ஆட்சிக்கான வெற்றியே அமைச்சரவை தேர்வில் தான் உள்ளது!

-சாவித்திரி கண்ணன்

கலைஞர் உயிரோடு இருக்கும் போது ஸ்டாலின் முதலமைச்சர் ஆக்கப்பட்டிருந்தால், அது கலைஞர் தயவில் வாரிசாக்கப்பட்டதாக விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும். ஆனால், கலைஞர் மறைவிற்குப் பிறகு குதிரை பேர அரசியலில் இறங்கி குறுக்கு வழியில் முயற்சிக்காமல், நான்கு ஆண்டுகள் எதிர்கட்சித் தலைவர் பங்கு பாத்திரத்தை ஒரளவு சிறப்பாக செய்து, தேர்தலை ஜனநாயக முறையில் எதிர்கொண்டு மக்கள் தீர்ப்புடன் அவர் முதலமைச்சர் ஆகியுள்ளது ஸ்டாலினின் ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.

அதிக அனுபவசாலிகளும், புதிய ஆற்றலாளர்களும் சரிவிகிதமாக கலந்து உருவாக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். ஒரு தனி நபராலேயே சிறப்பான ஆட்சியை தந்து விடமுடியாது. சிறந்த திறமையாளர்களையும், அறிவாளிகளையும் துணைக்கு வைத்துக் கொள்வதில் தான் வெற்றிகரமான ஆட்சியின் சூத்திரம் அடங்கியுள்ளது.

காமராஜர் ஆட்சியின் வெற்றிக்கு திறமையாளர்களான ஆர்.வெங்கட்ராமனும், பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியனும், நேர்மைக்கு பேர் போன கக்கனுமே தான் முக்கிய காரணங்களாகும்!

அதே போல அண்ணாவின் அமைச்சரவைக்கு நாவலர் நெடுஞ்செழியன், கருணாநிதி,அன்பழகன் கே.ஏ.மதியழகன்,செ.மாதவன் ஆகியோர் பலம் சேர்த்தனர்.

கலைஞர் ஆட்சியில் பேராசிரியர். அன்பழகன், அன்பில் தர்மலிங்கம், வீரபாண்டி ஆறுமுகம்,கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகிய திறமைசாலிகள் இருந்தனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின் வெற்றிக்கு நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், ராஜாராம்,பொன்னையன் ஆகியோர் அடித்தளமாக இருந்தனர்.

ஆனால்,ஆரம்ப காலத்தில் திறமைசாலிகள் பலரை அமைச்சரவையில் வைத்துக் கொண்ட ஜெயலலிதா 2011 அமைச்சரவையில் அடிமைத்தனத்திற்கு ஆட்படுவர்களை மட்டுமே வைத்துக் கொண்டார்.

அந்த வகையில் இதற்கு முந்தைய ஜெயலலிதாவின் அமைச்சரவையோடு ஒப்பீட்டால் இது தகுதியான நபர்கள் அதிகம் இடம்பெற்ற அமைச்சரவை தான் என்று தயங்காமல் சொல்லலாம்!

செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி..போன்ற ஏராளமான தகுதியற்ற நபர்களைத் தான் ஜெயலலிதா அமைச்சராக்கினார்! ஒ.பி.எஸ், இ.பி.எஸ்சுமே கூட தாங்கள் சார்ந்த துறையில் நிறைய சுருட்டத் தெரிந்தவர்களே தவிர, நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்லர்! அது மட்டுமல்ல, அமைச்சர்களை அடிக்கடி நீக்குவதும், சேர்ப்பதுமாக தன்னிச்சையாக செயல்பட்டார் ஜெயலலிதா. 2011-2016 வரையில் 23 முறை அமைச்சரவை மாற்றங்கள் செய்தார். அமைச்சர்கள் அனுப்புகின்ற கோப்புகளில் கையெழுத்திட்டால் போதும் மற்றவைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்பதாக தனி நபர் அதிகார மையமாக செயலாற்றினார் .அவர் மறைந்த பிறகு தான் அவரது அமைச்சர்வை சகாக்களின் யோக்கியதை மக்களுக்கு தெரிய வந்தது.

கலைஞர் மறைவிற்கு பிறகான ஸ்டாலின் அணுகுமுறையில் ஒரு பக்குவமும், நிதானமும் தெரிகிறது. அது அமைச்சரவை உருவாக்கப்பட்டதிலும் பிரதிபலிக்கிறது. கலைஞர் அமைச்சரையில் இருந்த 14 அமைச்சர்களுக்கும், அதிமுகவிலிருந்த மற்றும் அந்த அமைச்சரவையில் பங்குபெற்றவர்களுமாக  சிலருக்கும், புதிய திறமைசாலிகள் 15 பேருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரியும் ஒரு சிலரை மட்டுமாவது குறிப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

பழனிவேல் தியாகராஜன்; இவர் சிறந்த மக்கள் சேவகர் எனப் பெயர்பெற்றவர். மக்களோடு நவீனமுறையில் நெருக்கமான தொடர்பை பேணி துடிப்புடன் செயல்புரிபவர். அமெரிக்க நியூயார்க் பல்கலையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். நிர்வாக மேலாண்மையும் படித்து,அதை நடைமுறைப்படுத்தி வந்தவர்.சிங்கப்பூர் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியில் டைரக்டராக இருந்தவர் என்பதால் நிதி துறையை வகிக்க பொருத்தமானவர்.

மா.சுப்பிரமணியம்; மேயராக இருந்த போது இவரது ஆற்றலை சென்னை மக்கள் நன்கு உணர்ந்தார்கள். மிகச் சிறந்த சுய கட்டுபாடுகள் கொண்டவர். உடல் நலனை பேணுவதில் நடைப்பயிற்சியா? மராத்தான் ஓட்டமா..எதிலும் உச்சபட்ச முயற்சிகளை செய்பவர். மக்களோடு நல்ல தொடர்புள்ள சமூக சேவகர்.இன்றைய நெருக்கடிமிக்க சூழலில் அவர் சுகாதாரத்துறைக்கு பொறுப்பு ஏற்பது தமிழக மக்களுக்கு நன்மை தரும்.

தங்கம் தென்னரசு; சென்ற கலைஞர் ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயலாற்றியவர். நல்ல அறிவாளி, வாசிப்பு தேடல் உள்ளவர்.ஆகவே அவரை தொழில்துறைக்கும், தமிழ் ஆட்சி மொழி,மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை ,தொல்லியல் துறை ஆகியவற்றுக்கு பொறுப்பு கொடுத்துள்ளமை சிறப்பாகும். இந்த பொறுப்புகளுக்கு முற்றிலும் தகுதியானவர்.

பி.கே.சேகர்பாபு; வடசென்னைவாசிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த களப்பணியாளர். மக்கள் தொடர்பாளர். எந்த வேலை என்றாலும் அர்ப்பணிப்புடன் செய்பவர். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்ற வகையில் இந்து அற நிலையத்துறை பொறுப்பை ஈடுபாட்டுடன் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி; அன்பு என்ற பெயரை அடைமொழியாக கொண்ட குடும்பம். தாத்தா  அன்பில் தர்மலிங்கம், அப்பா அன்பில் பொய்யா மொழி..அன்பாலேயே பெரும் தொண்டர் படையை சேர்த்து வைத்துள்ள இவர் திமுக இளைஞரணியின் மாநில துணை செயலாளர். உதயநிதியின் நெருங்கிய தோழர். தற்போது பாரதிதாசன் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக இருக்கிறார். நல்ல செயற்பாட்டாளர்.பள்ளிக் கல்வித்துறை தரப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சிவசங்கர்; நல்ல கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விரும்பி. சமூக செயற்பாட்டாளர். பிற்பட்டோர்  நலத்துறை அமைச்சராகியுள்ளார். இவரிடம் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது.

இதே போல செஞ்சி மஸ்தான் அவர்களும் சிறந்த மக்கள் சிறந்த மக்கள் செயற்பாட்டளராக பெயர் எடுத்தவர். ஆவடி நாசர் ஆவடி நகர் மன்ற தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்ட அனுபவமுள்ளவர்.

மற்றபடி சீனியர்களான துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், எ.வ.வேலு, சு.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய இரு பெண்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்துள்ளது! பெண்களின் பிரதிநித்துவம் அமைச்சரவையில் குறைந்திருப்பதற்கு காரணம் சுப்புலட்சுமி ஜெகதீசனும், பூங்கோதை ஆலடி அருணா இருவரும் தேர்தலில் தோற்றதேயாகும். வெற்றி பெற்று இருந்தால் இன்னும் இரண்டு பெண்கள் அமைச்சரவையில் கூடுதலாக இடம் பெற்று இருப்பார்கள்!

திறமைசாலிகள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டும் போதாது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அவர்கள் தலைமைக்கு துதிபாடிகளாக இல்லாமல் தூயவர்களாக வலம் வர வேண்டும். அவர்கள் பொது நலனுக்கு கேடாகவோ, சுய நலன் சார்ந்து இயங்கினாலோ..அவர்களை தூக்கி எறிய தயங்காத தலைமையயும் மக்கள் ஸ்டாலினிடம் எதிர்பார்க்கிறார்கள்! ஊழல் அதிகாரிகளை ஒரம் கட்டி நேர்மையான அதிகாரிகளை நல்ல பொறுப்பு கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளிப்படையான, நேர்மையான ஆட்சி கொடுப்பதன் மூலம் தான் பாஜவின் பிளாக்மெயில் அரசியலில் இருந்து திமுக தப்ப முடியும். மக்களின் பேராதரவை தொடர்ந்து தக்க வைக்க முடியும். மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பொறுப்புக்கு வந்துள்ள இவர்களுக்கு பல சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. சிறப்பாக செயல்பட்டு மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வாழ்த்துகள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time