நெருக்கடிகள் பதற்றத்தை ஏற்படுத்தும்,வாழ்வாதாரம் சீர்குலையும்!

- மாயோன்‌

ஆம், கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தான் வேண்டும். அதற்கு வணிகர்கள் ஒத்துழைப்போம்! ஆனால், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் சமூகபொருளாதாரத்தையே முடக்கிவிடக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் செயல்பட வேண்டும் போன்ற நெருக்கடிகள் மக்களுக்கும்,வணிகர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்துமல்லவா…? கூட்டத்தை அதிகமாக்குமல்லவா…?

தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற,மு க ஸ்டாலினிடம் சிறு வியாபாரிகள் கோரிக்கை!

இன்று மே 5ஆம் நாள். வணிகர் தினம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வணிகர் தின கொண்டாட்டங்கள் இல்லை.

தமிழகம் முழுவதும் மாநாடுகள், கருத்தரங்குகள் என்று வணிகர்கள் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். தங்கள் கடைகளை மூடி விட்டு குடும்பத்தோடு இந்நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள். அவர்களுடைய சந்தோஷத்தை கொரோனா பதம் பார்த்து விட்டது.

கடந்த ஒரு வருடமாக நடைமுறையிலுள்ள கொரோனா ஊரடங்கு  வணிகத்தை வணிகர்களை  நசுக்கிப் போட்டுவிட்டது.

பல்லாயிரம் வணிகர்கள் இன்றைக்கு தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள்.

தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலையாக தீவிரமாகி உள்ள நிலையில், ஊரடங்கும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள், ஷாப்பிங் மாலில் உள்ள கடைகள் அனைத்தையும்  மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே நொந்து போயுள்ள சிறு வியாபாரிகளின் கழுத்தை நெரிக்கும் வகையில் ,நாளை  முதல் அரசின் புதிய கடுமையான  விதிமுறைகள் அமலாக உள்ளது. இந்த நெறிமுறைகள் படி நாளை முதல் காய்கறி, மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் மட்டும் திறக்கலாம். அத்தியாவசிய பொருட்களை விற்கும் இந்த  கடைகளைக்கூட மதியம் 12 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ந்து போன வியாபாரிகள், அரசின் இந்த உத்தரவில் மாற்றம் கோரி தாங்கள் சார்ந்துள்ள வணிக அமைப்புகள் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்       பி. சந்திரசேகர் நம்முடைய “அறம் இணையதள இதழு”க்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

நாளை மறுதினம் (07.05.21) தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க .ஸ்டாலினுக்கு தமிழக வணிகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து தரப்பு வணிகர்களின் பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவர், அவருடைய ஆட்சியில் வணிகர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

ஏற்கனவே கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள வியாபாரிகளுக்கு நாளை  முதல் அமல்படுத்தப்பட உள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கால் துன்பங்கள் மேலும் அதிகரிக்கும்.

காய்கறி, மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளை கூட மதியம் 12 மணிக்கு மூடிவிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு, நடைமுறையில் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தும்.

அரசு பிறப்பித்துள்ள இந்த புதிய நெறிமுறைகள் தொடர்பாக அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம்:

அனுமதி வழங்கப்பட்டுள்ள காய்கறி ,மளிகை மற்றும் பலசரக்கு கடைகளை மதியம் 12 மணிக்கு மூட வேண்டும் என்பதை பிற்பகல் 3 மணி வரை நீட்டிக்க வேண்டும்.

சென்னையில் வியாபாரம் செய்யும் ஒரு காய்கறி வியாபாரி தினமும் கோயம்பேடு மொத்த சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி தன்னுடைய கடைக்கு எடுத்து வருவதற்கு காலை  8:00 மணி ஆகிவிடும் அதன் பிறகு அவர் அவற்றை அடுக்கி வைத்து விற்பனை செய்யவும்  பிறகு கடையை அடைக்கவும் கொஞ்சம் அவகாசம் தேவை. வாடிக்கையாளர்கள் முண்டியடித்து பொருட்கள் வாங்குவதையும் இந்த அவகாசம் குறைக்கும். ஏனென்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையானவற்றை வாங்காவிட்டால் கடை மூடப்பட்டுவிடும் என்ற அவசரத்திலும், நிர்பந்தத்திலும் மக்கள்கூட்டம் ஒரே நேரத்தில் கடைகளை முற்றுகையிடும். ஆகவே, இவற்றை தவிர்க்க கடை திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது தான் சிறந்த வழிமுறையாகும். வாக்குப்பதிவுக்கு இந்த முறை ஒரு மணி நேரம் கூடுதலாகத் தரப்பட்டதும் இந்த அணுகுமுறையால் தான்!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தின் கட்டாயம். இதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். ஒத்துழைப்பு தருகிறோம். இதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், தொடர் ஊரடங்கால்  வணிகர்கள் பல்லாயிரம் பேரின் வருவாய் அறவே பாதிக்கப்பட்டு ,பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு இதை கவனத்தில்  கொள்ள வேண்டும் ‌

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மளிகை, காய்கறி கடைகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வியாபாரிகளோடு தொழிலாளர்களும், பொதுமக்களும் சேர்ந்த கலவை தான் சமூகம். இந்த மூன்று தரப்பு நலனும் சங்கிலி தொடர் போல பின்னிப் பிணைந்தது. ஒரு தரப்புக்கு பாதிப்பு என்றாலும் அது மற்ற தரப்பையும் பாதிக்கும்.

நாளை முதல் செயல்பட  அனுமதி மறுக்கப்பட்டு உள்ள உணவுப் பொருட்கள் அல்லாத கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வீட்டில் உணவு உண்டு பசிப் பிணி விலக வேண்டும் என்றால், அவர்களையும் குறிப்பிட்ட நேரத்திற்காகவாவது அனுமதிக்க வேண்டும். துணிக்கடை, இரும்புச் சாமான்கள் விற்கும் கடை ,மரச் சாமான்கள் விற்னை செய்யும்  கடை போன்றவையும் சிறு வணிக பட்டியலில் வருபவை தான்.

இக்கடைகள்  வியாபாரிகளோடு பல்லாயிரம் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்பவை. இந்தக் கடைகளையும் உரிய கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.சந்திரசேகர் தெரிவித்தார்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time