கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் மரணிக்கையில், ஐ.பி.எல் அவசியமா…?

-மாயோன்

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது என்று பிரதமர் மோடியே வேதனைப்பட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.

கொரோனா வின் இரண்டாவது அலை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இந்நாட்டை பார்த்து மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் அனைத்துமே இந்திய பயணிகள் விமானம் தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்து விட்டன. அண்டை நாடான வங்களாதேசம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவசர ஆபத்துக்கு இந்தியாவிடம் உதவியை கேட்டு பயன்படுத்திக்கொள்ளும் குட்டி நாடான மாலத்தீவு கூட இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு சுற்றிப் பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது.

கொரோனா முதல் அலையை தடுக்க வரிந்துகட்டி நிற்பது போல காட்டிய  மத்திய ஆட்சியாளர்கள் இரண்டாவது அலையின் ஆபத்தை உணரத் தவறிவிட்டனர். இப்போது வெள்ளம் தலைக்கு மேல் சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியவற்றில் அவர்கள் குறியாக இருந்ததன் விளைவை இப்போது நாட்டு மக்கள் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களை இந்த அளவு கூடுவதற்கு அனுமதித்த தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால்கூட தவறு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. நீதிமன்றம் ஒரு படி மேலே போய் ,வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு கூட தயங்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 3.50 லட்சம் பேருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் வரை போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இவ்வளவு எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்றால் உண்மையான கள நிலவரம் எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே பாதிப்பு குறைந்த மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால் இங்கேயே ஆம்புலன்ஸ்கள் ஒலி எழுப்பியபடி இங்கும் அங்கும் சென்று கொண்டிருப்பதை பொதுமக்கள் பார்க்க முடியும். வடமாநிலங்களில் எழுந்துள்ள குரல் நாளை இங்கு வருவதற்குள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு முழுமையாக செய்து உள்ளதா என்று தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறையவில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே மக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் ஏழைத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் சலூன் கடையை மூடுவதற்கு முன்பு குடிகெடுக்கும் டாஸ்மாக் கடைகளை தான் மூடுவார்கள். ஆனால் கோயில்களுக்கு தடை, மால்களுக்கு தடை, கடற்கரைக்கு கருத்தடை, டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி. மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் இங்குள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

கொரானா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழ்நாட்டில்  தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தனைக்கும் இந்த மருந்து நம்பகத்தன்மையற்றது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குரானா முதல் அலை நிலவிய காலத்தில் இப்பிரச்சினை இங்கு  இல்லை. சாவிலும் பணம் பார்க்கும் கள்வர்களால்  இந்தமருந்துக்கு செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு விட்டதோ என்னவோ கள்ளச்சந்தையில் இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலை வைத்து விற்கிறார்கள்.

குரானா முதல் அலையின் போது அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் பார்த்து கண்ணீர் சிந்திய உலக நாட்டு மக்கள் இப்போது இந்திய  சுடுகாடுகளில் கொத்துக்கொத்தாக எரிந்துகொண்டிருக்கும் பிணக்குவியல் களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

பக்கத்து நாடான பாகிஸ்தான் கூட இந்தியாவின் நிலைமையை பார்த்து வேதனைப்பட்டு உதவி செய்ய தயாராக இருப்பதாக  கரிசனத்துடன் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ரஷ்யா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் மருந்து பொருட்களை அனுப்பி வைத்துள்ளன. அரேபியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் கன்டெய்னர்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இத்தகைய கடினமான தருணத்தில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருப்பது சரியா?

என்று  ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய கேள்வியின் நியாயத்தை உணர்ந்து ப தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். டெல்லி அணியின் நட்சத்திர வீரரான அவர் கொரோனா  வேகமாக பரவிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் குடும்பத்தினருடன் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்களின்றி  இந்தியாவின் பெரிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரபல வீரர்கள் இப்போட்டிகளில் பங்கெடுத்துள்ளதால் இவர்கள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவத்தை உள்ளூர் போலீசார் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவ வசதி குறைபாடு போன்ற பிரச்சனைகளுடன் நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாக பறிபோன மனித உடல்களை சுற்றிலும் அவர்களுடைய உறவினர்கள் நின்று அழுது கொண்டிருக்கும் நிலைமை நாடு பூராவும் உள்ளது. சுடுகாடுகள் எங்கெனும் பிணங்கள் இடைவிடாது எரிந்து கொண்டுள்ளன..!

நாட்டின் அரசு இயந்திரங்களுடன் ஒட்டுமொத்த தனியார் மற்றும் தனிமனித சக்திகளும் ஒரு புள்ளியில் திரண்டு கொரோனாவை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளோம். இந்தச் சுழலில் திடிப்புடன் செயல்பட வேண்டிய இளம் தலைமுறையை தொலைகாட்சி பெட்டி முன்பு முடக்குவதைப் போல ஐ.பி.எல் போட்டிகள் நடந்து கொண்டுள்ளன. நாட்டில் என்ன நடந்தால் என்ன.. நாங்கள் ஆட்டத்தை ரசித்து கைதட்டி மகிழ்ந்து கொண்டிருப்போம்’’ என வருங்காலத் தலைமுறைகளை நாம் வளர்த்து எடுக்க போகிறோமா…?

ரோமாபுரி தீப்பிடித்து எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கு வரலாற்றில் நீங்காத ஒரு கரும்புள்ளி நிலைபெற்றது! அதே போல நாடு முழுக்க கொரோனா நோயாளிகளின் சிதைகள் ஓய்வின்றி எரிந்து கொண்டிருக்கையில்.., நாம் தொலைகாட்சிகளில் ஐ.பி.எல் போட்டிகளை குற்றவுணர்வின்றி ரசித்தோம் என்ற பழி தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே , இந்த நேரத்திற்கு அவசியமில்லாத  ஐபிஎல் போட்டிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதே போல தமிழ்நாட்டில் கொரோனா பரவலுக்கு வித்திடும் டாஸ்மாக் மதுக்கடைகளையும் தற்காலிகமாகவாவது விரைந்து மூட வேண்டும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time