‘’மேற்கு வங்கம் இந்தியாவை காப்பாற்றிவிட்டது’’ என்று மம்தா பானர்ஜி சொன்ன வார்த்தைகள் சத்தியமான உண்மை! இந்தியாவின் கலாச்சார தலைநகரமான மேற்குவங்கத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட நாள் பெருங் கனவு!
இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கத்தின் ஸ்தாபகரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த மண்ணில் பாஜகவிற்கு இடமில்லையே’ என்ற ஆதங்கம், ஆற்றாமை பாஜக தலைவர்களுக்கு நிறையவே உண்டு.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது மேற்குவங்கத்தை பெருங் கொலைக் களமாக்கியவர் இந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி! சூமுகமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் சிக்கலை கர்ண கொடூரமாக்கி, அங்கே அரசபயங்கரவாதம் காலூன்ற காரணமானவர்! அகண்ட இந்தியாவுக்கான விதையை தூவியவர். இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்கும் பெரு நெருப்பை ஏற்றி வைத்த அந்த பிதாமகன் தோன்றி, வாழ்ந்த பூமியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் தீரா வேட்கையாகும்! அந்த வேட்கை நிறைவேறும் பட்சத்தில் தான் தங்களுக்கு இந்தியாவையே தங்கள் வேட்டைக் காடாக்கிக் கொள்ள முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்!
ஆனால், மேற்குவங்க மக்களின் இயல்பே அதற்கு பெருந்தடையாக இருக்கிறது. காந்தியத்தின் வேர்கள் ஆழமாக வேரூன்றிய மண் வங்க பூமி! காங்கிரசின் அரும்,பெரும் தியாங்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற பூமி. பொதுவுடமை சித்தாந்தம் பூத்துக் குலுங்கிய பூமி. இஸ்லாமிய மக்கள் அதிகமாகவும், இணக்கமாகவும் வாழும் மண்! அது எப்படி இந்துத்துவத்தின் பாஸிச கோட்டையாக மாறும்?
ஆனால், ‘’முடியாது என்பதைக் கூட தொடர்ந்து இடைவிடாமல் முயற்சித்துக் கொண்டே இருந்தால்
அடிமேல் அடி வைத்து அணுவணுவாக திட்டமிட்டு நகர்ந்தால் ஆகாதது எதுவும் இல்லை..!
ஆகவே, வங்க மண் நம் வசம் வந்தேயாக வேண்டும்’’ என ஆர்.எஸ்.எஸ் கடுமையாக களப் பணியாற்றியது. அதன் களப் பணிகளுக்கு பல கம்யூனிஸ்டு தலைவர்களே களப் பலியாயினர்! கம்யூனிஸ்டு கோட்டையிலிருந்து செங்கல்களை உருவி காவிக் கோட்டையின் கட்டுமானம் நடந்தது! இந்த சுழல்களிலும் விலை போகாத மாணிக்கங்கள் அதை எதிர்த்து போராடினர்.போராடி வருகின்றனர்.
வாழ்க்கையில் எந்த ஒரு சூழல் ஏற்ப்பட்டாலும் அதை எதிர்த்து போராட தீய சக்திகளோடு கைசேர்க்கக் கூடாது என்பதற்கு திரிணமுள் காங்கிரஸ் தற்போது பாஜகவால் சந்தித்த கொடூரங்களே அத்தாட்சி! கடந்த காலத்தில் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க பாஜகவுடன் கூட்டு கண்டார் மம்தா! அதன் மூலம் வங்க மண்ணில் அறுப்பட்டிருந்த தன் வேர்களை மீண்டும் ஆழப்படுத்த ஆரம்பித்தது பாஜக. தீய சக்திகளின் இயல்பு தங்களை ஆதரித்தவர்களையே உண்டு செரித்து, தங்களை ஆகப் பெரிய சக்தியாக்கிக் கொள்வதாகும்!
அது தான் மேற்கு வங்கத்தில் நடந்தது! மம்தாவை பலவீனப்படுத்த அவரது முதல் போர்ப்படை தளபதியும், நெருங்கிய சகாவுமான முகுல்ராயை அவரிடமிருந்து தூக்கினர்! அதன் பிறகு அவரது மற்றொரு தளபதியான சுவேந்து அதிகாரியை தூக்கினர்.
இது போல அடுத்தடுத்து முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள், ஐந்து எம்.பிக்கள், இருபதுக்கு மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் என ஆள்தூக்கும் படலத்தை நடத்திய வண்ணம் இருந்தனர். ! ஆதிவாசிகள், பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஊடுருவி அவர்களில் சிறந்த ஆளுமைகளுக்கு பணம், பதவி, வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தந்தனர். மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட வங்க மண்ணின் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களை விலைபேசி கட்சியில் சேர்த்தனர்.இதற்காக சில ஆயிரம் கோடிகள் கூட செலவழித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இத்துடன் நிற்காமல் வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகிய அமைப்புகளைக் கொண்டு மம்தா ஆதரவாளர்களை எல்லாம் அவரிடமிருந்து பிரித்தனர். போதாக்குறைக்கு கவர்னரை வைத்து பயங்கரமான குடைச்சல் தந்தனர். பாஜக மேலிடத் தலைவர்கள் அடிக்கடி வங்கம் வந்து டேரா போட்டு பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி வங்கத்திற்கு விசிட் அடித்து வன்மத்துடன் பிரச்சரம் செய்தனர்!
”மம்தாவை தனிமைப்படுத்திவிட்டோம் ஐயோ பாவம் அவர் காலி மைதானத்தில் நிற்கிறார். அவர் யாருமற்ற அனாதையாக்கபடுவார்’’ என்றார் அமித்ஷா.
‘’ தீதி…. இனி நீ காலி..’’ என்று திரைப்பட வில்லன் பாணியில் குரலை தாழ்த்தியும், உயர்த்தியும் நக்கலாக மோடி பேசினார்.
இப்படி அனைத்து முனைகளிலும் இருந்து மம்தா மீது அவர்கள் வீசிய அம்புகளின் வலியோடு மம்தா மக்களிடம் ஆதரவு கேட்டார். வெளியில் இருந்து வந்த சக்தியான பாஜக நம் மண்ணின் மகளை வதைப்பதா..? அதை நாம் சும்மா வேடிக்கை பார்ப்பதா..? என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
‘’வங்கத்தின் மகளுக்கே நம் ஓட்டு.’’
‘’அந்நிய சக்திகளை ஆளவிடமாட்டோம்’’
என்ற கோஷங்களை திரிணமுள் காங்கிரஸ் முன் எடுத்தது!
பாஜகவினர், ‘’ஜெய் ராம்’’ என்றால்,இவர்கள் ‘’ஜெய் காளி’’ என்றனர். தீய சக்திகளை வதம் செய்பவள் காளி என்ற கோணத்தில் இந்த கோஷம் நல்ல வரவேற்பு பெற்றது! மற்றபடி மதச்சார்பின்மையில் மகத்தான உறுதிப்பாடுள்ளவர் மம்தா. பாஜக, மம்தா மீது வைக்கும் குற்றச்சாட்டே இவர் சிறுபான்மை ஆதரவாளர்..என்பது தான்! ஆனால், அந்த குற்றச்சாட்டு பெரும்பான்மை இந்துக்களிடம் எடுபடவில்லை.
ஒரு சாதாரண பருத்தியிலான வெள்ளைப் புடவை, காலில் ஒரு ஹவாய் செருப்பு, கழுத்திலும், காதிலும் ஆடம்பரமில்லாத நகைகள், தெருவோர தேனீர் கடையில் நின்று தேனீர் வாங்கி பருகும் எளிமை இயல்பு, மக்களோடு மக்களாக பழகும் குணம்..! இப்படிப்பட்ட மம்தாவை மக்கள் எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? அவரிடமும் பல பலவீனங்கள் உள்ளன. ஊழல்வாதிகளுக்கு அடைக்கலம் தந்துள்ளார், அதீத கோபம், சில நேரங்களில் தன்னிச்சையாக செயல்படும் சர்வாதிகாரப் போக்குகள்..ஆகியவற்றுக்காகவும் மம்தா கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.
‘’ஆயிரம் குறைகள் இருந்தாலும், நமக்காக போராடும் நம் மண்ணின் மகளை நாம் விட்டுத் தரமுடியாது. மதவெறி சக்திகள் காலூன்ற அனுமதியோம்’’ என வங்க மக்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்து முடிவெடுத்து இந்த தேர்தலில் மம்தாவை வெற்றி பெற வைத்துள்ளனர்.
Also read
‘பாஜகவிற்கு எதிரான ஓட்டுகள் சிதறக் கூடாது’ என்ற ஒற்றை கொள்கையுடன், விருப்பம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வாக்காளர்களே கணிசமாக மம்தாவிற்கு வாக்களித்ததாக தெரிய வருகிறது. பல தொலைக்காட்சி பேட்டிகளில் இடது ஆதரவு வாக்காளர்கள், ‘’வன்முறைத் தீயை பாஜக பரப்புகிறது. அந்த பெரு நெருப்பை அனைப்பது ஒன்றே இப்போது நமது முதல் இலக்காக இருக்க வேண்டும். ஆகவே, மம்தாவை ஆதரிக்காவிட்டால் பாஜகவிடம் வங்கம் பறிபோவதை தடுக்க தவறிய பாவிகளாகிவிடுவோம்..’’ என பேசியுள்ளனர். இந்த காரணத்தால் தான் சென்ற 2016 சட்டமன்ற தேர்தலில் 25.69% இருந்த இடதுசாரிகளின் வாக்குவங்கி தற்போது 4.73% மாக குறைந்துள்ளது. அதே போல காங்கிரசின் வாக்குவங்கி 12.3% லிருந்து தற்போது 2.93% மாக குறைந்துள்ளது. இது ஒரு தற்காலிக பின்னடைவே! சட்டமன்றத்தில் அவர்கள் இடம் பெறாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் இயங்கி கொண்டு தான் இருப்பார்கள். அதற்கான தேவை முன்னைக் காட்டிலும் தற்போது அதிகம் உள்ளது!
கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் ஆதரவு மக்கள் திரள் தான் தீதியை பாஜகவிடமிருந்து பாதுகாத்து மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற்றியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை!. ஆகவே, இனியாவது, ‘தன் ஆதரவு சகாக்கள் யார்? உண்மையான எதிரிகள் யார்?’ என்ற புரிதலுடன் மற்ற மதச் சார்பற்ற சக்திகளோடு கைகோர்த்து, அகங்காரத்தை முற்றிலும் தவிர்த்து, பொறுப்பான ஆட்சியை மம்தா வழங்க வேண்டும் என்பது வங்க மக்களின் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பமுமாகும்! பொறுப்பான எதிர்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாக பாஜக நடந்து கொள்ளும்பட்சத்தில் தற்போது அது பெற்றுள்ள அங்கீகாரத்தையும் விரைவில் தொலைக்கும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
சிறப்பு தேசமெங்கும் ஒற்றுமை மலரட்டும் சமூக விரோத சக்திகள் ஒழியட்டும்
”மம்தாவை தனிமைப்படுத்திவிட்டோம் ஐயோ பாவம் அவர் காலி மைதானத்தில் நிற்கிறார். அவர் யாருமற்ற அனாதையாக்கபடுவார்’’ என்றார் அமித்ஷா.
‘’ தீதி…. இனி நீ காலி..’’ என்று திரைப்பட வில்லன் பாணியில் குரலை தாழ்த்தியும், உயர்த்தியும் நக்கலாக மோடி பேசினார்.