சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா?
“முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள், இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) நாம் இன்னமும் பயன்படுத்தி் வருகிறோம். உயிர் வாழும் உரிமை, கண்ணியமாக வாழும் உரிமையை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதற்கேற்ற வகையில் சிறைவிதிகள் திருத்தப்படவில்லை.
ஒரு சிறையில் 5000 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் 50 பேர் கூட வடசென்னை திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது போல மொபைல் போன், கஞ்சா என வைத்து இருக்க மாட்டார்கள். ஆனால், பொதுமக்கள் இது போன்ற படங்களைப் பார்த்துத்தான் சிறை குறித்த பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்கள். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண சிறைவாசிகள் தான்” என்கிறார், சிறைவாசிகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் அன்புராஜ்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு உதவியதாக, கைது செய்யப்பட்டு, மைசூர் சிறையிலும், சேலம் சிறையிலும் இருந்தவர் அன்புராஜ். இளம் வயதில் கைது செய்யப்பட்டு, இருபது ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை ஆனவர். தென்னிந்திய சிறை மேம்பாட்டுக் குழு (South India Jail Development Committe) என்ற அமைப்பில் ஒரு நிர்வாகியாக உள்ளார். இவர் சேலம் சிறையில் இருந்த போது நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், சட்டிகளில் மலம், சிறுநீர் கழித்து வந்த நிலை மாறி, சிறைக்குள்ளேயே கழிப்பறையைக் கட்டினார்கள்.
“சிறைகளில் இருப்பவர்களும் சாதாரண மனிதர்கள்தான். பெரும்பாலோர் உணர்ச்சி வேகத்தில் தவறு செய்தவர்கள்; குடி போதையில் தவறு செய்தவர்கள்.அண்ணன்-தம்பி தகராறு, வாய்க்கால் தகராறு, பெண்பிள்ளை விவகாரம் என தவறு செய்தவர்கள்தான் பெரும்பான்மையாக சிறையில் உள்ளனர்.குற்றம் நடந்த அன்றே, செய்த குற்றத்திற்காக வருந்தியவர்களும் உண்டு. இவர்கள் பொது சமூகத்துடன் மீண்டும் இணைந்து, இயல்பான வாழ்க்கை வாழ வகை செய்வதுதான் சிறைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
சிறை அதிகாரிகளும், காவல்துறையினரும், நீதிபதிகளும் சிறைவாசிகளை அடிமைகளைப் போல நடத்துகிறார்கள்.
சிறையில் தினத்தந்தி நாளிதழ்தான் வரும். ஜீனியர் விகடன், நக்கீரன் போன்ற அரசை விமர்சிக்கும் இதழ்களை சிறையில் அனுமதிக்க மாட்டார்கள்.மனதை விசாலப்படுதுவது தான் இலக்கியம். ஆனால், சிறு கதைகள், நாவல்களைக் கூட அனுமதிக்க மாட்டார்கள். கலை,வரலாறு போன்ற படிப்புகளைப் படிக்க சிறைவாசிகளை அனுமதிக்கும் அதிகாரிகள், அவர்கள் சட்டப்படிப்பு படிக்க அனுமதிப்பதில்லை” என்கிறார் அன்புராஜ்.
“இந்தியர்களை அடிமைப்படுத்தும் நோக்கில், கல்விக் கொள்கையை உருவாக்கிய மெக்காலேதான் சிறைவிதிகளையும் உருவாக்கினான்.அதே சிறை விதிகளை பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி, நாமும் கடைபிடிப்பது தான் பெரிய சோகம். சுதந்திர இந்தியாவில் சிறைவாசிகள் குறித்து, ஆனந்த நாராயண் முல்லா ஆணையம், இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது அறிக்கை(1983) தந்தது. அதன் பரிந்துரைகள் கூட அமலாக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் சைலேந்திரபாபு, நடராஜன் போன்ற அதிகாரிகள் சிறைகளில் இருந்த போது,சில நல்ல மாற்றங்களைச் செய்தார்கள். சனி, ஞாயிறு விடுமுறைகளில், பள்ளியில் படிக்கும் தங்கள் குழந்தைகளை, கைதிகளாக இருக்கும் பெற்றோர்கள் (ஜெயிலர் அறையிலேயே, தடுப்பு இல்லாமல்) நேரடியாக உறவாடும் முறையை நடராஜன் கொண்டு வந்தார். இது பெரிய வரவேற்பைப் பெற்றது.
தாம் குடும்பத்தோடு மீண்டும் செல்ல முடியும், என்கிற நம்பிக்கைதான் சிறைக் கைதியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. எனவே சிறைக் கைதிகள், அவ்வப்போது பரோலில் வெளியே வரும் வகையில் வாய்ப்புகளைத் தர வேண்டும். இப்போது தமிழ்நாட்டில் வருடத்திற்கு 45 நாட்கள் பரோலில் வெளிவரலாம்.வசதி படைத்தவர்களுக்கும், அரசியல் தொடர்புள்ளவர்களுக்கும் பரோல் எளிதாக கிட்டிவிடும். ஆனால், சாதாரண கைதிகள் பரோலைப் பெறுவது எளிதான காரியமல்ல.
தமிழ்நாட்டைவிட, கர்நாடகாவில் சிறை வசதிகள் நன்றாக உள்ளன. சிறைக் கைதிகளின் வீடுகளில் ஏதும் இறப்பு நடந்தால் சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் போன் செய்து விசாரித்து, ஜெயிலரே உடனடியாக பரோல் கொடுத்து விடுவார். ஆனால், தமிழ்நாட்டில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், காவல்நிலையம், பஞ்சாயத்து போன்றவற்றின் அறிக்கை கிடைத்தால்தான் இறப்புக்கு கூட வெளியே விடுவார்கள்.
“நான் சிறையில் இருந்த போது படிப்பதற்கு ‘கந்தர் புராணம்’ கேட்டேன். ‘நீதிமன்ற அனுமதி பெற்று வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சிறை அதிகாரிகள் சொல்லி விட்டார்கள்’’ என்று தன் சிறை அனுபவத்தைச் சொல்கிறார், சந்தனக் கடத்தல் வீரப்பனை முதலில் சந்தித்து பேட்டி எடுத்த நக்கீரன் நிருபராக இருந்த பெ.சிவசுப்பிரமணியன்.
‘’கந்தர் புராணத்தை’ அனுமதிப்பதால் சிறை அதிகாரிகளுக்கு என்ன பிரச்சினை?’’ என்றதற்கு,
‘நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள்.எனவே எங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்’ என்பதைக் காட்டவே சிறை அதிகாரிகள் விரும்புகிறார்கள். ஆய்வுக்கு வரும்போது உதவி ஜெயிலர்,வார்டன் எனப் பலர் புடைசூழ, ஒரு அரசரைப் போல ஜெயிலர் வருவதைப் பார்த்தாலே அவர்கள் மனநிலையை நாம் புரிந்து கொள்ள முடியும் ” என்கிறார் ‘வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்’ என்ற நூலை (மூன்று பாகங்கள்) எழுதியுள்ள பெ.சிவசுப்பிரமணியன்.
33 ஆண்டு கால முடிவில்லா சிறைவாசம்…!
“இந்தியாவில் பஞ்சாபில் சிறைகள் ஓரளவு நல்ல நிலைமையில் உள்ளன. அங்கு ஒரு கைதி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சிறையிலேயே மரித்தார். விலை மலிவாக இருக்கும் ஒரே காய்கறிகளையே தினமும் வாங்குவார்கள். ஊழல் இல்லாமல் இருந்தால் உணவை சுவையாகத் தரமுடியும். தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகளை இணைத்து, இருக்கின்ற நிலையில் நல்ல மாற்றங்களை சிறை அதிகாரிகளால் தர முடியும்.” என்கிறார் அன்புராஜ்.
திரைப்பட நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் அப்பா தாஸ் கோயமுத்தூர் சிறையில் ஜெயிலராக இருந்த போது கைதிகளை நல்லவிதமாக நடத்தினார் ” என்கிறார் கோவை சிறையில் இருந்த முகமது பாசித்.
ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது தண்டனையியல் கோட்பாட்டிற்கு எதிரானது. எனவே பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தவுடன் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற வகையில் தெளிவாக விதிகள் இயற்றப்பட வேண்டும். கைதிகளின் தண்டனையைக் குறைக்க, முன் விடுதலை செய்ய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 161 ன் கீழ் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இன்னமும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் , வீரப்பன் அண்ணன் மாதையன் உள்ளிட்ட சிலர்,
இசுலாமிய சிறைவாசிகள் என பலர் தமிழ்நாடு முழுமையும் இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் கழிந்தும் தங்கள் வாழ்க்கையையே சிறையில் கழித்து வருகிறார்கள். இது பன்னாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது. உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்கள் கூட தங்கள் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
பல்லாண்டு சிறைக் கொடுமையில் மூஸ்லீம்கள்!
ஒரு கைதி எப்போது வேண்டுமானாலும் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும். அது தான் அவர்களை விரக்தியடையாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கும். அப்போது தான் கைதிகள் சமூகத் தொடர்பில் இருப்பார்கள். பரோல் வழங்குவதை தமிழக அரசு எளிமைப்படுத்த வேண்டும். நண்பர்களும் சிறைவாசிகளைச் சந்திக்க தமிழக அரசு (கர்நாடக மாநிலத்தில் உள்ளதைப்போல) அனுமதிக்க வேண்டும். கர்நாடகாவில் 3 மாதம் தோட்டத்தில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து விவசாயம் செய்து மகசூலுக்குப் பிறகு சிறைக்குத் திரும்பியவர்களை நான் பார்த்து இருக்கிறேன்.
Also read
‘மகாநதி’ படத்தில் கமலஹாசன் தன் மனைவி சுகன்யாவோடு கத்திப் பேசவதைப் போல இல்லாமல், மேலை நாடுகளில் உள்ளது போல தொலைபேசி மூலம் நேரடியாக முகம் பார்த்துப் பேச சிறைகளில் ஏற்பாடு செய்யலாம்” என்கிறார் அன்புராஜ்.
கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே முதலமைச்சராக இருந்த போது (சாந்தாராமின் ‘தோ ஹங்கி பாராத் ‘ படத்தைப் பார்த்து – {தமிழில் பல்லாண்டு வாழ்க} ) திறந்த வெளிச் சிறையை உருவாக்கினார்.அதைப் பார்த்து, தமிழ்நாட்டில் கோவை சிங்காநல்லூரில் 180 ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளிசிறையை உருவாக்கினார்கள். இதில் முதல் முறை குற்றவாளிகளை வைத்து உள்ளனர்.அவர்கள் விவசாயம் செய்வார்கள்; முயல், ஆடு, பன்றி போன்ற விலங்கினங்களை வளர்த்து, வெளியில் சென்று சிறைவாசிகளே விற்பனை செய்து வருகிறார்கள்.இது போன்ற முற்போக்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு விரிவு படுத்த வேண்டும். அரசு சாரா நிறுவனங்களையும், ஊடகங்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் தடையின்றி சிறைகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் சிறைகளின் மீது பொது சமூகத்தின் பார்வை இருக்கும். அதனால் மாற்றங்கள் ஏற்படும்” என்கிறார் அன்புராஜ்.
சிறை வாசிகள் எல்லாம் குற்ற பின்னணி உள்ளவர்கள் அல்ல… நீண்ட நாள் கோபம் ஆத்திரமாக மாறி குற்ற செயல் நிகழ்கி றது. சிலர் தப்புகின்றனர். பலர் மாட்டிக் கொள்கின்றனர். சிறை செல்கின்றனர்.70வயது முதியவர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்தார். அவருடன் அவர் மகனும் சிறையில் இருந்தார். அவர் செய்த குற்றம்.. குடிகார மருமகனால் தன் மகளுக்கு இழைக்கப்படும் கொடுமையைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் அவனைக் கொன்று விட்டார். ஆயுதம் தூக்கி அனுபவம் அவருக்கு கிடையாது. தன் மகள் மீது உள்ள பாசத்தில் அவர் படும் துயரங்களை காணச் சகிக்காமல் இம் முடிவினை மேற்கொண்டார். மனைவியே குழந்தையை கொன்றுவிட்டு கணவன் மீது பழிபோட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் வாலிப வயது உள்ள முருகன் என்ற ஒரு கைதி….. இன்னும் பல சிறை அனுபவங்கள்… இவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் கட்டுரையில் விவரித்த சம்பவங்கள் எதார்த்தமானவை..
நடிகவேள் எம் . ஆர் .ராதாவை 1968 ஆம் ஆண்டு சிறையில் சந்தித்தேன்.
மானமுள்ளவன் அதிக அளவில்
சிறையில் உள்ளனர் என்றார்.இது இன்றும் பொருந்துகிறதே!