சூழலியலில் சாதியம் நுழைக்கப்பட்டது எப்படி? – நக்கீரன்

- பீட்டர் துரைராஜ்

அட, எல்லாத்திலுமா சாதியப் பார்வை…? நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள்,உயிரினங்கள்…ஆகிய  ஒவ்வொன்றிலுமே சாதியக் கண்ணோட்டமா..? என நம்மை திகைக்க வைக்கும் நூலை சூழலியல் ஆய்வு நோக்கில் படைத்துள்ளார் நக்கீரன். எத்தனையெத்தனை புதிய கோணங்களில் நம்மை சிந்திக்க தூண்டுகிறார்..வாவ்!

நம் நாட்டின்  பாரம்பரியமான கருப்பட்டியை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார்;  ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த  தேங்காய் எப்படி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்புகிறார் நக்கீரன். ‘சூழலும் சாதியும்’ என்ற அவரது புதிய நூல் வெளி வந்து மூன்று தான் ஆகியுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் பேசப்படுகின்ற ஒரு நூலாக மாறிவிட்டது.

நக்கீரன் ஒரு சூழலியல் எழுத்தாளர். ‘காடோடி’,’நீர் எழுத்து’, ‘பால் அரசியல்’ போன்ற காத்திரமான நூல்களை எழுதியவர்.

ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட உரையின் விரிவாக்கம்தான் இந்த நூல். 80 பக்கங்கள்தான் உள்ளன. ஆனால் இது ஏற்படுத்தும் சலனங்கள் கணக்கிட முடியாதவை. ‘பார்பனியத்தின் வேர்களைச் சூழலியில் நோக்கில் தேடும் வாய்ப்பை’  இந்த நூல் ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர் முன்னுரையில் சரியாகவே குறிப்பிடுகிறார்.

தலைப்பை பார்த்து முதலில் சற்று குழம்பினேன். சூழலுக்கும், சாதிக்கும் என்ன தொடர்பு  இருக்க முடியும் ! ஆனால் இருக்கிறது என்கிறார்  நக்கீரன். அது பருவ காலமாக இருக்கலாம்; ஐ வகை பூதமாக ( நீர்,நிலம்,காற்று,தீ,ஆகாயம்) இருக்கலாம்; காலமாக (அதிகாலை; உச்சி பொழுது இரவு ) இருக்கலாம்;(உச்சிவேளையில்  சண்டாளர்கள் நடக்கலாம். ஏனெனில் நிழல் குறைவாக விழும்); விலங்குகளாக (பசு,எருமை) இருக்கலாம்; பறவைகளாக (காகம், குருவி) இருக்கலாம். இவைகளில் சாதியம் எப்படி  நுழைக்கப்பட்டது என விவரித்துள்ளார் நக்கீரன்.

தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் முயற்சியில் பார்ப்பனியம் இயற்கை அமைவுகளை தனக்கு சாதகமாக வளைத்துக் கொண்டது எப்படி என்கிற மர்மத்தை இந்த நூல் உடைக்கிறது. நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள்,உயிரினங்கள்..ஆகிய அனைத்தும் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பலருக்கு புதிதாக இருக்கலாம். புல்லும், பூணுலும் உயர்சாதியின் அடையாளமானது எப்படி..? போன்ற கேள்விகளுக்கான விடைகளை தேடி நூலாக்கம் செய்துள்ளார் ஆசிரியர்!

ஏதோ மேம்போக்காக கருத்து தெரிவித்துள்ளதாக நினைக்க வேண்டாம். பல நூல்களின் (நெறித்துணை நூல்கள் என்கிறார்) பிழிவாக, இந்த நூல் உள்ளது; நன்கு ஆராய்ந்து, தன் கருதுகோள்களை முன் வைக்கிறார். நெடிய நூலாக வடிவம் பெறும்  உள்ளடக்கத்தை இந்த நூல்  கொண்டுள்ளது.

‘நான் பேசவே கூச்சப்படும் சொல் சாதி’ என்று இந்த நூல் தொடங்குகிறது;  ‘சாதி நீக்கம்’ செய்து வாழப் பழகுவோம் என்று நூல் முடிகிறது. இது தான் நூலின் சாரம் . சாதி ஒழிப்பு  நோக்கம் உள்ளவர்கள் இந்த நூலை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இதற்கு எதிரான மனநிலை கொண்டவர்கள்  மௌனமாக இதனை புறக்கணிப்பார்கள்; ஏனெனில், இந்த நூலுக்கு பதில் சொல்லுவவது சிரமம். பல வரலாற்று அறிஞர்களை  மேற்கோள் காட்டியுள்ளார்.

கிழக்கில் சீனாவில் தொடங்கி,  மேற்கில் ஐரோப்பாவின் நடுப்பகுதி வரை உள்ள 8000 கி.மீ. நீளமுள்ள ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து தெற்கு நோக்கி வந்தவர்கள் ஆரியர்கள்.  அவர்கள்  ஒரு இடத்தில் இருந்து விவசாயம் செய்யஈல்லை. குளிர் சூழலில் இருந்ததால் அவர்களுக்கு வெளிச்சம் தான் (சூரியன்) கடவுள். வானத்தைப் பார்த்து இடம் பெயர்ந்ததால் அவர்கள் நிலத்தை அன்றைய தினம் இழிவாக பார்த்தனர்;  நிலத்திற்கு கீழ் விளையும் கிழங்குகளை சாப்பிடவில்லை. ஆனால், போகுமிடமெல்லாம் ‘வன்முறையின் மூலம் ஆறுகள், நிலங்கள், குன்றுகள், மரங்கள், தாவரங்களை ஆரியர்கள் உரிமையாக்கிக் கொண்டனர்’  என்கிறார் ஆசிரியர்.

அவர்களுடைய பழமையான வேதம் ரிக்வேதம். அது சமஸ்கிருத மொழியில் உள்ளது. அந்த நூலின் காலம் கி.மு.14000 க்கும் கி.மு.1000 க்கும் இடைபட்டது. அந்த காலத்தில் இருந்த  ஆரியர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் போன்றவை மூலமாக நமது இன்றைய பண்பாட்டுச் சூழலை ஆராய்கிறார்.எப்படி இங்கு கருப்பு நிறம் தூய்மையற்றதாக, இழிவானதாக மாற்றப்பட்டது என விளக்கியுள்ளார் நக்கீரன். ‘வெள்ளைநிற ஆரியருக்கும் கறுப்பு நிற அனாரியருக்கும் இடையே காணப்பட்ட நிற வேறுபாடே சாதி முறை தோன்ற காரணம்’ என்கிறார். பசு எப்படி வழிபாட்டிற்கு உரியதாக மாறியது..? எருமை  ஏன் எமன் வாகனமாக உருவகப்படுத்தப்பட்டது…? ஆரியர்களின்   நலனை முன்னிட்டே எல்லா விதிகளும் வகுக்கப்பட்டன என்கிறார் நக்கீரன்.

இந்த நூலை எப்படி எதிர்கொள்வார்கள் என்று  தெரியாது. எப்படி இருந்தாலும் இந்த நூலைப் புறக்கணிக்க முடியாது. ‘அதிகாரத்தை நோக்கமாகக் கொண்ட பார்ப்பனியத்துக்கு நிலையான தத்துவம் கிடையாது. அறத்தின் சார்பாக அது என்றுமே நின்றதுமில்லை’ என்று வலிமையான வாதுரைகளை வைத்தாலும், ஒரு இடத்தில் கூட வெறுப்பான வார்த்தைகளை நக்கீரன்  பயன்படுத்தவில்லை.

இந்த நூலை ஒரு முறை படித்தால் போதாது. எளிய வார்த்தைகளில் நமது அனுபவங்களை பகுப்பாய்வு செய்கிறார். கருப்பு நிற காகம் தூய்மையற்றது. ஆனால் சிட்டுக்குருவி பெருமைக்குரியது. வெள்ளை நிற அன்னப்பறவை சிறப்புக்குரியது என பொது புத்தியில் எப்படியெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆசிரியர் விவரிக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

இந்த நூல்  ஒரு சார்பாக இருப்பது போல தோன்றலாம். ஆனால்  எப்படி வார்த்தைகளில்  ( பறமீன், அம்பட்டன்வாளை), வழிபாட்டில், (கருப்பட்டி – தீட்டு), பண்பாட்டில் சாதியம்  பிணைந்துள்ளது என்பதை எளிய மொழியில் விளக்குகிறார் நக்கீரன்.’தொல்குடிகளின் எண்ணற்ற தாய்த்தெய்வங்கள் பல கிருஷ்ணருக்கு மனைவியாக மாற்றப்பட்டதை கூறுகிறார்.’ (சோசாம்பி)

அலைகுடி வாழ்வை வாழ்ந்த ஆரியர்கள், சூத்திரர்களுக்கு தென்திசையை ஒதுக்கினர். விந்திய மலைக்கு அப்பால் உள்ள தேசத்தை மிலேச்ச தேசம் என்று அழைத்தனர். ஆறு பருவங்களை குறித்து  ஆரியர்களுக்குத் தெரியாது. பருவ மழை குறித்த அறிவு அவர்களுக்கு இல்லை. அவர்கள் உண்ணாத எதையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. (உம்: புழங்கல் அரிசி, பூண்டு, வெங்காயம்). சாதி என்றால், என்னவென்றே  தெரியாத தமிழகத்தில் திசையைக் கூட தீட்டாக பாவித்தனர். (தலித் குடியிருப்புக்கள் கிழக்குத்திசையில் அமைக்கப்பட்டன.) .

இந்த நூலை திறந்த மனதுடன் பார்ப்பனர்கள் படித்தால் தங்கள் முன்னோர் செய்துள்ள சூதிலிருந்து தாங்கள் விடுபட வேண்டிய அவசியத்தை ஒரு கணமேனும் உணர்வார்கள்.! ஒரு கண்ணாடி போல நமது வாழ்க்கை முறையை நமக்கே காட்டுகிறார் நக்கீரன். ‘சாதி’ என்ற மனநோயிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியை இந்த நூல் செய்யும்.

காடோடி பதிப்பகம்/ 6,  விகேஎன் நகர்/ நன்னிலம்-,திருவாரூர் மாவட்டம் – 610 105/ முதல் பதிப்பு பிப் 2021/ ரூ. 80/பக்கம் 88/அலை.8072730977.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time