டிராபிக் ராமசாமி – பொதுநல வழக்குகளும், விசித்திர குணங்களும்!

-சாவித்திரி கண்ணன்

“யார் தான் இதைத் தட்டிக் கேட்பது?”

என்று மக்கள் ஆதங்கப்படும் பல்வேறு பிரச்சினைகளையும்,

“இதெல்லாம் அப்படித்தான்… யாரும் எதுவும் செய்யமுடியாது”

என மக்கள் நம்பிக்கையிழந்த பல விசயங்களையும் நீதிமன்றங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று போராடி வென்றதில், டிராபிக் ராமசாமி தற்கால தமிழ் சமூகத்தின் மனசாட்சியின் குரலாக வெளிப்பட்டார்!

எந்த முக்கியத்துவமும் கோர முடியாத முகத்தோற்றம், ஐந்தடி உயரம், சாதாரண உடல்வாகு, சட்டைப்பையில் கற்றை கற்றையாக பேப்பர்கள் – இவை பெரும்பாலும் வழக்கு குறித்த மனுக்கள்!

சுறுசுறுப்பான நடை, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு எனப்  பேசும் தன்மை, அதில் வெளிப்படும் உறுதியான தொனி…,  இடையிடையே கொஞ்சம்  சிரிப்பு, சமரசமற்ற குணம், சடாரென்று வெளிப்படும் கோபம், எதற்கும் அஞ்சாத நேர் கொண்ட பார்வை..! இவை தாம் 87 வயதில் மரணத்தை தழுவியுள்ள  கே.ஆர்.ராமசாமி  என்ற ‘டிராபிக்’ ராமசாமியின் அடையாளங்கள். பிடிவாதமான சுய கட்டுப்பாடுகளும், நேரம் தவறாமையும் அவரது இயல்புகள்!

பிறப்பால் பிராமணர், செயல்பாடுகளில் போர்குணமிக்க ஷத்திரியன் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் சந்திக்கின்ற தெரு பிரச்சனைகள் தொடங்கி சிக்கலான அரசியல் பிரச்சினைகள் வரை சுமார் 600 பொது நல வழக்குகள் தொடுத்தவர்.

இண்டர்மிடியேட் படிப்பில் பெயிலானவர்! முதறிஞர் ராஜாஜி மீது அபார பக்தி கொண்டவர். ராஜாஜி மந்திரி சபையில் இருந்த வெங்கடசாமி நாயுடுவுக்கு உதவியாளராக கொஞ்ச காலம் இருந்தார். அதன்பிறகு அனைறைய தினம் சென்னையில் புகழ்பெற்றிருந்த பி அண்ட் சி மில்லில் 18 ஆண்டுகள் பணியாற்றினார்.

1960 களில் ‘ஊர்காவல் படை’ என்ற தன்னார்வ தொண்டர் அமைப்பில்  ஈடுபாடு காட்டியது முதல் அவரது பொதுவாழ்க்கை பயணம் தொடங்கியது! போக்குவரத்து நெரிசல்மிக்க சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்புவதில் அவருக்கு அப்படி ஒரு அலாதி ஆர்வம் ஏற்பட்டது! இது அவருக்கு கர்வத்தையும், கௌரவத்தையும் ஏற்படுத்தியது. அப்போதே ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் ராமசாமி. ஊடகங்களே அவரை ‘டிராபிக்’ ராமசாமியாக அடையாளப்படுத்தின. காலப்போக்கில் காவல்துறையும் அவரை அங்கீகரித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தை ஓட்டியுள்ள சாலை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டது. இது பொது மக்களுக்கு பெரும் சிரமத்தை தந்தது. இதில் இருந்த நடைமுறைச் சிரமங்கள், சிக்கல்களை உயர்நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் டிராபிக் ராமசாமி. இந்த 1998  ல் நிகழ்ந்த இந்த முன்னெடுப்பு தான் அவரை தொடர்ந்து பொதுநல வழக்கு போடுபவராக மாற்றியது! நீதித்துறையில் வழக்கறிஞர்கள், நீதிபதிகள்… போன்றோரின்  கணிசமான ஆதரவும் ராமசாமிக்கு இருந்தது.

அதன்பிறகு சாலை ஆக்கிரமிப்புகள், விதிமுறைமீறிய கட்டிடங்கள், பார்க்கிங் வசதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள்..,வரைமுறையின்றி பெருகி கொண்டிருந்த விளம்பரப்பலகைகள், பேனர்கள், அதிவேகமாக ஓட்டப்பட்ட மீன்பாடி வண்டிகள்… என ஏகப்பட்ட பொது நல வழக்குகள் அவரை தொடர்ந்து ஊடகங்களின் வெளிச்சத்தில் நிறுத்தின. தாதுமணல், கிராணைட்கொள்ளை தொடர்பாக ‘’சகாயம் தலைமையிலான ஆய்வு குழு அமைக்க வேண்டும்’’ என்ற அவரது வழக்கு கவனத்திற்கு உரியது!

அவரது பொதுநலவழக்குகள் அனைத்துமே நியாயமானவை என நிச்சயமாகக் கூற இயலாது. சில வழக்குகளை அவர் விளம்பரத்திற்காக போடுகிறார் என கண்டித்து நீதிமன்றமே அபாராதம் விதித்து,  தண்டித்தும் உள்ளது.அதே சமயம் கஷ்டப்பட்டு பொது நல வழக்கில் தீர்ப்பு பெற்றும் அரசு அதிகாரிகள் அதை அமல்படுத்தாமல் அலட்சியம் காட்டும் போது கடும் மன உளைச்சல் அடைவார்!

தமிழ்வழிக் கல்வியை கட்டாயப்படுத்திய  தமிழக அரசின் அறிவிப்பை, அதாவது தனியார் பள்ளிகள் தமிழ்மொழிப்பாடத்தையும் பாடத்திட்டத்தில் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்பதை எதிர்த்து ஒரு வழக்கு போட்டார். பெரும்பாலான பிராமணர்களுக்கும், பிழைப்புவாதிகளுக்கும் தாய்மொழிப் பற்று இருப்பதில்லை. அதற்கு டிராபிக் ராமசாமியும் விதிவிலக்கல்ல.

மீன்பாடிவண்டிகளை தடை செய்யும் வழக்கை ஏன் போட்டார்? சாலைகளில் மீன்பாடி வண்டிகள் மட்டும் தானா அதிவேகமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிச்செல்லும் எந்த வாகனமென்றாலும் தடை செய்யப்பட்ட வேண்டியது தானே…..

இது போன்ற ஏற்கமுடியாத சில வழக்குகளின் பின்னணியில் சில நிறுவனங்கள் இருந்தனவா தெரியவில்லை.

‘பெரியார்’ படத்திற்கு தி.மு.க அரசு 95 லட்ச ரூபாய் நிதி உதவி தந்தபோது, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர் டிராபிக் ராமசாமி என்பதும் கவனத்திற்குரியது.

பாரிமுனை ராமகிருஷ்ணா லஞ்ச்ஹோமில் ஒரு அலுவலகம். பள்ளிகரணையில் ஒரு அலுவலகம். தி.நகரில் ஒரு நல்ல லாட்ஜில் தனி அறை எங்கு செல்லவேண்டுமானாலும் ஒரு கார் அல்லது வேன்…. என இயங்கிக் கொண்டிருந்தார் ராமசாமி ! இவை யாவும் மக்கள் மற்றும் அவருடைய நல விரும்பிகள் அவருக்கு அளித்தவை! டிராபிக் ராமசாமி குறித்து ஒரு திரைப்படமே எடுத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது டிராபிக் ராமசாமி தான் உண்மையான ஹீரோ என்றார். இப்படி சொன்னவர் பிரபல ஹீரோ விஜய்யின் அப்பா என்பது கவனத்திற்கு உரியது.

மிக எளிமையான வாழ்க்கை! காலையில் வெறுமனே ஒரு கப் காபி தான் ஆகாரம். வெளியூர் வரை பயணப்படும் தருவாயில் இரண்டு இட்லி . மதியம் ஒரு கைப்பிடி சாதம். இரவு இரண்டு வாழைப்பழமும் மோரும் போதுமானது.  இடையிடையே காபி, டீ, பிஸ்கட் அவ்வளவு தான்! சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு எந்த ஆர்வமும் இருந்ததில்லை.

சரவணபவன், ஹாட்சிப்ஸ் போன்ற சில பிரபல ஹோட்டல்களில் அவர் சாப்பிடச் சென்றால் காசு வாங்க மாட்டார்கள். அவர் நான்கைந்து பேராடு போய் சாப்பிட்டாலும் பணம் பெறுவதில்லை. இது  இந்த சமூகம் அவரது பொதுச்சேவைக்கு தந்த அங்கீகாரமாக அவர் கருதினார். ராமசாமிக்கு ஒரு மனைவியும், மகளும் இருந்தனர். எப்போதாவது தான் அவர்களை சென்று பார்ப்பார்!

‘டிராபிக்’ ராமசாமிக்கு தமிழகம் முழுக்க மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் கூட ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. காரணம் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஒன்றையடுத்து ஒன்று  என தொடுத்த  பொதுநலவழக்குகள் அவருக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்த்தை பெற்று தந்திருந்தன!

சாராசரி படித்த மத்திய தர வர்க்கம் தங்களால் முடியாத பலவற்றை செய்யும் கதாநாயகனாக பார்த்தது! அவர் சாலையில் சென்றால் ,ஒரு சிலர் அவரைத்தேடி வந்து கைகுலுக்குவார்கள். கட்சிகளைக் கடந்தும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியிருந்ததை நான் கண் கூடாகக் கண்டேன்!

ஜெயலலிதாவின் பிரம்மாண்ட பேனர்களுக்கு எதிராக தொடர்ந்து வழக்கு போட்டதோடு தெருவில் இறங்கி கிழித்து போட்டுள்ளார்! அன்றைய தி.மு.க அரசுக்கு தலைவலியைத்தரும் புதிய தலைமைச் செயலக கட்டிட ஊழல்… உள்ளிட்ட பல வழக்குகள் தொடுத்தார்.

டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் போராடி விளர்பரபேனர்  வைப்பதற்கான கறாரான சட்டவிதிமுறைகளை பெற்றார். அதனால் சட்டத்துக்கு மீறி யார் பேனர் வைத்தாலும் தைரியமாக கிழித்தார்.மக்களையும் கிழித்துவீசி எறியத் தூண்டினார். உண்மையில் ஜெயலலிதா பேனரை அன்றைய தினம் தனியாளாக அவர் கிழித்தது சாதாரண துணிச்சலல்ல.

அவர் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு தாக்குதலில் அவரது ஒரு கண்பார்வை கடும் பாதிப்புக்கு உள்ளானது. பலமுறை கைதாகி உள்ளார். போலீஸ் ஸ்டேசனில் தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கப்பட்டுள்ளார். இது போன்ற தாக்குதல்கள் அவரை மேலும் உரப்படுத்தி, உறுதிப்படுத்தியதே தவிர பின்வாங்க வைக்கவில்லை! முதுமை கூட அவரது துணிச்சலுக்கு தடையாக இல்லை! குடும்ப பிணைப்பு அவருக்கு இல்லாததும் அவருக்கு ஒரு பலமாகிவிட்டது! அவருக்கு நீதிமன்றம் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு தந்திருந்தது.

அவர் பிராட்வேயில் ஒரு மாடி அறையில் தங்கி இருந்த போது, அவரை சந்தித்துப் பேசி வருவேன். தெருவோர பிளாட்பாரவாசிகள் அவருக்கு உதவியாக இருந்ததைக் கண்டேன். என்னிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். நான் எழுதிய சில கட்டுரைகளை வாசித்துவிட்டு, ‘’என்னைப் போல தான் நீங்களும். இப்படியே அச்சப்பப்படாமல் எழுதுங்க..’’ என்றார்.

அவரிடம் நான் பார்த்த ஒரு பலவீனம்,  அவர் தன்னை மையப்படுத்தி மட்டுமே செயலாற்றுபவர். அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்பவர்களிடம் தான் நெருக்கம் காட்டுவார்!  எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் நினைவதில் ஆர்வப்படுவார். எப்போதும் தான் ஒரு பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் என்ற விளம்பர பைத்தியம் அவரிடம் இருந்தது. இவ்வாறாக முன்பே அவர் குறித்து நான் காலச்சுவடு இதழில் கட்டுரை எழுதி இருந்ததை படித்த அவரது நண்பர்கள் என் மீது கோபப்பட்டதாகக் கூறி, ‘’ஆனால், எனக்கு வருத்தமில்லை.’’ என்றார்.

ஒரு சில  நாடாளுமன்றத் தேர்தல்களிலும்,  சட்டமன்ற தேர்தல்களிலும்  போட்டியிட்டுள்ளார். அதிகபட்சம் மூவாயிரத்துசொச்சம் ஓட்டுகளுக்கு மேல் அவர் பெற்றதில்லை.   மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பை னடத்தினார். அதில் முழு அதிகாரம் பெற்ற ஒரே தலைவர் அவர் தான்! அவரது இன்ஸ்பிரேசனில் மயிலாடுதுறையில் பாத்திமா என்ற ஒரு பெண் சமூகபோராளி இருந்தார்.கிட்டதட்ட எட்டாண்டுகள் டிராபிக் ராமசாமியுன் இணைந்து ஒரு பெண் புலி போல இயங்கினார். துர் அதிர்ஷ்டவசமாக அவர் 2018  ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

அவரைத் தேடி தொழிலதிபர்கள் தொடங்கி  வியாபாரிகள், பொதுநல அமைப்புகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் வரை சென்றனர். ஆதாரத்துடன் தகவல் தந்து பொதுநலவழக்கு போட வேண்டி நின்றனர்!.  ஆரம்பத்தில்  சில வழக்கறிஞர்களை நம்பி செயல்பட்டார். ஆனால், காலப்போக்கில்  தானே கோர்ட்டில் வாதாடினார்.  ஆலோசனைக்கு நட்பு முறையில் வழக்கறிஞர்கள்  இருந்தனர்.

நம் காலகட்டத்தின் தவிர்க்க முடியாத ஒரு போராளியாக ‘டிராபிக்’ ராமசாமி வலம் வந்தார்! இந்த காலகட்டத்தின் சமூகத் தேவையாக இருந்தார்!  அரசியல் இயக்கங்கள், அரசியல் தலைவர்களின் மீது நம்பிக்கை குறைந்து வந்த ஒரு காலகட்டத்தில் டிராபிக் ராமசாமி போன்றவர்கள்  மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச அளவிற்கேனும் நம்பிக்கை அளிப்பவர்களாக இயங்கினார்கள் என்பதே உண்மை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time