அடேங்கப்பா..
ஆடிய ஆட்டமென்ன..?
பேசிய பேச்சுக்கள் என்ன…?
கட்டமைத்த பிம்பங்கள் என்ன…?
எல்லாவற்றுக்கும் மக்கள் தீர்ப்பு தந்துவிட்டார்கள்! தன் சுயபலத்தை உணராத இந்த சூனியத் தலைமைகள் ஏதோ தமிழகத்தின் எதிர்காலத்தையே தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் போல – வெற்றி தோல்விகளே இவர்களிடம் விலாசம் வாங்கித் தான் பயணிக்கும் என்பது போல – அளந்துவிட்டார்கள்!
அதுவும் இந்த தேமுதிக காட்டிய திமிர் இருக்கே..! அப்பா, யப்பா அப்பப்பா…!
ஆனானப்பட்ட கேப்டனே ஆப் ஆயிட்டாரு எனும் போது இந்த அல்லகைகள் அமைதி காத்து அடக்கமாக இருந்திருந்தால் கூட, அவர்களுக்கான ஒரு அரசியல் வாழ்க்கை தொடர்ந்திருக்கும்.
‘அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் சேர்த்துவிடும்’
என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!
இது அப்படியே பலித்துவிட்டது பிரேமலதா, டி.டி.வி.தினகரன்,கிருஷ்ணசாமி ஆகியோருக்கு!
தேய்ந்து காணாமலான தேமுதிக;
இந்த கட்சி எதற்காக உயிர்திருக்க வேண்டும்! இது உயிர்திருப்பதில் பலன் பெறும் மக்கள் பிரிவினர் யாரேனும் உள்ளனரா..? என்ன கொள்கை..? சமூகம் குறித்த பார்வை என்ன..? எதுவும் கிடையாது. எல்லாம் பூஜ்ஜியம்! நரேந்திர மோடியை தமிழர்களின் தன்மானத் தந்தை பெரியாருக்கு இணையானவர் என பிரேமலதா புகழ்ந்த போதே புரிந்து போனது இவர்களின் அரசியல் மேதமை!
சென்ற சட்டமன்ற தேர்தலில் 2.4% ஓட்டுவாங்கியதை அளவுகோலாக வைத்து, இந்த கட்சிக்கு தகுதிக்கு மீறி 13 சீட்டுகள் கொடுக்க முன் வந்தார் எடப்பாடி பழனிச்சாமி! அதிமுகவின் நல்ல காலம் தேமுதிக 41 தொகுதிகள் கேட்டு, பிறகு 23 என்பதாக இறங்கி வந்து, கடைசியாக பதிமூன்றை ஏற்கமுடியாதென முரண்டுபிடித்து மூர்க்கமாக வெளியேறி போய்விட்டது! அப்படியே 13 தொகுதிகள் வாங்கி நின்று இருந்தாலும் ஜி.கே.வாசன் கட்சியைப் போல அனைத்து தொகுதிகளையும் கண்டிப்பாக பறிகொடுத்திருப்பர்!
2006 தேர்தலில் 8.4% வாக்குகள்! 2009 ல் 10.4% வாக்குகள்! 2011 ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததில் மீண்டும் பின்னோக்கி சரிந்து 8 % மாக குறைந்தனர்! அதன்பிறகு படிப்படியாக தாங்கள் வாக்கு வங்கி சரிவதை குறித்த சுயபரிசோதனையில் இறங்க மறுத்து, அகங்காரத்துடன் வலம் வந்த தேமுதிக, இந்த தேர்தலில் 0.45% வாக்குகளே பெற்றுள்ளது!
இந்த லட்சணத்தில், ‘’பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் முதலில் அழைத்தீர்கள்..? பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’’.
‘’எங்களை எப்போது அழைப்பீர்கள் கூட்டணி பேச..’’?
‘’எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு!’’
‘’எடப்பாடிக்கு அரசியல் பக்குவம் இல்லை!’’
இவை எல்லாம் ஆத்தா பேசியவை என்றால், குட்டி 16 அடி பாய்ந்து அதிமுக தலைவர்களை தாக்கியது. அ.திமுக தலைவர்களின் அரசியல் அனுபவத்தைக் காட்டிலும் மிகக் குறைவான வயதில் உள்ள பிரபாகரன் அதிமுகவையும் அதன் தலைவர்களையும் ஆணவத்தோடு விமர்சித்தார்! பிரேமலதாவின் தம்பி சுதீஸ் ஸ்காட்லாந்து பிரதமர் ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக் கொண்டு, அதிமுக தலைவர்களை மட்டமாக பேசினார்!
விஜயகாந்தின் திரை பிம்பத்தை வைத்து உருவான கட்சி தான் தேமுதிக! திரைபிம்பம் என்பது மக்களிடையே நல்ல முன் அறிமுகத்தை தர உதவலாம். ‘வாய்ப்பு தந்து பார்க்கலாமே’ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம். ஆனால், கிடைத்த வாய்ப்பில் மக்கள் நலன் சார்ந்து இயங்காமல், சுய ஆதாயம் செய்தால், காணாமல் தான் போக வேண்டும்!
இப்போது ஸ்டாலினை எடுத்துக் கொண்டால் அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற கண்டிப்பாக கருணாநிதி தான் காரணம்! மறுக்கமுடியாது. ஆனால், அவரின் தற்போதைய வெற்றி என்பது முற்றிலும் அவரது சொந்த முயற்சி தான்!
கறுப்பு பணத்தில் உருவான கட்சி அமமுக;
அதிமுகவை மிரட்டி பணிய வைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சி தான் இது! சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதா ஆட்சியை பயன்படுத்தி முப்பது ஆண்டுகளாக தமிழகத்தை சுரண்டி சேர்த்து வைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் அமமுக! ‘மேலும் சுரண்டும் வாய்ப்பு தங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே…’ என்ற ஆத்திரமும், ஆற்றாமையும் சேர்ந்த கலவையாக டிடிவி தினகரன் கட்சி நடத்தினார். இப்படிப்பட்ட இந்தக் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்க்க பாஜக படுபிரயத்தனம் செய்தது!
தாங்கள் அடிக்கிற கொள்ளையில் எல்லாம் சசிகலா குடும்பத்திற்கு பங்கு தந்து, இல்லையில்லை.., கப்பம்கட்டி அலுத்துப் போன அதிமுக தலைவர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு, சசிகலா குடும்பத்தை தள்ளி வைத்தனர்! ஆனால், ‘’சசிகலா தான் அதிமுகவை வழி நடத்த முடியும்’’. ‘’அவர் இல்லாவிட்டால் அதிமுகவை காப்பாற்ற முடியாது’’ என ஊடக நண்பர்கள் பலர் தொலைகாட்சிகளில் தொண்டை வரள பேசி வந்தனர். பத்திரிகைகள் சிலவும் கச்சைக் கட்டிக் கொண்டு எழுதின! அமமுக தனித்து நிற்பதன் மூலம் அறுபது தொகுதிகளில் அதிமுக தோற்கும் என்றனர்.
அப்படி ஒரு பூதாகர தோற்றம் காட்டிய தினகரனால், தான் நின்ற கோவில்பட்டி தொகுதியில் கூட அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறிக்க முடியவில்லை! அவர் முன்பு நின்று ஜெயித்த ஆர்.கே. நகர் தொகுதியில் அமமுக படுமோசமாக ஓட்டுவாங்கி டெபாசிட்டையே பறி கொடுத்துவிட்டது!
பொய், பித்தலாட்டம், கபடு, சூது..ஆகியவற்றின் ஒட்டுமொத்த கலவையான அமமுக, பல தொகுதிகளில் நோட்டாவிற்கும் கீழாக ஓட்டு வாங்கியுள்ளது! இனி சசிகலாவின் குடும்பத்தை முற்றிலும் அரசியலில் இருந்து ஒதுக்கிவைக்கும் நல்ல முடிவை அதிமுக எடுக்க தூண்டுதலாக இருந்த டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்துகள்!
நோயாளியாகிப் போன டாக்டர்;
இந்த தேர்தலில் ‘’ஐயோ..பரிதாபம்…’’ எனப் போனவர் ஒருவர் உண்டென்றால், அது டாக்டர்.கிருஷ்ணசாமி தான்! உழைக்கும் மக்களான தேவேந்திரகுல வேளாள மக்களுக்கு தான் ஒருவனே ஏகப் பிரதிநிதி என்பது போல ஆதாய அரசியல் செய்தவர் கிருஷ்ணசாமி! தன் சாதி மக்களையே சமத்துவமாக நடத்தமாட்டார். அந்த எளிய, சுயமரியாதையுள்ள மக்களை தொடர்ந்து வஞ்சித்து, சுயநலம் சார்ந்த சாதி அரசியல் செய்து ஆடம்பர,பகட்டு,பந்தா காட்டி வந்த கிருஷ்ணசாமியை அவரது ஒட்டபிடாரம் தொகுதி மக்கள் போனால் போகட்டும் என்று ஐயாயிரத்து சொச்சம் வாக்குகள் கொடுத்து மூலையில் உட்காரவைத்துவிட்டனர். இதைவிடக் கொடுமை, அவர் கட்சியின் மற்ற வேட்பாளர்ககளில் சிலர் ஆயிரம் ஓட்டுகளைக் கூட பெறமுடியவில்லை! இந்த தோல்வியை சந்திக்க பயந்து தான் கிருஷ்ணசாமியின் மகன், ’’வாக்கு எண்ணிக்கை தற்போது நடத்தக் கூடாது’’ என்று பேசினார்! இனிமேலாவது தேவேந்திரகுல சாதியை வைத்து பிழைப்பு நடத்த யாரும் வரமாட்டார்கள் என நம்புவோமாக!
Also read
வாசமில்லா மலரிது…!
ஜி.கே வாசனைப் பற்றி பேசுவது வீண்! அடாவடி, அதிரடி அரசியல் செய்யத் தெரியாதவர் என்றாலும் படுகாரியவாதி! மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பும் இல்லாதவர். அவரது தகுதிக்கும் பல மடங்கு மேலான பதவிகள் தந்து, அவரை காங்கிரஸ் கட்சி கெளரவமாக வைத்திருந்தது. கோஷ்டி அரசியல் செய்து கட்சியையே கபளிகரம் செய்ய நினைத்தார். அவரது பேராசையால் காங்கிரசில் அவரால் நிலைக்க முடியாமல் வெளியேறினார்! அது தொடங்கி, அவருக்கு அரசியல் இறங்குமுகமாகத் தான் உள்ளது! தன் நெருங்கிய சகாக்களை இழந்தார். கடைசி தேர்தலில் அவர் கட்சி பெற்றது வெறும் 0.5% வாக்குகள் தான்! அதற்கேற்ப வெற்றிவாய்ப்புள்ள ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு, நின்று இருந்தால் அந்த தொகுதிகள் வரைக்கும் கடுமையாக உழைத்து வந்திருக்கலாம்! அந்தக் கட்சி வாங்கிய ஓட்டுகளை சொல்லவே கூசுகிறது! அய்யோ பாவம்! காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ததன் விளைவை வாசன் தற்போது அனுபவிக்கிறார்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply