ஆட்சி நிர்வாகத்தில் திமுக எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!

-சாவித்திரி கண்ணன்

திமுக தனித்து ஆட்சி அமைக்குமளவுக்கான இடங்கள் வரும் என்பது உறுதியாகிவிட்டது!

மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் திமுக பதவி ஏற்கவுள்ளது. ஸ்டாலின் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் என்ன? அரியணை ஏற்றிய மக்கள் திமுகவிடம் எதிர்பார்ப்பது என்ன..?

1996 க்கு பிறகு நடந்த எந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக 100 இடங்களைக் கூட தொட முடியாத நிலை இருந்தது. கால் நூற்றாண்டு கடந்து இந்த தேர்தலில் திமுக ஒரு தனிப்பெரும் கட்சியாக வாகை சூடுகிறது!

திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்;

# பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியின் மீதான கோபமும், மதவெறி மீதான அச்சமும் திமுகவுக்கு ஓட்டுப்போடும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியது.

# அதிமுக ஆட்சியின் அளவு கடந்த ஊழல்களும், அது பாஜாவுக்கு துணை போவதும்!

# தமிழகத்தில் அதிகரித்து வரும் வட இந்தியர்களின் குடியேற்றங்கள்! பறிபோகும் வேலை வாய்ப்புகள்!

இப்போது வந்துள்ள நிலவரப்படி அதிமுகவின் செல்வாக்கு ஒன்றும் அடியோடு பறிபோகவில்லை என்பதும் அந்தக் கட்சிக்கான ஒரு நிரந்தர ஓட்டு வங்கி நீர்த்துப் போகவில்லை என்பதும் உறுதிப்படுகிறது!

பெரும்பாலான ஊடகங்கள் அதிமுக ஆதரவு நிலையில் இருப்பதால், அதிமுகவின் ஊழல்கள் சரியாக வெளிப்படவில்லை. அதிமுகவின் பண அரசியல் ஊடகங்களை மட்டுமல்ல, மக்களையும் ’கரப்ட்’ ஆக்கிவிட்டது.

எடப்பாடி தொகுதியில் கடைசியாக ஒரு குடும்பத்திற்கு நாற்பதாயிரம் என்ற அளவில் பண விநியோகம் நடந்துள்ளது. அது தான் எக்குத்தப்பாக எடப்பாடியார் வெற்றிபற வழி சமைத்துவிட்டது. அதிமுகவில் பன்னீர்செல்வம் தொடங்கி வேலுமணி, விஜயபாஸ்கர் வரை பணத்தை முதலீடாக்கி வெற்றியை விலைபேசி வாங்கி வெற்றி பெற்றுள்ளனர்! ஆனால், எவ்வளவு பணம் செலவழித்தும் டி.டி.வி தினகரன் வெற்றி பெறாதது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லது!

உதயநிதி ஸ்டாலின் முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்று இருப்பது வாரிசு அரசியல் என்பது அவரது அரசியல் பாதைக்கு தடையாகிவிடவில்லை என்பது உறுதிப்படுகிறது. இனி தன் பெர்பாமன்ஸ் மூலம் தான் அவர் தனது வெற்றிக்கான நியாயத்தை நிலை நிறுத்த வேண்டும். மருத்துவர் எழிலன் போன்ற திராவிட சித்தாந்த தெளிவுள்ள, அறிவார்ந்த இளைஞர்கள் சட்டமன்றத்திற்கு வருவது நல்லதே! குஷ்புவின் சந்தர்ப்பவாத சாக்கடை அரசியலுக்கு மக்கள் சரியான சாட்டையடி தந்துள்ளனர். காங்கிரசில் தொடர்ந்திருந்தால், இந்த சட்டமன்றத்தில் அவர் இடம் பெறும் வாய்ப்பு அமைந்திருக்கும். அன்பில் பொய்யாமொழி, ஆவடி நாசர்,மதுரை தியாகராஜன் ஆகியோரின் வெற்றி ஆரோக்கிய அரசியலுக்கான திறவுகோலாகட்டும்!

மிகக் கடுமையாக பாடுபட்டும் தங்கதமிழ் செல்வனால் ஓ.பி.எஸ்சின் பண அரசியல் பலத்தை வீழ்த்தமுடியவில்லை! திமுகவில் தொண்டாமுத்தூர் கார்த்திகேசு சிவத்தம்பி வெற்றிபெறாமல் போனது வருத்ததிற்கு உரியதே! சுற்றுச்சூழல் அக்கறையுள்ள இவரைப் போன்றவர்கள் சட்டமன்றத்திற்கு வரமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே!

முழுமையாக தேர்தல் முடிவு வந்த பிறகு மற்றவற்றை எழுதுகிறேன்.

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கிறது. கொரானா பெருந்தொற்று நிலைமைகளை எதிர்கொண்டாக வேண்டும். சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டும். மத்தியில் உள்ள பாஜக அரசை பகைக்காமலும், அதே சமயம் அடி பணியாமலும் கம்பி மீது நடப்பது போன்ற லாவகத்துடன் ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு உள்ளது. அதனால், டெல்லி அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை தரும் பட்சத்தில் பாஜகவிற்கு பணிய வேண்டாம். தேவை ஏற்படும் போது பாஜகவை எதிர்க்கத் தயங்காதீர்கள். தயங்கினால் மக்கள் ஆதரவை இழப்பீர்கள். உறுதியாக இருந்தால் மம்தாவை போல மீண்டும் மகுடம் சூடலாம் என்பதை நினைவில் வையுங்கள்! திமுகவிடம் மக்கள் எதிர்பார்ப்புகள் சிலவற்றை நினைவூட்டுகிறேன்;

# நேர்மையான – வெளிப்படையான நிர்வாகம்.

# சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

# தகவல் பெறும் உரிமை சட்டத்தை வலுப்படுத்த நல்ல ஆணையரை நியமிக்க வேண்டும்.

# ஊழல் பேர்வழிகளை அமைச்சர் ஆக்காமல் தவிர்க்கப் பாருங்கள், புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பளியுங்கள்.

# வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள்

# மின்சாரத் துறையில் தனியார் முதலீட்டை தவிர்த்திடுங்கள்.

# சுகாதாரத்துறையில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் ஆகியோரை ஒப்பந்த ஊழியர்களாக நடத்தாமல் நிரந்தர பணியாளர்களாக்கி வேலை வாங்குங்கள்!

# ஒப்புசப்பாக இல்லாமல் ஏரி,குளம் போன்ற நீர் நிலைகளை உண்மையாகவே தூர்வாரி விவசாயம் தழைக்க உதவுங்கள்!

# ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துகளை மீட்டு எடுங்கள்! பாழடைந்த கோவில்களை மக்கள் பங்களிப்புடன் நகொடைகள் பெற்று புனருத்தாரணம் செய்யுங்கள்!

# பதவியில் இல்லாத குடும்ப உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடாமல் தவிர்த்திடுங்கள்.

# காவல்துறை நிர்வாகத்தில் கட்சி தலையீடுகள் அற்ற நிலையை உறுதிபடுத்துங்கள்!

# நில அபகரிப்பு புகாருக்கு ஆட்படுபவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை தாருங்கள்.

இதற்கு மேலும் வழவழவென்று எழுதுவதை தவிர்த்து சந்தர்ப்பம் வரும் போது எழுதுகிறேன். வாழ்த்துகள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time