கொரோனாவின் தாக்கம் வீரியம் அடைந்து வரும் இந்த வேளையில், பெருநகரங்களின் ரயில் நிலையங்கள் புலம் பெயர் தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. கடந்த ஆண்டை போல் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் சொந்த ஊர் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற பதட்டமும் அச்சமும் தொற்றியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன..?
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை செய்யும் இடங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது . ஆனாலும், அவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
கடந்த 2020 மார்ச் 24ஆம் தேதி நான்கு மணி நேர அவகாசத்தில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அதிகபட்ச துன்பத்திற்கு ஆளானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் தான்!
மார்ச் 25 முதல் மே 1 வரை தங்களுடைய வேலையை இழந்து ,வருமானம் இன்றி, சேமிப்புகள் கரைந்து, உணவு ,தங்குமிடம் எதுவுமில்லாமல் ,மருத்துவ வசதிகள் இன்றி சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தும் இல்லாத நிலையில் நிற்கதியாக நின்றார்கள் .
தங்களுடைய குழந்தைகளையும், உடமைகளையும் தோலில் சுமந்து கால்நடையாகவே ஆயிரம் மைல்களை கடந்து தங்களுடைய ஊர் போய் சேர்ந்தார்கள்.
ஆனால் அடுத்த 68 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சிக்கல்கள், ஒரு செயல்படக்கூடிய புலம்பெயர் தொழிலாளர் கொள்கை வகுக்க வேண்டுமென்றால் அவர்களைப்பற்றிய நம்பகத்திற்குறிய தகவல் தளம் முக்கியம் என்பதை உணர்த்தியது .
இறுதியாக 2007-08 தான் நேஷனல் சாம்பிள் சர்வே ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி 29% பேர் புலம்பெயர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது .அதன் பிறகு 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு சில தகவல்கள் மட்டுமே வெளியானது .பதிவுத் துறை அலுவலகம் அந்த தரவுகளை வெளியிட தடை விதித்திருக்கிறது .
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நலத் திட்டங்களை வகுப்பது , அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குவது ஆகியவற்றில் சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் நம்பத்தகுந்த தரவுகள் இல்லாததும், புலம்பெயர்ந்தவர்களின் பதிவுகள் இல்லாததும் தான்.
அதன்பிறகுதான் மத்திய அரசு தேசிய அளவில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஒரு தரவுத் தளத்தை உருவாக்குவது என முடிவு செய்தது .
செப்டம்பர் 2020இல் அறிவிக்கப்பட்டு ஜூன் 2021 இல் அறிக்கை சமர்ப்பிப்பது என்ற அந்த திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது அரசின் அக்கரையின்மையை காட்டுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO) 2020 டிசம்பர் அறிக்கையின்படி உள்ளூர் அளவிலும், மண்டலஅளவிலும் , அல்லது தேசிய அளவிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்புகளோ, அங்கீகரிப்போ இதுவரையில் நடத்தப்படவில்லை என்று சொல்கிறது .
டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்ட பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தேசிய அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வளவு பேர்ஊர் திரும்பினார்கள், அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து எந்த மாநிலத்திற்கு வந்தார்கள், அவர்கள் முன்பு செய்து வந்த வேலை, அவர்களுடைய திறமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தகவல் தளத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது .
அதேபோல் நிதி ஆயோக் தன்னுடைய 2017 முதல் கொள்கை வரைவில், தரமான தகவல் தளத்தை உருவாக்குவதற்கான தேவையை வலியுறுத்தி பரிந்துரைத்துள்ளது .
அடிக்கடி இடம் மாறுவதால் ஒரு தரமான தகவல் தளத்தை உருவாக்குவது சவாலான காரியமாகும் .
முதலாளிகளும் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை பதிவு செய்தால் இந்த காரியம் எளிதாகும். ஆனால், பெரும்பாலும் பதிவு செய்யப்படாத முறைசாரா வேலைகளிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் .
ஊரடங்கின்போது சுமார் ஒரு கோடியே 14 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள்! .அவர்கள் பசியாலும், ,பட்டினியாலும், மருத்துவ வசதியின்மையால் நோய்வாய்ப்படும், அசதியாலும் வழியிலேயே இறந்து போனவர்கள் 971 பேர் .இதில் 96 பேர் ரயிலில் பயணம் சென்றவர்கள் என்பது பத்திரிகை செய்திகளில் தெரிய வந்தது. இவர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. இவர்களுக்காக பிரதமர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.
ஆனால், எவ்வளவு தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது இறந்துபோனார்கள் என்பதோ,
ஊரடங்கு காரணமாக எவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்
என்ற தகவலும் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது .
ஐந்து மாதங்கள் கழித்து சொந்த ஊரில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தாங்கள் வேலை பார்த்த மாநிலங்களுக்கு திரும்ப தொடங்கினார்கள். இந்த சமயத்தில்தான் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்திக்க தொடங்கியது.
ஒரு நாளைக்கு 150 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஏழைகளின் எண்ணிக்கை 7 கோடி 50 லட்சத்தை தொட்டது .சுமார் 12 கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் .
இந்த காலகட்டத்தில் தான் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலை, சம்பளம்,இருப்பிடம், சமூக பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான பயன்கள் போன்ற அம்சங்கள் பற்றி பலரும் விவாதிக்க தொடங்கினார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய நம்பகத்தன்மையுடன் கூடிய தகவல் தளத்தை உருவாக்குவது, வேலைவாய்ப்புகளை பெருக்குவது, புதிய மற்றும் பழைய சட்டங்களை சீரிய முறையில் நடைமுறைப்படுத்துவது மட்டும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்று தொழிலாளர் துறை ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.
மத்திய அரசின் இலவச 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டம் மற்றும் ஆத்ம நிற்பார் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட “கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம் ( இது 6 மாநிலங்களில் மொத்தம் 116 மாவட்டங்களில் 25 தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் உள் கடமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குவது )போன்ற எல்லாத் திட்டங்களும் இடைக்கால நிவாரணங்கள் மட்டுமே! நீண்ட கால பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையவில்லை .
பாதுகாப்பில்லாத சட்டங்கள் ;புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் ,
ஊரடங்கு அவர்களின் நிச்சயமற்ற நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மத்திய அரசு புதிதாக தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்களுக்காக 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் 44 மத்திய சட்டங்களை சுருக்கி 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றியமைத்ததில் எந்த பலனும் ஏற்படவில்லை .
தற்பொழுது இந்த சட்டம் ஆக்குபேஷனல் சேப்டி , ஹெல்த் அண்டு ஒர்க்கிங் கண்டிஷன்ஸ்(OSH) 2020 என்ற தொகுப்பு சட்டத்தின் கீழ்வருகிறது, அதன்படி 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கும், சுய வேலைவாய்ப்பு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். இதனால் பத்துக்கும் குறைவானவர்கள் வேலை செய்யும் சிறு, குறுநிறுவனங்கள் இந்த சட்டத்தின் வரையறைக்குள் வராது என்பது வேதனை.இந்த தொகுப்பு சட்டங்கள் ஏற்கனவே தொழிலாளர்கள் அனுபவித்துவரும் பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் பறிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது.
மற்றொரு முக்கியமான சட்டம், Building and Other Construction Workers Act,1996 (BOCWA)
இதன்படி எல்லா மாநிலங்களும் கட்டிடத் தொழிலாளர்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு நல வாரியத்தை உருவாக்கி தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் .
உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கும் இந்த துறை அதிகபட்சமாக 5.5 கோடி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டிட மதிப்பீட்டில் ஒரு சதவீத அளவுக்கு செஸ் வசூல் செய்து மாநிலங்கள் மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியிலிருந்து ஊரடங்கு காலத்தில் மட்டும் மாநிலங்கள் சுமார் 5,000 கோடி ரூபாய் நிவாரணமாக 1.83 கோடி மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது .
ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த பயன்கள் எதுவும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. காரணம் நல வாரியத்தில் பதிவு செய்வது, வருடா வருடம் புதுப்பிப்பது போன்ற சிக்கல்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் எவரும் நல வாரிய உறுப்பினர்களாக இல்லை.
ஆகஸ்ட் 2020 இல் சுமார் 84 சதவீதம் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு ரூ 750 லிருந்து ரூ 1,500 வரை சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3.2 கோடியாக ஆக குறைந்துள்ளது.
யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் ஆகிய அமைப்புகள் 2013 ஆண்டே, இந்தியா உடனடியாக இடம்பெயர் தொழிலாளர்களுக்காக ஓர் உள்நாட்டு நிர்வாக முறைமையை உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது .
இந்த அமைப்பு பிரத்யேகமாக நிறுவனமாகவும் சட்ட வரைவுகளும், தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகவும் , நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் நடைமுறைகளும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது .ஆனால் அந்த பரிந்துரைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
தாராளமயக் கொள்கை அமல்படுத்தப்பட்ட 1991 க்கு பிறகு கடந்த 22 ஆண்டுகளில் 6.1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது அதில் 92% முறைசாரா துறைகள் .
பெரும்பாலான தொழிலாளர்கள் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், ச்சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தில்லி, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வேலைக்கு வருகின்றனர்.
இங்கு இவர்கள் மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஆபத்து அதிகம் உள்ள துறைகளான கட்டுமானம், கனரக தொழிற்சாலைகள், போக்குவரத்து துறை, சேவைத் துறை, மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வேலை செய்கின்றனர் .
இவர்களுக்கு சமூக பாதுகாப்பு,மருத்துவ சேவை, கல்வி வசதி, இருப்பிடம், சுகாதாரம், உணவு, குடிதண்ணீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை. பெரும்பாலானவர்கள் சுகாதாரமற்ற குடிசைப் பகுதிகளில் தான் வசிக்கிறார்கள்.
68 சதவீதம் பெண்களுக்கு கழிப்பிட வசதிகள் கூட இல்லை என்பது வேதனையான விஷயம்!
தில்லியை தவிர மற்ற மாநிலங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லை
தில்லியில் மொஹல்லா கிளினிக்குகள் செயல்படுகிறது.
குறிப்பாக பெண் தொழிலாளர்கள் ஊட்டச்சத்து குறைபாடு,மகப்பேறு மருத்துவ குறைபாடு,
நச்சுக்காற்று உற்பத்தியாகும் இடங்களில் வேலை செய்வதால் ஆஸ்துமா, கேன்சர் மற்றும் குழந்தைப்பேறு இன்மை ஆகிய பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கட்டுமானத் துறையில் நடக்கும் விபத்து, தற்கொலை, வயிறு மற்றும் இருதய நோய் பிரச்சனைகளால் தில்லியில் 43 பேரும் குஜராத்தில் 35 பேரும் ஹரியானாவில் 41 பேரும் மகாராஷ்டிராவில் 38 பேரும் இறந்து போகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது !
இறந்து போனவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்ல முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் எந்த ஏற்பாடும் செய்வதில்லை .
உள்ளூர் மக்கள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களை வெளியாட்கள் ஆக பாவித்து பாகுபாட்டுடன் நடத்துகிறார்கள் என்றால் வேலை கொடுக்கும் முதலாளிகளும் சம்பளம் மற்றும் இருப்பிட வசதி வழங்குவதில் உள்ளுர் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களின் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க இதுவரை மாநில அளவிலோ இந்திய அளவிலோ எந்தவிதமான நிர்வாக அமைப்பும் ஏற்பாடுகளும் இல்லை என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்.
Also read
மத்திய ,மாநில அரசுகளின் புலம்பெயர் கொள்கை கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் ;
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வகுக்க வேண்டும்.
வேலை செய்வதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பை வேலை வழங்கும் முதலாளிகள் உருவாக்க வேண்டும் .
தொழிலாளர் நல சட்டங்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் துயர் துடைக்கும் வகையில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் .
தேவையான உள்கட்டமைப்பு களையும், மூலதனங்களையும் உருவாக்குவதை மையமாக வைத்து கொள்கை சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்;
சுப்பிரமணி ஆறுமுகம்
தேசிய தலைவர்
இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (FITU)
தொடரும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம்..!
-சுப்பிரமணி ஆறுமுகம் (FITU) – அனைவரும் அவசியம் படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Aram Online