போராட்டங்களுக்கு  நம்பிக்கை தரும் -135 வது, மே நாள் !

- பீட்டர் துரைராஜ்

எட்டு மணி நேர வேலை நேரம் பறிக்கப் பட்டு விட்டது.இன்றைய மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் நியாயமான  பல கோரிக்கைகளை  கண்டுகொள்வதே இல்லை. ஏற்கனவே இருந்த 44  தொழிலாளர் சட்டங்களை (Act) சுருக்கி 4 சட்டத்தொகுப்பாக (Code)  மாற்றிவிட்டது. இதனால்  சம்பளம் என்பதன் வரையறை மாறுகிறது. தொழிற்சங்க உரிமைகள் மட்டுப் படுத்தப்படுகின்றன.  தொழிலாளர்களோடு நடத்தப்படும் முத்ததரப்பு குழுக்கள் கூடுவதே இல்லை. பொதுமுடக்க  காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த அவலம் எல்லோருக்கும் தெரியும். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்  தொழிலாளர்கள் ?

“அடிமைகளை கொலை செய்யும் உரிமையை,  முதலாளிகளுக்குச் சட்டம் அளித்தது. அடிமைகளை வைத்து வேலை வாங்கியதையும் சட்டம் அனுமதித்தது.  நாளொன்றுக்கு 18 மணி நேரம் வரை,  தொழிலாளர்களை வேலை வாங்கியதும் சட்டத்தின் மூலம்தான். எட்டுமணி நேர வேலை என்பது உறுதி செய்யப்பட்டதும் சட்டத்தின் மூலம்தான் ” இவை அனைத்துமே அந்தந்த காலத்தில் நியாயம் என்று கருதப்பட்டன.

நியாயமாக கருதப்பட்ட சட்டங்கள், காலப்போக்கில்  அநியாயமாக கருதப்பட்டன. இப்போது குறித்த கால வேலை (Fixed Term Employment) என்ற பெயரில் தொழிலாளர்களின் ஓய்வூதியம், மருத்துவ வசதி, பணிக்கொடை, பணி நிரந்தரம் போன்றவை பறிக்கப்படுகின்றன. ஒப்பந்த தொழிலாளர், தினக்கூலி தொழிலாளர், பதிலி தொழிலாளர், பயிற்சித்  தொழிலாளர் என பல பெயர்களில் சுரண்டல் நடக்கிறது. இது சரி என்றுதான் அரசும், நீதிமன்றங்களும் சொல்லுகின்றன. ஆனாலும் இந்தச்  ‘சட்டங்களை’  எதிர்த்து தொழிலாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.

இன்று உலகம் முழுவதும்  மே நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்குப் பின்னே 135 ஆண்டு கால வரலாறு உள்ளது. 18 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில்  ஏற்பட்ட தொழிற்புரட்சியின்  விளைவாக ஆலைகள் உருவாயின; தொழிலாளி என்ற வர்க்கம் பிறந்தது. முதலாளிகளின் லாபம் அதிகமானது. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மோசமாகிக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் காரல் மார்க்ஸ் – எங்கெல்சால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை (1848), ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள்  சங்கரீதியாக ஒன்று சேர்வதற்கு கிரியா ஊக்கியாக இருந்தது.

1886 ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்,  மேமாதம் ஒன்றாம் நாள் எட்டு மணி நேர வேலை என்பதை  வலியுறுத்தி பேரணி நடைபெற்றது; ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் கணிசமான தொழிலாளர்கள் ஜெர்மனியில் இருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இந்தப்  பேரணியில்,  தொழிலாளர்கள் தாங்கள் வேலைசெய்த  தொழிற்சாலைகளைப்  புறக்கணித்து கலந்து கொண்டனர்.13,000 பேருந்துகளில்  வந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பேரணியின் எழுச்சியைக் கண்டு, மறுநாள் மேலும் பலர்  ஆலைகளைப் புறக்கணித்து  திரண்டனர். எட்டு மணி நேரம்தான்  வேலை என்பதை வலியுறுத்தி தொழிலாளர்கள் அமைதியாக பேசிக் கொண்டிருந்த மூன்றாம் நாள் கூட்டம் முடியும் நேரத்தில்  குண்டு வெடிப்பு நடந்தது. இதை சாக்காக வைத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது . பலர் காயமுற்றனர்; ஒருவர் மரணம் அடைந்தார்.

காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மே நான்காம் நாள்  தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். இதில் ஏற்பட்ட  கலவரத்தில் 15 பேர் மரணமடைந்தனர். இது ஹே மார்கெட் படுகொலை (Haymarket massacre) என அறியப்படுகிறது.  இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.ஐந்தாவதாக நபர் தூக்கிலிடுவதற்கு முன்பு  தற்கொலை செய்துகொண்டார். மேலும்  மூவருக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது.

முதலாளிகளின் லாபவெறிக்காக, தொழிற்சங்க தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

 

ஆனால் உலகம் முழுவதும்   1886 ஆம் ஆண்டு முதல் மே முதல் நாள், சர்வதேச தொழிலாளர் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில்,  1923 ஆம் ஆண்டு,  இந்தியாவிலேயே முதன் முதலாக மே தின பேரணியை, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர் முன்னின்று நடத்தினார். இந்தியாவிலேயே முதன் முதலாக, 1957 ஆம்  ஆண்டு, இஎம்எஸ் நம்பூதிரிபாடு முதலமைச்சராக இருந்த கேரள அரசு   மே  நாளுக்கு விடுமுறை அளித்தது. இன்று எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு வடிவத்தில் சர்வதேச தொழிலாளர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வி.பி.சிங் பிரதம அமைச்சராக இருந்த போது, 1990 ஆண்டு மே நாளை விடுமுறை நாளாக அறிவித்தார்.

சிகாகோ நகரில் உயிர் துறந்த தொழிலாளர்களின்  நினைவாகத்தான் சர்வதேச தொழிலாளர் நாள், மே மாதம்  கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இது நடந்த   அமெரிக்காவில்,  தொழிலாளர் நாள்   செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று  கொண்டாடப்படுகிறது. 1894 ஆம் ஆண்டு, சிகாகோவின்  புல்மேன் கம்பெனி ( Pullman strike) தொழிலாளர்களின் வேலைநேரத்தைக் கூட்டி, சம்பளத்தைக்  குறைத்தது. இதனை எதிர்த்து நடந்த வேலைநிறுத்தத்தில்  மூன்று மாதம் சாலை, இரயில் போக்குவரத்து நிலைகுலைந்தது. இதனைக் காரணமாக வைத்து, தொழிலாளர் நாளை செப்டம்பர் மாதத்திற்கு  மாற்றிவிட்டார்கள்.மேலும் 1958 ஆண்டு முதல், மே ஒன்றாம்  நாளை அமெரிக்காவில் சட்டநாளாக அறிவித்து  விட்டார்கள். தொழிலாளர் நாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் எண்ணமே இதற்கு காரணமாகும்.

ஏஐடியுசியின் நிர்வாகியான ம.இராதாகிருஷ்ணன் இது குறித்துப் பேசும்போது  “இன்று ஸ்வீடன், நெதர்லாந்து, ஜெர்மனி, நார்வே,டென்மார்க், பெல்ஜியம்,ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் நாளொன்றுக்கு தொழிலாளர்கள் ஆறுமணி நேரமே வேலை செய்கிறார்கள். உலகின் பல நாடுகள் மே ஒன்றாம் நாளுக்கு விடுமுறை அளித்துள்ளன. அன்றைய தினம்,  தொழிலாளர்கள் தங்களுக்காக இரத்தம் சிந்திய சிகாகோ  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்து வருவதை முன்னிட்டு, உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) ‘அனைவருக்கும் இலவசமான தடுப்பூசி’ என்பதை கோரிக்கையாக வலியுறுத்தி உள்ளது .”நமது போராட்டங்களில்தான் நம்பிக்கை இருக்கிறது” (Hopes lies in our Struggles) என்பது இந்த ஆண்டின்  முழக்கமாக இருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

1936 ம் ஆண்டு பிரெஞ்சு இந்தியாவில், பாண்டிச்சேரி  ரோடியர் ஆலையில் எட்டு மணிநேர வேலைக்காக நடந்த போராட்டத்தில் 12 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள். அதன்பிறகுதான் 1936 ஆம் ஆண்டு முதல்,   ஆசியாவிலேயே முதன்முதலில் பாண்டிச்சேரி தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை என்பதில் வெற்றி பெற்றார்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏஐடியுசி,  நாளொன்று ஆறு மணி நேரமாக வேலைநேரம் இருக்க வேண்டும் என்பதை தனது வேலைத்திட்டமாக வைத்துள்ளது. வேலை நேரம் குறைவதால் தொழிலாளர்களின் பணித்திறன் சிறப்பாக இருப்பதாகத்தான் ஆய்வுகள் சொல்லுகின்றன” என்றார்.

”வளர்ச்சியைத் தடுத்து, நாட்டைப் பின்னுக்கிழுத்திடும் வகையில் பொதுத் துறையைத் தனியாருக்கு விற்பதும், உயிர்காக்கும் தொற்று நோய் தடுப்பூசி உற்பத்தியைக் கூடத் தனியாரிடம் விட்டுவிட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்பவர்களாக இன்று திரு. மோடி தலைமையில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள்.

படித்து, கூடிவாழ்ந்திடக் கற்று, சமத்துவச் சமூகம் படைத்திடும் கனவுடன் பள்ளிக்கு வரும் குழந்தையை, குழந்தைத் தொழிலாளியாக்கும் நயவஞ்சகத்தைத் தேசியக் கல்விக் கொள்கை 2020 வாயிலாக நிறைவேற்றத் துடிக்கிறது ஆளும் வர்க்கம்.

மண்ணையும், விவசாயத்தையும், நம் உணவையும், ஏக போக முதலாளிகளாக விளங்கும், பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கிவிடாமல் காத்திட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுப் போராடி வருகிறார்கள். இவையாவும் வெற்றி பெற இந்த மே தினத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time