிஸ்துவர்கள் 18.4% உள்ளனர். இந்தியாவிலேயே கிறிஸ்த்துவர்கள் அதிகம் வாழும் மாநிலம் கேரளா தான்! ஆகவே, கேரளாவில் கிறிஸ்துவ வாக்குகளை வெல்ல, சில கிறிஸ்துவ தலைவர்களைக் கூட கைவசம் வைத்துள்ளது பாஜக! கிறிஸ்த்துவர்கள், முஸ்லீம்களை பிரநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் நிறையவே உள்ளன. அவர்களின் தயவில்லாமல் எந்த பிரதான கூட்டணியாலும் கேரளாவில் வெற்றி பெறமுடியாது!

இந்த தேர்தலில் கடவுள், சாதி, மத ரீதியிலான வாக்குகளை குறிவைத்தே எல்லா கட்சிகளின் பிரச்சாரங்களும் அமைந்தன என்பது மாறி வரும் கேரள அரசியல் போக்குகளை காட்டுவதாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் கேரளாவில் அழுத்தமாக காலூன்றி இருந்தாலும், சில பிரச்சினைகளில் அவர்கள் இரண்டுங்கெட்டானாக இருப்பது, சந்தர்ப்பவாத அரசியலை கையில் எடுப்பது ஆகியவற்றால் மக்களின் கடும் அதிருப்தியையும் பெற்றுள்ளனர். அந்த திருப்திகளை இது வரை காங்கிரஸ் அறுவடை செய்து கொண்டிருந்தது. தற்போது அதில் பாஜகவும் பங்கு பிரிக்கிறது.

கேரளாவில் காங்கிரசை காலி செய்துவிட்டு, கம்யூனிஸ்டுகளோடு மட்டும் தங்கள் அரசியலை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால், அது இந்துத்துவ சக்திகளின் சக்திகளின் வளர்ச்சிக்கு மேலும் உரமாகிவிடும். காங்கிரஸ் மேலும் பலவீனமாகிவிடும். அதனால், இரு துருவ அரசியலாக இருந்து வரும் கேரளா, மூன்று துருவ அரசியலுக்கு மாறும் நிலை உருவாகலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time