பாண்டிச்சேரியில் பாஜகவை அரியணை ஏற்றிய காங்கிரசார்!

-சாவித்திரி கண்ணன்

”தமிழகத்தில் பாஜகவை காலூன்றவிடமாட்டோம்” என்பது தமிழகத்தில் அடிக்கடி உதிர்க்கப்படும் கமெண்ட்!

”இந்தா வந்துட்டோம்ல பாண்டிச்சேரியில!” என்பதாக – அதுவும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூழ்கி திளைத்த மண்ணில் – தற்போது பாஜக கூட்டணி மந்திரி சபை காண்கிறது!

புதுச்சேரி என்ற காங்கிரஸ் கோட்டையில் திமுக, அதிமுக கூட அவ்வளவு சுலபத்தில் அங்கீகாரம் பெற முடியாத நிலையே இத்தனை ஆண்டுகளாகத் தொடர்கிறது! தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவிற்கு ஓரிடம் கூட இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது அரியணை ஏறவிருக்கும் திமுகவிற்கோ அங்கு ஆறு தொகுதிகள் தான் கிடைத்துள்ளது! காங்கிரசோ வெறும் இரண்டு தொகுதிகள் மட்டுமே பெற்றுள்ளது! ஆனால், பாஜகவோ ஆறு தொகுதிகளை அள்ளியுள்ளது!

இப்படியொரு சாத்தியத்தை பாஜகவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் வேறு யாரும் இல்லை – சாட்சாத் காங்கிரசார் தான்! இது நாள் வரை பாண்டிச்சேரியில் வாக்குவங்கியே இல்லாத பாஜகவை வளர்த்து அரியணை ஏற்றியது பாண்டிச்சேரியின் முப்பெரும் தலைவர்களே! இதில் முதலாமவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்  நாராயணசாமி! இரண்டாமவர் காங்கிரசில் நாராயணசாமிக்கு அடுத்த நிலையில் அமைச்சர் பதவி வகித்த நமச்சிவாயம். மூன்றாமவர் முன்னாள் காங்கிரஸ்காரரும் இந்நாள் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி! இதை சற்று விரிவாக பார்ப்போம்;

நாராயணசாமி; புதுச்சேரி அரசியலுக்கே தொடர்பில்லாமல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உதவியாக எடுபிடி அரசியல் செய்து கொண்டிருந்தவர் தான் நாராயணசாமி! 2016 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதல்வர் வேபாளராக நமச்சிவாயத்தை முன் நிறுத்தி தான் தேர்தலை எதிர்கொண்டது. அந்த வகையில் 30க்கு 17 இடங்களில் வென்றது. ஆனால், தீடீரென்று முதல்வராக ஆசைப்பட்டு தன்னை புதுச்சேரி முதல்வராக்கும்படி காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் தந்தார் நாராயணசாமி! டெல்லி அரசியலில் உழன்ற நாராயணசாமியை, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களை, எம்.எல்.ஏக்களை கலந்து பேசாமல் அதிரடியாக முதல்வராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆனால், பலவாறாக சமாதானம் செய்யப்பட்டு நாராயணசாமி திணிக்கப்பட்டார்!

அப்படி நிர்பந்திக்கப்பட்டு முதல்வரான நாராயணசாமி சிறந்த நிர்வாகியாகவும் இல்லை. கடைசி வரை அனைவரையும் அரவணைத்து செல்லவும் இல்லை. கண்டபடி உளறுவது, தன்னிச்சையாக செயல்படுவது, ஆளுனர் கிரண் பேடியுடன் மோதுவது என்றே தன் ஆட்சி காலத்தை கடந்தார். இதனால் காங்கிரஸ் பாண்டிச்சேரியில் மிகவும் பலவீனப்பட்டது! நாராயணசாமி இருக்கும் வரை தங்களுக்கு எதிர்காலம் இந்த கட்சியில் இருக்காது என நினைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வலைவிரித்து பிடித்துக் கொண்டது. இந்த வகையில் அட்ரஸ் இல்லாமல் இருந்த பாஜகவிற்கு காங்கிரஸில் இருந்து பலமான ஆட்களை அனுப்பி வைத்து, அதை வலுப்படுத்திய பெருமை நாராயணசாமியையே சேரும்!

நமச்சிவாயம்; பாரம்பரியமான காங்கிரஸ்காரான இவர் சென்ற முறை முதல்வாராகும் வாய்ப்பு பறிக்கப்பட்டாலும், பொதுப்பணித் துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட 15 இலாக்காக்கள் தரப்பட்டு சமாதானம் செய்யப்பட்டார். ஆனால், ஐந்தாண்டு காலம் ஆட்சியின் பலாபலன்களை நன்கு அனுபவித்துவிட்டு மிக சமீபத்தில் – நாராயணசாமி இருக்கும் வரை தனக்கு காங்கிரசில் எதிர்காலம் இல்லை என விரக்தியடைந்து – பாஜகவிற்கு தாவினார். இவர் தலைமையில் தான் பாஜக தேர்தல் களத்தை எதிர்கொண்டது. இவரும், ஜான்குமாரும் தங்களுடைய பல்லாண்டுகால காங்கிரஸ் செல்வாக்கை பாஜகவிற்கு மடைமாற்றி, அந்த கட்சி புதுச்சேரியில்காலூன்ற வழி  ஏற்படுத்தியுள்ளனர். இப்போதும் நமச்சிவாயத்திற்கு முதல்வராகும் வாய்ப்பு இல்லை.

என்.ஆர்.ரங்கசாமி; இவர் இரண்டு முறை காங்கிரஸ் கட்சியால் முதல்வரானவர். மோசமான நிர்வாகத்திற்கு பேர்போனவர். மனம்போன போக்கில் தனி நபர் சர்வாதிகாரியாக செயல்படுபவர். சதா சர்வகாலமும் அப்பாசாமி பைத்தியம் என்ற சாமியார் நினைவோடு வாழ்பவர்! 2008 ஆம் ஆண்டு உள்கட்சி முரண்பாடுகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவிற்கு காரணமான நமச்சிவாயத்துடன் இன்று பாஜகவின் நிர்பந்தத்தால் கைசேர்த்துள்ளார். சென்ற தேர்தலில் பாண்டிச்சேரியில் நின்ற அனைத்து தொகுதியிலும் டெபாசிட்டை பறிகொடுத்த பாஜகவுடன் கூட்டணி கண்டு, அவர்களுக்கு 9 சீட்டுகள் தந்து, அதில் 5 இடங்கள் வெற்றிபெற வைத்துள்ளார்!

இப்படியாக காங்கிரஸ் கட்சி மூலவர்களான இந்த மும்மூர்த்திகளால் தான் தற்போது பாஜகவானது  பாண்டிச்சேரி அமைச்சரவையில் பங்கு பெறவுள்ளது! காங்கிரஸ் கட்சிக்குள் ஒன்றுபட்டு செயல்பட முடியாத இந்த மும்மூர்த்திகளும் தங்களுக்கு அரசியலில் அடையாளமும், அங்கீகாரமும், அந்தஸ்த்தும் தந்த காங்கிரசை பலவீனப்படுத்தி, பாஜகவை பலப்படுத்துவதில் மட்டும் எப்படியோ தங்களை அறிந்தும், அறியாமலும் ஒன்றுபட்டுவிட்டனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time