கொரோனாவை விடக் கொடிய ஆட்சியாளர்கள்…!

-சாவித்திரி கண்ணன்

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன..! ஆக்சிஜன் பற்றாகுறையாலும், ஆளுமை பற்றாகுறையாலும் கொத்து, கொத்தாக மரணங்கள்…! முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், மக்களின் உயிர்பாதுகாப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு.., அயோத்தி, காசி, மதுரா..என்று ஒவ்வொரு அஜெண்டாவையும் அரங்கேற்றிச் செல்கிறது பாஜக அரசு..!

இந்த ஓராண்டு கால அவகாசத்தில் பேரிடர் கால நிர்வாகத்திற்கான அனுபவத்தையோ, அறிவையோ ஏன் பெறவில்லை என்று பலர் கேட்கிறார்கள்! அதில் விருப்பமில்லாத அரசுக்கு எத்தனை ஆண்டு அவகாசம் தந்தாலும், எத்தனை பெருந்தொற்று வந்து எத்தனை பேர் மடிந்தாலும் அது எதையும் கற்காது!

காலரா, காச நோய் போன்றவை ஏற்பட்ட காலங்களில் அன்றைய வசதிகள் குறைந்த அரசாங்கம் தனியாரை இஷ்டத்திற்கு கொள்ளையடிக்க அனுமதிக்கவில்லை. சந்தைக்கேற்ப சுரண்டிக் கொள் என மக்கள் உயிரை விலைபேசவில்லை. மருந்து தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களைத் தான் முற்றிலும் பயன்படுத்தியது. இதன் மூலம் தரமான மருந்துகள் மக்களுக்கு விலையின்றி தரப்பட்டு விலை மதிப்பில்லா உயிர்களின் இழப்புகள் குறைக்கப்பட்டன.

இன்றைய அரசாங்கமோ சில தனி வியாபாரிகளால் வழி நடத்தப்படும் அரசாங்கமாகவுள்ளது. பாரத் பயோடெக்கும், சீரம் நிறுவனமும் தயாரிப்பதை அரசுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்லோ, ஹெச்.எல்.எல்.பயோடெக்கோ தயாரிக்க முடியாதா? 135 கோடி மக்களின் உயிர்கள் இரு தனியார் நிறுவனங்களை சார்ந்து மட்டுமே இருப்பது எவ்வளவு அவலம்! பெருந்தொற்று காலத்தை தனியார்கள் பணம் பார்த்துக் கொள்ளுவதற்கு வழிவகை செய்வதை என்னென்பது?

சுமார் 60 ஆண்டுகால மருந்து தயாரிப்பு அனுபவங்கள் நமது பொதுதுறைக்கு உள்ளதே! இந்த காலகட்டத்தில் செயல் இழக்க வைக்கப்பட்டிருக்கும் அவற்றுக்கு உயிர்ப்பு தந்தால் பல ஆயிரம் கோடிப் பணம் மிச்சமாகும் என்பது மட்டுமல்ல, கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பகத்தன்மையும் ஏற்படும்.

கொரானா சிகிச்சைக்கு ஆக்சிஜன் அவசியம் என்பது அடிப்படை அறிவுள்ள பாமரனுக்கும் புரிந்த உண்மை! ஆனால், அரசாங்கத்திற்கு புரியவில்லையே..என பலர் ஆதங்கப்படுகிறார்கள். அவர்களுக்கு புரியும்! ஆனால், அவர்களின் நோக்கம் இந்த கொரானா பெருந்தொற்று நேரத்திலும் அயோத்தி இராமர் கோவிலுக்கான பூஜை போட்டு அடித்தள வேலைகளை தீவிரப்படுத்துவதில் தான் போனது. மற்றொரு பக்கம் இங்குள்ள கார்ப்பரேட் சாமியார் ஜக்கிவாசுதேவை தூண்டிவிட்டு கோவில் அபகரிப்பு இயக்கம் நடத்துவதற்கு தான் அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ‘இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் மம்தா பானர்ஜியின் காலை ஒடித்தது போல கையையும் ஒடித்து முடித்திருக்கலாமே…’. என்று தான் அவர்கள் புத்தி போகிறது…!

பெருந்தொற்றோடு போராடும் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியிலும் ஈடுபடவில்லை. இருக்கிற ஆக்சிஜனை பாதுகாப்பாக ஸ்டோரேஜில் எடுத்து வைக்கவுவில்லை. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். யார் எங்களை கேட்க முடியும்..? என்ற அராஜக போக்கு! மக்களை எல்லா நேரங்களிலும், பதற்றத்திலும், துயரத்திலும், நெருக்கடிகளிலும் வைத்திருந்தால் தான் தங்கள் ஹிட்டன் அஜெண்டாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்! வாரணாசியில் உள்ள ஹியான்வாபி மசூதி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமானது. ஆகவே, அதை தகர்க்க வேண்டும் என்ற மனுவுக்கு உயிர் கொடுக்கப்பட்டு அகழ்வாராய்ச்சித் துறை ஆராய்சிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மாவட்ட நீதிமன்றம். அதே போல மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியை தகர்த்து அங்கேயுள்ள கிருஷ்ணன் கோவிலை விரிவுபடுத்தும் முயற்சி உச்ச நீதிமன்றத்தில் உயிர்பெற்றுள்ளது.

தினமலர் வரிந்து கட்டிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க களம் காண்கிறது. அந்த ஆலையால் சுற்றுசூழலுக்கே பாதிப்பு இல்லையாம்.அதற்கு அங்கு வேலை பார்ப்பவர்கள் யாருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதைவிட முட்டாள் தனமாக வாதம் செய்ய முடியாது. ஒரு இருட்டு அறையில் குத்துவிளக்கு ஏற்றுகிறோம். அறை முழுவதும் வெளிச்சம் பாய்கிறது. ஆனால் விளக்கின் கீழ் நிழல் தான் இருக்கிறது. விளக்கின் கீழேயே இருட்டாக நிழல்விழுகிறது…அந்த விளக்கால் அறையே வெளிச்சம் பெறுகிறது என்று சொல்வதை எப்படி ஏற்பது..?’ என வாதம் வைப்பது போலத் தான் இதுவும். ஓட்டுமொத்த தூத்துகுடி நகரமும், சுற்றுப்புறமும் வாழ்பவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தும் போராடி எதிர்க்கிறார்கள் என்றால், அது எவ்வளவோ பாதிப்புகளை பார்த்துவிட்ட அவர்களின் சொந்த அனுபவத்தால் உண்டான எதிர்வினையே!

ஒரு பெருந்தொற்று காலகட்டத்தில் இதைவிடக் கேவலமாகவும், பொறுப்பற்ற வகையிலும் ஒரு அரசாங்கம் நடந்து கொள்ள முடியாது.

சென்ற முறை அதிரடியாக நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு அறிவித்தது தொடங்கி, அடுத்தடுத்து மனிதாபிமானமின்றி பல அநீதிகளை அரங்கேற்றிச் சென்றது அரசாங்கம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவர் மட்டுமே அரசாங்கத்தை நடத்தி செல்வது போல இருக்கிறது. எந்த ஒரு அரசாங்கமாயிருந்தாலும் திறமைசாலிகள், அறிவாளிகள்,பொது நலன் விரும்பும் தன்னலமில்லா சான்றோர்கள் கொண்ட கூட்டுத் தலைமையால் வழி நடத்தப்பட்டால் மட்டுமே அது அனைத்து மக்களுக்கானதாக இருக்க முடியும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடங்கி அறிவியல் நிபுணர்கள் வரை அனைவரும் அரசாங்கத்திற்கு ஆமாம்சாமி போடுபவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு தலைமை இந்த நாட்டிற்கே சாபக் கேடாகும்! மன்னர் ஆட்சி மனோபாவமுள்ளவர்கள் தலைமைக்கு வந்தால் எவ்வளவு பேரழிவுகள் என்பதற்கு தற்கால ஆட்சியே சான்றாகும்!

ஆக்சிஜன் உற்பத்தி ஒன்றும் கம்ப சூத்திரமல்ல, அந்தந்த மருத்துவமனைகளை ஒட்டியே சிறு பிளாண்ட் போட்டு புதிதாக உற்பத்தி செய்ய அதிகபட்சம் ஒரு வார காலகட்டம் போதுமானது. ஒரு வருட காலகட்டம் இருந்த போதிலும் அதை செயல்படுத்த விரும்பாதவர்களுக்கு இந்த நேரத்தில் வேதாந்தாவை தவிர வேறு யார் நினைவுக்கு வர முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்காகத் தானே பசுமை தீர்ப்பாயத்திற்கு சுற்றுச் சூழல் ஞானமே இல்லாத கிரிஜா வைத்திய நாதனை நியமித்தார்கள்!

எந்த மருத்துவமனையும் அதன் தேவைக்கு ஏற்றபடி குறைந்த அளவில் ஆக்சிஜன் தயாரித்துக் கொடுக்கும் Pressure Swing Adsorption oxygen generator வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடங்கள் உள்ளன. இப்படி ஒரு ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைக்க சுமார் ஒன்றரை கோடி ரூபாய் தொடங்கி தேவைக்கு ஏற்ப கூடுதல் செலவாகும்! ஆக்சிஜனை ஓரிடத்தில் தயாரித்து, மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் பல சிரமங்களும், இழப்புகளும் உள்ளன. போக்குவரத்து செலவுகளும் அதிகம், நேரவிரயமும் ஏற்படும். ஆக்சிஜன் காற்றுவெளியெங்கும் நிறைந்துள்ளது! ஆகவே, அதை தேவைப்படக்கூடிய அந்தந்த இடங்களிலேயே உற்பத்தி செய்வது தான் அறிவுடைமை! இதற்கு கார்ப்பரேட்களின் தயவு எதற்கு?

புலம் பெயர் தொழிலாளர்களை மனித உயிர்களாகக் கூட மதிக்க தயாரில்லை பாஜக அரசாங்கம். உண்மையில் தேசத்தின் உழைப்பு சக்தியாகிய அவர்களை தான் அதிகம் ஒரு அரசு பாதுகாக்க வேண்டும்! மீண்டும் ,மீண்டும்,ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்பது பயமுறுத்தலுக்கும், பணம் பறிப்பதற்குமான வழிமுறை தானேயன்றி தீர்வல்ல. தீர்வில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பதவி விலகிவிடுவது தான் உத்தமமாய் இருக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time