தனியார் நிறுவனங்கள் கொழுக்க மக்களின் உயிர் அடமானமா?

-சாவித்திரி கண்ணன்

கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது.

கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 தனியாருக்கு ரூ 800 முதல் 1000 ரூபாய் வரை விலை வைத்து ஒரு தனியார் நிறுவனம் விற்கிறது? இது எப்படி சாத்தியமாகிறது? ஆளுக்கு ஒரு விலை என்பது அப்பட்டமான அயோக்கியத்தனமல்லவா?

இங்கே இந்தியன் டிரக்ஸ் அண்ட் காஸ்மாட்டிக்ஸ் சட்டம், இந்திய காப்புரிமை சட்டம்,பேரிடர் மேலாண்மை சட்டம் எல்லாம் என்ன ஆனது…?

மருந்து தயாரிப்புத் துறை என்பது அரசு வசம் தான் இருக்க வேண்டும்.அப்போது தான் அனைவருக்கும் ஆரோக்கியத்தை சாத்தியப்படுத்த முடியும்.அது ஒரு போதும் தனியார்கள் கோலோச்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பது என் உறுதியான நிலைப்பாடு என்றார் ஜவகர்லால் நேரு! இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற அரசுத்துறை நிறுவனத்தை 1961 ஆம் ஆண்டு திறந்த போது அவர் பேசியது தான் மேற்படி வாசகம்! இந்த நிறுவனத்திற்கு தலைமை இடம் தவிர்த்த நான்கு கிளைகள் உருவாக்கப்பட்டது.  அந்த நிறுவனங்களில் நான்கை மோடி அரசு இழுத்து மூடிவிட்டது!

உயிர் காக்கும் மருந்துப் பொருள் தயாரிப்பில் இந்தியா சுய சார்பு நிலையை எட்ட வேண்டும். தனியார்களையோ வெளி நாடுகளையோ நம்பி இருக்க கூடாது என்பதற்காக ஐடிபிஎல்லை  சோவியத் யூனியனின் ஒத்துழைப்போடு உருவாக்கினார் நேரு. இதன் முதலாவது ஆலை ஹைதராபாதில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம், காலரா ஒழிப்பு,தொழுநோய் ஒழிப்பு, காச நோய் ஒழிப்பு ஆகியவற்றில் ஐடிபிஎல்-லின் பங்களிப்போடு தான் நாம் இமாலய சாதனைகளை நிகழ்த்தினோம்.

”காலாரா தொற்று பரவி கொத்துக் கொத்தாக அன்று மனித உயிர்கள் பலியான நேரத்தில் அதை குணப்படுத்த தேவையான டெட்ரா சைக்கிலின் தனியார் நிறுவனங்கள் ஐந்து ரூபாய்க்கு தர முன் வந்த போது அந்த செலவு அரசுக்கு கட்டுப்படியாது என்று அந்த காலத்தில் இரவு,பகலாக ஷிப்ப்டு போட்டு ஐடிபி.எல் மூலம் உற்பத்தி செய்து மக்களுக்கு தடையின்றி இலவசமாக வழங்கப்பட்டது.’’ என்கிறார், மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளர் சங்கத்தின் பாலாஜி.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சினுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு முன்பணமாக தற்போது 4,500 கோடி தரப் போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

ரெம்டெசிவர் எனப்படும் கொரானா சிகிச்சைக்கான மருந்தை சைடஸ் காடிலா’ நிறுவனம், 2,800 ரூபாய்க்கு விற்றது. அதன் பிறகு அரசு கெஞ்சி கூத்தாடியதால் அதன் விலையை  899 ரூபாயாக குறைத்தது!

இதே மருந்தை ‘டாக்டர் ரெட்டிஸ்’ நிறுவனம், 5,400 ரூபாய் விற்றது. பிறகு அதுவும், 2,700 ரூபாயாக குறைத்தது. ஏன் ஒரே மருந்தின் விலை நிறுவனத்திற்கு நிறுவனம் இவ்வளவு வித்தியாசப்படுகிறது. முதலில் ஏன் அவ்வளவு அதிக லாபத்தில் விற்கப்பட்டது..? இதற்கெல்லாம் கேள்வியே இல்லை.

இந்திய மருந்து சந்தை என்பது தனியார் நிறுவனங்களின் வேட்டைக்காடாக உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன! இவர்கள் ஆண்டு சந்தை ரூபாய் 4,50,000 கோடிகளாகும். அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐடிபிஎல்லையும், மற்ற எட்டு அரசு நிறுவனங்களில் ஆறையும் செயல் இழக்க வைத்து தனியாரிடமிருந்து அனைத்தையும் கொள்முதல் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது. இப்படி தனியாரிடம் கொள்முதல் செய்வதில் தான் கமிஷன்,கையூட்டு போன்றவை அதீதமாக நடக்க வாய்ப்புள்ளது. நடக்கவும் செய்கிறது.

இந்தக் காரணங்களால் தான் அரசு நிர்பந்திக்கும் தடுப்பூசி மருந்துகளின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதுவே, நமது  அரசாங்கத்தின் தயாரிப்பு என்றால், மக்களுக்கு மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருக்குமல்லவா…? மருத்துவத் துறையில் நமது பாரம்பரிய அறிவும், உள்ளூர் அறிவியலாளர்களும் புறக்கணிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன..?

ஆர்.டி.பிஎல் எனப்படும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்யும் ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு முன்பு இருந்தது. தற்போது அதை சிறப்பாக பயன்படுத்தலாம்!  

பி.சி.பி.எல் எனப்படும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் 1980-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சில `ஸ்வாச் பாரத்’ திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டதோடு சரி. அதை மேம்படுத்தவில்லை!

தமிழ் நாடு பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற சிறபான நிறுவனம் ஏன் செயல் இழந்து போனது. சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் 650 கோடி செலவில் vaccine park எனப்படும் டெக்கினிக்கல் பார்க் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு அது செயல்படுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கபடாததால் செயல்பாடற்று முடக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஆண்டிபாடிக் நிறுவனம் சில ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிக்கிறது.  காந்தர்டைன் கூந்தல் தைலம், அக்வா டைகோடிஸ்  ஆகிய சிறந்த சிலவற்றை மட்டும் உற்பத்தி செய்கிறது. இந்துஸ்தான் லெக்டாஸில் முன்பு எய்ட்ஸ் தடுப்புக்காக நிரோத் தயாரித்து இலவச வினியோகமெல்லாம் செய்தார்கள்!

ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துக்கு ரிஷிகேஷ் மற்றும் ஹைதராபாதில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு இரண்டு ஆலைகள் சென்னை மற்றும் முஸாபர்பூரில் இருந்தும் என்ன பயன்?

இந்நிறுவனம் தான் முதன் முதலில் இந்தியாவில் நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்தது. புனேயை அடுத்துள்ள பிம்பிரியில் உள்ள இந்நிறுவன ஆலையில்தான் பென்சிலின் தயாரிக்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது. ஐ.டிபிஎல்லுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர்  நிலங்களை விற்று  அதை முற்றிலும் அழிக்க பாஜக அரசு முயன்று வருகிறது!ஆனால், அது கடும் எதிர்ப்பால் தடுக்கப்பட்டுள்ளது.

மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் மூலப் பொருள் மிகவும்  அடிப்படையாகும். ’பல்க் டிரக்ஸ்’ எனப்படும் இத்தகைய மூலப் பொருள்கள் 90 சதவிகிதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனா தர மறுத்தால் இந்திய மருத்துவத் துறையே அழிந்துவிடும் நிலையுள்ளது. அதனால், இந்தியாவிலேயே மருந்துக்கான மூலப் பொருளை தயாரித்து, மூலப்பொருள்கள் இறக்குமதியை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக நிறுத்திவிட 2012ல் திட்டமிடப்பட்டது. இன்றளவிலும் அதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளபடவில்லை!

ஆரம்ப காலத்தில் இந்திய மருந்து சந்தையில் 70 சதவீத சந்தையை வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்திருந்தன. இது தற்போது 28 சதவீதமாகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததில் அரசு நிறுவனங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. ஆனால், அந்த அரசுத் துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காலப்போக்கில் முடக்கப்பட்டது ஏன்?

அதிகார வர்க்கத்தின் ஊதாரித்தனம், அலட்சியம், ஊழல், முறைகேடு ஆகியவற்றால் பொதுதுறை சேவை நிறுவனங்கள் நஷ்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். நஷ்டத்தைக் காரணமாக்கி, அத்தியாவசிய உயிர்காக்கும் சேவைத்துறையை முற்றிலும் முடக்கி, தனியார் நிறுவனங்கள் மனித நேயமின்றி சுரண்டுவதும், கமிஷன், கையூட்டு வளர்ப்பதும் அதைவிட கொடுமையாகும்! அரசு சேவைதுறை நிறுவனங்களை உயிர்பித்து, வெற்றிகரமாக செயல்படுத்தி,  மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time