தமிழ் எழுச்சியின் அடையாளம் – டாக்டர்.மு.வ

-மாரிமுத்து

அன்றைய தமிழகத்தில் தமிழ் தேசிய இயக்கங்களுக்கும், திராவிட இயக்கங்களுக்கும் டாக்டர்.மு.வவின் நூல்கள் ஒளிவிளக்காக திகழ்ந்தன. பெருந்திரளான இளைஞர்கள் மு.வவை தங்கள் கதாநாயகனாக, வழிகாட்டியாக கொண்டிருந்தனர். திருமணங்கள், பிறந்த நாட்கள் ஆகியவற்றுக்கு மு.வரதராஜனார் நூலை பரிசளிப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்..!

தமிழன்னையின் தவப்புதல்வர்களில், மு.வ‌.என்று தமிழ் கூறும் நல்லுலகில் அன்புடன் அழைக்கப்படும்  டாக்டர் மு.வரதராசனாருக்கு தனிச்சிறப்பு உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை உள்வாங்கி செயல்படும் இளைஞர்கள் தங்கள் தனித்திறமையை உணர்ந்து விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் மூச்சுக் காற்றாகக் கொண்டு மகத்தான வெற்றி பெறுவார்கள். இது உறுதி.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் 25.04.1912 அன்று  முனுசாமி முதலியார்- அம்மாக்கண்ணு தம்பதியருக்குப் பிறந்தார் திருவேங்கடம். திருவேங்கடத்தின் தாத்தா பெயர் வரதராசன்.

இயற்பெயர் போய் தாத்தாவின் பெயர்தான் பின்னாளில் உலகம் அறியும் பெயராக இவருக்கு மாறிப் போனது.

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்ற பழமொழிக்கு ஏற்ப பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கினார் வரதராசன். பதினாறாம் வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். உடனடியாக அவருக்கு திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது.

பள்ளிப் படிப்பை முடித்த கையோடு வேலையும் கிடைத்தது. ஆனால் அவருடைய மனமோ பெரிதினும் பெரிது கேட்டுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவருடைய உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

உடல்நலத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக சொந்த கிராமம் திரும்பினார். தாய்மொழி தமிழ் மீது கொள்ளைப் பிரியம் கொண்டிருந்த காரணத்தால் ஊருக்குத் திரும்பி ஓய்வெடுத்த  சமயத்தில் முருகையா முதலியாரிடம் தமிழ் கற்றார்.

தமிழின்பத்தேனை  பருகி  மகிழ்ச்சிப் பெருகி சிறகடித்து பறந்த வரதராசன்,1935ஆம் ஆண்டு நடைபெற்ற வித்துவான் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார். அதே ஆண்டு அவருடைய மாமா மகள் ராதா அம்மையாரை கரம்பிடித்தார். 1935-ல் தொடங்கி  திருப்பத்தூர் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழாசிரியர் பணி பிடித்திருந்தது. ஆனால் அவருடைய அளவுகடந்த அறிவாற்றலுக்கு அது போதுமா?.

பி.ஓ.எல், தேர்ச்சி பெற்று பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார். தொடர்ந்து உயர் படிப்பும் பதவி உயர்வுமாக முன்னேறினார்.

தொடக்கம் முதலே எளிமையின் காதலராகத் திகழ்ந்தார். திருமணத்தின் போது தன்  மாமா ” நல்ல உடை வாங்கிக் கொள்” என்று கொடுத்த ஐம்பது ரூபாய் பணத்தில் முப்பது ரூபாய்க்கு கதராடை வாங்கி அணிந்து கொண்டு மீதி இருபது ரூபாயை திருப்பி கொடுத்தவர் அல்லவா!.

தன் வாழ்க்கை முழுவதையும் இத்தகைய சிக்கனத்தைக்  கடைபிடித்தார். உலகத் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் அவர் இடம்பெறுவதற்கு இத்தகைய அருங் குணங்களும் காரணமாயிற்று.

“தமிழ் வினைச்சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் 1944 -ஆம் ஆண்டு எம் .ஓ. எல்., பட்டமும், சங்க “இலக்கியத்தில் இயற்கை “என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1948 -ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.எச்.டி)பட்டமும் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற தனி சிறப்புக்கும் உரியவரானார்.

தமிழத் தென்றல் திரு. வி. க. வை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார். அருட்பிரகாச வள்ளலார், விவேகானந்தர், காந்தியடிகள் போன்ற மகாத்மாக்களின் வாழ்க்கைப் பாடத்தை பயின்று அவர்களிடம் பெற்ற அறக்கருத்துக்களை தனக்கே உரித்தான பாணியில் சமூகத்திற்கு புகட்டினார்.மூடநம்பிக்கை, ஆடம்பரம் இவ்விரண்டையும்  மிகப்பெரும் இருகுறைகளாக சுட்டிக்காட்டினார்.

இவருடைய எழுத்துப்பணி 1938 -ல் தொடங்கி 1974-ஆம் ஆண்டு இவர் இயற்கை எய்தும்வரை தொடர்ந்தது.

நாவல்கள், திறனாய்வு நூல்கள், கட்டுரைகள், சிறுவர்களுக்கான படைப்புகள் என்று டாக்டர் மு.வ.வின்  91 நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் மகத்தான பொக்கிஷங்களாக மிளிர்கின்றன.

பிரான்ஸ் உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் ஜப்பான் உள்ளிட்ட கீழை நாடுகளுக்கும் பயணித்து அங்கு கிடைத்த அனுபவத்தை தாயக மக்களிடம் பகிர்ந்தார். உலகம் முழுவதும்  தமிழ்மணம் பரப்பினார். அமெரிக்காவின் ஊஸ்டன் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்.) பட்டம்  வழங்கி கௌரவித்தது

தமிழர்களின் அறிவுக் கருவூலமான  திருக்குறளுக்கு பாமரரும் புரியும் வகையில் தெளிவுரை இயற்றி அந்நூலை தமிழர்கள் வீடு தோறும்  கொண்டு சேர்த்த பெருமை இவரையே சேரும். அகல்விளக்கு, கரித்துண்டு முதலான மு.வ.‌வின் நாவல்கள் தமிழ் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தன. அவருடைய நாவல்கள் தூய தமிழில் இருந்தன. கதை மாந்தர்களும் அவ்விதமே பேசினர். அவை அந்த நாட்களில் பெரிதும் விரும்பப்பட்டது!

குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மேடை போட்டு வாய்கிழிய பேசி  செயல்படுத்த முடியாததை,  இவர் பேசாமல்  மவுன புரட்சியாக தம் புத்தகங்கள் வாயிலாக சாதித்துக் காட்டினார்.

இவருடைய புதினங்களில் வந்த  கதை மாந்தர்கள் அழகான  தமிழ்ப் பெயரைப்பூண்டிருந்தார்கள். இப்புத்தகங்களைப் படித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போன  தமிழ் மக்கள் அந்த சமயத்தில் தங்கள் குழந்தைகளுக்கு இவருடைய கதைகளில் வரும் அழகுத் தமிழ் பெயர்களை சூட்டினார்கள்.

மு.வ.வும் .தம்முடைய மூன்று மகன்களுக்கு முறையே அரசு , பாரி, நம்பி ஆகிய தேன் தமிழ் சொற்களில் பெயர் சூட்டினார். இவருடைய சிந்தனை, சொல் ,செயல் மூன்றும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது.

ஒருவன், தான் பிறந்த சமூகத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு கல்விச்சேவைதான். அதை பல வழிகளிலும் சிறப்பாக செய்தார் மு.வ‌.  தகுதி வாய்ந்த மாணவர்களுடைய படிப்பில் இடையூறு வராமல் பார்த்துக் கொண்டார். . நலிவுற்ற மாணவர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு விடுதிக் கட்டணம் ,கல்லூரி கட்டணம்  மற்றும் தேர்வு கட்டணம் போன்றவற்றிக்கு உதவினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்கு எதிராகவும் அரசமைப்புச் சட்ட மரபுக்கு முரணாகவும்  1965 களில் மத்திய அரசின் செயல்பாடு இருந்தது. அப்போது வலுக்கட்டாயமாக தமிழகத்தின் மீது இந்தி திணிக்கப்பட்டதற்கு தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

மு.வ.வும்  தன் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், “பத்மஸ்ரீ “பட்டத்தை தவிர்த்தார்.

தமிழர்களின் மருத்துவ முறையான சித்தவைத்தியத்தின்சிறப்புகளை மக்களுக்கு விளக்கியதோடு,

“உணவே மருந்து, மருந்தே உணவு” என்றஅதன் தாரக மந்திரத்தை தம்வாழ்வியல் நெறிகளில்ஒன்றாக கடைபிடித்தார்.

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு”-(குறள் 595)

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு  ஏற்ப, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சாதாரண எழுத்தராக பணியில் சேர்ந்த வரதராசனார் தன் உள்ளத்து உயர் நோக்கத்தின்  வாயிலாக, படிப்படியாக முன்னேறி  மதுரை பல்கலைக்கழக துணைவேந்தரானார். தமிழ் இலக்கிய உலகின் பிதாமகன் களில் ஒருவரானார்!

தான் சார்ந்த  துறையில் உச்சம் தொடுவது, தாய்மொழிப் பற்று மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய  குணங்களை பின்பற்றி அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு  தமிழ் இளைஞர்களுக்கு உணர்த்திவிட்டு, தமிழுலகில் அழியாப் புகழை பெற்றுள்ளார்.

டாக்டர் மு.வ.வின் பிறந்த தினத்தை கொண்டாடும் இந்நன்னாளில் அவருடைய அறிவுரைகளைப்  பின்பற்றுவதன் மூலம் அவருக்கு புகழாரம் சூட்டுவோம்.!

கட்டுரையாளர்; மாரிமுத்து

அடையாறு திரு.வி.க .பேச்சுப் பயிலரங்க இணை அமைப்பாளர்,

மது ஒழிப்பு போராளி!  மயிலாப்பூர் ,பல்லக்கு மாநகரில் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக  அப்பகுதியில் அடுத்தடுத்து உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை அங்கிருந்து அகற்றுவதற்காக  இவர், மக்களை ஒன்று திரட்டி தொடர்ந்து போராடி வருகிறார்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time