உண்மைகளை உரக்கச் சொன்ன நேர்மையாளர் ரகோத்தமன்!

-சாவித்திரி கண்ணன்

அப்பழுக்கற்ற நேர்மையான சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைந்துவிட்டார்! பெரும்பாலான காவல் துறை மற்றும் புலனாய்வு துறையினருக்கென்றே இயல்பாக இருக்கும் கள்ளம், கபடம், சூது என எதுவமற்ற ஒரு வெள்ளந்தி மனிதர் அவர்! அவரைப் போன்றவர்கள் அபூர்வத்திலும், அபூர்வம்.!

எதையும் நேர்பட பார்க்கும் குணம், மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள முடியாத மனோபாவம், சமரசமற்ற போக்குகள், உண்மை என்று உணர்ந்ததை யாருக்கும் அஞ்சாமல் மட்டுமல்ல, அதனால் தனக்கே கூட பாதிப்பு வரும் என்றாலும் கூட வெளிப்படுத்திவிடக் கூடியவர். இந்த குணங்கள் போதாதா..? அவர் என் நெஞ்சுக்கு நெருக்கமானவராக மாறுவதற்கு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்ப காலங்களில் விசாரணை வளையத்தில் நான் இருந்த போது அவர் என்னிடம் சற்று முரட்டுத் தனமாகவும், மிரட்டும் தோரணையிலும் நடந்து கொண்ட போது எனக்கு அவர் மீது கடும் வெறுப்பு இருந்தது! பிறகு அவரிடம் பழக ஆரம்பித்ததும், அது முற்றிலுமாக மறைந்துவிட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நான் எப்படி சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்திற்குள் செல்ல நேர்ந்தது என்பதை முதலில் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

ராஜிவ் காந்தி கொலைக்கு ஆதாரமான புகைப்படங்களை எடுத்து தன் உயிரையே இழந்த அன்புத் தம்பி ஹரிபாபுடன் எனக்கு இருந்த நெருக்கம், அந்த படுகொலையில் கைதான புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம், பாக்கியநாதன், நளினி, பத்மா, பேரறிவாளன் ஆகியோருடன் எனக்கு இருந்த பிணைப்பும், நட்பும் என்னை விசாரணை வளையத்திற்குள் இயல்பாக கொண்டு சென்றது!

ஹரிபாபு மரணச் செய்தி முதலில் என்னைத் தான் வந்தடைந்தது. நான் தான் அவன் குடும்பத்திற்கு தகவல் தந்தேன். பிறகு அவன் சடலத்தை காஞ்சிபுரம் மருத்துவமனையில் பெற்று அடக்கம் செய்தது உள்ளிட்ட அனைத்திலும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டேன்.

நான் அப்போது ப்ரிலான்ஸ் போட்டோ ஜர்னலிஸ்டாக இயங்கி கொண்டிருந்தேன். அந்த வகையிலும் என்னை சி.பி.ஐ அதிகாரிகள் அடிக்கடி ஓயாமல் தேடி வந்து விசாரித்தனர். என்னிடம் ஆறேழு டீம் விசாரித்தார்கள்! அனைவரும் வெவ்வேறு தொனியில் விசாரித்தனர். ஒரு முறை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள என் வீட்டிற்கு அதிரடியாக வந்து ரெய்டு நடத்தி இரவோடு இரவாக கூட்டி சென்றனர். அடுத்த நாள் மாலை வரை மல்லிகை அலுவலத்தில் வைத்து தீர விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டனர்.

 

பிறகு, என்னை ஒரு நாள் அழைத்து ரகோத்தமன் பேசினார். ”ராஜீவ் கொலையில் ஹரிபாபு பயன்படுத்திய கேமரா சுபா சுந்தரம் கொடுத்தது தான். இதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’’ என்றார்.

‘’இல்லை சார், அன்று ஹரிபாபு சுபா சுந்தரத்தை பார்க்கவே இல்லை. அவரை பார்க்க வந்து அவர் இல்லாமல் போனதாக அவனே என்னிடம் தெரிவித்தான், மற்றும் அவன் பயன்படுத்தியது ரவிசங்கர் கேமரா என்பது உங்களுக்கும் தெரியும் தானே..’’ என்றேன்.

”இல்லையில்லை. ஹரிபாபு சுந்தரத்திடம் தான் கேமரா வாங்கி இருக்கிறார். அந்த நேரம் அங்கு இருந்த ஒரு திரைப்பட நடிகையும் அதற்கு சாட்சி. இத்தனையும் எங்களிடம் இருக்க, நீங்கள் மறுத்தால் எப்படி..? நீங்கள் சி.பி.ஐ சொல்வது போல ஒத்துழைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும்’’ என்றார், முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு!

”சார். எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வதில் எனக்கு எந்த பயமுமில்லை. ஆனால், உண்மை இல்லாதவற்றை சொல்ல நிர்பந்தித்தால், அதை மறுப்பதிலும் எனக்கு பயமில்லை.”என்றேன்.

இதையடுத்து எனக்கும், அவருக்கும் இடையே ஒரு ஐந்து நிமிட வாக்குவாதம் நடந்தது!

”சரி, இப்ப நீங்க போகலாம்…’’ என போகச் சொல்லிவிட்டார்.

அதற்கு பின் என்னை சி.பி.ஐ அழைக்கவில்லை! நான் நிர்பந்திக்கபடவுமில்லை!

இந்த மேற்படி சம்பவத்திற்கு ஒரு சில நாட்கள் முன்பு அன்றைய தினம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சுபா சுந்தரத்தை காப்பாற்றுவதற்காக ஒரு பொய்யை நீங்கள் சொல்ல வேண்டும் என்று மிக அபத்தமாக அவரே ஜோடித்த ஒன்றை என்னை சொல்லச் சொன்னார். அதையும் நான் உறுதியாக மறுத்ததோடு, ”எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வதே அவருக்கு நல்லது என்பது என் நிலைபாடு” எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.

பிறகு தான் நான் புரிந்து கொண்டேன். ‘நிர்பந்தங்களுக்காவது நான் பொய் சொல்லக் கூடியவனா..?’ என்பதை செக் செய்வதற்கே ரகோத்தமன் என்னை அழைத்து இந்த விதம் பேசினார் என்பதை! முன்னதாக, ஆறேழு குழுவாக நான் விசாரிக்கப்பட்ட போதும் நான் எந்த விதத்திலும் மாற்றியோ, குழப்பியோ ஒரு சிறிதும் பேசவில்லை. எனவே, என்னைப் பற்றி அவர்களுக்கு, ‘இவன் பொய் சொல்லாதவன், உள் நோக்கங்கள் அற்றவன்’ என்ற புரிதல் அனைத்து மட்டத்திலும் உறுதிபட்டிருந்தது.

இதன் பிறகு அவர் 2004ல் ஓய்வு பெற்ற பிறகு ‘ராஜிவ் கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம்’ என்ற நூலை எழுதினார். ராஜிவ் காந்தி கொலை தொடர்பான தெளிவான, குழப்பமில்லாத உண்மைகளை அதில் மிக இயல்பாக அவர் அதில் எழுதி இருந்தார்! ராஜிவ் கொலை தொடர்பாக உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூலை மட்டுமே நான் சிபாரிசு செய்வேன்! அந்த நூலுக்கான விமர்சனத்தை நான் நண்பர் கோபண்ணா நடத்தி வந்த தேசிய முரசுக்காக எழுதி கொடுத்த போதிலிருந்து அவருக்கும், எனக்குமான நட்பு வலுப்பட்டது. தமிழ் படிக்க தெரியாதவர்கள் “Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files” என்ற அவரது ஆங்கில நூலை வாசித்து அறியலாம்!

ரகோத்தமன் சார் படபடவென்று பேசுவார்! விளைவுகளைப் பற்றி அஞ்சமாட்டார். அதிகாரிகளில் இப்படியான ஒரு நியாயமானவர்களை காண்பது அரிதிலும் அரிது! சிறந்த மனிதாபிமானி!

”உண்மைகள் யாருக்கு தேவை…? சந்தர்ப்ப சூழல்களுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் சாகசமே எங்கும் விரும்பப்படுகிறது கண்ணன்.’’ என்று ஒரு முறை கசப்புடன் என்னிடம் குறிப்பிட்டார்!

அவர் டோராடூனில் உள்ள ஐ.பி.எஸ் பயிற்சி அகடமியில் பயிற்சிக்கு சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தை சொன்னதை மறக்கவே முடியாது. 1969ல் ஒரு நாள் பயிற்சி மையதிற்கு வெளியே பட்டாசு வெடி சத்தம் கேட்டு இவர் போய் பார்த்தாராம். அங்கு இவரைப் போல பயிற்சிக்கு வந்தவர்கள் தான் பட்டாசு வெடித்து, ஸ்வீட் கொடுத்து கொண்டிருந்தனராம். இவர் காரணம் கேட்ட போது, ”தமிழ்நாடு முதலைச்சர் அண்ணாதுரை இறந்ததை கொண்டாடுகிறோம்’’ என்றார்களாம். அவர்கள் அப்படி நடந்து கொண்டது இவர் மனதை மிகவும் புண்படுத்தியதாக வருத்தப்பட்டார்.  தமிழ்நாட்டு திராவிட அரசியல் தலைவர்களை அன்றைய வட இந்திய பீரோகிராட்ஸ் எப்படி புரிந்து வைத்துள்ளனர் என தெரிய வந்த சம்பவமாக அவர் இதை குறிப்பிட்டார்! ”இது அன்றைய ஆங்கில மீடியாக்களில் இருந்த ஆதிக்க சமுகத்தினர் கட்டமைத்த பிம்பமாயிருக்கலாம் சார்” என்றேன். ” May be ” என்றார்!

36 ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றினார். அதில் லஞ்ச ஒழிப்பு, பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ள போதிலும் நேர்மை குன்றாமல் செயல்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக கார்த்திகேயனுக்குக் கீழ் பணியாற்றிய போது, சில நேரங்களில் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டார். இதனால், உண்மையை நிலை நாட்ட கார்த்திகேயனோடு பல முறை முரண்பட்டார்! அவரால், கடைசி வரை கார்த்திகேயனை மன்னிக்கவே முடியவில்லை!

அவர் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் மறுக்க முடியாத முக்கியத்துவம் பெற்றவர். ராஜிவ் கொலை வழக்கை நடத்திய விதத்தில் மட்டுமல்ல, அதை நேர்மையாக பதிவு செய்த வகையிலும் நிலை பெற்றுவிட்டார்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time