ஒன்னுமே புரியல, இந்த ஆக்சிஜன் அரசியலில்!
என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது…!
இத்தனை பெரிய இந்தியாவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர யாருமில்லை என அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர். வாழ்க ஜனநாயகம்!
”அவர்கள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் செய்ய வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே செய்ய வேண்டும்’’ என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்த அனுமதி தரலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தான் அனைவருக்கும் தோன்றும். மகிழ்ச்சி!
நமது அடிப்படையான சந்தேகம் ஒன்றை இந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசாங்கமோ தெளிவுபடுத்தினால் நன்று!
இந்தியாவில் தற்போது உருவாகி இருப்பதாக சொல்லப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் நிவர்த்தி செய்ய முடியும் என்று எந்த தரவுகளின் அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?
”இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கே சிறிதும் வாய்ப்பில்லை. தேவைக்கும் மிக அதிகமாக நாம் உற்பத்தி செய்து வருகிறோம்.’’என்கிறார் ஹனுமன் பால் பென்கனி. இவர் ஆக்ஸிஜன் தயாரிப்பில் 45 வருடங்களாக முதலிடம் வகிக்கும் நிறுவனமான லிண்டே நிறுவனத்தின் முன்னாள் CEO.
மேலும் அவர் ”இந்தியாவில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் டன்னுக்கும் மேலான ஆக்சிஜன் உற்பத்தியாகிறது! அந்த ஆக்சிஜன் உற்பத்தியில் 1 % க்கும் குறைவாகத் தான் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். இப்படி தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் தற்போது மருத்துவ தேவைக்காக அதிகபட்சம் 8,000 டன்களே தேவைப்படுகிறது! அப்படியிருக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பிரச்சினையே இல்லை.’’ என்கிறார்.
அவ்வளவு ஏன் பிரதமரின் மிக நெருங்கிய நண்பரான அம்பானியின் ஜாம் நகர் ரிலையன்ஸில் நாளொன்றுக்கு 22,000 டன்கள் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது என்கிறார். இது ஒன்றே இந்திய தேவையான 8,000 டன்களை பூர்த்தி செய்துவிடுமே!
சரி, எங்களுக்கு வேதாந்தா தயாரித்து தரும் ஆக்சிஜன் மட்டுமே தேவை என்றாலுமே கூட, அவர்களின் ஏகப்பட்ட வட இந்திய நிறுவனங்களில் இருந்து அதை உடனுக்குடன் கேட்டு வாங்கி பெறுவது தானே முறையாகும்! சட்டிஸ்கர் கோபரில் இயங்கும் நிறுவனம், ராஜஸ்தான் உதய்பூரில் இயங்கும் நிறுவனம், ஹரியானாவின் குர்கானில் இயங்கும் நிறுவனம், ஜார்கண்டின் போர்கோவில் இயங்கும் நிறுவனம்..என எவ்வளவோ இருக்கிறதே! இவ்வளவு ஏன் டெல்லிக்கு அருகிலேயே அவர்களுக்கு நிறுவனம் இருக்கிறதே..! அங்கேயெல்லாம் உற்பத்தி செய்யமாட்டார்களாம்! ஆனால், தமிழ்நாட்டில் மூடப்பட்ட நச்சு ஆலையை திறந்து தான் உற்பத்தி செய்வார்களோ…!
அப்படி ஸ்டெர்லைட்டில் எவ்வளவு உற்பத்தி செய்யமுடியும்..? என்றால், தற்போதைய நிலையில் அவர்கள் காப்பர் உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டவர்கள் என்ற வகையில் அவர்களால் மருத்துவத் துறைக்கான தூய்மையான ஆக்சிஜனை தயாரிக்க முடியாது! என்பது தெரியவந்துள்ளது. அதாவது நச்சுவாயுவை மட்டுமே உற்பத்தி செய்யும் ஒரு ஆலையை வலிந்து ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபடுத்தி நல்லதொரு தோற்றம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்! ஆனால், வேதாந்தா நிறுவனத்திடம் வாயுவாக உள்ள ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உட்கட்டமைப்பு இல்லை. அந்த கட்டமைப்புகளை உருவாக்க 9 மாத காலம் ஆகும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் தகவல் தெரிவித்துள்ளார்!
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆக்சிஜன் உற்பத்தி கூட பிரச்சினையில்லை. அந்த ஆக்சிஜனை நிரப்பும் இரும்பு உருளை தயாரிப்பு தான் முக்கியமானது. நிரப்பப்படும் ஆக்சிஜன் மதிப்பு வெறும் ரூ 3,00 தான்! ஆனால், ஆக்சிஜனை நிரப்பும் இரும்பு உருளைக்கு ரூ 10,000 தேவை! இதையே சாலையில் கொண்டு செல்லப்படும் பிரம்மாண்ட ஆக்சிஜன் டேங்க் செய்ய ரூ 45 லட்சம் தேவைப்படுகிறது! அதற்கான தயாரிப்பு யூனிட்டை இனிமேல் தான் வேதாந்தா ஏற்படுத்த வேண்டும்.
இந்த அதிகபட்ச காலகட்டத்தை எடுத்து தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜனை தயாரிப்பதற்குள் கொரானா பல ஆயிரம் பேரை கொன்று தின்றுவிடாதா..? இதற்கு தமிழக அரசே ஸ்ரீபெரும்புதூரில் ஆக்சிஜன் தயாரிப்பது போல மற்றொரு யூனிட் போட்டு தயாரித்துவிடலாமே!
Also read
ஆக்சிஜன் உற்பத்திக்கு பிரதமர் தரும் நிதி 200 கோடியில் சுமார் 500 க்கு மேற்பட்ட மருத்துவமனைகள் தாங்களே சொந்தமாக ஆக்சிஜன் தயாரித்து தயாராகிக் கொள்ள முடியும். மேலும் நோயாளிகளிடம் லட்சம், லட்சமாக பணம் வசூலிக்கும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இரண்டு கோடியில் சொந்தமாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை உருவாக்கிக் கொள்வது பிரச்சினையே இல்லை. அரசு மருத்துவமனைகளுக்கு தான் அரசின் ஆக்சிஜன் தரப்பட வேண்டும்!
ஆக்சிஜன் தயாரிப்பு தான் பிரச்சினை என்றால், அதற்கான தீர்வுகள் அதிகமாகவே உள்ளன! ஆனால், அவர்களின் உள் நோக்கம் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கானது என்றால், எளிய மக்களுக்கு எப்போது தான் விடிவோ…தெரியவில்லை…!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஆக்சிசன் தயாரிப்பதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரசின் யோசனை போகாத ஊருக்கு வழி காட்டுவதாக உள்ளது. இந்த திட்டம் நிறைவேறக் கூடாது.
மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழக அதனதன் வளாகத்தில் ஆக்சிசன் தயாரிப்பு பிளான்ட் வைத்திருப்பது ஒரு அடிப்படை வசதியாக இருக்க வேண்டும் என்பதை அரசு சட்டம் இயற்றலாம்.
அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிக்கு தக்கவாறு ஆக்சிசன் தயாரிக்கும் கெபாசிட்டி மற்றும் இருப்பின் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும். பேரிடர் காலத்தை சமாளிக்கும் தற்காலிக ஏற்பாடாக இல்லாமல் உயிர்காக்கும் ஆக்சிசன் தயாரிப்பு மற்றும் இருப்பு ஒவ்வொரு மருத்துவமனையிலும் கட்டாயமாக்க வேண்டும். இதனால் ஆக்சிஜன் சிலிண்டர், டேங்கர் வாகனம் போக்குவரத்து செலவு கணிசமாக மிச்சமாகும், அதோடு உயிர்காக்கும் நேர விரயம் தவிர்க்கப்படும். மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் ஆக்சிசன் தேவைகளுக்கு தன்னிறைவு பெற்றதாக அமைய நிர்பந்திக்கும் இந்த தொலைநோக்குப் பார்வையோடு அரசு ஆள்வோர்கள் இந்த தருணத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசியல் பண்ணிக்கொண்டு தனிப்பட்டவர்கள் கொள்ளையடிக்க விடக்கூடாது. நிரந்தரத் தீர்வை எதிர்நோக்குவோம்.
எடப்பாடி க. பழனிச்சாமி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அப்போதெல்லாம் செவிசாய்க்காத எடப்பாடி ஸ்டர்லைட் என்றவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார். மதிமுக விடுதலைசிறுத்தைகளை விட்டுவிட்டு…. அதில் திமுக – காங்கிரஸ் கம்யூ. கட்சிகள் கலந்து கொள்கின்றன. உச்ச நீதிமன்றத்திற்குப் பயந்து கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 4 மாதத்திற்குத் தேவைப்படும் ஆக்சினைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்படுகின்றது. இது தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இதில் திமுகவும் உடந்தை என்பது வேதனையான செய்தி. இதற்கிடையில் தங்களின் கட்டுரை உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. வாழ்த்துகள்.
கழகம் கொஞ்சம் யோசிக்கணும் இல்லாவிட்டால் மக்கள் தகுந்த தீர்ப்பு கொடுப்பார்கள் எச்சரிக்கை …………..