கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களுக்கு கதவுகளை அடைத்த கியூபா!

-சாவித்திரி கண்ணன்

சமமற்ற கொரோனா தடுப்பூசி கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கையை பதிவு செய்ததோடு சரி! உலகம் இன்று சர்வதேச கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாறிக் கொண்டு உள்ளது.

நான் வெளிப்படையாக பேசுகிறேன். உலகம் தார்மீக ரீதியில் பெரிய தோல்வியைச் சந்திக்கவிருக்கிறது. இந்த தார்மீக ரீதியிலான தோல்விக்கு, ஏழை நாடுகளின் மக்களும், அவர்களின் வாழ்கையும் தான் விலையாகக் கொடுக்கப்படும்” என மூன்று மாதங்களுக்கு முன்பு (ஜனவரி 18, 2021) நடந்த உலக சுகாதார அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் பேசினார் உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ்!

கொரோனா வந்ததில் இருந்து பணக்கார நாடுகள் மருந்து தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மண்டியிடத் தொடங்கிவிட்டன. பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு நிறுவனங்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்க ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. மற்ற நாடுகள் பைசர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்றன. இதில் அமெரிக்கா உட்பட எந்த நாட்டிலும் மக்களிடம் தடுப்பூசி தொடர்பாக முழு நம்பிக்கை வெளிப்படவில்லை. இது அவசர கோலத்தில் எடுக்கப்படும் ஒரு தற்காலிக சிகிச்சை என்ற புரிதல் வந்துள்ளது. அதே சமயம் தடுப்பூசிகளுக்கான எதிர்ப்பு இயக்கங்களும், கருத்தாக்கங்களும் எல்லா நாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன.

இதில் கியூபா மட்டும் தடுப்பூசி மருந்து விவகாரத்தில் அனைத்து மக்களுக்குமான ஆரோக்கியமான மருந்தை அரசே நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. முழு திருப்தி கிடைக்காதவரை அவசரப்பட்டு மக்கள் உயிரோடு விளையாடக் கூடாது என்பது அதன் நிலைபாடு! ஐந்துவிதமான தடுப்பூசிகள் அதன் ஆய்வில் உள்ளன. தடுப்பூசிகளுக்கான பல கட்ட ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. தற்போது மூன்றாம் கட்ட ஆய்வுக்கு மட்டுமே 44,000 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் நடைமுறைக்கு வரவில்லை! அது வரை கொரோனா பரவல் அதிகரிக்காமல் இங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது கியூப அரசு!

பக்கவிளைவுகள் இருக்க கூடாது. மக்கள் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது. நோய் எதிர்ப்பு ஆற்றலை தர வேண்டும். அதே சமயம் விலை மலிவானதாக – அனைவரும் பெறக் கூடியதாக – பாதுகாத்து வைக்க எளிதாக – இருக்க வேண்டும் என கியூபா மெனக்கிட்டு வருகிறது. அப்படி கண்டுபிடித்த பிறகு எங்கள் மக்களுக்கு மட்டுமின்றி, உலகின் ஏழை நாடுகள் அனைத்திற்கும் மலிவான விலையில் ஏற்றுமதி செய்வோம் எனவும் கியூபா தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்துகளுக்கு சோபரனா, அப்தலா, மாம்பீசா என பெயரிட்டு உள்ளது! அந்த நாட்டின் அரசு நிறுவனமான பின்லே இன்ஸ்டியூட் இதை தயாரித்து வருகிறது!

இந்த வகையில் கியூபாவின் தடுப்பு மருந்தை அர்ஜெண்டினா, மெக்சிகோ, வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கியூபாவினால், தங்கள் வியாபாரம் வீழ்ந்துபடுமோ என மருத்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகக் கோபமாக இருக்கின்றன!

சின்னஞ் சிறிய கம்யூனிச நாடான கியூபாவை அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகள் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நெருக்கடிகளெல்லாம் தந்து முடக்கப் பார்த்தன. ஆனால், இயற்கை விவசாயத்தின் மூலம் பசியை வென்றது கியூபா! மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு ஏற்கனவே புகழ்பெற்ற நாடு தான் கியூபா!

கொரோனா போன்ற நோய் நெருக்கடிகள் நாட்டின் பொருளாதாரத்தை, வேலை வாய்ப்பை சிதைத்துவிடக் கூடாது. வெளி நாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தை நம்பினால் மருந்து வாங்கியே நமது பொருளாதாரம் பேரழிவை சந்திக்க நேரும். அதே சமயம் பொது நலன் நோக்கில் நாமே உற்பத்தி செய்தால் நாடு நலம் பெறும்! பொருளாதாரம் பலம் பெரும்! 300 மையங்களில் உற்பத்தி நடைபெறும் என்பதால் மக்களின் வேலை வாய்ப்பு பெருகும். மற்ற நாடுகளுக்கு நியாயமான விலையில் ஏற்றுமதி செய்வதால் அந்த மக்களின் உயிர் காப்பாற்றப்படுவதோடு நமக்கும் பணம் கிடைக்கும். விரைவில் கொரோனாவற்ற நாடாக கியூபாவை அறிவித்து எங்கள் நாட்டை சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடுவோம். நோயை எதிர்ப்பதில் நம் சொந்த நாட்டு மக்களின் அறிவாற்றலையும்,உழைப்பையும் நாம் பயன்படுத்துவதே நமக்கு எல்லாவிதத்திலும் நல்லது என்பது தான் கியூபா சொல்லும் செய்தியாகும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time