36,000 தொழிலாளர்களின் வைசாக் ஸ்டீல் ஆலையை விற்பதா? -கொந்தளிக்கும் ஆந்திரா!

-சாவித்திரி கண்ணன்

விவரிக்க முடியாத அதிர்ச்சி,கொந்தளிப்பு. போராட்டங்கள் என ஆந்திரா அல்லோலகலப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறையான விசாகப்பட்டிணம் ஸ்டீல் உற்பத்தி ஆலையை – 36,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 40,000 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் வி.எஸ்.பியை பாதுகாத்தே தீருவது என்று ஆந்திரா போர்க்கோலம் பூண்டுள்ளது!

வைசாக் ஸ்டீல் ஆலை 1970 ல் இந்திராகாந்தியால் திட்டமிடப்பட்டு நீண்ட நெடிய அடித்தள வேலைகள், தியாகங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்டதாகும். இதற்கு அன்றைய சோவியத் ரஷ்யா பேருதவி செய்தது! இது மட்டுமின்றி உள்ளூர் மக்கள் பலர் தங்கள் நிலத்தை தானமாக தந்துள்ளனர். அதிலும் குப்பம் ஜமீந்தார் தன்னுடைய 6,000 ஏக்கர் நிலத்தை அப்படியே எடுத்து தானமாக தந்தார். இதெல்லாம் பொதுநலன் சார்ந்து எழுந்த உணர்வால் தான்! சுமார் 33,000 ஆயிரம் ஏக்கரில் உருவாக்கப்பட்ட இடத்தில் ஆலை மட்டுமே 19,700 ஏக்கருக்கு விரிந்து,பரந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ஆலையை சுற்றிலும் செழிப்பான நகர உருவாக்கம் ஏற்பட்டு, அங்கு சகலவித கோயில்களும்,விளையாட்டு அரங்கங்களும்,கலாச்சார அமைப்புகளுமாக சுமார் அரை நூற்றாண்டு காலமாக ஆந்திர மக்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது. ’’இப்படியான இந்த ஆலையை நாங்கள் உயிரைக் கொடுத்தும் காப்பாற்றுவோம்!’’ என்கிறார்கள் ஆந்திர மக்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் படிப்படியாக தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் பாஜக அரசு தீவிரமாக இயங்கி வருகிறது! அதன் ஒரு பகுதியாக ஆந்திராவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் விசாகபட்டிணம் இரும்பு எக்கு ஆலையை தனியாருக்கு விற்கும் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்ததில் இருந்து, ஆந்திரா கொந்தளித்துக் கொண்டு நிம்மதி இழந்துள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்,பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து வைசாக் எக்கு ஆலை பாதுகாப்பு கமிட்டி உருவாக்கி, மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன! இந்த போராட்டங்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருவதால் ஆந்திரா பாஜகா, மத்திய அரசின் நிலைக்கு ஆதரவு காட்ட முடியாத தர்மசங்கடத்தில் உள்ளது! ஜெகன்மோகன் ரெட்டியும் இதில் மோடியை ஆதரிக்கமுடியாமல் உள்ளார். அதே சமயம் தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை தட்டிக் கேட்டு எதிர்க்காமல் வாய் ஜாலம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை இந்த ஆலை நல்ல லாபத்தில் தான் இயங்கியது. பாஜக பதவி ஏற்றது தொடங்கி பொதுத்துறை நிறுவனங்களை அலட்சியப்படுத்தி வருவதால் இந்த ஆலை படிப்படியாக நஷ்டமடையத் தொடங்கியது.

’மிக லாபகரமாக செயல்பட்ட இந்த ஆலையை நஷ்டமடைய விடமாட்டோம்’ என தொழிலாளர்கள் ஒன்றுபட்டு கடும் உழைப்பை ஈந்து 2018-19 ஆண்டு 96.7 கோடி லாபம் ஈட்ட வைத்தனர். ஆனால், இப்படியே போனால், ஆலை லாபத்தில் வந்துவிடும். ஆகவே விற்பதில் சிக்கல் வந்துவிடும். நஷ்டமடைந்தால் தான், அதை காரணம் காட்டி ஆலையை தனியாருக்கு தரமுடியும் என்று சூழ்ச்சி செய்து 2019-2020 ஆண்டு 3,319 கோடி நஷ்டத்திற்கு தள்ளியது மோடி அரசு! அத்துடன் கொரானா காலத்தில் ஆறு மாதங்கள் ஆலையின் மூன்றில் இரு பங்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், மீண்டும் திறக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் உற்சாகமாக வந்து பணியாற்றி டிசம்பர் 2020 மட்டும் 212 லாபம் கொண்டு வந்தனர். அதுவும் இரண்டே மாதங்களில் சாதனை அளவாக ரிக்கார்டு பிரேக்காக 20,400 டன்கள் ஹாட்மெட்டல் உற்பத்தி செய்து காண்பித்தனர்.

எது நடக்கக் கூடாது என்று பயந்தார்களோ..,அதை துளியும் கூச்சமில்லாமல் பாஜக பிப்ரவரி 2021 ல் அறிவித்தது! பல லட்சம் கோடி பெறுமான இந்த ஆலையை தனியாருக்கு 1,300 கோடிக்கு விற்பதாக அறிவித்தது. காரணம் கேட்டால் ஆலை ஏற்கனவே 22,000 கோடி கடனில் இருப்பதாகவும், அதற்கு ஆண்டுக்கு 14% வட்டி கட்டிவருவதாகவும் தெரிவித்தது.

உண்மை என்னவென்றால், இந்த ஆலை 2009 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது. அதற்கு திட்டமிட்டதற்கும் அதிகமாக கூடுதல் செலவாகிவிட்டது. மோடி அரசு பதவி ஏற்றதும் திட்டமிட்டு ஆலைக்கு நஷ்டம் உண்டாக்கும் நடவடிக்கைகள் கண்கூடாக அரங்கேறின! அப்படி இருந்தும் கூட ஆண்டுக்கு 7.3 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி செய்யக் கூடிய ஒரே பெரிய இந்திய நிறுவனம் இது தான்! 2020-21 ஆம் ஆண்டு கூட இதன் ஸ்டீல் விற்பனை 17,000 கோடியை தொட்டது. அப்படியிருக்க இதை ஏன் விற்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கேட்கின்றனர்.

அந்திராவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, ’’தொழிலாளர்களுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.அவர், வைசாக் ஸ்டீல் பிளாண்ட் ஆந்திர மக்களின் உழைப்பிற்கும், தியாகத்திற்குமான சின்னமாக திகழ்கிறது. அதை விற்பது ஆந்திராவின் சுயமரியாதையையும்,உரிமையையும் கேள்விக்கு உள்ளாகுவதாகும்! ஆகவே, நாம் கட்சிகளை கடந்து இதற்கு ஆதரவு கரம் சேர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time