சினிமா கதை திருடர்களும்,போராடும் கதாசிரியர்களும்!

-சாவித்திரி கண்ணன்

சினிமா என்பது கூட்டு முயற்சி! ஒரு படைப்புக்கு ஒருவரே ஒட்டுமொத்த உரிமை கொண்டாடுவது அறியாமை, ஆணவம், பேராசை!

கோடிக்கோடியாக சம்பாதித்துவிட்டு போங்கள். பெயர்,புகழ் எல்லாம் இருக்கட்டும். அதை இன்னொருவனின் படைப்பை திருடித் தான் செய்ய வேண்டுமா..? அந்தக் கதை எழுதிய படைப்பாளிக்கு உரிய அங்கீகாரம் தர மறுத்தால் அப்புறம் நீ என்ன பெரிய கலைஞன்.., இயக்குனர்..? உண்மையில் திருடன் தானே..! பர்ஸை திருடியவன் பிக்பாக்கெட் திருடனாகிறான். கதையை திருடியவன் பிக்பாஸ் ஆகிறான்..!

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் அடித்தளம்! சினிமா என்ற உருவத்தின் ஆன்மாவே கதை தான்! அந்த ஆன்மாவை திருடுவது என்பது மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி திருடுபவர்கள் தான் தற்போது ஓகோ என்று கொடிகட்டி பறக்கிறார்கள்!

கதாசிரியர்கள் மிக கண்ணியமாக மதிக்கப்பட்டது ஒரு காலம்! இளங்கோவன், பி.எஸ்.இராமையா, கொத்தமங்கலம் சுப்பு, ஏ.கே.வேலன், ஆரூர்தாஸ், சோலைமலை, துமிலன்..போன்ற புகழ்பெற்ற கதாசிரியர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் அன்றைய காலத்தில், ’வாத்தியாரய்யா’ என மரியாதையாக அழைக்கப்பட்டனர்! இவர்கள் தவிர புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் கதைகள் உரிய விலை கொடுக்கப்பட்டு சினிமா வடிவமும் கண்டுள்ளன. புதுமைபித்தன், ஜெயகாந்தன், லஷ்மி, அகிலன், சிவசங்கரி ஆகியவர்களின் கதைகள் திரைவடிவம் கண்டுள்ளன.

ஏ.பி.நாகராஜன் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, சிறந்த கதாசிரியர். ஆனால், தில்லானா மோகனாம்பாள் கதையை அவர் கொத்தமங்கலம் சுப்புவுக்கு சிறந்த சன்மானம் தந்தே பெற்றார்.

சாதனை இயக்குனர் ஸ்ரீதர், தானே ஒரு கதாசிரியர் என்றாலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதைகளையும் படமாக்கியுள்ளார். அதே போல பாலசந்தரிடமும் அனந்து என்ற கதாசிரியர் இருந்தார். பிரபல கதாசிரியர் உமா சந்திரன் நாவலைத் தான் இயக்குனர் மகேந்திரன் முள்ளும்,மலரும் என திரைக்கதையாக்கினார். புதுமைபித்தனின் சிற்றன்னை என்ற குறு நாவலைத்தான் உதிரிபூக்கள் என்ற திரைபடமாக்கினார்! மகேந்திரன் சிறந்த கதாசிரியராக இருந்து தான் இயக்குனர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல பாரதிராஜாவும் நல்ல கதாசிரியர்களை வைத்திருந்தார். ஆர்.செல்வராஜ், பாக்கியராஜ் ஆகியோரின் கதைகளுக்கு திரைவடிவம் தந்தார். பாக்கியராஜ் அடிப்படையில் ஒரு சிறந்த கதாசிரியர். ஆனாலும் தன் திரைக்கதைகளின் வடிவாக்கத்திற்கு கலைஞானம் போன்ற கதாசிரியர்களின் உதவியை பெற்று அதை உரிய முறையில் அங்கீகாரம் செய்வார்!

மலையாள திரை உலகில் கதாசிரியர்களுக்கு நல்ல மரியாதை தரப்பட்டு வரும் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது. படத் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களிடம் முழு அதிகாரத்தையும் கண்ணை மூடிக் கொண்டு தரக்கூடாது. இயக்குனருக்கு இணையாக கதாசிரியர்களும் மதிக்கப்பட வேண்டும். சினிமா என்பது வெறும் பணம், புகழ் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. அது ஒரு வகையில் நிகழ்காலத்தின் சமூக வரலாறு! கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதோடு உறவாடி, வாழ்க்கை குறித்த பார்வைகளையே மாற்றி அமைக்கும் மகத்தான சாதனம்! அதில் கதாசிரியனின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதை குறைத்து மதிப்பிடுவதும், காணாமலடிப்பதும் ஒரு சமூக குற்றமாக கருதப்பட வேண்டியதாகும்!

இயக்குனராக இருக்கும் ஒருவர் கதை ஆசிரியராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. கே.எஸ்.ரவிக்குமார் எப்போதும் மற்றவர்களிடம் கதை வாங்கியே படம் எடுத்துள்ளார். கே.வி.ஆனந்த் தனது படங்களுக்கு சுபா போன்ற கதாசிரியர்களை பயன்படுத்தி உரிய அங்கீகாரம் கொடுத்து வருகிறார்.

கதை திருட்டு என்பது ஏதோ இளம் கதாசிரியர்களிடம் மட்டும் தான் நடக்கிறது என்பதில்லை. தேவர் மகன் கதையை கமலஹாசனிடம் பறிகொடுத்து இன்று வரை அதற்காக போராடி வருகிறார் முதுபெரும் கதாசிரியர் கலைஞானம். அதே போல இசையமைப்பாளர் கங்கை அமரனும் தன் அதிவீர பாண்டியன் கதையை கமலஹாசனிடம் பறிகொடுத்து ஒன்றும் செய்யமுடியாமல் பல பத்திரிகை பேட்டிகளில் புலம்பியதோடு விட்டுவிட்டார். எம்.ஜி.ஆர்.சிவாஜி..ஆகியோர் சொந்தப்படம் எடுத்த போதும் இது போல இன்னொருவர் கதையை திருடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளானதில்லை.

ஆனால், இன்றைய இளம் இயக்குனர்கள் தங்கள் தொடக்க காலத்திலேயே கதை திருட்டில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகிறார்கள் என்பது கவலையளிக்கிறது. பிகில் படத்தை உதவி இயக்குனர் செல்வாவிடம் இருந்து அட்லீ களவாடி எடுத்தார்! ஹீரோ படத்தை போஸ்கோ பிரபுவிடமிருந்து களவாடி ஹீரோ என்று மித்திரன் படமெடுத்தார். மாஸ்டர் படத்தை ரங்கதாஸிடமிருந்து களவாடி லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். சர்க்கார் படத்தை வருண் ராஜேந்திரனிடம் களவாடி ஏ.ஆர்.முருகதாஸ் படமெடுத்தார். இதே முருகதாஸ் மீஞ்சூர் கோபியிடம் கத்தி கதை களவாடி அம்பலப்பட்ட போதிலும் தொடர்ந்து அடங்காமல் கதை திருட்டில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரூர் தமிழ் நாடனின் ஜிகிபா கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படமாக்கினார் இயக்குனர் ஷங்கர். ஆரூர் தமிழ் நாடன் நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்திற்கு வராமல் அதிமோசமாக வருஷகணக்கில் இழுத்தடித்தார் ஷங்கர். ஒரு வழியாக பிடிவாரண்ட் போட்டு ஷங்கரை வரவழைத்து ஆரூர் தமிழ் நாடன் கதைக்கும், எந்திரன் படத்திற்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டார் நீதிபதி. இந்த தீர்ப்பு வெளியாகி இரண்டாண்டுகள் கடந்தும் இன்னும் மேல்முறையீடு என்றெல்லாம் அலைந்து இழுத்தடிக்கிறார் சங்கர்.

சமூகத்தில் அநீதிகள் செய்பவர்களை, அரசாங்க வேலைகளில் அலட்சியம் காட்டுபவர்களை போட்டுத் தள்ளும் இந்தியன், அந்நியன் போன்ற படங்களை எடுத்தவர் ஷங்கர்! இந்த ஷங்கர், முருகதாஸ் போன்ற கதை திருடர்களை போட்டுத் தள்ளும் படத்தை யாராவது எடுத்தால் நன்றாக இருக்கும்! அதற்கு அருமையான, சூடான கதை, திரைக்கதை  எழுதித் தர, நானே தயாராக உள்ளேன்!

தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்க பொறுப்பில் பாக்கியராஜ் அவர்கள் இருப்பதால் மாஸ்டர் படத்தில் வருண் ராஜேந்திரனுக்கும், ஹீரோ படத்தில் போஸ்கோ பிரபுவுக்கும் அஞ்சாமலும், கையூட்டு பெற்றுக் கொள்ளாமலும், நேர்மையாக – மனசாட்சிப்படி – தீர்ப்பளித்தார். தமிழ் திரையுலகத்தில் இந்த காரணத்திற்காகவே பாக்கியராஜ் என்றென்றும் நினைவு கூறப்படுவார். ஒருவர் எப்படிப்பட்ட படமெடுத்தார் என்பதைப் போல, அவர் எப்படி வாழ்ந்தார் என்பதும் மிக முக்கியமாகும். மற்றவர்களின் உழைப்பை, ஆற்றலை, அறிவை உரிய முறையில் அங்கீகரித்து மதிப்பவனே தன்னை ஒரு படைப்பாளி என்று சொல்லத் தகுந்தவன்.. இல்லாவிட்டால் வெளி உலகத்தை பொறுத்த வரை அவன் பிரபல கலைஞனாக, இயக்குனராக இருக்கலாம், ஆனால், தனக்குள் அவன் களவாணி என்பதை அவன் உள்ளம் உறுத்தி சொல்லிக் கொண்டே தான் இருக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time