காந்தியிடமிருந்த என்னால் நேரு, பட்டேலை ஏற்க முடியவில்லை – கல்யாணம்

-சாவித்திரி கண்ணன்

காந்தியைப் பற்றிய நேரடியான அவரது அனுபவங்களை கேட்க மாத்திரமல்ல, காந்தியின் கடைசி நிமிடங்களை அறிந்து கொள்ளும் ஆவலில் கல்யாணத்தை சந்திக்க விரும்பினேன். நான் பத்திரிகையாளன் என்றதும், ”என்னை பேட்டி எடுத்தால் கட்டணம் தர வேண்டும்’’ என்றார். ஒத்துக் கொண்டதால் தான் அப்பாயிண்மெண்ட் தந்தார்.

நண்பர் பீட்டர் துரைராஜ் அவர்களையும் அழைத்துக் கொண்டு, பாரதிதாசன் சாலையில் எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி எதிரில் உள்ள அப்பார்ட்மெண்டில் அவரை சந்தித்தேன். ’’நான் எந்த பத்திரிகை சார்பாகவும் அவரை பேட்டி எடுக்கவில்லை! காந்தியுடனான அவரது அனுபவங்களை நேரடியாக கேட்கும் தனிப்பட்ட ஆவலுக்காக தான் வந்துள்ளேன்’’ என அவரிடம் சொன்னேன்.

நான் அவரை சந்தித்த போது அவருக்கு 97 வயதிருக்கும். அவர் தன்னந்தனியாக அந்த அப்பார்ட்மெண்டில் இருந்தார். தனக்கான உணவு, உள்ளிட்ட அனைத்தையும் அவரே செய்து கொள்பவராக இருந்தார். வீடு நேர்த்தியாக சுத்தமாக அந்தந்த பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தன. சாதாரணமாக ஒரு ஆண் மட்டுமே குடியிருக்கும் வீடு அவ்வளவு தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை. சுய ஒழுக்கமும்,கட்டுபாடுகளுமுள்ள மனிதர் என்பதை அவரது வாழ்விடமே உணர்த்தியது. அவரிடம் பேசியதில் அதிகாலையில் தோட்டப் பணிகளை தானே செய்வதாகக் கூறினார்.

கல்யாணம் 1943 வரை ஒரு வெள்ளைக்காரனின் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தார். அவரக்கு அப்போது ஹரிஜன மக்களுக்கான சேவையில் மிகுந்த நாட்டம் இருந்துள்ளது. மாலை நேரங்களை அந்த சேவைக்காக செலவிட்டுள்ளார். இது காந்தியின் தாக்கம் அவருக்குள் ஏற்படுத்திய விளைவாகும். அந்த சமயத்தில் காந்தியின் மகனும்,பத்திரிகை ஆசிரியருமான தேவதாஸ் காந்தியை சந்திக்கும் போது அவர்,  ”உங்களைப் போன்றவர்களின் சேவை காந்தியின் ஆஸ்ரமத்திற்கு தேவைப்படுகிறது. போய் சேர்ந்து அங்கு ஏதாவது செய்யலாமே’’ என்றார். இதனால், இரண்டுமாத விடுப்பில் அங்கு சென்று சேவை செய்து அனுபவம் பெறும் எண்ணத்துடன் தான் சென்றுள்ளார். வார்த்தாவில் உள்ள காந்தியின் சேவாஸ்ரமத்திற்கு இவர் போய் சேர்ந்த போது, இவரை பலவாறாக விசாரித்து தான் உள்ளே அனுமதித்து உள்ளனர். பிறகு ஒரு சின்ன குடிலைக் காட்டி, ‘’அங்கு போய் தங்கி கொள்ளலாம்’’ என அனுப்பி வைத்தனர்!

போனால் சாணம் மொழுகிய தரையும்,சுவருமாக இருந்துள்ளது! இங்கிலீஸ்காரன் கம்பெனியில் உயர்ந்த உத்தியோகம் பார்த்து வசதியான வாழ்க்கை வாழ்ந்துவந்த கல்யாணத்திற்கு அது முதலில் சற்று தர்மசங்கடமாகத் தான் இருந்துள்ளது! உணவுமுறை, வாழ்வியல்முறைகள் அனைத்திலும் அங்கு காணப்பட்ட எளிமையும், கழிவறைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்டவைகளும் அவரை மிகவும் பண்படுத்தின. இப்படியே இங்கேயே தொடரலாம் என நினைத்துக் கொண்டார். காந்தி அப்போது கைது செய்யப்பட்டு ஆககான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆகையால்,சில மாதங்கள் சென்ற பின்பே காந்தி வந்தார். அப்போது அவரது மிக நெருங்கிய நீண்டகால உதவியாளர் மகாதேவ தேசாயை அவர் இழந்திருந்தார்.

அவருக்கு புதிய உதவியாளர் தேவைப்பட்ட நேரமான மே-1944 ல் தான் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. தேவதாஸ் காந்தியால் இங்கு ஆஸ்ரமத்திற்கு வந்து தங்கியுள்ளேன் எனச் சொல்லவும் காந்தி இவரை ஆதியோடந்தமாக தீர விசாரித்து அறிகிறார்.

மதராஸி இளைஞன் ,வேலையை துறந்து இங்கு வந்ததில் பெற்றோர் எதிர்ப்பில்லை, ஆஸ்ரம வாழ்கைக்கு பழகிவிட்டான், டைப்பிஸ்ட் வேலை தெரியும்…!

”எல்லாம் சரி…என்ன சம்பளம் எதிர்பார்க்கிறாய?” என்றார்.

”இருநூற்று ஐம்பது”என்கிறார் கல்யாணம்.

அதிர்ந்து போன காந்தி, ”ஓ..அவ்வளவு தரமுடியாது. என்னால் மாதம் ரூபாய் அறுபது தான் தரமுடியும்” என்கிறார்.

மறுப்பேதும் சொல்லாமல் கல்யாணம் வேலைக்கு சேர்கிறார். காந்தியின் இயல்பு என்ன? எதிர்பார்ப்புகள் என்ன..? தன்னுடைய பணிகள் எவ்வளவு கடினமானவை என எதுவும் அவருக்கு தெரியாது. தப்பும், தவறுமாகத் தான் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டார்! எத்தனை தவறுகள் செய்த போதும் காந்தி பதட்டப்படாமல், கோபப்படாமல் இவரை வேலைக்கு தயார்படுத்தினார்! ஒரே ஒரு முறை ரயிலில் பயணப்படுகையில், ‘’பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். நான் சொல்லச் சொல்ல டைப் செய்து கொள்’’ என்றாராம் காந்தி. கல்யாணம் விதுவிதிர்த்துப் போனார். டைப் இயந்திரத்தை கூடவே கொண்டு செல்ல வேண்டும் என அவர் அறிந்திருக்கவில்லை. சின்ன அவகாசம் கேட்டு பக்கத்து கம்பார்ட்மெண்டில் பயணித்த ஒரு பத்திரிகையாளரிடம் வாங்கி வந்து சொல்லச் சொல்ல டைப் அடித்துள்ளார். இப்படியாகத் தான் அவரோடு சுமார் நான்காண்டுகள் பயணித்துள்ளார்!

சரி, கல்யாணத்துடனான நம் சந்திப்புக்கு வருவோம்.

”காந்தியின் கடைசி நிமிடங்களைச் சொல்லுங்கள்” என்றேன்.

அன்று பிர்லா மாளிகையில் காந்தி பிரார்த்தனைக்கு புறப்படும் முன்பு பதற்றத்துடன் வல்லபாய்பட்டேல் தன் மகள் மணிபென்னுடன் வந்தார். அவருக்கும், ஜவஹர்லால் நேருவுக்குமான பிணக்குகள் பற்றித் தான் காந்தியிடம் அதிகம் புகார் கூறினார். அமைச்சரவையின் மூத்த சகாவான தன்னை கலந்து பேசாமலே பெரும்பாலான முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கிறார் என்பது தான் அவர் காந்தியிடம் கூறியது. ‘’இது தொடர்பாக நான் ஜவகரை அழைத்து விசாரிக்கிறேன். நீங்கள் இருவரும் ஒன்றுப்பட்டு செயலாற்ற வேண்டும்.எக்காரணம் கொண்டும் உங்களுக்குள் பிரிவினை வரக்கூடாது…’’ என பட்டேலிடம் காந்தி எடுத்துக் கூறினார்.

பிறகு ஒரு முக்கியமான விஷயம். ‘’உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது என தெரிய வருகிறது. ஆகவே, உங்கள் ஆஸ்ரமத்திற்கு அரசாங்கம் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த விரும்புகிறது’’ என்றார் பட்டேல்.

அதற்கு காந்தி, ‘’என்ன செய்யப் போகிறீர்கள்’’ என்றார் காந்தி.

”ஆஸ்ரமத்திற்கு வரும் அனைவரையும் நன்கு சோதனையிட்டுத் தான் உள்ளே அனுப்ப வேண்டும் என்று அரசு கருதுகிறது’’ என்றார் பட்டேல்.

”அது சாத்தியப்டாது சர்தார். இங்கே வருபவர்களின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் அவர்களை சந்தேகத்துடன் சோதனையிட்டு நீங்கள் அனுப்புவதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. இதை நான் அனுமதிக்கமுடியாது’’ என்றார்.

”உங்களுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் அந்தப் பழி என் மீது தான் வந்து விடியும். உங்கள் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளுங்கள்’’ என்றார் பட்டேல்.

ஆனால், காந்தி, ”பிரார்த்தனைக்கு வருபவர்களை சோதனையிடுவது ஒருபோதும் ஏற்கவியலாதது’’ எனக் கூறிவிட்டு, ‘’இன்று பிரார்த்தனைக்கு காலதாமதமாகிவிட்டது’’ எனக் கூறி பட்டேலுக்கு விடை கொடுத்தார். பட்டேலை கார் வரை சென்று நான் வழி அனுப்ப போனேன். பட்டேல் கடும் கோபமாக இருந்தார். காரில் ஏறும் முன்பு, ‘’முட்டாள் கிழவர்.’’.என முணுமுணுத்தார்.

பிறகு நான் பிரார்த்தனைக்கு தயாரான காந்தியுன் இணைந்து கொண்டேன். இடையில் தான் பிரார்த்தனை மேடைக்கு சற்று தூரத்தில் ஒரு இளைஞன் வந்து காந்தி செல்லும் பாதையை மறித்து வணக்கம் வைத்தான். அவனை வழியிலிருந்து அகற்ற மனு காந்தி முயன்றாள். அவளை வேகமாக கீழே தள்ளிவிட்டு அவன் அடுத்தடுத்து மூன்று குண்டுகளை பாய்ச்சிவிட்டான்.

”காந்தி ஹே ராம் என்றாரா..?’’

”இல்லை, குண்டு பாய்ந்த அந்த நொடியில் சரிந்து விழுந்தார்.’’

இதன் பிறகு நாங்கள் சற்று அமைதியாக இருந்தோம்.

”காந்திக்கு பிறகான உங்கள் வாழ்க்கையை சொல்லுங்கள்’’ என்றேன்.

காந்தி மரணத்திற்கு பிறகு நேரு என்னை தன் உதவியாளராக இருக்கும்படி அழைத்தார். நானும் சிறிது காலம் அவரிடம் வேலை செய்தேன். பெரும் அதிகாரத்தில் இருந்த அவரை சுற்றி இருந்தவர்களின் ஒழுக்ககேடான நடவடிக்கைகள் என்னை வேதனைப்படுத்தின. இதை அவரிடம் சொன்ன போது அவர் பொருட்படுத்தவில்லை. பிறகு பட்டேல் அழைத்தார் என அவரிடம் சில காலம் பணியாற்றினேன்.

அப்போது தான் உணர்ந்தேன். காந்தி போன்ற ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, தலைமைத்துவம், வெளிப்படைத் தன்மை, சுயநலம் சிறிதுமற்ற பொதுநோக்கு…போன்ற உன்னத குணங்கள் கொண்ட ஒரு தலைவரிடம் பணியாற்றியவன் நான். என்னால், மிகப் பெரிய அதிகார மையமான நேரு, பட்டேல் போன்றவர்களோடு வேலை பார்க்க முடியவில்லை. என் மனதில் ஆழமாக ஊறிப்போயிருந்த காந்தியப் பண்பு நலன்கள் அதற்கு இடம் தரவில்லை. ஆகவே, சிறிது காலத்திற்கெல்லாம் அவர்கள் இருவரிடமிருந்தும் நான் விடுபட்டுவிட்டேன்’’ என்றார்.

கல்யாணத்தை அவ்வப்போது அழைத்து அரசாங்கம் மரியாதை செய்தது. ,கவுரவம் செய்தது. காந்தியிடமிருந்து மிகவும் அன்னியப்பட்ட பாஜக அரசாங்கத்தின் பல அழைப்புகளையும், கவுரவங்களையும் தன்னால் ஏற்கமுடியாததால் நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்தார்.

கல்யாணம் ஒரு முன்கோபியாகவே- சட்டென்று கோபப்படுவராகவே – இருந்தார். சிறுமைகளை கண்டு பொங்கும் குணம் அவரிடம் சற்று தூக்கலாகவே இருந்தது! அதனால், அவர் எல்லோரோடும் இணக்கமாக செல்லமுடியாதவராக இருந்தார் என நான் புரிந்து கொண்டேன். மருத்துவ செலவுகள்,வாழ்வியல் தேவைகள் ஆகியவற்றுக்கு பணமில்லாமல் தவிக்கக்கூடிய பொருளாதார சிக்கலுடன் தான் வாழ்ந்தார். என்னுடைய நேர்காணலுக்காக நான் அவருக்கு ரூபாய் ஐநூறு மட்டும் தான் தரமுடிந்தது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time