”யார் வல்லவன், நீயா? நானா?” என்ற போட்டி அதிமுகவில் வலுக்கத் தொடங்கிவிட்டது!
ஆட்சி அதிகாரம் என்ற புதையலை பங்கிட்டுக் கொள்வதற்காகவும், கிடைத்தற்கரிய ஆட்சி அதிகார கட்டிலை சண்டையிட்டு இழந்துவிடக் கூடாது என்றும் தான் இருவரும் இத்தனை நாட்கள் ஒன்றுபட்டிருப்பது போன்ற தோற்றத்தைக் காட்டினார்கள்!
தற்போது யார் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது என்பதில் இருவருக்கும் லடாய் ஆரம்பித்துவிட்டது.
”ஆட்சித் தலைவராக இருந்து தேர்தலை ஒரு போர் வீரன் போல முன்னனிலையில் நின்று அனைத்து தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தது நான் தான்! இன்று 65 தொகுதிகள் கிடைத்தது என்றால் அது என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான். வெற்றி பெற்றால் நான் தானே முதலமைச்சராகி இருப்பேன். அந்த வகையில் இப்போது வெற்றி பெறாத நிலையில் நானே எதிர்க்கட்சித் தலைவர்’’ என்பது இ.பி.எஸ் வாதம்!
”234 தொகுதியில் 65 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றோம்! எனவே இந்த தோல்வி உங்களால் தான். குறிப்பாக கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று அவசர கதியில் அறிவித்து, மற்ற சாதிகளின் எதிர்ப்பை பெற நீங்கள் தான் காரணம்! இதனால் தென் மாவட்டத்தில் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாயிற்று. நீங்கள் பலனடைய என்ன ஏற்பாடோ அதைமட்டும் செய்துவிட்டு மற்றவர்களின் தோல்விக்கு காரணமாகிவிட்டீர்கள். என்னைக் கலந்து பேசாமல் தன்னிச்சையாக செயல்பட்டு இன்று கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டீர்கள்’’ என்பது ஒ.பி.எஸ் வாதம்.
உண்மையில் என்ன நடந்தது? இ.பி.எஸ்,ஒபி.எஸ் இருவருமே அதிமுகவின் வட்டாரத் தலைவர்களாகத் தான் சுருங்கிப் போனார்கள்! இ.பி.எஸ் கொங்குமண்டல அதிமுகவின் தலைவராகவும், ஒ.பி.எஸ் தென் மாவட்ட அதிமுகவின் தலைவராகவும் தான் செயல்பட்டனர். அதனால் தான் தமிழகத்தின் பிற இடங்களில் அதிமுக படு தோல்வியை சந்தித்து உள்ளது.
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதால் இ.பி.எஸ் சில விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொண்டாரென்பது உண்மை தான். அதே சமயம் தேர்தல் பிரச்சாரத்தை முன் கூட்டியே திட்டமிட்டு ஆரம்பித்து சூறாவளியாக சுற்றி பிரச்சாரம் செய்தவர் இ.பி.எஸ் தான். ஒ.பி.எஸ் மிக காலதாமதமாகவே பிரச்சாரத்தில் இறங்கினார். பிறகு ஒரு சில தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு, தன் தொகுதியிலேயே முடங்கிவிட்டார். மேலும் தேர்தல் செலவுகளுக்கு இ.பி.எஸ் தாராளமாக தன் சொந்த பணத்தை அள்ளி வழங்கியதோடு, அனைத்து தொகுதிகளுக்கும் பகிர்ந்து தந்தார். ஆனால், ஒ.பி.எஸ் தென் மாவட்ட எம்.எல்.ஏக்கள் வெற்றி பெறுவதற்கு கூட பணத்தை எடுத்து கொடுக்கவில்லை. அதுவும் கூட வேண்டாம், குறைந்தபட்சம் தேனீ மாவட்டம் வரைக்குமாவது பொறுப்பு எடுத்திருந்தால் கூட, நான்கு தொகுதிகளின் வெற்றிக் கனியை பறித்திருக்கலாம். ஆனால், நான்கில் மூன்றை அம்போவென விட்டுவிட்டு, தன் தொகுதியில் மட்டும் பணத்தை அள்ளி இறைத்து தன் வெற்றியை மட்டும் உறுதிபடுத்திக் கொண்டார்.
‘’அதிமுக வெற்றி பெற்றால் இ.பி.எஸ் தானே மீண்டும் முதல்வராகப் போகிறார். ஆகவே, நான் எதுவும் கட்சி வெற்றி பெற முயற்சிக்க மாட்டேன்.’’ என்பது தான் ஒ.பி.எஸ்ஸின் நிலைபாடாக இருந்தது. அதிமுக எதிர்கட்சி வரிசைக்கு வர வேண்டும். அப்போது தான் எதிர்கட்சித் தலைவராக இருந்து தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளலாம் என்பது அவரது கணக்கு.
ஆனால் ஒ.பி.எஸ்ஸுக்கு தற்போது பிரச்சினை என்னவென்றால், வெற்றி பெற்று வந்த எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் இ.பி.எஸ் ஆட்கள்! ஜனநாயகப்படி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டுபோட்டு தான் தங்களுக்கான தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் இ.பி.எஸ் அதிமுகவின் சட்டமன்ற தலைவராவதை ஒ.பி.எஸ் தடுத்துவிட முடியாது. அதனால் தான் வழிகாட்டுக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், இ.பி.எஸ் எதிர்கட்சித் தலைவராகிவிட்டால், கட்சியின் ஒற்றை அதிகார மையமாக மாறிவிடுவார். ஆகவே, அவருக்கு செக் வைக்காவிட்டால் தன் எதிர்காலத்திற்கே ஆபத்து என்று நினைக்கிறார். அதுவும் மட்டுமின்றி, எதிர்கட்சி தலைவர் என்பது கேபினெட் அந்தஸ்துள்ள ஒரு பதவி. அரசு பங்களா, கார் போன்றவை கிடைக்கும். எதிர்கட்சி துணைத் தலைவருக்கு கிடைக்காது. எனவே, பதவியை விட்டுத் தரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார். எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பது அவரது தணியாத ஆசையாகும்.
ஆனால், இ.பி.எஸ் ஆட்கள் இதை இன்னொருவிதமாக சொல்கிறார்கள்! பன்னீரை எதிர்கட்சித் தலைவராக்கினால், அவர் கட்சியை பலவீனப்படுத்திவிடுவார். வலுவான தலைமை அதிமுகவிற்கு இல்லையென்றால், அதிமுகவை பாஜக ‘ஸ்வாகா’ செய்துவிடும். அதற்கு துணைபோவதாகத் தான் ஒ.பி.எஸ்சின் நடவடிக்கைகள் இருக்கும். மாறாக இ.பி.எஸ் இருந்தால் பாஜகவை வைக்கும் இடத்தில் வைத்து, கட்சியை கட்டுக் கோப்பாக காப்பாற்றிவிடுவார். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், தேர்தலுக்கு 20 சீட்டுகள் மட்டும் தான் பாஜகவிற்கு என்பதில் இ.பி.எஸ் உறுதிகாட்டினார். தினகரன், சசிகலாவை கட்சிக்குள் சேர்க்காமல் அவர்களை வலுவிழக்க வைத்தார். ஒ.பி.எஸ் விருப்பப்படி அமமுகவுடன் கூட்டணி கண்டிருந்தால் இன்றைக்கு அதிமுக சசிகலா குடும்பத்தின் பிடியில் சென்று இருக்கும். அதை தடுத்தவர் இ.பி.எஸ் தான். அதே போல, ‘தேமுதிகவும், கிருஷ்ணசாமியும் பிரயோஜனமில்லை’ என்று துணிந்து புறம் தள்ளினார். இல்லையென்றால், இவ்வளவு அதிக தொகுதிகளில் அதிமுக நின்று இருக்க முடியாது. இந்த அளவு தொகுதிகள் ஜெயித்து இருக்கவும் முடியாது’’ என்கிறார்கள்!
அதே சமயம் சட்டமன்றத்தில் பேச வேண்டிய விஷயங்களை தெளிவாக எடுத்துச் சொல்வதில் ஒ.பி.எஸ் கெட்டிக்காரர்! சகல பிரிவினரிடமும் கலந்து பேசி உறவாடுவதிலும் வல்லவர். ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவர் சென்றது அவரது அணுகுமுறைக்கு ஒரு சான்றாகும்.
சட்டசபைக்கு தான் தான் தலைவர் என்பதே ஓ.பி.எஸ்சின் உறுதிப்பாடு என்றால், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பொறுப்பு ஏற்கட்டும். இ.பி.எஸ் கட்சியின் பொதுச் செயலாலார் ஆகட்டும் .சட்டமன்றம், கட்சி இரண்டு இடங்களையும் ஒ.பி.எஸ்சுக்கு எப்படி தூக்கித் தரமுடியும்? என்பதும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஒரு சிலரின் வாதமாக உள்ளது.
ஒ.பி.எஸ்சுக்கு ஆதரவான லாபி ஒன்று மீடியாவில் பவர்புல்லாக நடக்கிறது. அதன் பின்னணியில் பாஜகவும், சசிகலா குடும்பமும் இருப்பதாக எடப்பாடி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
Also read
இரு தலைவர்களுக்குள்ளும் இணக்கம் நிகழாவிட்டால் அது கட்சிக்கு வெளியில் இருக்கும் சக்திகள் கட்சிக்குள் இன்னும் பிரிவினையை வலுக்கச் செய்து, ஆதாயம் காணவே வழிவகுத்துவிடும். ஜனநாயக முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்பவர் தலைவராவது என்பது தான் இப்போதுள்ள ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் தன் ஆட்சியின் குறைகள் பற்றி திமுகவினர் பேசும் போது அதற்கு சட்டமன்றத்தில் தகுந்த பதில் கூறும் பொறுப்பும் எடப்பாடிக்குத் தான் வருகிறது. நான்காண்டுகள் பாஜகவையும், திமுகவையும் சமாளித்து கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திக் காட்டிவிட்டார் இ.பி.எஸ்!
ஒ.பி.எஸ் ஊசலாட்ட மனமுள்ளவர்! அவருக்கு உறுதியான மனநிலை கிடையாது. ஆகவே, ஒ.பி.எஸ் தன்னை எடப்பாடிக்கு அடுத்த நிலையில் வைத்துக் கொண்டு, கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக தொடர முடிவெடுப்பது தான் அந்த கட்சியின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதிமுக என்ற கட்சி வலுவிழந்தால் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் பாயந்தால்.., சி.பி.ஐ.ரெய்டு போன்றவற்றில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வேலுமணி போன்ற அமைச்சர்கள் கணிசமான எம்.எல்.ஏக்களுடன் பாஜகவிற்கு தாவும் வாய்ப்புகள் ஏற்படலாம். பார்க்கலாம், என்ன நடக்கப் போகிறது என்பதை!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply