ட்ராஃபிக் ராமசாமியின் அதிகாரத்திற்கெதிரான சாகசங்கள்!

-வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம்

தன் முனைப்பு, செயலூக்கமுள்ள தன் இயல்பால் போக்குவரத்து ஒழுங்கு, பின்பு அரசு அதிகாரிகள், காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக குரல் எழுப்பி, பிரச்சனைக்கு சட்ட வழியில் தீர்வை தேட நீதிமன்றத்தில்  வழக்காடியாகவும், பெற்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தடையாகவும், தாமதப்படுத்தியும், அதிகார ஆளும் தரப்புக்கு சாதகமாக இழுத்தடிப்பு செய்தும் வந்த அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் போராடி அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, சென்னை மக்கள் மத்தியில் சமூக சேவகர் ட்ராஃபிக் ராமசாமியாக அறியப்பட்டு, ஸ்மார்ட் போன் காலத்திற்குப் பின்பு சிறிது ஊடக வெளிச்சத்தால் சென்னையை தாண்டி தமிழகம் முழுதும் ஒன் மேன் ஆர்மி என அறியப்பட்ட ஒரு கலகக்காரர், சமூக செயல்பாட்டாளர் மறைந்த திரு. ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் அவர் ஒருமுன் கோபியும் கூட.

சம காலத்தில் கவனத்திற்குள்ளான அமைப்பு சாரா சமூக செயற்பாட்டாளர்களில் இவர் முக்கியமானவர், ஒவ்வொரு நபரும் அவர்கள் வாழும் காலத்தில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக நினைவு கூறப்படுவார்கள். இவரும் அவ்வாறே, 87 வயது முதிர்ந்த நிலையிலும் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை நீதிமன்றம், வழக்கு அரசியல், போராட்டம் என தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்.

முக நூல், வாட்சப் பதிவுகளுக்கு ஒரு லைக் போடுவதற்கும், எமொஜி போடுவதற்கும் கூட மனதின்றி கண்டும் காணாமல் கடந்து செல்லும் மனம் படைத்தவர்கள் நிறம்பி வழியும் இந்நாட்டில் பொதுப் பிரச்சனைக்காக அதிகாரத்தை எதிர்க்கத் துணிந்தவர், குடும்பத்தின் அரவணைப்பை இழந்தவர் ட்ராஃபிக் ராமசாமி, எனவே, இவர் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

சமூக சேவையில் இரு வகை உண்டு, ஆட்சியாளர்கள் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமல் அல்லது அவர்களைச் சார்ந்து நலத் திட்டம், சமூக சேவையில் ஈடுபடுவது ஒரு வகை.

இன்னொரு வகை, உண்மையில் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்காக சேவை செய்யவும், சமூக அவலங்களுக்கெதிராக சமரசமின்றி குரல் கொடுக்கவும், முனைந்து, அதனால் இறுதியில் அரசு அதிகாரிகள், ஆட்சி, காவல் துறை அரசியல்வாதிகள், செல்வாக்கு படைத்தவர்களின் பகை, அவர்களின் ஆதரவாளர்களின் பகை, அவப் பெயர், வழக்கு சிறை, அதனால் குடும்பத்தவரின் பிரிவும் கூடுதல் பரிசாகக் கிடைக்கும்.

அதோடு நேரடி தொடர்பற்று ஊடகங்களின் மூலம் அறியப்பட்டவர்களின் மூலமான பாராட்டும் நற்சான்றும் கிடைக்கும்.  ட்ராஃபிக் ராமசாமி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

இது போன்றவர்கள்  வெகு மக்களிடையே பெரும்பாலும் வில்லங்கமானவர்கள், பிரச்சனைக்குரியவர்கள் என்பதாகவே பார்க்கப்படுகின்றனர்.  இவரைப் போல் எண்ணற்ற செல்பாட்டாளர்கள் இத்தனையையும் சந்தித்தும் இயங்கியும் வருகிறார்கள், இவர் ஒரு குறியீடு.

பொதுவாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் அனைவர் மீதும் ஏதோ ஒரு விமர்சனமும், குறைபாடும் இருக்கத் தான் செய்யும். இவர் மீது பல விமர்சனங்களும், செயல்பாட்டில் மாற்றுக் கருத்துகளும் உண்டு, பெரும் வணிகர்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவே சாலையோர சிறு வியாபாரிகளை அப்புறப்படுத்த வழக்கு தொடுத்தார் என்றும், கூறப்படுகிறது அதன் உண்மைத் தன்மையயும் ஆய்வுக்குட்பட்டதே.

DMK ஆட்சிக் காலத்தில் தமிழ் பாட மொழி சட்டம் மற்றும் அரசு பணத்தில் பெரியார் திரைப்பட தயாரிப்புக்கு நிதி உதவி ஆகிஅவற்றை எதிர்த்தும் வழக்கு தொடுத்தார் என்பதும்  உண்மையே. 2004-ல் வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு எதிராகவும், 2009-ல் வழக்கறிஞர்கள் காவல்துறையால் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த போராடத்தில் ஒரு வழிச் சாலையை மறித்ததாகவும் வழக்கு தொடுத்தார் என்ற விமர்சனமும் உண்டு.

அதே நேரத்தில் அவரின் பிற செயல்பாட்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமுக அதிமுக ஆகிய இரண்டு பெருங்கட்சிகள் வலுவாக  ஆட்சியில் இருந்த போது,  அவர்களுக்கு எதிராகவும் இன்னும் பல பொதுப் பிரச்சனைகளுக்காகவும், பல்வேறு பெரும் முதலாளிகளுக்கு எதிராகவும் 500-க்கும் மேற்பட்ட பொது நலவழக்குகளும், அதிகாரிகளுக்கு பல ஆயிரம் புகார் மனுக்களை அனுப்பியும் இறக்கும் வரை இயங்கிக் கொண்டே இருந்திருக்கிறார்..!

கடலூர் மாவட்டத்தில் 1934-ல் விவசாய குடும்பத்தில் பிறந்து, 18 வயதில் ராஜாஜியால் ஈர்க்கப்பட்டதாகவும், 1954-ல் 20 வயதில் பின்னி மில் ஊழியராக பணியில் சேர்ந்து 1971-ல் பின்னி மில் வேலையிலிருந்து விலகி வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அன்றைய நாளில் சென்னையில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வேலையில் தன்னை வாலண்டரியாக ஈடுபடுத்திக் கொண்டு, 1992-ல் ட்ராஃபிக் ராமசாமி என்ற அடைமொழியைப் பெற்று, சென்னையின் சாலைகளில் பெரும் பொழுதுகளையெல்லாம் கழித்து போக்குவரத்து சிக்கலை நன்கு உணருகிறார், போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடமும், சாலையோர வியாபாரிகளிடமும் பணம் பெருவதற்கு எதிராக வினையாற்றி காவலர்களின் பகையை சம்பதிக்கிறார். பின்பு அதிலிருந்து வெளியேறி, பட்டா மாறுதல் பெறுவதில் அறிமுகமானவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிக்கு எதிராக குரல் கொடுத்து, அது இவரை நீதிமன்றங்களை நோக்கி நகர்த்தியிருக்கின்றது.

பாரி முனைப் பகுதி பெரும் வணிகத்தளமான பகுதி, வெளியூர் பேருந்து நிலையமும் பெரிய வணிக கடைகளின் சாலை ஆக்கிரமிப்பும், சாலையோர வியாபாரிகளின் பெருக்கமும் கடும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. காவலர்களும்  மாநகராட்சி அதிகாரிகளும் இதன் மூலம் பெரும் ஆதாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தி மாற்று இடம் கொடுக்க முற்படாமல் 1998-ல் உயர் நீதிமன்றம் அருகே NSC போஸ் சாலையில் மேம்பாலம் கட்டி வியாபாரிகளை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்ததாகவும், இவர் பாலம் கட்டுவதை ஆட்சேபித்து பொது நல வழக்கு தொடர்ந்து பாலம் கட்டும் வேலையை ரத்து செய்ய வைத்ததாகவும் இதில் வருவாய் இழப்பு ஏற்பட்ட காவல்துறை, மாநகராட்சி மற்றும் பல வியாபாரிகளின் ஏகோபித்த எதிர்ப்பிற்கும் ஆளானதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இது தான் இவரின் முதல் பொது நல வழக்காகும். இன்று தியாகராய நகர் பாண்டி பஜாரில் சாலையோர வியாபாரிகளுக்கு கட்டியுள்ள வணிக  வளாகத்திலும் மூர் மார்க்கெட்டிலும் 5,000 சாலையோர வியாபாரிகளுக்கு கடை கிடைப்பதற்கு இவருடைய பங்கும் முக்கியமானதாக கூறப்படுகிறது.

2002 வாக்கில் செய்தித் தாளைப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம், ”மீன்பாடி வண்டி” எனப்படும் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு சாலையில் நடந்து செல்வோரும் மோட்டார் சைக்கிளில் செல்வோரும் மரணமடைவது அன்றாட செய்தியாக இருந்தது. இந்த மீன்பாடி வண்டியானது, மோட்டார் சைக்கிளில் இருந்த எஞ்சினை எடுத்து அனுமதியின்றி மெக்கானிக்குகளால் தயாரிக்கப்பட்ட வண்டி ஆகும். இதற்கு நம்பர் ப்ளேட் கிடையாது. இதற்காக மோட்டார் சைக்கிள்  நிறைய திருடு போவதாகவும்  நிறைய விபத்து நடப்பதாகவும் புகார் வந்ததாகவும் கூறப்பட்டது, எனவே இதனை முறைப்படுத்தவும் தடை செய்யவும் கோரி பொது நல வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் மீனவர்களுக்கு சார்பாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் வழக்காடியதாகவும், வழக்கை திரும்பப் பெற்றால் இவருக்கு ரூ.4 லட்சம் தருவதாக மீனவர்கள் கூறியதாகவும் அதை இவர் மறுத்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ட்ராஃபிக் ராமசாமி. இறுதியில் வழக்கில் இவர் மனு அனுமதிக்கப்பட்டு அந்த மீன்பாடி வண்டி தடை செய்யப்பட்டது. அதனால் மீனவர்களின் கோபத்திற்கு ஆளாகி, தாக்கப்பட்ட நிகழ்வால் அன்றிலிருந்து  அவருக்கு காவல்துறை பாதுகாப்பு கிடைத்ததது.

தை முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாக அறிவித்ததை எதிர்த்து 2008-ம் ஆண்டு இவர் தாக்கல் செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் ரூ.10,000/- அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெரியார் திரைப்பட தயாரிப்புக்கு நிதி ஒதுக்குவதற்கும், 1- 10 வரை உள்ள வகுப்புகளுக்கு தமிழ் பாடம் கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சிக்கான 2006 உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேட்டை எதிர்த்து மறு தேர்தல் நடத்தக் கோரியும் மனுச் செய்துள்ளார். 100 பூத்துகளுக்கு மறு தேர்தலும் நடத்தப்பட்டது.

2009 – ஜூனில் சென்னை – கொல்கத்தா நான்கு வழிச் சாலைகளில் L & T நிறுவனம் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்காமல்,  27-வது கிலோ மீட்டரில் Toll  வசூலிப்பதற்குப் பதில்  அந்நிறுவனம் கட்டுமானம் செய்யாத 15-வது கிலோ மீட்டரிலே வசூல் செய்வதை தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்து இடைக்கால தடையும் பெற்றார்.

திமுக-வின் 2 ஜி ஊழல் குற்றச்சாட்டு காலத்தில், அதனை வெளிப்படுத்தும் வண்ணம் 2011- சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை  எதிர்த்து திருவாரூரில் போட்டியிட்டு தோற்றார்.

அதே போன்று ரிலையன்ஸ் செல் நிறுவனத்தின் உயர் மின் அழுத்த கோபுரத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்தார்.

ஜார்ஜ் டவுனில் இருந்த இரும்பு மற்றும் எக்கு வியாபரத்தால் அந்தப் பகுதியில் பிரச்சனை வருகிறது எனவே சாத்தங்காடுக்கு மாற்ற காரணமானவர். ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த மனு தாக்கல் செய்து,சில மாற்றங்களுக்கு வழிகோலினார்.

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், ரங்கனாதன் தெரு உட்பட விதி மீறி கட்டப்பட்ட சரவணா, ஜெயசந்திரன் உட்பட 26 கட்டடங்களை இடிப்பதற்கும், NSC போஸ் ரோட்டில் பார்க்கிங் வசதி இல்லாத விதி மீறல் கட்டடங்களை இடிப்பதற்கும் இவரின் பல ஆண்டுகள் சட்ட போராட்டமே முக்கிய காரணம்.

போரூர் பகுதியில் உள்ள AC. சண்முகத்தின் MGR பல்கலைக்கழக கூவம் ஆற்றின் ஓரப் பகுதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு இவர் தாக்கல் செய்த மனுவே காரணமாகும்.

இது போன்ற பல வழக்குகள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்களுக்கு விரோதமானவை என அவர் கருதிய விசயத்திலும் பல்வேறு முறையீடுகளையும், வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அதே போன்று திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பின் அதிமுக ஆட்சியிலும் ஆட்சியின் பல நடவடிக்கைகளை விமர்சித்தார், பல வழக்குகளை தொடுத்தார்.

மார்ச் 2012-ல் வனத்துறை அமைச்சராக இருந்த ஆனந்தன், காமராஜர் சாலையில் ஜெயலலிதாவுக்கு பேனர் வைத்தது, சென்னை முனிசிபல் கார்ப்பரேசன் சட்டத்திற்கு முரணான செயல் எனவே அவர் பதவியில் தொடர அருகதையற்றவர் என்று அவரை நீக்கம் செய்யக் கோரி ’ரிட் ஆஃப் கோ வாரண்டே’ தாக்கல் செய்தார்.

2014-ல் ஜெயலலிதா அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது, பிணை வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி H.L.தத்து அவர்கள், பிணை வழங்க ஊழல் பணம் பெற்றுள்ளார், அதனை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்தார், அது அவர் முன்பே விசாரணைக்கு வந்தது, அப்போது  தலைமை நீதிபதி அவர்கள் “Don’t worry. I can take care of it. I am too thick-skinned for such allegations,” – இது போன்ற குற்றச் சாட்டுகளையெல்லாம் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மன வலிமை படைத்தவன் தான் என்ற பொருளில் அவ்வாறு சொன்னார்.

ஜெயலலிதா அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பிறகு ஒ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவி வகிக்கும் போது, ஆட்சி நடவடிக்கைகளில் முடிவெடுக்கும் போது தண்டனைக் குற்றவாளியான அரசு பதவியில் இல்லாத ஒருவரிடம் உத்தரவு பெற்று ஆட்சி நடத்துகிறார், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், ஏற்றுக் கொண்ட உறுதி மொழிக்கும் புறம்பானது .எனவே அவருக்கு பதவியில் தொடர அருகதை இல்லை’’ என தொடுத்த வழக்கு ரூ.25,000/- அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை கிரானைட் கொள்ளையை கண்காணிக்க முன்னாள் IAS சகாயம் அவர்களை ஆணையராக நியமித்து விசாரிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்து, வெற்றியும் கண்டார். இந்த வகையில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் செயலாற்றினார்.

2015-ல் போயஸ் தோட்டத்து தெருக்களில் வழி நெடுக ஜெயலலிதாவின்  பேனர் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒற்றை ஆளாகக் கிழித்தெரிந்தார். அன்று தொழிலதிபர் ஒருவர் டிராபிக் ராமசாமி தன்னை தாக்க முயன்றதாக புகார் கொடுக்க,  அதிகாலையில் இவர்கைது செய்யப்பட்டு 5 நாட்கள் சிறை வைக்கப்பட்டார்.

அதே போன்று முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரின் உடல் நிலை குறித்து பலவாறான செய்திகள் சொல்லப்பட்ட போது 2016 அக்டோபரில் அவரது உடல் நிலை குறித்த உண்மையான தகவல்களை அரசும், மருத்துவமனையும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கக் கோரி வழக்கு தொடுத்தார், அம்மனுவை மாண்புமிகு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கவுல் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

ஒரு வேளை அவ்வழக்கின் படி உண்மை நிலையை அன்று வெளிப்படுத்தியிருந்தால், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்க வேண்டிய தேவையே எழுந்திருக்காது, பல பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும்.

அதன் பின்பு திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆன பின்பும் கொடநாடு கொலை, கொள்ளை தொடா்பாக பத்திரிக்கையாளா் மேத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ள பிரத்யேக வீடியோவில் முதல்வா் பழனிசாமியின் பெயா் இடம் பெற்றிருப்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.

2019-ல் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு மக்கள் வரிப் பணத்தில் அரசு விளம்பரங்கள் கொடுப்பது வீணான பொருள் செலவு என அதனை தடை செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

கடந்த டிசம்பர் 2020-ல் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக சூரப்பா நியமனத்தை எதிர்த்தும் வழக்கு தொடுத்திருந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் அவரது வேதா நிலையத்தை மக்கள் பணத்தில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கொரானாவை கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு, மீறுபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில்  அமைச்சர் ஜெயக்குமார் முகக் கவசம் அணியாமல் செய்தியாளர்களைச் சந்தித்ததற்கு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது.

இவர் அலுவல் நிமித்தம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்ற போதிலும், சட்டத்திற்கு புறம்பான பேனர்களை அகற்றுவது, அதற்காக சாலை மறியலை அஞ்சாமல் செய்வது, வாடிக்கையாகவே இருந்தது. முன்பு மதுரை சென்ற போது மதுரை முழுதும் மு.க.அழகிரியின் பேனர்கள் ,கட் அவுட்டுகள் நிரம்பியிருந்த போது அதனை போராடி பல இடங்களில் அகற்றினார். இதே போல் கோவை, சேலம் திருச்சி போன்ற பகுதிகளிலும், அதிகாரம் படைத்த பலருக்கு எதிராக  செயலாற்றியிருக்கிறார்.

திருநெல்வேலி சுபாஷ் சந்திர போஸ் சந்தை சிறு வணிகர்களை காலி செய்து, பெரிய வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்த வியாபாரிகளின் போராட்டத்தில் செப்டம்பர் 2019-ல் கலந்து கொண்டு ஆதரவுக் கரம் நீட்டினார்

July 2017-ல் கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஊழல் அரசியல்வாதிகள், காவல்துறையினரை கண்டித்தும் பாரிமுனையில் உண்ணாவிரதம் இருந்தார். பின்பு மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முயன்றும் போராடினார்.

 

இவரது பல வழக்குகள் விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ளது, அற்பமானது (frivolous) என்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்த போதும்,  பல வழக்குகளில் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட போதிலும் இவரை தடுக்க முடியவில்லை, ஆனாலும் அஞ்சாமல் வழக்குகளை தாக்கல் செய்தே வந்தார்.

ஏட்டுக் கல்வி அதிகம் இல்லாத போதிலும், அனுபவமும், பிரச்சினையின், தீவிரமுமே இவரை உந்தித் தள்ளி கற்றுக் கொள்ள வைத்திருக்கிறது! வழக்கை தயாரிக்கவும், வாதாடவும், எத்தனையோ வழக்கறிஞர்கள் வழக்கின் தன்மையைப் பொறுத்து உதவ முன் வந்த போதும் வழக்கறிஞர்களின் உதவியை நாடாமல் தானே செய்து வந்துள்ளார்.

கடந்த வாரம் சிகிச்சையில் இருந்த போது, சற்று நினைவு வந்தவுடன், வழக்கு நிறைய உள்ளது நீதிமன்றம் செல்ல வேண்டும் நான் செல்கிறேன் என்று மருத்துவரிடம் கேட்டதாக செய்திகள் வந்தன.

ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் தேர்ந்த அரசியல் ஞானம் உள்ளவரோ, தத்துவார்த்தம் தெரிந்தவரோ இல்லை., ஆனால், அநீதியைக் கண்டு பொங்கும் தன்னூக்கமும், செயலூக்கமும் உள்ளவராகவே இறுதி வரை இருந்திருக்கிறார்.

அவர் முற்போக்கு அரசியல் கற்றிருந்தால், அவரின் போக்கும், செயல்பாடும் வேறு ஒரு வடிவத்தை அடைந்திருக்க கூடும். குறைந்தபட்சம் சட்டவாதத்தோடு நின்றதால்,  பெரிய வழக்குகளில் சிறைபடுத்தப்படாமல் தப்பித்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

அமைப்பாய் இல்லாமல், தனி நபராய் இருந்ததே இவருடைய பலவீனமும், பலமும் ஆகும். பிறரோடு இணைந்து செயல்படும் போக்கு அவரிடம் இருந்ததில்லை. பெயரளவுக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற பெயரில் ஒருஅமைப்பு இருந்தாலும் அது தனி நபர் இயக்கமே.

திமுக,அதிமுக என இரண்டு ஆட்சிகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிர் நிலைப்பாட்டையே எடுத்துள்ளார், எப்போதும் உடன்பாடான நிலையை எடுத்ததில்லை, ஒரு வேளை ஏதேனும் சமரசம் செய்திருந்தால் அவருக்கு ஆதாயமும், அனுகூலமும் கிடைத்திருக்கலாம். அவரின் அந்த அதிகாரத்தோடு அனுசரனையின்றி செயல்படும் போக்கே இங்கு அவரைப் பற்றி கவனத்திற்குரிய விடயம், அதனை அரிதான குணாதிசயமாகவே கருத வேண்டும்.

ஆக, தன்னார்வத்தால் போக்குவரத்தை முறைப்படுத்தும் போக்குவரத்து ஆர்வளராக ஆரம்பித்து, காவல் துறை அரசு அலுவலர்களின் தவறான செயல் பாட்டால் சமூக செயல்பாட்டிற்கு உந்தப்பட்டு, சட்ட நீதிமன்ற வாதத்தின் மூலம் தீர்வு தேடிப் போய், பொது நல வழக்கால் சமூகத்தின் பல தரப்பட்ட விசயங்களில் தலையிட்டு, சிறு வணிகர், பெரு வணிகர், கார்ப்பரேட், அரசியல்வாதிகள், ஆட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், நீதியரசர்கள் என பல்வேறு தரப்பினர்களுடனும் முரண்பட்டும், பகைத்தும் தனக்கு சரி என்று தோன்றியதை செய்து, அதனால் ஏற்பட்ட உபவிளைவின் பயனை சமூகம் அடைய  விடை பெற்றுள்ளார் திரு. ட்ராஃபிக் ராமசாமி அவர்கள்.

பொது நல வழக்கை பொதுமைப் படுத்தியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. தற்சமயம் இவரைப் போன்ற தனி நபர் சாகசவாதிகள் நானறிந்த வரை இல்லை. இவர் பழைய காலத்து ஆள் என்பதால், தனி நபர் சாகசவாதம் வளர அனுமதிக்கப்பட்டது. ஆனால் உலகமய காலத்திற்குப் பின் இவ்வாறு தனி மனித சாகசவாதிகளை அரசும், சமூக அமைப்பும் முளையிலேயே கிள்ளி விடும், வளர அனுமதிக்காது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை இவர் மட்டுமே தெரிகிறார்.

இறுதி வரை அதிகாரத்திற்கெதிரான அவரின் சமரசமற்ற நடவடிக்கையால் என்றென்றும் நினைவு கூறப்படுவார்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time