ஜனசக்தி தொடங்கி துக்ளக் வரையிலான என் பயணம்!

- சாவித்திரி கண்ணன்

வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்!

ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…!

எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன்.

‘’பொய் சொல்லமாட்டோம், பொய் சொல்லமாட்டோம்

தப்பிதம் செய்தாலும், தண்டிக்க வந்தாலும்

பொய் சொல்ல மாட்டோம், பொய் சொல்ல மாட்டோம்.’’.

முதன் முதலில் இந்தப் பாடலில் இருந்து தான் என் வாசிப்பும், எழுத்துகளின் மீதான நேசிப்பும் ஆரம்பித்தது!

அந்த வயதில் பாடபுத்தகத்திற்கு வெளியே எனக்கு ஈர்ப்பு ஏற்படுத்தியது தினத்தந்தியில் வெளியான சிந்துபாத் தொடர். எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த சிறுபெட்டிக்கடை தாத்தாவிடம் தினத்தந்தியை ஓசியில் வாங்கி அந்த சிந்துபாத்தை மட்டும் சிலிர்ப்புடன் வாசித்துவிட்டு திரும்பத் தந்து விடுவேன்.

பள்ளியில் தமிழ் வகுப்பென்றால், எனக்கு உடலிலும், மனதிலும் மிகுந்த உற்சாகம் ஏற்படும். வடசென்னை ராயபுரம் பி.ஏ.கே.பழனிச்சாமி பள்ளியில் எங்கள் தமிழ் வாத்தியார் குணசேகரன் அவர்களை மறக்க முடியாது. குற்றாலக் குறவஞ்சி பாடலை அவர் ராகம் எடுத்து பாடிக்காட்டும் போது அப்படியொரு இனிமை, மகிழ்ச்சி கிடைக்கும்.

பள்ளியில் இருந்து நான் நடந்து வீடு வரும் வழியில் தண்டையார்பேட்டை இ.எஸ்.ஐ மருத்துவமனை எதிர்புறமாக ஒரு மிகச் சிறிய நூலகம் இருக்கும். அந்த நூலகம் 11 வயது முதலே எனக்கு ஒரு வேடந்தாங்கல்! அங்கு பத்திரிகைகளோடு கல்கண்டு இதழையும் தேடி வாசிப்பேன். அங்கே கண்ணதாசனின் ஒரு அரசியல் நாவலை முழுமையாக வாசித்தேன். வீட்டில் அப்பா வாங்கி வைத்த கண்ணதாசன் கவிதை நூல்கள் எனக்கு கிளர்ச்சியை தந்தன! மற்றொரு பக்கம் என் அம்மாவின் வாசிப்பை பார்த்து நான் வாசித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் குறித்த நூல்கள் என்னை வாழ்க்கையின் நிலையாமை குறித்த ஆய்வுக்கு கொண்டு சென்று குழம்ப வைத்தன!. உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போதே சிறுவர்களுக்கான கோகுலம் கதிர் மற்றும் குமுதம்,விகடன் ஆகியவற்றைக் கடந்து துக்ளக் போன்ற அரசியல் இதழ்களைக் கூட படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் அண்ணன் மாணிக்க சுந்தரம் டாக்டர்.மு.வரதராஜனாரின் கரித்துண்டு போன்ற கதைகளையும், எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் கட்டுரை நூலையும் கொடுத்து என் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தார். 12 வயதில் கவிதைகள் எழுதினேன்.13 வயதில் ஒரு சிறுகதை எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பினேன். பிரசுரிக்க இயலவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பினார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே எனக்குள் பத்திரிகை ஆசிரியராகும் எண்ணம் விதையாக விழுந்தது. ப்ளஸ் டூ முடித்த பிறகு அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குள் இருந்த ஒரு நூலகத்தில் என் மூத்த சகோதரி மணிமேகலையின் தோழியான உமா அக்கா அவர்களின் கருணையால் அங்கிருந்த அனைத்து ஜெயகாந்தன் நூல்களையும் வெறியோடு வாசித்தேன். அதன் பிறகு அயனாவரம் சர்க்கிள் லைப்ரரியில் என்னுடைய பெரும்பகுதி நாட்கள் கழிந்தன. எத்தனை, எத்தனையோ புத்தகங்கள் சரத் சந்திரர், பக்கிம் சந்திரர், பிரேம் சந்த், பெரியார்..எல்லோரும் எனக்குள் நெருக்கமானார்கள். அதே போல அன்றைக்கு மலிவு விலையில் ரஷ்ய இலக்கியங்களை நியூசென்சூரி புத்தக நிறுவனம் வெளியிட்டதால் மக்சிம் கார்க்கியின் தாய் உள்ளிட்ட ஏராளமான படைப்புகள், இவான் துர்க்கனேவ் போன்றவர்களின் படைப்புகள் என்னை வெகுவாக ஈர்த்தன!

இந்த வாசிப்பு தந்த தன்நம்பிக்கை என்னை கல்லூரிக்குள் கால் வைக்காமல் தடுத்துவிட்டன. என் எதிர்காலம் என்னவென்றே தெரியாமல் எப்போதும் ஏதாவது ஒரு வாசிப்பிலேயே நான் மூழ்கி திளைத்தேன். பொருளாதாரம், வருமானம் ஆகியவை தொடர்பான சிந்தனைகள் அறவே இல்லாதவனாக இருந்தேன்! என் தொடர்புகள் எல்லாமே அன்று இடதுசாரி தோழர்களோடு தான் பெரும்பாலும் அமைந்தன!

இந்த நிலையில் மறைந்துவிட்ட என் அண்ணன் வைத்துவிட்டு சென்ற யாசிகா 120 பிலிம் ரோல் கேமராவில் போட்டோ எடுக்க கற்றேன். அதில் மக்கள் பிரச்சினைகள், கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் போராட்டங்கள் ஆகியவற்றை படம் பிடித்து ஜனசக்தியில் கொடுத்தேன். அப்படியே 1985 ல் ஜனசக்தியில் எழுதவும் ஆரம்பித்தேன். அங்கு மார்க்சிய அறிஞர் ஆர்.கே.கண்ணன், தோழர்.மு.பழனியப்பன்,சோலை, ரகு, டி.எஸ்.ரவீந்திரதாஸ் ஆகியோர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது! பிறகு குங்குமம், முத்தாரம் ஆகியவற்றிலும் எழுதினேன்.

பிறகு நான் பரபரப்பாக இயங்கிய காலங்களில் என்னை அதிகம் பயன்படுத்திக் கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தீக்கதிருமே! அந்த காலகட்டத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் நான் தான் புகைப்படங்கள் எடுத்து தந்து கொண்டிருந்தேன்.

இதில் விசிட்டர் அனந்து அவர்கள் நடத்திய விசிட்டர் இதழில் சமூக, அரசியல் கட்டுரைகள் எழுதியது மகிழ்ச்சியான அனுபவம்! ஒரு புகைப்படக்காரரின் பார்வையிலே என தனியாக தொடர் கூட அதில் எழுதினேன். கைதறி நெசவாளர்கள் பிரச்சினைகளை எழுதினேன்.

சுபா நியூஸ் போட்டோ ஏஜென்சியில் சுமார் இரண்டாண்டுகள் போட்டோகிராபராக வேலைபார்த்தேன். அதன் பிறகு நானே சுயமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சுமார் ஐம்பது பத்திரிகைகளுக்கு போட்டோ எடுத்து தரும் பிரிலேன்சராக இயங்கினேன். இந்தியா டுடே, இல்லஸ்டிரேட் வீக்லீ, தி வீக், சண்டே, ஸ்டேட்ஸ்மென், நியூஸ்டைம், அசைட், சணடே மெயில், மலையாள மனோரமா, ஈநாடு..போன்ற பல வெளி மாநில பத்திரிகைகளுக்கு வேலை செய்தேன். தமிழில் குமுதம் ,நக்கீரன், தராசு, ஜீனியர்விகடன், துக்ளக் ஆகிய பத்திரிகைகளும் அடக்கம்! அந்த காலத்தில் இந்தியாவில் எங்கு எந்த பெட்டிக்கடையில் தொங்கும் பத்திரிகைகளில் ஒன்றிரண்டிலாவது என் பெயருடன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும்.

நக்கீரன், தாராசுவில் ஒரு சில கட்டுரைகள் எழுதினேன். நக்கீரனில் என்னுடைய பங்களிப்பு சற்றுக் கூடுதல் என்று சொல்வேன். நான் எடுத்த படங்கள் அதிகமாக அட்டைபடமாக வந்தது நக்கீரனில் தான்! குமுதத்தில் அவ்வப்போது எழுதினேன். படங்கள் தான் அதிகம் தருவேன். துக்ளக்கில் போட்டோக்கள் மட்டுமே தருவேன். எழுதவில்லை. அப்போது சோ அவர்களுடன் பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டபோது பெரியாரின் மிகப் பெரிய கட்டுரை தொகுப்பு ஒன்றையும், ராகுல்சாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலையும் தந்து இவற்றை நீங்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஓகோ என்று இருந்த என் பிரிலேன்சர் போட்டோகிராபர் தொழிலைவிட்டுவிட்டு நான் தீடீரென்று லயோலா கல்லூரியில் சேர்ந்து வரலாறு இளங்கலை வகுப்பில் சேர்ந்தேன். படித்து முடித்த பிறகு வெளியே வந்து மீண்டும் பிரிலேன்சர் போட்டோகிராபியோடு சற்று அட்வர்டைசஸ்மெண்ட் போட்டோவும் எடுத்தேன். ஆனால், எழுத வேண்டும் என்ற என் தாகம் நிறைவேறாமலே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் பிடிவாதமே! நான் விரும்பி எழுதி தரும் கட்டுரைகளை போடும் பத்திரிகைகளோடு மட்டுமே நான் தொடர்ந்து இயங்க முடியும் என்பதாக என் குணாம்சம் இருந்தது. என்னைப் புரிந்து கொண்டு நீ எதை எழுதி தந்தாலும் போடுகிறேன் என்பதாக விசிட்டர் பத்திரிகை மட்டுமே இருந்தது. அது நின்றவுடன் என்னால் வேறு எங்கும் தொடர்ந்து எழுதமுடியவில்லை.

இந்த நிலையில் தான் துக்ளக்கில் ஒரு சம்பவம் பற்றி கட்டுரை எழுதி துணை ஆசிரியர் மதலையிடம் தந்தேன். அந்தக் கட்டுரை அப்படியே பிரசுரமானது. பிறகு அவ்வப்போது தோன்றும் போதெல்லாம் எழுதித் தந்தேன். எல்லாமே போட்டனர். ஒரு நாள் ஆசிரியர் சோ என்னை அழைத்துப் பேசி, ‘’தொடர்ந்து நீங்கள் தாரளமாக எழுதலாம்’’ என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ”சார், உங்க கருத்துகளோடு என்னால் பெருமளவு ஒத்துப் போக முடியவில்லை…எப்படி தொடர்ந்து எழுதச் சொல்கிறீர்கள்’’ என்றேன்.

‘’என் கருத்துகளை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன…? அவங்கவங்களுக்கு ஒரு கருத்து, ஒருவித அனுமானங்கள் இருக்கலாம்..உங்களுக்கு கொஞ்சம் கம்யூனிச ஆர்வம் தெரியறது. அது இளம் வயதுல பலருக்கும் வருவது தான். ஆனா.., நிங்க எழுதறதெல்லாம் எளியமக்களின் பிரச்சினைகள், சமூக அவலங்கள் ஆகியவற்றை ஒரு தேடுதலுடன் ஹூயுமன் இண்டரஸ்டோட எழுதறீங்க..அது தான் ஜர்னலிசத்துக்கு முக்கியம். இப்படி எழுதவறங்க இன்னைக்கு ரொம்ப குறைச்சல்..அதனால.. நீங்க எந்த தயக்கமும் இல்லாமல் எழுதுங்க..’’ என்றார். இப்படித்தான் துக்ளக்கில் என் எழுத்துப் பயணம் தொடங்கியது! ஆனால், அப்போது ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக வெகு பரபரப்புடன் இயங்கிய நான் சம்பாத்தியற்காக எழுத ஆரம்பிக்கவில்லை. எனக்கு ஒரு ஆத்ம திருப்தி அமைந்தது..அவ்வளவே!

நான் துக்ளக்கில் எழுதி வந்த காலகட்டத்தில் அடிக்கடி திராவிட இயக்க எழுத்தாளர் சின்னக் குத்தூசியை சந்தித்து மணிக்கணக்கில் அளவளாவுவேன். அவர் மூலமாக என் வாசிப்பு அனுபவங்கள் மேலும் வளர்ந்தது. உ.வே.சாவின் சுயசரிதை தொடங்கி சுந்தர ராமசாமியின் கதைகள் வரை அவரது தொடர்பினால் தான் வாசித்து புதுப்புது அனுபவங்களைப் பெற்றேன். அத்துடன் துக்ளக்கில் நான் புத்தக விமர்சனமும் எழுதினேன். அப்போது அங்கு வரும் புத்தகங்களைக் கொண்டு ஒரு நூலகம் மாதிரி புத்தகங்களை அலுவலகத்தில் சேகரித்து வைத்தேன். அங்கு வரும் சிற்றிதழ்கள் தொடங்கி பலவற்றை நேரம் போவது தெரியாமல் இரவு பத்து மணி வரை கூட வாசித்துவிட்டு கடைசி ஆளாக அலுவலகத்தை விட்டு வெளியே  வருவேன்! புத்தக வாசிப்புகள் எப்போதுமே என்னை புத்தாக்கம் செய்வதாகவே அமைகின்றது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time