பெ.சு.மணி – தமிழ்ச் சமூக ஆய்வுலகின் பொக்கிஷம்!

-சாவித்திரி கண்ணன்

கல்விப் பின்புலமோ, சமூக பின்புலமோ,பொருளாதார பின்புலமோ இல்லாமல் ஒரு எளிய மனிதானாலும் கூட மிகப் பெரிய ஆய்வு நூல்களை படைத்தளிக்க முடியும் என்பதற்கு பெ.சு.மணி என்கிற பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி ஒரு எடுத்துக்காட்டாகும்! அவர் ஒரு சுயம்பு! தன்னுடைய இடையறாத ஆய்வின் மூலம் தமிழ் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியவர்களில் பெ.சு.மணி குறிப்பிடத் தக்கவர்! தான் வாழும் சமூகத்திற்கு தேவையான ஆய்வுகளை தானே முன்னெடுத்து பிரமிக்கதக்க ஆய்வு நூல்களை தமிழ்ச் சமூகத்திற்கு தந்துள்ளார் பெ.சு.மணி!

அந்த நாட்களில் நான் துக்ளக்கில் சில பழைய சுதந்திர போராட்டகால சம்பவங்கள் தொடர்பாக எழுதும் கட்டுரைகளுக்கு அவரிடமிருந்து போஸ்ட்கார்டில் கடிதம் வரும். அந்த கட்டுரை தொடர்பான கூடுதலாக சில செய்திகளை அவர் அதில் நினைவுபடுத்தியிருப்பார். பல இலக்கிய கூட்டங்களில் அவரை பார்க்கலாம்! ஆழங்கால்பட்ட சிந்தனையாளர் என்றாலும், அவர் அடக்கமாக வாழ்ந்து மறைந்தவர்!

அரும்,பெரும் எழுத்தாளரும், ஆய்வாளருமான அவர் படித்தது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி தான்! ஆனால், அவரது ஆய்வு நூல்கள் இடம்பெறாத பல்கலைக் கழங்களே கிடையாது. பல கல்லூரிகளும்,பல்கலைக் கழங்களும் அவரை சிறப்பு சொற்பொழிவுக்கு அழைத்து பேச வைத்துள்ளனர்!

பாரதியாரின் பாஞ்சாலி சபதம் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேணி சம்ஹாரம் என்ற நூலின் தாக்கத்தால் உருவானது…,தமிழ் மூதாட்டி அவ்வையாரின் 55 பாடல்களை ராஜாஜி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பனவற்றையெல்லாம் நான் அவர் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன்.அவருடன் ஓரளவு தான் நான் பழகி இருக்கிறேன். நல்ல நட்பை உருவாக்கத் தவறியதை எண்ணி தற்போது வருத்தப்படுகிறேன்.

தமிழின் மீதும், தமிழ் சமூகத்தின் மீதும் அவர் கொண்ட அளவில்லா ஈடுபாடும், நேசமும் அவரை எப்போதும் ஒரு தேடலை நோக்கி இயக்கிய வண்ணம் இருந்தது என்று தான் சொல்வேன். இத்தனைக்கும் சென்னை விமான அஞ்சல் பிரிப்பகத்தில் அஞ்சல் பகுப்பாளராகப் பணிபுரிந்துகொண்டே பல மிக முக்கிய ஆய்வு நூல்களை அவர் எழுதியிருப்பது தான் சிறப்பு.அதாவது அவரது ஆய்வு நூல்களால் அவருக்கு பெரிய பொருளாதார அனுகூல்ம் எதுவும் கிடைக்காது என்ற நிலையில் வாழ்வியல் தேவைக்கு ஒரு வேலையையும் செய்து கொண்டே ஆய்வுகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது தான் சிறப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் தான் அவர் பிறந்த ஊராகும். பள்ளிக்கூட காலத்திலே அன்றைய கம்யூனிஸ்டு கட்சியுடன் அவருக்கு தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. செங்கம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமசாமியுடன் ஏற்பட்ட தொடர்பு அவருக்கு நிறைய புரட்சிகர புத்தகங்கள்,சிறு வெளியீடுகள் ஆகியவற்றை படிக்கும் வாய்பை தந்துள்ளது..அந்த நாளைய கம்யூனிஸ்ட்களின் தியாகங்கள், அஞ்சாமை, பொதுநலச் சிந்தனை ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்.

1950 களின் தொடக்கத்தில் செங்கத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் பெ.சு.மணி. அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்த ம.பொ.சியின் சொற்பொழிவுகளை கேட்கிறார்.ம.பொ.சியின் இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட  சுதந்திர, சுயநிர்ணய, சோசலிச தமிழ் குடியரசு என்ற கருத்தாக்கம் இவரை வெகுவாக கவர்ந்திழுத்தது. அப்போது தொடங்கி ம.பொ.சியின் இறுதிகாலம் வரை அவரது சீடராக இருந்தார். ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் அந்த நாட்களில் பெரிய அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,கலைஞர்கள் இருந்தனர். அவர்களுடன் பெ.சு.மணியும் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார்! ம.பொ.சியின் செங்கோல் இதழிலும் இவரது பங்களிப்பு இருந்தது.மற்றொரு மாபெரும் தமிழறிஞரான வெ.சாமி நாத சர்மாவின் தொடர்பும் கிடைக்கிறது. இந்த சான்றோர்களின்,எழுத்துக்களும்,பேச்சுக்களும் இவரது ஆய்வு நோக்கத்திற்கு தீனி போட்டு தூண்டிவிட்டன!

 தமிழ் இதழியல் குறித்த பெ.சு.மணியின் நூல்கள் அனைத்துமே அபாரமானவை! தமிழ் இதழியல் குறித்த பன்முகத்தன்மை கொண்ட அவரது ஆய்வுகள் மாபெரும் பொக்கிஷங்களாகும். தமிழ் இதழியிலின் ஆரம்பகால முன்னோடிகளான ஜி.சுப்பிரமணிய ஐயர், சே.ப.நரசிம்மலு நாயுடு, வ.உசிதம்பரனார், வரதராஜிலு நாயுடு, வ.வேசு.ஐயர் ஆகியோருடன் நீதிகட்சி மற்றும் திராவிடர் இயக்க காலத்தையும் ஆழமாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். இதில் பாரதி குறித்த அவரது புத்தகங்கள் பெ.சு.மணியை மிகச் சிறந்த பாரதி ஆய்வாளராக பறைசாற்றின!

தமிழ் நாட்டில் ஆன்மீக இயக்கங்கள், தமிழகத்தில் காலூன்றிய ஆன்மீக சிந்தனைகள் குறித்த அவரது ஆய்வுகளும் முக்கியமானவையாகும்! இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் அவரது இயக்கம் பற்றிய ஆய்வு புத்தகங்களும், தமிழகத்தில் பிரம்ம சமாஜம் காலூன்றிய வரலாறு குறித்த அவரது நூலும்,கட்டுரைகளும்  ஆன்மீகக் கருவூலங்களாகும்!

அகடமிக் தகுதியுள்ள எந்த ஒரு ஆய்வாளரும் அவரது ஆய்வு உழைப்பின் மூலம் தமிழ் சமூகத்திற்கு கிடைத்துள்ள பொக்கிஷங்களின் பக்கத்தில் கூட வரமுடியாது! தொய்வில்லாமலும்,பிரதிபலன் பாராமலும் ஆய்வு பணியாற்றியவர் பெ.சு.மணி! நியாயப்படி அவருக்கு தமிழகத்தின் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அவரது வாழ் நாள் ஆய்வுபணிக்கான டாக்டர் பட்டம் வழங்கி இருக்க வேண்டும்!

தமிழக அரசு 2001ல் பெ.சு.மணிக்கு பாரதி விருது வழங்கியது. அது அவரது பாராதியார், சுப்பிரமணிய சிவா,இராமகிருஷ்ணர் பற்றிய ஆய்வுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையாகும்.

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் சங்கம் பெ.சு. மணிக்கு “கலைஞர் பொற்கிழி விருது’ வழங்கியுள்ளது. கோவை பாரதி பாசறையும் இவருக்கு பாரதி விருது தந்துள்ளது! இவரது ஆய்வு பணிக்காக மூன்றுமுறை இலங்கை சென்றுள்ளார்.

தன்னுடைய இறுதி நாட்களில் தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி ஆய்வுகள் மேற்கொண்டார்! அவரது தொடக்கம் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து ஆரம்பித்தாலும்,தமிழ் தேசியத்தில் அவர் பற்றாளராக இருந்தாலும் அவரது ஆய்வுகள் பாரபட்சமற்றவை! ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானவை! விருப்பு, வெறுப்புகளைக் கடந்த உண்மைக்கான தேடல் பொதிந்ததவை! அதனால், அவரது ஆய்வு அனைவருக்குமானது! அவரும் அனைவருக்குமானவராகவே வாழ்ந்தார். அவரது ஆய்வு நூல்கள் காலங்கடந்தும் அவரது பங்களிப்பை சொல்லிக் கொண்டே இருக்கும். இவரது நூல்களை அதிகம் பிரசுரித்தது சென்னை மயிலாப்பூர் பூங்கொடி பதிப்பகம் தான். உடுமலை.காமிலும் இவரது நூல்களை வாங்கலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time