The CEO – கார்ப்பரேட் உலகில் காணாமல் போகும் மனிதம்!

- பீட்டர் துரைராஜ்

The CEO – ஆப்பிரிக்க ஆங்கிலப் படம்! பணமும்,அதிகாரமும் கோலோச்சுகின்ற இடத்தில் மனிதம் காணமலடிக்கப்படுவதை இப்படம் கச்சிதமாக காட்சிப்படுத்துகிறது! மனிதம் மரணிக்கும் தருணங்களை திரைக்கதை நுட்பமாக விவரிக்கிறது..!

” நீயும்தான் இந்த கம்பெனியின் உயர்பதவியில் இருக்கிறாய். நீ எப்படி இந்த நிலைக்கு உயர்ந்தாய் என யாரும் கேட்பதில்லை. பெண் என்பதால்தானே என்னைச் சுற்றி கதைவருகிறது ” என்பது  ‘The CEO’ என்ற நைஜீரியா படத்தில் வரும் வசனம்.

குன்லே அபோலயன் ( Kunle Afolayan)  இயக்கியுள்ள திருப்பங்கள் நிறைந்த, விறுவிறுப்பான திரைப்படம் இது. ஒரு பன்னாட்டு நிறுவனம், ஐவரில் இருந்து ஒருவரை தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுப்பதுதான் கதை. நெட்பிளிக்சில் ஓடுகிறது.

The CEO என்ற ஆப்பிரிக்க திரைப்படம்,  வித்தியாசமான கதையைக்  களனாகக் கொண்டுள்ளது. மனித வளம்,  மேலாண்மையில்  ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள்.

பாரீசைத் தலைமையிடமாகக் கொண்ட,  transwire என்ற பன்னாட்டு நிறுவனம்,  கண்டத்திற்கு ஒரு தலைமை நிர்வாகியை (CEO) தேர்த்தெடுக்க விரும்புகிறது. ஒரு இலட்சம் பேர் பணி புரியும், பரந்துபட்ட சந்தை வாய்ப்புள்ள, போட்டியாளர்களைக் கொண்ட  தகவல் தொடர்பு நிறுவனம் அது.

அந்த  நிறுவனத்தின் உயர்மட்ட பொறுப்பில் இருக்கும் ஐந்து பேர் நைஜீரியா நாட்டின் ஒரு கடற்கரை விடுதியில் ஒன்று கூடுகிறார்கள். சந்தை, நிதி, தணிக்கை என ஒவ்வொருவரும் அந்த நிறுவனத்தின் பல்வேறு  துறைகளில் பணிபுரிபவர்கள். ஐவரில் இருந்து ஒருவருக்கு, பதவி உயர்வு கொடுக்க நிர்வாகம் விரும்புகிறது.

இவர்களில் ஒருவர் இரண்டாம் நாள் காலையில்   கடலில் மூழ்கி இறந்துவிடுகிறார். அது கொலையா, தற்கொலையா எனத் தெரியவில்லை. அவரது செயல்பாட்டை நிறுவனம் தணிக்கை செய்து cover up செய்கிறது. மேலாண்மை மொழியில் சொல்லுவதானால் PR management. அடுத்ததாக   யாஸ்மீன் என்ற பெண்மணி தற்கொலை செய்துகொள்கிறார். இவர் மீது அந்நாட்டு அரசு, நிறுவன   இணைப்பு & ஒன்றிணைப்பு தொடர்பாக ஏற்கனவே விசாரித்து வருகிறது.(அதனால் அவளுக்கு சிறைத் தண்டனை கிடைக்கலாம்).

இறந்து போனாலும் அமர்வு தொடர்ந்து நடக்கிறது.  நிறுவனத்தின் ஆலோசகரான, டாக்டர் ஜிம்மர்மென் என்ற பெண்மணி (Anjeliq Kidoja) அமர்வை தொடர்ந்து நடத்திச் செல்கிறார். அவருக்கு பங்கேற்பாளர்களின் மன உணர்வு முக்கியமில்லை. கறாக, மேலாண்மை விதிகளை பேசுகிறார். பல முக்கியமான கருதுகோள்கள் (collective responsibly, ethics, loyalty, conflict of interest போன்றவை) அவர்களிடையே விவாதிக்கப்படுகின்றன. அது உண்மையில்  விவாதிக்கப்படுகிறதா,  அல்லது தங்களது பலவீனங்களை  நிர்வாகம் கண்டுகொண்டு அந்த ஆலோசகர் மூலம் பேச வைக்கிறதா என அவர்களுக்குத் தெரியவில்லை.

தங்களைப் பற்றி தெரிந்து கொண்டு,  அவர்களாகவே போட்டியில் இருந்து விலகும்படி அந்த அமர்வு வடிவமைக்கப் பட்டுள்ளதாக ஆலோசகர் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் musical chair விளையாட்டு நடக்கிறது. அதில் தோற்பவர்கள்  ஒவ்வொருவராக போட்டியிலிருந்து விலக நேரிடுகிறது.

இறுதியில் யார் வெல்கிறார் என்பது கதை. நைஜீரியாவில் நடக்கும் ஆங்கிலத் திரைப்படம் இது. இதில் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ளார்கள். அவர்களின் பெயரை தமிழில் எழுதுவது சிரமம். ஒவ்வொருவரும் தங்கள் பதவிக்கேற்ற உடல்மொழி,  வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சொல்லுவதில் எது சரி, எது தவறு சொல்லுவது முடியாது. ஆனாலும் விவாதம் நடக்கிறது. 1.45 மணி நேரமும் கதை தொய்வில்லாம் செல்கிறது. கதை Tunde Babalola.

இறுதியில் மிஞ்சியிருக்கும் கோலா அலாபியிடம் ( Wale Oja) நடந்த மூன்று இறப்புகளுக்காக விசாரணை நடக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த அமர்வை நடத்துபவர் மீதே சந்தேகம் வருகிறது.

2016 ல் இந்தப் படம் வெளிவந்துள்ளது. வித்தியாசமான கதை, நல்ல திரைக் கதை. யோசிக்க வைக்கும் வசனங்கள். கணவனுக்கு தெரியாமல் வேறொருவனுடன் உறவு வைத்துள்ளவளிடம், கம்பெனி நிர்வாகத்தை ஒப்படைக்கலாமா என்று கேள்வி கேட்கிறாள். இரண்டுமே நம்பிக்கை யோடு (Trust) தொடர்புடையதா இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வியால்  வெகுண்டெழுந்து ஒருத்தி வெளியேறுகிறாள்.

ஒரு பெரும் நிறுவனத்தில் எழும் பல்வேறு  சிக்கல்கள், அதில் நிர்வாகிகள் எதுவரை பொறுப்பேற்க வேண்டும், அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கும் கையூட்டில் ஒருவன் நிலை எத்தகையது என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த ஆங்கிலப்படத்தை அதன் கதைக்காக, இயக்கத்திற்காக, பேசு பொருளுக்காக, விறுவிறுப்புக்காக, திரை மொழிக்காக பார்கலாம். இரண்டாம் முறை பார்த்தபோதும் நான் சரியாக புரிந்து கொண்டேனா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. இத்தகைய படங்கள் ஆப்பிரிக்க நாடு குறித்த நமது பிம்பத்தை மாற்றக்கூடும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time